8. அனைவருக்கும் கல்வி
தேசியப் பெரும் பாவம்
நமது நாட்டின் ஏழைகளின் நிலைமையை நினைத்தால் என் மனம் வருத்தமடைகிறது. அவர்கள் ஒவ்வொரு தினமும் கீழ்ச்சென்ற வண்ணமிருக்கின்றார்கள். கொடூரமான ஒரு சமுதாயம் அவர்கள் மீது அடிமேல் அடியைச் சொரிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வடிகளை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் அவ்வடிகள் எங்கிருந்து வருபவை என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. தாங்களும் மனிதர்களே என்பதையும் அவர்கள் மறந்து விட்டார்கள். இவற்றை நினைத்தால் என் மனதில் உணர்ச்சி பொங்குகிறது. இவற்றைப் பற்றிப் பேசவும் எனக்கு நா எழவில்லை. கோடிக்கணக்கான மக்கள் இங்ஙனம் வறுமையிலும் அறியாமையிலும் ஆழ்ந்திருக்கும்போது, அவர்கள் உழைப்பால் வாழ்ந்துங்கூட, அவர்களை கவனியாதிருக்கும் ஒவ்வொருவனையும் நான் துரோகியெனக் கூறுவேன். பாமர மக்களை ஒதுக்கி வைத்ததே நமது தேசியப் பெரும்பாவமென்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அது முக்கியமான காரணமாகும். இந்திய மக்கள் அனைவரும் கல்வி பெற்றவர்களாய்ப் பசிப்பிணியற்றவர்களாகும் வரை, அரசியல் துறையில் நாம் எவ்வளவு ஈடுபட்டாலும் அது பயனற்றதாகும்.
வேண்டியது பொதுமக்கள் கல்வியே
ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவு வளச்சியைப் பொறுத்தது. தேசத்திலிருக்கும் கல்வி, அறிவு அனைத்தும் ஒரு சிறுபான்மையோர் வசம் அகப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம். நாம் மறுபடியும் புத்துயிர் பெற்றெழ வேண்டுமானால், கல்வியை அனைவரிடத்திலும் பரப்புவதன் மூலந்தான் அது சாத்தியமாகும். பொதுமக்கள் அவர்களின் உயர்ந்த தன்மையை இப்பொழுது மறந்துவிட்டனர். அவர்களுக்குக் கல்வி கொடுத்து, அந்த உயர்ந்த தன்மையை உணரச் செய்வதே நாம் இப்பொழுது செய்ய வேண்டிய சேவை. உலகத்தின் பல பாகங்களிலும் நடைபெறும் பேரியக்கங்களைப் பற்றி அவர்கள் அறியச் செய்யவேண்டும். இவ்விதம் அறிவைக் கொடுத்தால், தங்கள் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்ளும் ஆற்றலை அவர்கள் தாங்களாகவே பெறுவார்கள். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தேசமும் அவர்களது வாழ்க்கையின் அமைப்பை அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். நாம் அவர்களுக்குக் கொடுக்கவேண்டியது உயர்ந்த கருத்துக்கள் மட்டும் தான். அவர்களது தேவையும் அதுவே. அதற்கு மேல் அவர்களது முன்னேற்றம் தானே வரும். இயற்கை ரசாயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைத்தால், இயற்கை விதிப்படி அவை தாமாகவே மாறும். அங்ஙனமே மக்கள் முன்னேற்றத்திற்குரிய சாதனங்கள் அனைத்தையும் ஏற்படுத்தினால், அவர்கள் முன்னேற்றமும் இயற்கை விதிப்படி தானே நிகழும்.
அனைவருக்கும் ஆன்மீக ஞானம்
ஆன்மீக வாழ்க்கைக்கு அவசியமான ஞானத்தைப் புகட்டும் சிந்தனைத்துளிகள் பல நம் சமய நூல்களில் நிறைந்திருக்கின்றன. இப்பொழுது அவை சாதாரண மக்கள் கைகளுக்கு எட்டாத இடங்களில் சிலர் கைகளில் மட்டும் சிக்கி இருக்கின்றன. இத்தெய்வீக சிந்தனைகள் முதலில் எல்லோருக்கும் பயன்படுமாறு செய்யப்பட வேண்டும். சாதாரண மக்களால் அறிய முடியாதவண்ணம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சமஸ்கிருத மொழியில் இவை புதைந்திருக்கின்றன. இவ்வரிய கருத்துக்கள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தெரியினும், தெரியாதிருப்பினும், இவை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மகன் அல்லது மகளுடைய சொந்த உடைமையாக வேண்டும். இவை சமஸ்கிருத மொழியிலிருப்பதால் இவற்றைப் பரப்புவதில் சிரமங்கள் இருக்கிறது. நான் என் ஆயுள் முழுவதும் இந்த மொழியைப் பயின்று கொண்டிருக்கிறேன். எனினும், எனக்கே ஒவ்வொரு புத்தகமும் புதிதாகத் தோன்றுகிறதென்றால், சாதாரண மக்கள் இதைப் பயிலுவது எவ்வளவு சிரமமாயிருக்கும்! எனவே, வேதங்களும் உபநிடதங்களும் பொது மக்களுடைய சொந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
தாய்மொழியில் புகட்டுக
அவரவர்களுடைய தாய்மொழியில் இவற்றைப் புகட்டுங்கள்! அவர்களுக்கு இவ்வரிய கருத்துக்களைக் கொடுங்கள்! இதன்மூலம் அவர்கள் விஷயங்களையறிந்து கொள்வார்கள். ஆனால் விஷய ஞானம் மாத்திரம் போதாது. அறிவு, அன்பு, பரஸ்பர நம்பிக்கை முதலிய உயர்ந்த குணங்களையும் அவர்களுக்கு அளியுங்கள்! இவ்வருங்குணங்களின்றி மக்களுடைய அறிவும் உயர்வும் உண்மையானவையாக இருக்கமுடியாது.
சமஸ்கிருதப் பயிற்சி
இதனோடு சமஸ்கிருத மொழியையும் அவர்கள் பயில வேண்டும். சமஸ்கிருத ஸ்லோகங்களின் உச்சரிப்பிலேயே ஒரு கண்ணியமும் சக்தியும் இருக்கின்றன. புத்த பகவான்கூட இவ்விஷயத்தில் ஒரு தவறு செய்தார். சாதாரண மக்கள் சமஸ்கிருதம் பயிலும்படி அவர் செய்யவில்லை. அவர், உயர்ந்த கருத்துக்களை அக்காலத்து மொழியாகிய பாலி மொழியில் பரப்பினார். அது மகத்தான காரியம். அதன் மூலம் பெரும் பயன் உண்டாயிற்று. அக்காலத்து மக்களின் சொந்த மொழியில் அவர் உபதேசம் செய்த காரணத்தால் அவர் அருள் மொழிகள் நாடெங்கும் பரவின. ஆனால் அதனோடு மக்கள் சமஸ்கிருதமும் பயின்றிருக்க வேண்டும். சமஸ்கிருதம், அதைப் பயின்றவர்களுக்கு ஒரு தனி மரியாதையை அளிக்கிறது. சமஸ்கிருதத்தை பொதுமக்கள் பயிலாதவரை, ஒரு சிலர் மாத்திரம் அதைப்பயின்று தங்களை உயர்ந்த ஜாதி என்று காட்டிக்கொள்ள இடமிருக்கிறது.
தேசம் குடிசைகளில்
நமது தேசம் குடிசைகளில் வாழ்கிறதென்பதை நீங்கள் நினைவூட்டிக் கொள்வீர்களாக! ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று, மக்கள் முயற்சியின்றி சோம்பி இருப்பது இனிமேல் கொஞ்சமும் தகாது என்று அவர்களுக்கு எடுத்துரைப்பது உங்கள் கடமையாகும். நமது இப்போதைய நிலைமையை அவர்களை உணர வையுங்கள். சகோதரர்களே! இன்னும் எவ்வளவு காலம் உறங்குவது! எழுங்கள்! விழியுங்கள்!’ என்று பரிவுடன் சொல்லி அவர்களைத் தட்டி எழுப்புங்கள்; அவர்கள் நிலையை எங்ஙனம் உயர்த்திக்கொள்ள முடியுமென எடுத்துரையுங்கள்; நம் புனித நூல்களில் இருக்கும் உயர்ந்த உண்மைகளை எளிமையுடன் சொல்லி, அவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்யுங்கள்; பிராமணர்களைப்போல் அவர்களுக்கும் ஆன்மீக வாழ்வு நடத்த உரிமை உண்டு என்பதை அவர்கள் மனதில் ஆழ்ந்து பதிய வையுங்கள்; மிகத் தாழ்ந்தவர்களெனக் கருதப்படுகிறவர்களுக்கும் சர்வ சக்தி வாய்ந்த உயர்ந்த மந்திரங்களை உபதேசம் செய்யுங்கள். அதனோடு வாழ்க்கையின் அவசியங்களைப் பற்றியும், வியாபாரம், விவசாயம் முதலிய தொழில் முறைகளைப் பற்றியும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
தினசரி வாழ்க்கையில் ஆன்மீக உணர்ச்சி
நுற்றுக்கணக்கான வருடங்களாக அரசர்கள், அன்னியர்கள் முதலியவர்களுடைய கொடுமையினாலும், ஜாதிக் கொடுமையினாலும் நம் மக்களின் வலிமை மிகவும் குன்றிவிட்டது. மீண்டும் அவர்கள் புத்துயிரும் சக்தியும் பெறுதற்குரிய உபாயம், உபநிடதங்கள் கூறும் உயர்ந்த உண்மைகளை அறிந்து, ‘தான் என்றும் அழியாத சர்வ வல்லமையுள்ள ஆன்மா’ என்று ஒவ்வொருவரும் நம்புவதேயாகும். ‘கத்தி என்னை வெட்டாது, நெருப்பு எரிக்காது, காற்று உலர்த்தாது; நான் சர்வ வல்லமையுள்ளவன், சர்வக்ஞன்’ என்ற இந்த எண்ணங்களில் அவர்கள் உறுதிகொள்ள வேண்டும். இவ்வுயர்ந்த கருத்துக்கள் இப்பொழுது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குகைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் வெளிக்கொண்டு வந்து, பொதுமக்கள் மனதில் குடிகொண்டு, தினசரி வாழ்க்கையில் பின்பற்றப் பெறுதல் வேண்டும். இவ்வெண்ணங்கள் நீதிமன்றங்களிலும், கோயில்களிலும், ஏழை மக்கள் வசிக்கும் குடிசைகளிலும், மீன் பிடிக்கும் செம்படவர் இடங்களிலும், பள்ளிக் கூடங்களிலும், எல்லா இல்லங்களிலும் நுழைந்து வேலை செய்ய வேண்டும். இந்தச் சீரிய சிந்தனைகள் ஆண் பெண் குழந்தை முதலிய அனைவரையும் முன்னேறும்படி அறைகூவி அழைக்கின்றன. செம்படவர் முதலியோர் எவ்விதம் இக்கருத்துக்களை மேற்கொண்டொழுக முடியுமென நீங்கள் கேட்கலாம். இதற்கு வழி முன்னமேயே காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு செம்படவன் தான் உடல் அல்ல, ஆன்மாவென்று நினைப்பதன் மூலம் தன் தொழிலில் அவன் இன்னும் அதிகத் திறமையுடையவனாவான். அவ்விதமே, பள்ளிப் பிள்ளைகள் தாங்கள் ஆன்மாவென்று நினைப்பதன் மூலம், இன்னும் அதிக ஆற்றலைப் பெறுவார்கள்.
பள்ளிகள் ஏழைகளிடம் செல்லவேண்டும்
இந்தியாவிலுள்ள எல்லாக் கெடுதல்களுக்கும் அடிப்படையாயிருப்பது நம் மக்களின் வறுமையேயாகும். ஒரு கிராமத்தில் ஓர் இலவசப் பள்ளிக்கூடம் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது இலவசமாக இருந்தாலும் யாதொரு நன்மையும் செய்யாமல் போகலாம். ஏனெனில், வறுமையின் காரணமாக, படிப்பதைவிடக் கொஞ்சம் உழைத்துத் தாய் தந்தையருக்கு உதவப் பிள்ளைகள் விரும்புவார்கள். ‘மலை முகம்மதுவிடம் செல்லாவிட்டால், முகம்மதுதான் மலையிடம் செல்ல வேண்டும்’ என்ற பழமொழி ஒன்றுண்டு. அதைப் போல அந்த ஏழைப் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போகாவிட்டால், பள்ளிகள்தான் அவர்களிடம் செல்ல வேண்டும். சேவையை இலட்சியமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான சாதுக்கள் நம் நாட்டில் கிராமம் கிராமமாய்ச் சென்று சமய போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். உலக விஷயங்களைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க அவர்கள் ஏற்பாடு செய்ய முடியுமானால், அவர்கள் கிராமந்தோறும் வீடு வீடாகச் சென்று சமய போதனையுடன் உலகீயக் கல்வியும் கொடுத்துக் கொண்டு செல்வார்கள். இப்படி ஒரு புகைப்படக்கருவி, ஓர் உலகப்படம் முதலியவற்றுடன் மாலை நேரங்களில் கிராமங்களுக்குச் செல்வார்களானால், வான நூல், பூகோளம் முதலியவற்றைக் கிராம மக்களுக்கு எளிதாகச் சொல்லித் தரமுடியும். பல தேசங்களைப் பற்றிக் கதைகள் சொல்லலாம். அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் படிக்கக் கூடிய விஷயங்களைக் காட்டிலும் அதிகமாகக் கேள்வி மூலம் அவர்கள் மனதிலே கல்வியில் ஆர்வத்தை ஊட்டுங்கள். வரலாறு, புவியியல், அறிவியல், இலக்கியம் ஆகியவற்றில் கல்வியளியுங்கள். இவற்றுடன் சேர்ந்து சமய நீதிகளையும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
வயிற்றுப்பாட்டிற்காக பொருள் தேடும் முயற்சியிலேயே நம் ஏழை மக்களின் காலம் முழுதும் கழிந்து விட்டது. கல்வியறிவில் மனதைச் செலுத்த அவர்களுக்கு இதுவரை அவகாசம் கிடைக்கவில்லை. அவர்கள் அறிவற்ற இயந்திரங்கள் போல வேலை செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது. மேல் வகுப்பினர் பாமர மக்களை இனிமேல் அடக்கி ஆளமுடியாது. தங்கள் நலத்தில் அக்கறை உள்ளவர்களாய் இருந்தால், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குரிய உரிமைகளை உயர்ந்த ஜாதியினர் உடனே அளிக்க வேண்டும். ஆதலால் மேல் வகுப்பினராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாமர மக்களிடம் கல்வி பரப்பும் சேவையை நீங்கள் மேற்கொள்ளுங்கள்! நீங்கள் எங்கள் சகோதரர்கள், எங்கள் உடம்பில் ஒரு பகுதியாயிருப்பவர்கள்’ என்று சொல்லி அவ்வொற்றுமையுணர்ச்சியை அவர்கள் மனதில் பதியும்படி செய்யுங்கள். இவ்விதம் அவர்களை அன்புடன் நடத்தினால், அவர்கள் இதன் மூலம் பேரூக்கம் எய்திப் பன்மடங்கு சக்தியுடன் முன்னேற்றமடைவார்கள்.
செயற்கரிய செய்ய வேண்டுவன: வளர்ச்சி
எதேனும்பெரிய காரியமொன்றை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு மூன்று விஷயங்கள் மிகவும் அவசியமானவை. முதன் முதல், இதயபூர்வமான உணர்ச்சி வேண்டும். பலத்தினாலும், புத்திசாலித்தனத்தினாலும் ஆவதென்ன? அவை சிறிது தூரம் சென்று, அங்கே நின்று விடுகின்றன. அருள் சுரப்பது, ஆர்வமுண்டாவது இதயத்தின் மூலந்தான்; முடித்தற்கரிய காரியங்களை முடிக்கவல்லது அன்புதான். பிரபஞ்சத்திலுள்ள இரகசியங்களையெல்லாம் அறிவதற்கு வாயிலாயிருப்பதும் இவ்வன்புதான். தேசப் பற்றுடையர்வகளாக இருக்க விரும்பும் நண்பர்களே! இத்தகைய உணர்ச்சியை நீங்கள் முதலில் பெறுங்கள். உங்களிடம் உண்மையில் இவ்வுணர்ச்சியிருக்கின்றதா? தேவர்கள் ரிஷிகளுடைய சந்ததியரான கோடானுகோடி மக்கள் இன்று மிருகங்களுக்குச் சமமாக, அவற்றின் சகோதரர் போன்ற நிலைக்கு வந்துவிட்டனரே என்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்கின்றதா? இலட்சக் கணக்கான மக்கள் இன்றைய தினம் உணவின்றிப் பட்டினியாகக் கிடக்கின்றார்களே! இலட்சக் கணக்காக ஜனங்கள் பல நூற்றாண்டுகளாய் இப்பட்டினியில் மடிந்து வருகின்றார்களே என்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்கிறதா? அஞ்ஞானமானது இருண்ட மேகம் போலச் சூழ்ந்து நாட்டைக் கவிழ்ந்துகொண்டுவிட்டதே என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்களை அமைதியற்றவர்களாக்கி விட்டதா? உங்களை நித்திரையற்றவர்களாகச் செய்கின்றதா? அது உங்கள் இரத்தத்துக்குள் பிரவேசித்து இரத்தக் குழாய்களின் வழியே சுற்றி, உங்கள் இதயத்துடன் சேர்ந்து ஓயாமல் துடித்துக் கொண்டிருக்கிறதா? அது உங்களை அநேகமாய்ப் பித்தர்களாக்கிவிட்டதா? நாட்டின் துக்கம், சீர்கேடு என்ற ஒரே கவலை உங்களைப் பிடித்துக் கொண்டுவிட்டதா? அதனால் உங்கள் பெயர், புகழ், பெண்டு, பிள்ளைகள், சொத்து, சுகங்கள் எல்லாவற்றையும் மறந்தீர்களா? உங்கள் தேசத்தையும்கூட மறந்துவிட்டீர்களா? இந்த நிலைக்கு வந்துவிட்டீர்களானால் அதுவே நாட்டுப் பற்றுடையவர் ஆவதற்கு முதற்படியாகும்.
வழி காணல்
இவ்வுணர்ச்சி உங்களிடம் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும், வெறும் வசை மொழிகளிலும், உபயோகமற்ற பேச்சுக்களிலுமே உங்கள் சக்தியையெல்லாம் செலவிடாமல், ஏதாவது காரியம் ஆற்றுவதற்குக் கொண்டுவரும் வழியொன்றைக் கண்டுபிடித்தீர்களா? வீணான பேச்சுக்களை விட்டுவிட்டு, மக்கள் படுந்துன்பங்களைச் சிறிதேனும் குறைக்க உபயோகமான வேலை ஏதேனும் செய்யவும், நடைப்பிணங்களாகிக் கிடக்கும் அவர்களை அக்கேவலமான நிலையிலிருந்து விடுவிக்கவும் ஏதாவதொரு வழியைக்கண்டு பிடித்தீர்களா?
திட சங்கற்பம்
இவற்றைச் செய்தால் மட்டும் போதாது. உங்கள் காரியத்தில் இடையூறுகள் மலைபோலத் திரண்டுவரினும் அவற்றைத் தயங்காது எதிர்த்து நின்று போக்கும் மனோதிடம் உங்களிடம் இருக்கிறதா? முழு உலகமும் சேர்ந்து கையிற்கத்தி கொண்டு எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரியென்று நினைக்கும் காரியத்தைச் சற்றும் பின்வாங்காது செய்யவல்ல தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் பெண்டு பிள்ளைகளே உங்களுக்கு விரோதமாக நிற்பினும், உங்கள் பணமெல்லாம் இழக்க நேரிடினும், அதனால் உங்கள் பெயரே கெட்டுப்போனாலும், மற்றெல்லாச் செல்வங்களும் போய்விடுவதாக இருந்தாலும் கூட, அப்பொழுதும் எடுத்த காரியத்தை விடாமல் உறுதியாகச் செய்வீர்களா? சகலமும் துறக்க நேரிடினும் அக்காலத்திலும், நீங்கள் கருதிய உங்கள் இலட்சியம் கைகூடும்வரை, இடைவிடாமல் உறுதியாக மேல்நோக்கிச் செல்வீர்களா? பர்த்ருஹரியார் சொல்வதுபோல் ஞானிகளானோர் நிந்திப்பதானாலும் நிந்திக்கட்டும் அல்லது புகழ்வதானாலும் புகழட்டும்; சகலபாக்கியங்களையும் கொடுக்கும் இலட்சுமி வந்தாலும் வரட்டும்; அல்லது துரதிருஷ்டமான இடத்துக்குப் போனாலும் போகட்டும்; மரணமானது இன்றே வந்தாலும் சரி; அல்லது நூறு வருடங்கள் கழித்து வந்தாலும் சரி; எவனொருவன் உண்மையினின்று நூலிழையேனும் பிறழாதிருப்பானோ அவனே உறுதியுடையோனாவான்’- இவ்வுறுதி உங்களிடம் இருக்கின்றதா? இந்த மூன்று விஷயங்களும் – உண்மையுணர்ச்சி, தக்க வழியொன்று காணல், கண்ட அவ்வழியில் உறுதியுடன் உழைத்தல் – உங்களிடம் இருக்குமானால், நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதங்களைச் செய்வீர்கள்.
தெய்வ வழிபாடு தொண்டே
கருணைப் பரஞ்சுடர் நமக்கு வழி காட்டட்டும் என்று நாம் பிரார்த்திப்போமாக! அப்போது, நம்மைச் சுற்றியிருக்கும் அந்தகாரத்தினூடே ஓர் அருள் ஒளி தென்படும். நமக்கு வழிகாட்ட ஒரு திருக்கரம் வெளித்தோன்றும். வறுமையினாலும், வைதீகத்தின் கொடுமையினாலும், கொடுங்கோன்மையாலும் நசுக்கப்பட்ட நம் நாட்டிலிருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்காக நாம் ஒவ்வொருவரும், இரவும் பகலும் பிரார்த்தனை செய்வோமாக! செல்வந்தர்களை விட நான் இவர்களுக்கே சமய உபதேசம் செய்ய விரும்புகிறேன். நான் தத்துவ ஆசிரியர் அல்லேன். ஞானியுமல்லன்; ஆனால், நான் ஓர் ஏழை; ஏழை மக்களை நேசிக்கிறேன். தரித்திரத்திலும் அறியாமையிலும் ஆழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக யார் இரங்குகிறார்கள்? யாரொருவர் ஏழை மக்களின் பொருட்டு நெஞ்சு புண்ணாக வருந்துகிறாரோ அவரை ஒரு மகாத்மாவென மதிப்பேன்! ஆனால் அவர்களுக்காக யார்தான் வருந்துகிறார்கள்! அவர்கள் ஞானத்தையோ கல்வியையோ பெற முடியாது. அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருவார் யார்? வீடுவிடாகச் சென்று அவர்களுக்குக் கல்வி புகட்ட முற்படுவோர் யார்? இவ்வேழை மக்களையே உங்கள் தெய்வமாகக் கொள்ளுங்கள்; அவர்களைப் பற்றியே சிந்தனை செய்யுங்கள்; அவர்களுக்காகவே உழையுங்கள்; அவர்களுக்காகவே எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள்! இறைவன் உங்களுக்கு வழி காட்டுவானாக!
