4. எது முதல் படியாக இருக்க வேண்டும்?
இந்தியாவில் நாம் எப்போதும் அரசர்களாலேயே ஆளப்பட்டு வருகிறோம். அவர்களே நமது சட்டங்கள் அனைத்தையும் இயற்றினார்கள். இப்போது அரசர்கள் இல்லை, அவர்களுக்குப் பின்னர் அதைச் செய்வதற்கு யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு அந்தத் துணிவு இல்லை. ஏனெனில் பொதுமக்களின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்பவே அது தன் பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளத்தக்க ஆரோக்கியமான, ஆற்றல் மிக்கதான பொதுமக்கள் கருத்தை உருவாக்க நீண்ட, மிக நீண்ட காலமாகும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். எனவே சமூகச் சீர்திருத்தம் என்ற பிரச்சினையை அணுகிப் பார்த்தோமானால் அது, சீர்திருத்தம் தேவைப்படுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வியில் தான் முடியும். அவர்களை முதலில் உருவாக்குங்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? சிறுபான்மையினரின் அடக்குமுறையே உலகம் கண்டவற்றுள் மிகவும் கொடியது. ஏதோ சிலவற்றைத் தீமை என்று நினைக்கின்ற ஒரு சிலரால் நாட்டை முன்னேற்ற முடியாது. அந்த நாடு ஏன் முன்னேறக் கூடாது? முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள். பிறகு உங்கள் சட்டசபையை உருவாக்குங்கள். அதன்பிறகே உங்கள் சட்டம் தயாராக வேண்டும். முதலில் அதிகாரத்தை உருவாக்குங்கள். அதிலிருந்து சட்டத்திற்கான ஆதரவு தானாகவே கிடைக்கும். மன்னர்கள் போய்விட்டார்கள். மக்கள் சக்தி என்ற அந்தப் புதிய ஆற்றல் எங்கே? புதிய அதிகாரம் எங்கே? அதைக் கொண்டு வாருங்கள். ஆகையால் சமுதாயச் சீர்திருத்தத்திற்குக்கூட முதலில் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வி அளிப்பதுதான். அந்தக் காலம் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
சரியான முறையின்றி தாறுமாறான வழிகளில் மக்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதைக் குடிமக்கள் இன்றும் உணரவில்லை. அதை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கான முயற்சியும் செய்யவில்லை, அப்படிச் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. சிறுசிறு சக்திகளை ஒன்றுசேர்த்து, ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்கும் திறமையும் அவர்களிடம் இல்லை .