5. எப்போது புரட்சி ஏற்படுகிறது?
போதிய அளவிற்கு விமர்சனம் செய்தாகிவிட்டது, குற்றம் கண்டுபிடித்தலும் போதிய அளவிற்குச் செய் தாகிவிட்டது. இப்போது புதுப்பிக்கவும் புனரமைப் பதற்குமான காலம் வந்திருக்கிறது ; சிதறிக் கிடக்கின்ற நம் சக்திகளையெல்லாம் திரட்டி, ஒரு மையத்தில் குவித்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏறக்குறைய தடைபட்டுப் போய்விட்ட இந்த நாட்டின் முன்னேற்றப் பயணத்தை அதன்மூலம் வழி நடத்துவற்கான காலம் வந்திருக்கிறது.
குடியானவ சிறுவர்சிறுமியர் சிலருக்கு ஒருசிறிது எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு; சில கருத்துக் களையும் அவர்களின் மூளையில் புகுத்து. அதன்பிறகு குடியானவர்கள் பணம் வசூலித்துத் தங்கள் தங்கள் கிராமத்தில் இவை ஒவ்வொன்றையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். ‘உத்தரேதாத்மனாத்மானம்- தன் முயற்சியாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்’ என்பது எல்லா விஷயங்களிலும் உண்மை. தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள நாம் அவர் களுக்கு உதவி செய்கிறோம். இந்தக் குடியானவர்கள் உனக்குத் தினமும் உணவளிக்கிறார்கள் என்பதே ஓர் உண்மையான வேலை நடைபெற்றுள்ளதைக் காட்டுகிறது. அவர்கள் தங்கள் உண்மை நிலையை அறிந்து, உதவியையும் முன்னேற்றத்தையும் நாடுகின்ற போது, உனது பணி தனது விளைவை ஏற்படுத்தி விட்டதையும், அதுசரியானவழியில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்.
குடியானவர்களும் தொழிலாளிகளும் உயிரற்ற வர்கள்போல் இருக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்து, சொந்த வலிமையை இவர்கள் திரும்பப் பெறுமாறு மட்டும் செய்துவிட்டு, தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படி அவர்களை விட்டுவிட வேண்டும்.
வாழ்வில் எனது முழு ஆசையும் இதுதான்: மிக மேலானகருத்துக்களை ஒவ்வொருவருடைய இருப்பிடத் திற்கும் கொண்டு சேர்ப்பதற்கான ஓர் அமைப்பை இயக்கிவிட வேண்டும்; பின்னர் ஆண்களும் பெண் களும் அவரவர் விதியை அவரவரே நிர்ணயிக்கட்டும். வாழ்வின் மிகமிக முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி நம் முன்னோர்களும், அதைப் போலவே மற்ற நாட்டினரும் என்னென்ன சிந்தித்துள்ளனர் என்பதை அவர்கள் அறியட்டும். முக்கியமாக, இப்போது பிறர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் காணட்டும், பிறகு ஒரு முடிவுக்கு வரட்டும். நாம் செய்ய வேண்டுவதெல்லாம் ரசாயனப் பொருட்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான்; இயற்கை, தனது நியதிகளுக்கு ஏற்ப அவற்றைப் படிகமாக்கிவிடும்.
கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்குக் கொடுக்கின்ற எல்லாமே பிறருக்குக் கொடுப்பதற்காகத்தான். நாம் இதை அடிக்கடி மறக்கிறோம். நமக்குக் கொடுக்கப்படும் பொருட்களின்மீது, ‘எனக்கு மட்டும் சொந்தம்’ என்ற முத்திரையை இடும்போது நம்முடைய அழிவுக்கு விதையை நாமே விதைக்கிறோம்.
காப்பாற்ற வேண்டிய அரசன் மக்களைத் துன் புறுத்துகிறான், அவர்களின் உயிரை உறிஞ்சுகிறான். சமுதாயம் பலவீனமாக இருந்தால் அரசனின் எல்லா கொடுமைகளையும் அது சகித்துக்கொள்கிறது. அதன் காரணமாக அரசனும் மக்களும் படிப்படியாக வலிமை கெட்டு பரிதாபமான நிலையை அடைகிறார்கள்; பிறகு தங்களைவிட வலுவான இன்னொரு நாட்டிற்குப் பலியாகிறார்கள். எங்கு சமுதாயம் வலிமையாக இருக்கிறதோ, அங்கு உடனே எதிர்விளைவு உண்டாகிறது. அதன் விளைவாக வெண்கொற்றக் குடை, செங்கோல், சாமரம் எல்லாம் தூக்கி எறியப் படுகின்றன; அரியாசனமும் மற்ற அரச ஆடம்பரங்களும் கண்காட்சிச் சாலையில் வைக்கப்படும் பொருட்களாகி விடுகின்றன.
பொதுமக்கள் எல்லா சக்திகளின் ஆதாரமாக இருந்தும், தங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அவர்களின் உரிமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் இப்படி இருக்கும்வரை இந்த நிலைதான் நீடிக்கும்.
ஒரு பொது ஆபத்தோ, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒன்றை வெறுப்பதோ, விரும்புவதோதான் மக்களை ஒன்றாகப் பிணைக்கிறது.