கர்மயோகம் 9

சொற்பொழிவு

செயலும் அதன் ரகசியமும்

லாஸ் ஏஞ்ஜல்ஸ், கலிபோர்னியா, 4 ஜனவரி 1900 


செயலின் பலனில் செலுத்தும் அதே அளவு கவனத்தை அந்தச் செயலைச் செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும் என்பது என் வாழ்க்கையில் நான் கற்ற மிக உயர்ந்த பாடங் களுள் ஒன்றாகும். இதனை நான் ஒரு பெரியவரிடமிருந்து கற்றேன். அவரது சொந்த வாழ்வே இந்த உன்னதமான கருத்தைச் செயலளவில் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. அந்த ஒரு கருத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுவருகிறேன். பலனைப்போல் பாதையிலும் அதே அளவு கவனம் செலுத்த வேண்டும் என்னும் அந்தக் கருத்தில்தான் வெற்றியின் முழு ரகசியமும் அமைந்துள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது.

வாழ்க்கையில் நம்மிடம் பெரிய குறை ஒன்று உள்ளது. குறிக்கோளே நம்மை மிகவும் கவர்வதாக உள்ளது, லட்சியமே மிகவும் வசீகரிப்பதாக உள்ளது, நம்மை அப்படியே சுண்டி இழுப்பதாக உள்ளது. எனவே நமது மனத்தின் அடிவானத் தில் அது மிகப் பெரியதாகத் தோன்றுகிறது. அதன் பரிமாணத் தின் காரணமாக, அதை அடைவதற்கான வழிமுறைகளை நாம் பெரிதாக எண்ணாமல் விட்டுவிடுகிறோம். 

தோல்வி வரும்போதெல்லாம், அதனை ஆராய்ந்து பார்த் தால் நூற்றுக்குத் தொண்ணூறொன்பது சதவீதம் செயல் களிலும் நாம் வழிமுறைகளில் கவனத்தைச் செலுத்தியிருக்க மாட்டோம், அதுதான் தோல்விக்குக் காரணமாக இருந்தது என்பது தெரியவரும். பாதையை முற்றுப்பெறச் செய்வதிலும் பலப்படுத்துவதிலும் ஒழுங்காகக் கவனம் செலுத்துவதே நாம் செய்ய வேண்டியது. பாதை சரியாக இருந்தால், பயன் வந்தே யாக வேண்டும். காரணமே காரியத்தை உண்டாக்குகிறது என் பதை நாம் மறந்துவிடுகிறோம். காரியம் தானாகவே வந்துவிட முடியாது. காரணங்கள் சரியாக, ஒழுங்காக, ஆற்றல்மிக்க வையாக இல்லாமல் காரியம் உண்டாகாது. லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து, அதை அடைவதற்கான வழியையும் தீர் மானித்துவிட்டால், கிட்டத்தட்ட நாம் லட்சியத்தை பொருட் படுத்த வேண்டியதில்லை. ஏனெனில் வழிமுறை சரியாக, பூரண மாக இருக்கும் என்றால், லட்சியம் அங்கே இருக்கும் என்பது உறுதி. காரணம் உள்ள போது, காரியத்தைப்பற்றிப் பிரச்சினை இல்லை; காரியம் வந்தே தீரும். காரணத்தை நாம் கவனித்துக் கொண்டால், காரியம் தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும். லட்சியத்தை அடைதல் காரியம், அடையும் வழி காரணம். ஆதலால் வழிமுறையில் கவனத்துடன் இருப்பதே வாழ்வின் மேலான ரகசியம்.

இதையே நாம் கீதையிலும் காண்கிறோம், கற்றுக் கொள் கிறோம். அதாவது, நமது முழு ஆற்றலுடன் இடைவிடாமல் செயல்புரிய வேண்டும்; நாம் செய்யும் செயல் எதுவாயினும் நமது முழு மனத்தையும் அதில் செலுத்த வேண்டும்; அதே வேளையில் அதில் பற்றுக்கொள்ளவும் கூடாது. அதாவது, செயல்புரிவதிலிருந்து வேறு எதன் காரணமாகவும் நமது மனம் விலகிச் செல்ல இடம் கொடுக்கக் கூடாது. அதேவேளையில் நாம் விரும்பினால் செயலை விட்டுவிடும் திறமையும் பெற்றிருக்க வேண்டும்.

– நமது சொந்த வாழ்வுகளையே ஆராய்ந்து பார்த்தால், நம் துயரத்திற்கான மிக முக்கியக் காரணம் இதுவே என்பதைக் காண்போம். நாம் ஏதாவது ஒன்றை மேற்கொள்வோம். அதில் நம் முழுச் சக்தியையும் செலுத்துவோம். ஒருவேளை அது தோல்வியடையலாம். ஆனாலும் நம்மால் அதைக் கைவிட முடிவதில்லை. அது நமது நெஞ்சைப் புண்ணாக்குகிறது. இனி மேலும் அதைப் பற்றிக்கொண்டிருப்பதால் நமக்குத் துயரமே விளையும் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் அதிலிருந்து விலக நம்மால் முடிவதில்லை. வண்டு தேனுண்ண வந்தது, ஆனால் அதன் கால்கள் அதில் ஒட்டிக்கொண்டன; அதை விட்டு வண்டால் வெளியேற முடியவில்லை. இந்த நிலைமை யில் நாம் இருப்பதை மீண்டும்மீண்டும் காண்கிறோம். இதுவே வாழ்வின் முழு ரகசியம். 

நாம் ஏன் இங்கிருக்கிறோம்? நாம் தேனைக் குடிக்க இங்கே வந்தோம். ஆனால் நம் கைகளும் கால்களும் அதில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். நாம் பிடிக்க வந்தோம், ஆனால் பிடிபட்டுவிட்டோம். நாம் அனுபவிக்க வந்தோம், ஆனால் அனுபவிக்கப்படுகிறோம். நாம் ஆள வந்தோம், ஆனால் ஆளப்படுகிறோம். நாம் வேலை செய்ய வந்தோம், ஆனால் வேலை வாங்கப்படுகிறோம். இவ்வாறுதான் நடந்துகொண் டிருக்கிறது. இது நம் வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் புகுந்திருக்கிறது. பிற மனங்கள் நம்மை வேலை வாங்குகின்றன; நாமும் பிற மனங்களை வேலை வாங்க எப்போதும் பாடு படுகிறோம். வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க விழை கிறோம். ஆனால் அவை நம் உயிரையே உறிஞ்சிவிடுகின்றன. இயற்கையிலிருந்து ஒவ்வொன்றையும் பெற நாம் விரும்பு கிறோம். ஆனால் இயற்கை நம்மிடமிருந்து ஒவ்வொன்றையும் பறித்துக்கொண்டு, நம்மை வெறுமையாக்கி ஒருபக்கமாக எறிந்துவிடுவதை நாளடைவில் காண்கிறோம். 

இது மட்டும் இல்லாதிருந்தால், வாழ்க்கை இன்பமயமாக இருந்திருக்கும். பரவாயில்லை, போகட்டும்! தோல்விகளும் வெற்றிகளும், துன்பங்களும் இன்பங்களும் மற்ற அனைத்தும் இருந்தாலும் நாம் சிக்கிக்கொள்ளாமல் மட்டும் இருப்போமா னால் வாழ்க்கை இன்பத்திற்குமேல் இன்பமாகவே தொடரும்.

துயரத்திற்கு ஒரே காரணம் இதுவே-நாம் பற்றுக்கு ஆளாகிறோம்; சிக்கிக்கொள்கிறோம். இதனாலேயே கீதை, ‘இடைவிடாது வேலை செய், வேலை செய்; ஆனால் பற்று வைக்காதே! சிக்கிக்கொள்ளாதே!’ என்கிறது. எவ்வளவு விருப் பம் உள்ளதானாலும், அதற்காக உன் மனம் எவ்வளவுதான் ஏங்கினாலும், அதை விட்டுவிட்டால் நீ அடையும் சோகம் எவ்வளவுதான் பெரியதானாலும் ஒவ்வொன்றிலிருந்தும் உன் னைப் பிரித்துக்கொள்வதற்கான திறமையை உன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும். விரும்பும்போது அதனைவிட்டு நீங்கும் ஆற்றல் உனக்கிருக்க வேண்டும். இந்த உலகில் ஆகட்டும், வேறு எந்த உலகிலும் ஆகட்டும், அதில் பலவீனர்களுக்கு இட மில்லை. பலவீனம் அடிமைத்தனத்திற்கே இட்டுச் செல்கிறது. உடல் மற்றும் மன சம்பந்தமான எல்லா வகை துயரங்களும் பலவீனத்தாலேயே விளைகின்றன. பலவீனமே மரணம். நம் மைச் சுற்றி லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. ஆனால் உடல் அவற்றை உள்ளே அனுமதிக்க ஆயத்தமாக, பலவீனமாக இல்லாமல் அவை நமக்குத் துன்பம் தர முடியாது. துன்பந்தரும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்காக மிதந்து கொண்டிருந்தாலும் என்ன? பொருட்படுத்த வேண்டாம். மனம் பலவீனம் அடைந்தாலன்றி, அவை நம்மை அணுகத் துணியாது; நம்மைப் பற்றிக்கொள்ளும் திறன் அவற்றிற்கு இருக்காது. இதுவே பேருண்மை. பலமே வாழ்வு, பலவீனமே மரணம். பலமே இன்பம். பலமே என்றென்றும் மரணமிலாப் பெருவாழ்வு.பலவீனமே ஓயாத சோர்வும் துயரமும். பலவீனமே மரணம். 

நம் இன்பங்கள் அனைத்திற்கும் மூலகாரணம் பற்றே. நண்பர்கள், உறவினர்கள் என்று பலரிடமும் நாம் பற்று வைக் கிறோம்; நமது அறிவு மற்றும் ஆன்மீகச் செயல்களில் பற்று வைக்கிறோம். புறப் பொருட்களிலிருந்து இன்பம் பெறு வதற்காக அவற்றில் பற்று வைக்கிறோம். இந்தப் பற்றைத் தவிர வேறு எதுதான் துயரத்தைக் கொண்டு வருகிறது? பேரின்பம் பெற வேண்டுமானால் நாம் எதிலும் ஒட்டாதிருக்க வேண்டும். நினைத்தபோது பற்றற்று நிற்கும் திறமை நம்மிடம் இருக்கு மானால் எந்தத் துயரமும் இருக்காது. ஒரு பொருளின்மீது முழு ஆற்றலோடு பற்று வைக்கும் திறமையுடன், வேண்டும் போது அதிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொள் வதற்கான திறன் உடையவனே இயற்கையிலிருந்து மிகச் சிறந் ததைப் பெற முடியும். பற்றும் திறமை, விட்டுவிலகும் திறமையின் அளவுக்கு இருக்க வேண்டும். இங்கேதான் பிரச்சினை.

ஒருபோதும் எதனாலும் கவரப்படாத மனிதர்கள் உள்ளனர். அவர்களால் ஒருபோதும் அன்பு செய்யவும் முடி யாது. அவர்கள் கடின நெஞ்சுடையவர்கள்; அவர்களுடையது ஈரமற்ற இதயம். அவர்கள் வாழ்க்கைத் துயரங்களில் பெரும் பகுதியிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள். சுவர் ஒருபோதும் துயருறுவதில்லை, ஒருபோதும் அன்பு செய்வதில்லை, ஒரு போதும் புண்படுத்துவதுமில்லை. ஆனால் அது வெறும் சுவர் தான். ஒரு சுவராக இருப்பதைவிட, பற்றுக்கு உட்பட்டுச் சிக்கிக்கொள்வது நிச்சயமாக மேல். ஆதலால் ஒருபோதும் அன்பு செய்யாமல், இளகாத கல்நெஞ்சுடையவனாகி, வாழ்க் கைத் துயரங்களில் பெரும்பகுதியிலிருந்து விடுபடுபவன் அதன் இன்பங்களிலிருந்தும் விடுபடவே செய்கிறான். நமக்கு அது தேவையில்லை . அது பலவீனம், அது மரணம். ஒருபோதும் பலவீனத்தை உணராத, ஒருபோதும் துயரப்படாத உயிர் விழிப் படையாத ஒன்றே. அது உணர்ச்சியற்ற நிலை. அது நமக்கு வேண்டுவதில்லை.

அதேவேளையில், அன்பின் மாபெரும் சக்தியாகிய இது, பற்றின் பேராற்றலாகிய இது, முழு உயிரையும் ஒரே பொருளில் செலுத்தி, நம்மை மறந்து பிறருக்காக நம்மை அழித்துக் கொள்வதுபோல் தோன்றுகின்ற இந்தச் சக்தி தெய்வங்களின் சக்தியே. நமக்கு வேண்டியது இந்தச் சக்தி மட்டுமல்ல; தெய்வங் களைவிட உயர்ந்த நிலையை அடைய நாம் விரும்புகிறோம். நிறைமனிதனால் தன் முழு உயிரையும் செலுத்தி ஒன்றிடம் அன்புகொள்ள முடியும். ஆனாலும் அவன் பற்றற்றிருப்பான். இது எப்படி? இங்கே இன்னோர் ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிச்சைக்காரன் ஒருபோதும் இன்பம் காண்பதில்லை. அவனுக்குக் கிடைப்பது ஒருசிறிது கூழே. அதுவும் இரக்கத் துடனும் இகழ்ச்சியுடனுமே தரப்படுகிறது; அவன் இழிந்தவன் என்ற எண்ணமாவது கண்டிப்பாக இருந்தே தீரும். தான் பெறு வதை ஒரு நாளும் அவன் உண்மையாக அனுபவிப்பதில்லை.

நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே. நாம் எதைச் செய் தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரும் வியாபாரிகள். வாழ்க்கையில் நாம் வியாபாரிகள், தர்மத்தில் நாம் வியாபாரிகள், மதத்தில் நாம் வியாபாரிகள். அந்தோ ! அன்பிலும் நாம் வியாபாரிகளே.

நீ வியாபாரம் செய்ய வந்திருக்கிறாயானால், அது கொடுக்க லும் வாங்கலும் பற்றியதானால், விற்பதும் வாங்குவதும்தான் உனது ஒரே எண்ணமானால் வியாபார விதிகளைப் பின்பற்று. வியாபாரத்தில் நல்ல காலம் உண்டு, கெட்ட காலமும் உண்டு; விலை உயர்வதும் தாழ்வதும் உண்டு. எப்போது வேண்டு மானாலும் நஷ்டங்கள் வரும். கண்ணாடியில் உன் முகத்தைப் பார்ப்பது போன்றது அது. அங்கு உன் முகமே பிரதிபலிக்கப் படுகிறது. நீ முகத்தைக் கோணலாக்கிக் கொண்டால் கண்ணாடியிலும் கோணல் தெரியும், நீ சிரித்தால் அங்கும் சிரிப்பு. இதுதான் வாங்கலும் விற்றலும், கொடுப்பதும் கொள்வதும். 

நாம் சிக்கிக்கொள்கிறோம். எப்படி? கொடுப்பதால் அல்ல; கொடுத்ததற்காக எதையோ எதிர்பார்ப்பதால். நமது அன்பிற்குப் பிரதியாக துயரத்தைப் பெறுகிறோம். ஏன்? அன்பு செய்ததால் அல்ல, பிரதியாக அன்பை எதிர்பார்த்ததால் தான். தேவை தீர்ந்த இடத்தில் துயரம் இல்லை. ஆசை, தேவை இவையே எல்லா துயரங்களுக்கும் தந்தை. ஆசைகள், வெற்றி தோல்வி நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆசைகள் துயரத்தை விளைவித்தே தீரும்.

உண்மையான வெற்றியின், உண்மையான ஆனந்தத்தின் மாபெரும் ரகசியம் இதுவே: பிரதிபலனை எதிர்பாராதவன், முற்றிலும் தன்னலமற்றவன்-அவனே எல்லாவற்றிலும் சிறந்த வெற்றியடைவான். இது ஒரு முரண்பாடாகத் தோன்றுகிறது. சுயநலமற்றவன் ஒவ்வொருவனும் வாழ்க்கையில் ஏமாற்றப்படு கிறான், மனம் புண்படுகிறான் என்பது நமக்குத் தெரியாதா? மேலோட்டமாக இதற்கு ஆம் என்பதே விடை. ‘ஏசு தன்னலம் அற்றவர்; எனினும் சிலுவையில் அறையப்பட்டார்.’ உண்மை தான். ஆனால் அவரது சுயநலமின்மையே ஒரு பெரும் வெற்றிக் கும் காரணமாயிற்று என்பதையும் நாம் அறிவோமே! லட்சக் கணக்கானோரின் வாழ்வில் உண்மை வெற்றி என்னும் ஆசி களை அள்ளிக் குவித்தது அந்தச் சுயநலமின்மையே அல்லவா?எதையும் வேண்டாதீர்கள். பிரதியாக எதையும் விரும் பாதீர்கள். நீங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுங்கள்; அது உங்களுக்கே திரும்பிவரும். ஆனால் அதைப் பற்றி இப்போது நினைக்க வேண்டாம். அது ஆயிரம் மடங் காகத் திரும்பிவரும். கவனத்தை அதன்மீது செலுத்தக் கூடாது. கொடுக்கும் திறன் உடையவர்களாக இருங்கள், கொடுங்கள், அத்துடன் அது முடியட்டும். முழு வாழ்க்கையுமே கொடுத் தல்மயம், நீங்கள் கொடுக்கும்படி இயற்கை வற்புறுத்தும் என் பதை கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் முழுமனத்துடன் கொடுங்கள். இன்றோ நாளையோ நீங்கள் அனைத்தையும் விடத்தான் வேண்டும். சேமிப்பதற்காக நீங்கள் வாழ்க்கையில் புகுந்தீர்கள், கைகளை இறுக மூடிக்கொண்டே எடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் இயற்கை உங்கள் தொண்டையைக் கையால் அழுத்தி, உங்கள் கைகளை விரியச் செய்கிறது. விரும் பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் கொடுத்தேயாக வேண்டும். ‘நான் கொடுக்க மாட்டேன்’ என்று நீங்கள் சொல் லும் அந்தக் கணமே அடி விழுகிறது; நீங்கள் காயம் அடை கிறீர்கள். காலப்போக்கில் எல்லாவற்றையும் விட்டுவிடும் படி, கட்டாயப்படுத்தப் பெறாத மனிதன் யாரும் இல்லை. இந்த விதியை எதிர்த்துப் போராடும் அளவிற்கு ஒருவன் துய ருறுகிறான். நாம் கொடுக்கத் துணியாததால்தான், இயற்கை யின் இந்த மேலான தேவைக்கு இணங்காததால்தான் துயரப் படுகிறோம். காடு அழிகிறது, ஆனால் அதற்குப் பதிலாக சூடு கிடைக்கிறது. கதிரவன் கடலிலிருந்து நீரை முகந்துகொள்வது, அதனை மழையாகத் திரும்ப அளிப்பதற்கே. கொள்வதற்கும்கொடுப்பதற்கும் ஆனதோர் எந்திரம் மட்டுமே நீங்கள். கொள்வது கொடுப்பதற்கே. 
எனவே பிரதிபலனாக எதையும் வேண்டாதீர்கள். ஆனால் கொடுக்கும் அளவு பெருகப்பெருக வருவதும் அதிகமாகும். இந்த அறையிலிருந்து காற்றை வெளியேற்றும் அளவு விரை வாகுந்தோறும் வெளியே உள்ள காற்றால் நிரப்பப்படும். ஒரு துவாரமும் விடாமல் எல்லா கதவுகளையும் மூடினால் உள் ளேயிருப்பது அப்படியே இருக்கும். ஆனால் வெளியேயுள்ளது ஒருபோதும் உள்ளே வராது. உள்ளேயிருப்பது தேங்கி நின்று, கெட்டுப்போய், நஞ்சு நிறைந்ததாகிவிடும். ஆறு ஓயாமல் கடலிற்குள் பாய்ந்துகொண்டே இருக்கிறது, ஓயாமல் மீண்டும் நிரம்பிக்கொண்டும் உள்ளது. கடலில் புகுவதைத் தடை செய்யாதீர்கள். அப்படிச் செய்கின்ற அந்தக் கணமே மரணம் உங்களைப் பற்றிக்கொள்கிறது. 
பிச்சைக்காரனாக இருக்காதீர்கள். பற்றற்றிருங்கள். வாழ்வில் மிகக் கடினமான செயல் இது. வழியில் வரும் அபாயங் களைக் கணக்கிட உங்களால் முடியாது. அறிவின்மூலம் அந்தத் துன்பங்களைத் தெரிந்துகொண்டாலும் அவற்றை அனுப விக்கும்வரை நீங்கள் உண்மையாக அவற்றை அறிவதில்லை. தொலைவிலிருந்து ஒரு பூங்காவைப் பார்க்கலாம். அதனால் பெறுவது என்ன? நாம் அதனுள் செல்லும்போதுதான் அதை நாம் உணர்கிறோம்; உண்மையாக அறிகிறோம். நமது முயற்சி ஒவ்வொன்றும் தோல்வி அடைந்தாலும், ரத்தம் கொப்பளிக்க நாம் கிழித்தெறியப்பட்டாலும், இவை அனைத்தின் நடுவிலும் நாம் மனம் தளராமல் இருக்க வேண்டும். இன்னல்கள் அத் தனைக்கும் நடுவிலும் நமது தெய்வத்தன்மையை மறக்காமல் இருக்க வேண்டும். செயலுக்கு எதிர்ச்செயல் செய்யுமாறு இயற்கை நம்மைத் தூண்டுகிறது; அடிக்குப் பதிலாக அடியை யும், ஏமாற்றுதலுக்கு மாறாக ஏமாற்றுதலையும், பொய்க்குப் பதிலாகப் பொய்யையும் திரும்ப அளிக்குமாறும், முழு ஆற்ற லுடன் எதிர்த்து அடிக்குமாறும் விரும்புகிறது. அப்போது எதிர்த்து அடிக்காமல் இருக்கவும், அடக்கத்தைக் கைக்கொள்ள வும், பற்றற்றிருக்கவும் மேலான தெய்வ சக்தி வேண்டியிருக்கிறது.
பற்றற்றிருக்க வேண்டும் என்னும் நமது தீர்மானத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்கிறோம். கடந்து சென்ற காலத்தைத் திரும்பிப் பார்க்கிறோம். அங்கே நமது அன்பிற்கும் பற்றிற்கும் பாத்திரமாக இருந்த பொருட்களைப் பார்க்கிறோம். எப்படி அவை ஒவ்வொன்றும் நம்மைத் துயரத்திற்கு உள் ளாக்கியது என்பதை உணர்கிறோம். நமது ‘அன்பின்’ காரண மாகத் துயரத்தின் எல்லைக்கே சென்று அழுந்திக் கிடந்தோம்! பிறருக்குக் கீழ் வெறும் அடிமைகளாக ஆனதை நாம் கண் டோம்! மேலும்மேலும் கீழ்நோக்கி இழுக்கப்பட்டோம்! ‘இனி நானே எனக்கு எஜமான் ஆவேன். இனி என்னை நான் அடக்கு வேன்’ என்று தீர்மானத்தைப் புதுப்பித்துக் கொள்கிறோம். ஆனால் வேளை வரும்போது மீண்டும் பழங்கதைதான்! மறு படியும் நாம் அகப்பட்டுக் கொள்கிறோம்; வெளியேற முடியாத வர்களாகிறோம். வலையில் சிக்கிய பறவை வெளிவர முயன்று கொண்டும் சிறகடித்துக்கொண்டும் உள்ளது. இதுதான் நமது வாழ்க்கை .
துன்பங்களை நான் அறிவேன். அவை ஏராளம். நம்முள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஊக்கம் குன்றி, துணிவை இழந்து துன்பநோக்கு உடையவர்களாகி விடுகிறோம். நேர்மையிலும், அன்பிலும், கம்பீரமாகவும் மேன்மையாகவும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை இழந்துவிடுகிறோம். ஆக, வாழ்வைப் புதிதாகத் தொடங்கும்போது மன்னிப்பவர்களாக, அன்புடையவர்களாக, எளிமையானவர்களாக, கள்ளம் கபடம் அற்றவர்களாக இருந்த மக்கள் வயது முதிரும்போது பொய்மையே பூண்ட போலிகளாகிவிடுவதைக் காண்கிறோம். அவர்களுடைய உள்ளங்கள் சிக்கல் நிறைந்தவை ஆகிவிடு கின்றன. பார்வைக்கு அவர்கள் மிகவும் அமைதியாக இருக்க லாம். அவர்கள் சீற்றம் கொள்வதில்லை. அவர்கள் ஒன்றும் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் சீற்றம்கொள்வதும் பேசுவ தும் அவர்களுக்கு நல்லது. அவர்களுடைய நெஞ்சங்கள் இறந்து போய்விட்டன. அதனால்தான் அவர்கள் பேசுவதில்லை, அவர்கள் சபிப்பதில்லை, கோபம் கொள்வதில்லை; அவர்கள் கோபம்கொள்ள முடியுமானால் அது அவர்களுக்கு நல்லது, சபிக்க முடிந்தால் அது ஆயிரம் மடங்கு நல்லது. ஆனால் அது அவர்களால் முடியாது. அவர்களது நெஞ்சில் மரணம் உள்ளது; அதன் சில்லிடும் கைகள் அவர்களின் இதயத்தைப் பற்றி விட்டது; சாபம் இடவோ, சுடுசொல் சொல்லவோ முடியாத அளவுக்கு அந்த இதயம் மரத்துவிட்டது.
இவற்றை எல்லாம் நாம் தவிர்க்க வேண்டும். ஆதலால் – தான் மேலான தெய்வ சக்தி நமக்குத் தேவை என்று நான்சொல்கிறேன். ஆதிமனித ஆற்றல் போதாது, மேலான தெய்வ சக்தி பெறுவதே ஒரே வழி. வெளியேற அது ஒன்றுதான் வழி. இந்தச் சிக்கல்கள் அனைத்தின் வழியாகவும், இந்தத் துயர மழைகள் வழியாகவும் அதன் துணையுடன் மட்டுமே நாம் துன்பமின்றிச் செல்ல முடியும். நாம் துண்டுதுண்டாக வெட்டப் படலாம், கிழித்தெறியப்படலாம். எனினும் நமது நெஞ்சம் எப்போதும் மேம்பட்டு விரிய வேண்டும்.
இது மிகவும் கடினமானது. ஆனால் தொடர்ந்த பயிற்சி யால் துன்பத்தை வெல்ல முடியும். எதுவானாலும் சரி, அதை ஏற்கும் முறையில் நம்மை நாம் அமைத்துக்கொள்ளாமல் நமக்கு எதுவும் நிகழாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் ஏற்றதாக அமையாமல், அதற்கு நோய் வர முடியாது என்று சற்று முன்பு கூறினேன். நோய் என்பது நோய்க் கிருமி களை மட்டும் பொறுத்ததல்ல; அதற்கு முன்பே உடலில் நிலவு கின்ற ஒருவகை அனுகூல நிலையையும் பொறுத்ததாகும். நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். நமக்கு வர வேண்டிய துன்பங்கள் மட்டுமே வருகின்றன. ஆணவத்தை விட்டு இதைத் தெரிந்து கொள்வோம். நமக்கென்றில்லாத எந்த அடியும் ஒருபோதும் நம்மைச் சேராது. நமக்கு நாமே செய்து கொள்கின்ற துன்பத்தைத் தவிர வேறு எந்தத் துன்பமும் நம்மை அணுகாது. இதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உங்களையே ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு வந்த துன்பங்கள் எல்லாமே நீங்கள் அதற்காக உங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டதால்தான் வந்தது என்பதை அறிந்துகொள் வீர்கள். ஒரு பாதியை நீங்கள் செய்தீர்கள், புற உலகம் மறுபாதி யைச் செய்தது இவ்வாறே துயரம் வந்தது.
இந்த ஆராய்ச்சியிலிருந்து ஒரு நம்பிக்கைக் கிரணமும் வருகிறது. ‘என்னால் புறவுலகை அடக்க முடியாது. ஆனால் என்னுள், எனக்கு அருகில் இருக்கின்ற எனது சொந்த உலகம் என் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. தோல்விக்கு இரண்டும் தேவையானால், என் துயரத்திற்கு இரண்டும் காரணமானால் என் பக்கத்திலிருந்து நான் ஒத்துழைக்க மாட்டேன். அப்போது துயரம் எப்படி வரும்? உண்மையிலேயே என்னை நான் அடக்கினால், துயரம் ஒருபோதும் வராது’ என்பதே அந்த நம்பிக்கை. 
நமது குழந்தைப் பருவம்முதலே, காலமெல்லாம், நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றின்மீது பழி சுமத்தவே நாம் முயன்றுவருகிறோம். நாம் எப்போதும் பிறரைத் திருத்தத் தான் கங்கணம் கட்டுகிறோமே தவிர, நம்மையே திருத்த முயல் வதில்லை . நமக்குத் துயரம் வந்தால், ‘ஆ! இது என்ன பேய் உலகம்!’ என்கிறோம்; பிறரைச் சபிக்கிறோம்; ‘என்ன முட்டாள் பைத்தியங்கள்’ என்கிறோம். நாம் உண்மையிலே அவ்வளவு நல்லவர்கள் என்றால் அத்தகைய பேயுலகில் நாம் ஏன் இருக்க வேண்டும்? இது பேய்களின் உலகம் என்றால் நாமும் பேய்களே. இல்லாவிடில் நாம் ஏன் இங்கே இருக்க வேண்டும்? ‘ஆ! இந்த மனிதர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்கள்!’ உண்மைதான். ஆனால் நாம் அவர்களைவிட நல்லவர்கள் என்றால் அவர்களது கூட்டத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்? சற்றே சிந்தியுங்கள்.
நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது, நாம் நல்லவர்கள் என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. அது நமக்கே நாம் சொல்லிக்கொள்ளும் ஒரு பெரும் பொய். 
கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவே. வெளி யிலுள்ள எதையும் சபிக்காமலும், வெளியிலுள்ள ஒருவர் மீதும் பழி சுமத்தாமலும் இருக்கத் தீர்மானியுங்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள்மீதே சுமத்திக் கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை அப் போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒருகணம் நமது மனிதத் தன்மையைப் பற்றியும், நமது தெய்வத் தன்மையைப் பற்றியும், நமக்கு எல்லாம் தெரியும் என்றும், நம்மால் எதையும் செய்ய முடியும் என்றும், நாம் குற்றமற்றவர்கள், களங்கமற்றவர்கள், உலகிலே தன்னலமின்மை யில் அனைவரையும் மிஞ்சியவர்கள் என்றும் அவ்வளவு பேசிக் கொள்கிறோம். மறுகணம், ஒரு சிறு கல் நம்மைப் புண்படுத்தி விடுகிறது; ஒரு சிறு மனிதனின் அற்பக் கோபம் நம் மனத்தைப் புண்ணாக்கிவிடுகிறது; தெருவில் போகும் எந்த முட்டாளும் ‘இந்தத் தெய்வங்களை’த் துயருறச் செய்கிறான்- இது வெட்கக் கேடு அல்லவா? நாம் அத்தகைய தெய்வங்களானால் இவ் வாறு நடக்குமா? உலகமே பழி சுமக்க வேண்டும் என்பது உண் மையா? ஆன்மாக்கள் அனைத்துள்ளும் தூய்மை மிகுந்தவரும் பெருமை பொருந்தியவரும் ஆன கடவுளை நம் தந்திரங்களால் துயருறச் செய்ய முடியுமா? நீங்கள் அவ்வளவு தன்னலம் அற்ற வர்களானால் நீங்களும் இறைவனுக்குச் சமமானவர்களே. எந்த உலகம்தான் உங்களுக்குத் தீங்கு செய்ய முடியும்? ஏழாவது நரகம் வழியாகக்கூட நீங்கள் சிறிதும் துன்பமின்றி, ஒருவரும் தடை செய்யாமல் செல்ல முடியும். ஆனால் முறையிடுவதும், புறவுலகின்மீது குற்றம் சுமத்த விரும்புவதுமாகிய உண்மை ஒன்றே நீங்கள் புறவுலகத்தை உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. அவ்வாறு உணரும் உண்மையே, நீங்கள் உரிமை பாராட்டிக் கொள்கிறபடி நீங்கள் இல்லை என்பதைக் காட்டி விடுகிறது. துயரத்தை ஒன்றுக்குமேல் ஒன்றாகக் குவித்துக் கொண்டு போவதாலும், புறவுலகம் உங்களைப் புண்படுத்து வதாகப் பாவித்துக்கொள்வதாலும், ‘ஆ! இது பேயின் உலகம்! இவன் எனக்குத் தீமை செய்கிறான்; அவன் என்னைத் துன்பப் படுத்துகிறான்’ என்றெல்லாம் உரக்க முழங்குவதாலும், முன்பை விட அதிகமாகக் குற்றம் செய்கிறீர்கள். அது துயரத்துடன் பொய்யையும் சேர்ப்பதே ஆகும்.
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும். வழியைப் பூரணமாக்குவோம்; லட்சியம் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும். ஏனெ னில் நம் வாழ்வு நல்லதாகவும் தூய்மையானதாகவும் இருந் தால்தான் உலகம் நல்லதாகவும் தூயதாகவும் இருக்க முடியும். அது ஒரு குறிக்கோள். நாமே வழி. ஆதலால் நம்மை நாம் தூய்மையாக்கிக் கொள்வோம்; நம்மை நாம் பூரணமாக்கிக் கொள்வோம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s