7. பெண்கல்வி
முற்கால இந்தியாவில்
ஆண், பெண் அனைவரிடத்திலும் ஒரே ஆன்மா நின்றியக்குகிறது என்று நம் சமய நூல்கள் போதிக்கின்றன. அப்படியிருந்தும் ஆண் பெண்களை நடத்துவதில் நமது நாட்டில் ஏன் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதென்பது புலப்படவில்லை. பலவிதமான கொடிய விதிகளைச் செய்தும், கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியும் பெண்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரங்களாகச் செய்துவிட்டனர். பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேதங்களைப் பயிலக்கூடாதென்று சட்டம் செய்த காலத்தில், பெண்களுடைய உரிமைகளும் பறிக்கப்பட்டன. வேதங்கள் எழுதப்பட்ட காலத்திலும், உபநிடதங்கள் உண்டாக்கப்பட்ட காலத்திலும், மைத்ரேயி, கார்க்கி முதலிய பெண்மணிகள் கற்றுணர்ந்த ஞானிகளாகவும், முனிவர்களாகவும் விளங்கியிருப்பதைக் காண்பீர்கள். சமய நூல்களைக் கற்றுணர்ந்த ஆயிரம் பேர்கள் இருந்த சபையில், கார்க்கி அஞ்சா நெஞ்சுடன் யாக்ஞவல்க்யரை பிரம்மனைப் பற்றி விவாதம் செய்யும்படி அழைக்கவில்லையா?
உண்மையான தேவி வழிபாடு
மாதர்க்குரிய மதிப்பை அளிப்பதன் மூலமே எல்லா தேசத்தாரும் சிறப்பெய்தியிருக்கிறார்கள். எந்த நாடு பெண்களைச் சரியாக மதிக்கவில்லையோ, அந்த நாடு எப்பொழுதும் சிறப்பெய்துவதில்லை; இனிமேலும் சிறப்படையாது. உண்மையான சக்தி உபாசகன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? பெண்களைப் பராசக்தியின் திருவடிவங்களெனக் கொண்டு அவர்களை வழிபடுகிறவனே உண்மையான சக்தி உபாசகனாவான், அமெரிக்க நாட்டு மக்கள் தங்கள் பெண்களை இவ்விதம் நினைத்துப் போற்றுகிறார்கள். எனவே, அவர்கள் செல்வத்திலும் கல்வியிலும் சிறந்து, சக்தியுடனும் சுதந்திரத்துடனும் வாழ்கிறார்கள். அன்னையின் திருவடிவங்களான பெண்களை நாம் சரியாக நடத்தாததே நாம் முன்னேறாமல் போனதற்கு முக்கியமான காரணமாகும். பெண்கள் கண்ணியத்துடன் எங்கு நடத்தப் படுகிறார்களோ, அங்கே தேவர்கள் திருப்தியடைகிறார்கள். எங்கு அவர்கள் அவ்விதம் நடத்தப்படுவதில்லையோ, அங்கு எம்முயற்சியும் பலிக்காது’ என்று மனுதர்ம சாஸ்திரம் கூறுகின்றது. பெண்களைத் துயரத்தில் வைத்திருக்கும் குடும்பமோ தேசமோ என்றும் மேன்மை அடையாது.
கல்வியே அருமருந்து
பெண்கள் தொடர்புடைய பல முக்கியமான பிரச்சினைகளிருக்கின்றன. ஆனால், கல்வி யென்னும் அருமருந்தால் ஆற்ற முடியாதது அவற்றில் எதுவும் இல்லை. மனு என்ன சொல்லியிருக்கிறார்? ஆண்களுக்கு எவ்வளவு சிரத்தையுடன் கல்வி புகட்டப் படுகிறதோ அவ்வளவு சிரத்தையுடன் பெண்களுக்கும் கல்வி புகட்டப்பட வேண்டும். பிள்ளைகள் முப்பதாண்டு பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தியபிறகே, அவர்களுக்குப் பெற்றோர் மணம் முடிக்கவேண்டும். அவ்விதமே பெண்களுக்கும் செய்ய வேண்டும். அதுவரை அவர்களுக்குக் கல்வியளிக்கப்படவேண்டும்’. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? கொஞ்சமும் தன்னம்பிக்கையில்லாமல், பிறரை நம்பியே வாழ்க்கையை நடத்தும் முறையில் அவர்களை நாம் பழக்கியிருக்கிறோம். இது காரணமாக, ஒரு சிறு ஆபத்து நேர்ந்த போதிலும், அழுவதைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர். பெண்கள், தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படியான நிலைமைக்கு நாம் அவர்களைக் கொண்டுவர வேண்டும். நம் இந்தியச் சகோதரிகள் மற்றெந்த நாட்டுப் பெண்களைக் காட்டிலும், ஆற்றல் குறைந்தவர்கள் அல்லர்.
பெண்களுக்குரிய கல்வி, சமய உணர்ச்சியைப் பிரதானமாகக் கொண்டு பரப்பப்பட வேண்டும். மற்ற பயிற்சிகள். அனைத்தும் சமயப் பயிற்சிக்கு அடங்கியவையாக இருக்கவேண்டும். ஆன்மீக உணர்ச்சி, ஒழுக்கம், பிரம்மச்சரியம் என்ற இவற்றைக் கவனிக்க வேண்டும். கற்பென்பது இந்து மாதரின் பரம்பரைச் செல்வமாகும். ஆதலால் அவர்கள் அதை நன்றாக அறிவார்கள். முதலில் இந்த இலட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்துங்கள்! இதன் மூலம் அவர்கள் சிறந்த மன வலிமையைப்பெறுவார்கள். அவர்கள் இல்லறம் புகினும், பிரம்மச்சாரிணியாக வாழ விரும்பினும்எந்நிலையிலிருப்பினும் தங்கள் ஒழுக்கத்தை விட்டு தவறுவதைவிட உயிரை விடத்தக்க அஞ்சாத் தன்மையையும் திடசித்தத்தையும் அவர்களுக்கு இந்த இலட்சியம் அளிக்கும்.
சீதையே இலட்சியம்
இந்தியப் பெண்கள் சீதையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வளர வேண்டும். சீதை ஒப்பற்றவள். அவளே இந்தியப் பெண்களின் இலட்சியமாவாள். இந்தியாவில் தோன்றி இருக்கும் உயர்ந்த பெண்மணிகள் அனைவரும் அவள் அடிச்சுவடுகளைப் பின்பற்றியவர்களே. அவள் தோன்றி இப்பொழுது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலாகி விட்டது. எனினும் அவளை வழிபடாத இந்திய மகனோ மகளோ கிடையாது. இந்த சீதாப்பிராட்டி, கற்பின் அவதாரமாகிய அவள், பொறுமைக் கடலாயிருந்து சகல துக்கங்களையும் பொறுத்த அவள், எக்காலத்தும் நமக்கு உதாரணமாயிருப்பாள். அவச்சொல்லொன்றும் இன்றி அளவற்ற துன்பத்தை பொறுத்த அவள் – அந்தக் கற்புக்கரசி எப்பொழுதும் நம் தேசிய இலட்சியமாக இருப்பாள். அவளுடைய உணர்ச்சியும் இலட்சியமும் நம் இரத்தத்துடன் இரத்தமாய் கலந்து இருக்கின்றன. தற்காலத்தில் நம் பெண்கள் சீதை காட்டிய வழியினின்றும் பிறழ முயன்றால், அம்முயற்சி வீணாவது நிச்சயம்.
சிலர் துறவிகளாதல் அவசியம்
நமது நாட்டின் தற்காலத் தேவைகளை அனுசரித்துப் பெண் மக்களில் சிலரும் துறவு இலட்சியங்களை மேற்கொள்ளல் அவசியமெனத் தோன்றுகிறது. அனாதி காலமாகத் தங்கள் இரத்தத்தில் தோன்றியிருக்கும் பதி விரதா தருமத்தின் பலத்தினால், அவர்கள் வலிமை பெற்றுத் தங்கள் வாழ்நாள் முழுவதும் கன்னிகைகளாகவே இருந்து தொண்டாற்ற அவர்களில் சிலராவது விரதங்கொள்ள வேண்டும். தன் புத்திரிகள் சிலராவது இத்தகைய பரிசுத்தமான துறவு மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டுமெனப் பாரதத்தாய் விரும்புகிறாள். இவர்களில் ஒருவர் ஞானசித்தி பெற்றாலும், அவ்வொருவர் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் மனதில் ஞானச்சுடர் விளக்கு ஏற்றப்பட்டு, அதனால் தேசத்திற்குப் பெரும் பயன் உண்டாகும்.
ஒழுக்கமும், கல்வியும் வாய்ந்த கன்னிகைகள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் பெண்களைப் பயிற்றுவிப்பதற்கெனப் பாடசாலைகள் ஏற்படுத்தவேண்டும். இத்தகைய பக்தியும் கல்வியும் வாய்ந்த சிலரால்தான் பெண்கல்வியைப் பரப்புவது சாத்தியமாகும். நாட்டின் சரித்திரம், புராண இதிகாசங்கள், குடும்ப நிர்வாக முறைகள், பலவிதமான கலைகள், குடும்பத்தின்பால் நமக்குள்ள கடமைகள் ஒழுக்கத்துக்கேற்ற கொள்கைகள் – இவை அவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். தெய்வ ஆராதனை, ஜபம், தியானம் முதலியன அவர்கள் கல்விமுறையில் முக்கியமான அம்சங்களாக இருக்க வேண்டும். இவற்றுடன், வீர உணர்ச்சியையும் அவர்களிடம் வளர்ப்பது அவசியம். பிறர்வந்து துன்புறுத்தினால் அவர்களை எதிர்த்துப் போராடத்தக்க திண்மையை அவர்கள் பெறவேண்டும்.
தற்காத்தல்
ஜான்சிராணி தன் சேனைக்குத் தலைமை தாங்கி வீரத்துடன் போர்புரியவில்லையா? சங்கமித்ரா, லீலா, அகல்யா பாய், மீராபாய் போன்ற வீரத்தாய்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தற்காலத்திலும் வீரமும் சக்தியும் வாய்ந்த பெண்மணிகள் இந்நாட்டில் தோன்ற வேண்டும். அவர்கள் வீரத்திற்கு அடிப்படையாகத் தூய்மையும் தெய்வ பக்தியும் அவர்கள் பால் திகழ வேண்டும். குழந்தைகளை நன்றாகப் பேணக்கூடிய சக்தியும் அவர்களுக்கு இன்றியமையாதது. இத்தகைய தாய்மார்கள் வயிற்றில் பிறக்கும் மக்கள் எதற்கும் அஞ்சாத வீரர்களாகவும், மற்ற விதங்களில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள் எனச் சொல்லவும் வேண்டுமா?
பெண்கள் உயர்வு பெறவேண்டும். அவர்கள் மூலம் தான் நம் வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துக்களைப் பெற்று நற்காரியங்களைச் செய்ய முடியும். நமது நாடு சிறப்பெய்துவதற்கான வழி இதுவே. இவர்கள் மூலமாகவே நம் நாட்டில் கல்வி, ஞானம், பக்தி, நாகரிகம் போன்றவை சிறப்புற்று வளர்கிறது.