கர்மயோகம் 7

உயர்நிலைப் பாடங்கள்

3. பற்றின்மையே பூரணமான தன்னல மறுப்பு

நம்மிடமிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மிடமே எதிர்ச்செயலாகத் திரும்பி வருவது போல் நம் செயல்கள் பிறரிடமும் பிறரது செயல்கள் நம் மிடமும் செயல்படுகின்றன. தீங்கு செய்கின்ற ஒருவன் மேலும் மேலும் தீயவனாகிறான். அவனே நல்லது செய்யத் தொடங்கும் போது மேலும் மேலும் வலிமை யடைந்து எப்போதுமே நல்லதைச் செய்யக் கற்றுக் கொள்கிறான். இந்த உண்மையை நீங்கள் கவனித்திருப்பீர்கள் ஒரு செயல் ஏற்படுத்தும் தாக்கத்தின் இத்தகைய தீவிரத்தை நமது செயல்கள் பரஸ்பரம் ஒவ்வொருவர் மீதும் விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் உண்டாக்குகின்றன என்ற உண்மையின் மூலம் அல்லாமல், வேறு எதன் மூலமாகவும் விளக்க முடியாது.

பௌதீக விஞ்ஞானத்திலிருந்து இதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நான் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வு நிலையில் இருக்கிறது. இந்த அதிர்வு நிலையில் இருக்கின்ற மற்றெல்லா மனங்களும் என் மனத்தால் பாதிக்கப்படலாம். ஓர் அறையில் பல்வேறு இசைக்கருவிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவை அனைத்தின் தந்திக்கம்பிகளும் ஒரேமாதிரி சுருதி சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கருவியின் தந்தியை மீட்டினால் மற்ற கருவிகளும் அதே சுவரத்தைத் தரும் விதத்தில் அதிரத் தொடங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதுபோலவே ஒரு குறிப்பிட்ட அதிர்வுநிலையிலுள்ள எல்லா மனங்களும் அதே நிலையிலுள்ள எண்ணத்தால் சம அளவில் பாதிக்கப்படுகின்றன. ஆனால் தூரம் மற்றும் பல காரணங்களைப் பொறுத்து இந்தப் பாதிப்பின் தாக்கம் மனத்திற்கு மனம் மாறுபடவே செய்கிறது. என்றாலும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையிலேயே அந்த மனம் எப்போதும் இருக்கிறது. உதாரணமாக நான் ஒரு தீமை செய்கிறேன். அப்போது என் மனம் குறிப்பிட்ட அதிர்வு நிலையில் இருக்கிறது அப்போது பிரபஞ்சத்தில் அதே அதிர்வு நிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அந்த அதிர்வால் பாதிக்கப்படலாம். அதுபோலவே நான் நல்ல காரியம் செய்யும்போது, என் மனம் வேறோர் அதிர்வு நிலையில் இருக்கும்; அப்போது அதே அதிர்வு நிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அதனால் பாதிக்கப்படலாம் இப்படி ஒரு மனத்தின் மீது மற்றொரு மனத்திற்குள்ள ஆற்றல் ஓரளவிற்கு அந்த அதிர்வு கூடியும் குறைந்தும் இருப்பதற்கு ஏற்பவே இருக்கும்.

இந்த உதாரணத்தைத் தொடர்வோம். ஒளியின் அலைகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையுமுன் லட்சோபலட்சம் ஆண்டுகள் பயணம் செய்யலாம். அதுபோலவே எண்ண அலைகளும் தங்களுக்கு ஏற்றவிதத்தில் அதிர்கின்ற ஒரு பொருளைச் சென்றடைய நூற்றுக் கணக்கான ஆண்டுகள் பயணம் செய்ய நேரலாம் எனவே இந்த வானவெளி அத்தகைய நல்ல மற்றும் தீய அலைகளால் நிரம்பி இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஒவ்வொரு மூளையிலிருந்தும் வெளிக் கிளம்பும் ஒவ்வோர் எண்ணமும் அதை ஏற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான பொருளை அடையும்வரையில் அதிர்ந்து கொண்டேயிருக்கின்றன என்று சொல்லலாம்.

அவற்றை ஏற்றுக் கொள்வதற்குத் தகுதியாக இருக்கம் மனம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறது. ஒருவன் தீய செயல்களைச் செய்யும்போது அவன் தன் மனத்தை ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வருகிறான். அப்போது அதே அதிர்வுநிலையில் வானவெளியில் மிதந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற எண்ண அலைகள் எல்லாம் அவனது மனத்தில் நுழையமுயல்கின்றன. இதனால் தான் பொதுவாக தீமை செய்பவன் மேலும் மேலும்தீமை செய்துகொண்டே இருக்கிறான். அவனது செயல் தீவிரமாகிறது நன்மை செய்பவனின் விஷயமும் இதுதான் அவன் வானவெளியில் உள்ள நல்ல அலைகளுக்காகத் தன்னைத் திறந்து வைக்கிறான் அவனது நற்செயல்களும் உறுதி பெறுகின்றன.

எனவே நாம் தீமை செய்யும்போது இரண்டு வகையான அபாயங்களை விளைவிக்கிறோம் முதலில் நம்மைச் சுற்றியுள்ள தீய ஆதிக்கங்கள் நம்மீது செயல்பட நாமே இடம் கொடுக்கிறோம். இரண்டாவதாக மற்றவர்களைப் பாதிக்கின்ற அது ஒருவேளை நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகாக இருக்கலாம். தீமையைச் செய்யும் போது நாம் நம்முடன் சேர்த்துப் பிறரையும் துன்புறுத்துகிறோம் மனிதனிலுள்ள மற்ற எல்லா சக்திகளையும் போலவே நன்மை தீமை ஆகிய சக்திகளும் புறத்திலிருந்தே வலிமையைப் பெறுகின்றன.

கர்மயோகத்தின் படி ஒருமுறை செய்த செயல் பலனை அளிக்கும் வரையில் அதை அழிக்க முடியாது அது பலனளிப்பதை உலகத்தில் உள்ள எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது. நான் ஒரு தீமை செய்தால் அதற்காக நான் துன்பப்பட்டேயாக வேண்டும். அதைத் தடுக்கவோ அழிக்கவோ இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஆற்றலாலும் முடியாது. அதுபோலவே நான் ஒரு நல்ல செயல் செய்தால் அது நற்பலன்களைத் தருவதைத் தடுக்கின்ற ஆற்றலும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை காரணம் காரீயத்தைக் கொண்டு வந்தே தீரும் எதுவும் அதை அழிக்கவோ தடுக்கவோ முடியாது.

கர்மயோகத்தைப் பற்றிய நுணுக்கமானதும் ஆழமானதுமான முடிவு ஒன்று இப்போது வருகிறது. நல்லதும் தீயதும்

ஆகிய நமது இரண்டு செயல்களும் பரஸ்பரம் பின்னிப் பிணைந்துள்ளன. இது முற்றிலும் நல்ல செயல் இது முற்றிலும் தீய செயல் என்று நாம் வரையறுக்க முடியாது. ஒரே நேரத்தில் நல்ல மற்றும் தீய விளைவுகளைத் தராத எந்தச் செயலுமே கிடையாது. இந்த உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் நான் நல்லது செய்வதாக உங்களுள் சிலர் நினைக்கலாம். அதே வேளையில் வான்வெளியில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளை நான் சாகடித்துக் கொண்டிருக்கலாம் இவ்வாறு ஏதோ சிலவற்றிற்குத் தீமையும் செய்து கொண்டிருக்கிறேன் நமக்கு மிக அருகிலுள்ளவர்களுக்கு நமக்கு வேண்டியவர்களுக்கு நன்மை பயக்கும் போது அதை நற்செயல் என்கிறோம். உதாரணமாக நான் பேசிக் கொண்டிருப்பதை நல்லது என்று நீங்கள் கூறலாம், ஆனால் நுண்ணுயிரிகள் அவ்வாறு நினைக்காது. நுண்ணுயிரிகளை நீங்கள் பார்க்கவில்லை; ஆனால் உங்களை நீங்கள் பார்க்கிறீர்கள். என் பேச்சு உங்களைப் பாதிப்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது அது அந்த நுண்ணுயிரிகளை எப்படிப் பாதிக்கிறது என்பது அவ்வளவு தெளிவாகத் தெரிய வில்லை. எனவே நமது தீய செயல்களை ஆராய்ந்தால் அவற்றால் எங்காவது ஓரிடத்தில் நன்மை விளைந்திருப்பதைக் காணலாம் யார் நல்ல செயலிலும் தீய அம்சம் உண்டென்றும் தீய செயலிலும் நல்ல அம்சம் உண்டென்றும் காண்கிறானோ அவனை செயலின் ரகசியத்தை அறிந்தவன்.

இதிலிருந்து தெரிவது என்ன? தூய்மை என்றால் அஹிம்சை என்றும், தூய்மையற்றது என்றால் ஹிம்சை என்றும் பொருள் கொள்வதானால், நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த அர்த்தத்தில் முழுக்கமுழுக்கத் தூய்மையானதோ ஆன ஒரு செயல் இருக்க முடியாது என்பதுதான். நாம் பிறரைத் துன்புறுத்தாமல் மூச்சுவிடவோ உயிர் வாழவோ முடியாது. நாம் உண்ணும் ஒவ்வொரு பிடி உணவும் மற்றொன்றின் வாயிலிருந்து பறித்தெடுக்கப்பட்டதே நமது வாழ்வே மற்ற உயிர்களின் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளியபடிதான் சென்று கொண்டிருக்கிறது. அது மனிதனாக இருக்கலாம் விலங்காக இருக்கலாம் அல்லது நுண்ணுயிரிகளாக இருக்கலாம். ஏதாவது ஒன்றை நாம் ஒதுக்கித் தள்ளியேயாக காலம் வரை ஓயாமல் செயல்கள் புரியலாம். ஆனால் சிக்கலான இந்தப் பொறியிலிருந்து தப்பிக்க வழி எதுவுமே இல்லை நீங்கள் மேலும் மேலும் செயல் புரிந்துகொண்டே போகலாம் ஆனால் அதன் பலன்களிலுள்ள நன்மை மற்றும் தீமையின் தவிர்க்க முடியாத இந்தச் சேர்க்கைக்கு ஒரு முடிவே இருக்காது.

இரண்டாவதாக நாம் ஆலோசிக்க வேண்டியது செயலின் குறிக்கோள் என்ன என்பதே. உலகம் நிறைநிலையை அடைகின்ற காலம் ஒன்று வரும். அப்போது நோயோ மரணமோ,துன்பமோ தீமையோ இருக்காது என்று ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பாலான மக்கள் நம்புவதைக் காண்கிறோம். எண்ணம் நல்லதுதான் பாமர மக்களுக்கு உத்வேகத்தைத் தரவும் அவர்களை உயர்த்தவும் ஒரு மிகச் சிறந்த தூண்டுசக்தி இது ஆனால் நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் இது நடக்க முடியாத ஒன்று என்பது பிரத்தியட்சமாகத் தெரியும். நன்மையும் தீமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்க அது எப்படி நடக்க முடியும் தீமை இல்லாத நன்மை எப்படி இருக்க முடியும் நிறைநிலை என்பதற்கு என்ன பொருள்? நிறைவாழ்வு என்பது முன்னுக்குப் பின் முரணான ஒன்று வாழ்வு என்பதே நமக்கும் வெளியே இருக்கின்ற அனைத்திற்கும் தொடர்ந்து நடக்கின்ற போராட்டம்தான். உண்மையில் ஒவ்வொரு கணமும் நாம் புற இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் தோற்றால் நமது வாழ்க்கை முடிந்தாக வேண்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் வாழ்க்கை என்பது உணவிற்காகவும் காற்றிற்காகவும் தொடர்ந்த போராட்டமாக உள்ளது. உணவோ காற்றோ கிடைக்காவிட்டால் நாம் இறந்து போகிறோம். வாழ்க்கை என்பது தடையற்றுப் பாய்கின்ற நீரோட்டமல்ல பலவற்றுடைய சங்கமத்தின் விளைவு அது உள்ளே உள்ள ஏதோ ஒன்றிற்கும் புறவுலகிற்கும் நிகழ்கின்ற இந்தச் சிக்கலான போராட்டத்தைத் தான் நாம் வாழ்க்கை என்று அழைக்கிறோம். எனவே இந்தப் போராட்டம் ஓயும்போது வாழ்க்கையும் முடிந்து விடுகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவு. இந்தப் போராட்டத்தின் முடிவே லட்சிய இன்பம் என்பதன் பொருள். போராட்டம் முடிவடைந்தால் வாழ்க்கையும் முடிகிறது. ஏனென்றால் வாழ்க்கை முடிவடைந்தால் மட்டுமே இந்தப் போராட்டம் முடிவடையும்.

உலகிற்கு உதவுவதன் மூலம் நமக்கேதான் நாம் உதவி செய்துகொள்கிறோம் என்பதை முன்பே கண்டோம். பிறருக்காகச் செய்யப்படும் வேலையின் முக்கிய விளைவு நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் பிறருக்கு நன்மை செய்வதற்காகச் செய்கின்ற இடைவிடாத முயற்சியின் மூலம் நாம் நம்மையே மறக்க முயல்கிறோம். நம்மை மறப்பது என்பது வாழ்வில் நாம் கற்றாக வேண்டிய மிகப் பெரிய பாடமாகும். சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். ஆனால் பலகாலப் போராட்டத்திற்குப் பிறகு தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. தன்னைத் தவிர வேறு யாராலும் தனக்குச் சுகம் தர முடியாது என்பதை அறிந்து கொள்கிறான்.

அறச் செயல்கள் ஒவ்வொன்றும் கருணை நிறைந்த எண்ணம் ஒவ்வொன்றும் உதவியாகச் செய்யப் படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணும் நமது அகந்தையை அழித்து நம்மை மிகத் தாழ்ந்தவர்களாகவும் மிகமிகச் சாதாரணமானவர்களாகவும் நினைக்கும் படிச் செய் கின்றன எனவே இவையனைத்தும் நல்லவையே ஞானம் பக்தி கர்மம் முதலிய எல்லாமே ஓரிடத்தில் சங்கமிக்கின்றன. என்றென்றைக்கும் முழுமையாகத் தன்னை மறுப்பதே மிகவுயர்ந்த லட்சியம் அங்கே நான் இல்லை எல்லாம் நீயே மனிதன் அறிந்தாலும் அறியாவிட்டாலும் கர்மயோகம் அவனை அந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

நிர்க்குணக் கடவுள்கருத்தைக் கேட்டாலே மதப் பிரச்சாரகன் நடுங்கலாம் அவன் சகுணக் கடவுள் கருத்தை வற்புறுத்துவான் அதன் மூலம் தனது சொந்த இயல்பையும் தனித்துவத்தையும் நிலை நிறுத்த விரும்புகிறான் அவன் இந்த இரு வார்த்தைகளுக்கும் அவன் என்ன பொருள் கொள்கிறானோ அது வேறு விஷயம் ஆனால் அவனுடைய நீதிநெறிக் கருத்துக்கள் உண்மை யிலேயே நல்லதாக இருக்குமானால் அது மிகவுயர்ந்த தன்னல மறுப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் இருக்க முடியாது தன்னல மறுப்பே எல்லா ஒழுக்கத் திற்கும் அடிப்படை மனிதர்கள் மிருகங்கள் தேவர்கள் என்று யாரை எடுத்துக்கொண்டாலும் சரி எல்லோருடைய நீதிநெறி அமைப்புக்களுக்கும் ஒரே அடிப்படைக் கருத்து ஒரே அடிப்படைக் கோட்பாடு தன்னல மறுப்பே.

இந்த உலகத்தில் பலவகையான மனிதர்களை நாம் காணலாம் முதலில் தெய்வ மனிதர்கள் இவர்களின் தன்னல மறுப்பு பரிபூரணமானது தங்கள் உயிரைக் கொடுத்தும் பிறருக்கு நன்மைகளை மட்டுமே செய்பவர்கள் இவர்கள். இவர்களே மனிதர்களுள் உயர்ந்தவர்கள். இத்தகையோர் ஒரு நாட்டில் நூறுபேர் இருந்தாலும் போதும் அந்த நாடு எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் மிகச் சொற்பமாகவே உள்ளார்கள் அடுத்து தங்களுக்குத் துன்பம் நேராதவரையில் பிறருக்கு நன்மை செய்கின்ற நல்லோர் உள்ளனர் மூன்றாவது ஒரு வகையினர் உள்ளனர் அவர்கள் தங்களுக்கு நன்மை செய்து கொள்டவார்கள் பிறருக்குத் தீங்கு செய்வார்கள் இவர்களை அடுத்து பெயரிட்டு அழைக்கத் தகாத நான்காவது வகையான மனிதர்கள் இருப்பதாக சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவர் கூறுகிறார் இவர்கள் தீமை செய்ய வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காகப் பிறருக்குத் தீங்கிழைப் பார்கள் வாழ்க்கையின் ஒரு முனையில் நன்மைக்காகவே நன்மை செய்கின்ற மிக மேலான நல்லோர் இருப்பது போல் மறுமுனையில் தீமைக்காக மட்டுமே தீமை செய்வோர் உள்ளனர் தீமை செய்வதால் இவர்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை ஆனாலும் தீமை செய்வது இவர்களின் இயல்பு.

சம்ஸ்கிருதத்தில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று பிரவிருத்தி அதாவது நோக்கிச் செல்லுதல்; மற்றொன்று நிவிருத்தி அதாவது விலகிச் செல்லுதல். பிரவிருத்தியையே சம்சாரம் என்றும், நான் எனது என்றும் கூறுகிறோம் சொத்து, பணம், அதிகாரம், பேர் புகழ் இவற்றால் அந்த நான் என்னும் எண்ணத்தை எப்போதும் அதிகரிக்கச் செய்வதும், பற்றிப்பிடித்துக் கொள்கின்ற இயல்புடையதுமான எல்லா செயல்களும் இந்தப் பிரவிருத்தி என்ற சொல்லில் அடங்கியுள்ளன. எல்லாவற்றையும் நான் என்ற மையத்திற்கு இழுத்துச் சேர்ப்பது அதன் இயல்பு. மனிதனின் இயல்பான தன்மையான இதுவே பிரவிருத்தி. எல்லா இடங்களிலிருந்தும் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டுவந்து ஒரு மையத்தைச் சுற்றி மனிதனின் சொந்த இனிமையான நான் உணர்வைச் சுற்றி குவித்து வைப்பது பிரவிருத்தி இந்த இயல்பு மறையத் தொடங்கும்போது, நிவிருத்தி தொடங்கும்போது, விலகிச் செல்லுதல் தொடங்கும் போது தான் ஒழுக்கமும் மதமும் ஆரம்பிக்கின்றன. பிரவிருத்தி, நிவிருத்தி இரண்டுமே செயல் சம்பந்தப் பட்டவை. முன்னது தீய செயல், பின்னது நற்செயல் இந்த நிவிருத்தியே ஒழுக்கம் மதம் எல்லாவற்றின் அடிப்படை ஆதாரம். நிவிருத்தியின் நிறைவே முழுத்தன்னல மறுப்பு உடல் உயிர் அனைத்தையும் பிறருக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் நிலை இந்த நிலையை அடைந்துவிட்டால் ஒருவன் கர்மயோகத் தின் நிறைநிலையை அடைந்துவிட்டான் இது நற்செயல்களின் விளைவாகக் கிடைக்கின்ற மிக உயர்ந்த பலனாகும்.

ஒருவன் எந்தத் தத்துவங்களையும் படிக்காதவனாக இருந்தாலும், எந்தக் கடவுளிடமும் முன்போ இப்போதோ நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், வாழ்நாளில் ஒரு முறைகூடப் பிரார்த்தனை செய்யாதவனாக இருந்தாலும் வெறும் நற்செயல்களின் ஆற்றல் அவனை மற்றவர்களுக்காகத் தன் உயிரையும் மற்ற அனைத்தையும் தியாகம் செய்யும் நிலைக்குக் கொண்டு வந்து விடுமானால், அவன் ஒரு பக்தன் பிரார்த்தனை மூலமாகவும் தத்துவஞானி தன் ஞானத்தின் மூலமாகவும் அடைகின்ற அதே இடத்திற்குச் சென்று சேர்வான். தத்துவஞானி, கர்மயோகி, பக்தன் அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து சேர்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது, அந்த இடம் தன்னல மறுப்பு மக்கள் பின்பற்றும் தத்துவங்களும் மதமும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும் பிறருக்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருப்பவனின் முன் மனிதகுலம் முழுவதுமே மரியாதையோடும் பக்தி யோடும் நிற்கும்.

இங்கு மதம், இனம், கோட்பாடு பற்றிய கேள்வியே எழுவதில்லை. அத்தகைய பரிபூரண ஆத்மதியாகபூர்வமான செயல்களைக் காணும்போது, மதக் கருத்துக்களை எதிர்ப்பவர்கள் கூட அவற்றைப் போற்றியே தீர வேண்டும் என்று உணர்கிறார்கள். அவற்றைப் போற்றியே தீர வேண்டும் என்று உணர்கிறார்கள். புத்தர் கடவுளைப் போதிக்க வில்லை ஏன் ஆத்ம தியாகத்தை தவிர எதையும் போதிக்கவில்லை. ஆனால் எட்வின் ஆர்னால்ட் எழுதிய ஆசிய ஜோதியைப் படிக்கின்றவன் மதவெறி பிடித்த கிறிஸ்தவனாக இருந்தால்கூடபயபக்தியோடு அவரைப் பணிவதை நீங்கள் பார்த்தது இல்லையா?

மதவெறியன் அறியாத ஒன்று என்னவென்றால், தனது லட்சியம் எதுவோ அதுவே தன்னிலிருந்து வேறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்களுடையதும் என்பது தான் பக்தன் எப்போதும் தன்மனத்தில் இறைநினைவை வைத்துக் கொண்டிருப்பதன் மூலமும் எப்போதும் நல்லவைகளால் குழப்பட்டிருப்பதன் மூலமும் இறுதியாக அதே நிலைக்கு வருகிறான் உன் திருவுளம் நிறைவேறட்டும் என்று கூறுகிறான். தனக்கென்று அவன் எதையும் வைத்துக் கொள்வதில்லை. இது தன்னல மறுப்பு. தத்துவஞானி ஞானத்தின் மூலம், தான் என்று தோன்றுவது ஒரு மாயை என்பதைக் கண்டு அதை எளிதில் விட்டுவிடுகிறான். இதுவும் தன்னல மறுப்பே. எனவே கர்மம் பக்தி ஞானம் எல்லாம் இங்கே சந்திக்கின்றன. கடவுள் என்பது உலகம் அல்ல என்று பண்டைய ஆச்சாரியர்கள் போதித்ததன் பொருள் இதுதான் உலகம் என்ற ஒன்று இருக்கிறது, கடவுள் என்னும் ஒருவர் இருக்கிறார். இந்த வேறுபாடு முற்றிலும் உண்மையானது உலகம் என்று அவர்கள் குறிப்பிடுவது சுயநலத்தையே சுயநலமின்மையே கடவுள் ஒருவன் பொன் மாளிகையில் சிங்காசனத்தில் அமர்பவனாக வாழ்ந்தும் சுயநலம் சிறிதும் அற்றவனாக இருக்கலாம்; அவன் கடவுளில் வாழ்கிறான். மற்றொருவன் கந்தையணிந்து குடசையில் வாழலாம், தனக்கென்று உலகில் எதுவுமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் சுயநலமுள்ளவனாக இருந்தால் அவன் தான் இந்த உலகத்தோடு மிக அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கிறான்.

நமது முக்கியக் கருத்துக்களுள் ஒன்றிற்கு இப்போது மீண்டும் வருவோம். தீமை கலவாத நன்மையும் நன்மை கலவாத தீமையும் நம்மால் செய்ய முடியாது என்று கூறினோம். இதை அறிந்து கொண்டு நாம் எப்படிச் செயல்புரிய முடியும்? எனவே சில பிரிவுகள், திகைக்க வைக்கின்ற வகையில் சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்குச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு முட்டாள் தனமான வழியை கூறுகின்றன . ஏனென்றால் அவன் வாழ்ந்தால் பரிதாபத்திற்குரிய சிறு மிருகங்களையும் செடிகொடிகளையும் கொல்ல வேண்டிருக்கிறது; ஒன்றில்லாவிட்டாலும் ஒன்றுக்குத் துன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இவர்களைப் பொறுத்தவரை சம்சாரத்திலிருந்து வெளியேர ஒரே வழி இறந்து போவதுதான். இந்தக் கொள்கையைச் சமணர்கள் தங்கள் மிகவுயர்ந்த லட்சியமாகப் பிரச்சாரம் செய்தார்கள். இது தர்க்க பூர்வமானதாகத்தான் தோன்றுகிறது.

ஆனால் உண்மையான வழியை கீதைதான் கூறுகிறது. அதுதான் பற்றின்மைக் கொள்கை ; வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது எதிலும் பற்று வைக்காதிருப்பது.நீ உலகத்திற்குள் இருந்தாலும், அதிலிருந்து நீ முற்றிலும் வேறானவன் என்பதை நினைவில் கொள். நீ எதைச் செய்தாலும் உனக்காகச் செய்யாதே அப்படி உனக்காகச் செய்யும் செயல் நீ சுமப்பதற்கான விளைவுகளைக் கொண்டு வந்தே தீரும். நீ செய்வது நற்செயலாக இருந்தால் நல்ல விளைவுகளையும் தீய செயலாக இருந்தால் தீய விளைவுகளையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். ஆனால் நல்லதோ கெட்டதோ எந்தச் செயலையும் உனக்காகச் செய்யவில்லை என்றால், அது உன்மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது. இந்தக் கருத்தைத் தெளிவாக உள்ளடக்கிய வாக்கியம் ஒன்று நம் சாஸ்திரத்தில் இருக்கிறது: தனக்காகச் செய்யவில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தவன் பிரபஞ்சம் முழுவதையும் கொன்றாலும் (தான் கொல்லப் பட்டாலும்) அவன் கொன்றவனோ கொல்லப் பட்டவனோ ஆகான்.

அதனால் தான் கர்மயோகம் உலகத்தைத் துறக்காதே உலகத்திலேயே வாழ்; அது தரும் அனுபவங்களை உன்னால் முடிந்த அளவு ஏற்றுக் கொள்; ஆனால் அது உனது இன்பத்திற்காக என்றால் அவற்றை ஒரு போதும் செய்யாதே என்று கற்பிக்கிறது அனுபவிப்பது லட்சியமாக இருக்கக் கூடாது முதலில் சிறிய நான் என்பதைக் கொன்றுவிடு. பின்னர் உலகம் முழுவதையும் நீயாக ஏற்றுக்கொள் முற்காலக் கிறிஸ்தவர்கள் சொல்வது போல் பழைய மனிதன் சாக வேண்டும் பழைய மனிதன் என்று அவர்கள் குறிப்பிடுவது இந்த உலகம் நமது சுகத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது என்னும் சுயநலக் கருத்தையே முட்டாள் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஓ தேவனே! சூரியனை எனக்காகப் படைத்தாய் சந்திரனையும் எனக்காகத்தான் படைத்தாய் என்று கூறிப் பிரார்த்திக்கக் கற்றுத் தருகிறார்கள் குழந்தைகளுக்கு இவற்றை எல்லாம் படைத்துத் தருவதைத் தவிர கடவுளுக்கு வேறு எந்த வேலையும் இல்லாதது போல் இருக்கிறது. இவர்களின் கூற்று குழந்தைகளுக்கு இத்தகைய முட்டாள்தனங்களைச் சொல்லித் தராதீர்கள்.

இன்னொரு விதமான முட்டாள்கள் சிலர் உள்ளனர். நாம் கொன்று தின்பதற்காகவே விலங்குகள் எல்லாம் படைக்கப்பட்டதாகவும், அனுபவிப்பதற்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்கள் போதிக்கிறார்கள் இவையெல்லாமே முட்டாள்தனம் தான். மனிதன் எனக்காகவே படைக்கப் பட்டுள்ளான் என்று ஒரு புலி நினைக்கலாம்; ஓ பகவானே! இந்த மனிதர்கள்தான் எவ்வளவு கொடியவர்கள் தானாக வந்து எனக்கு இரையாகாமல் உன் சட்டத்தை மீறிக் கொண்டிருக்கிறார்களே என்று பகவானிடம் பிரார்த்தனைகூடச் செய்யலாம் உலகம் நமக்காகப் படைக்கப்பட்டிருக்குமானால் நாமும், உலகத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம் நமது சுகத்திற்காகவே உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. என்று கருதுவது நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்ற கொடிய எண்ணமாகும் இந்த உலகம் நமக்காக இல்லை லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்த உலகத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை ,லட்சக்கணக்கானோர் அந்த இடத்தில் நிரப்பப்பட்டு விடுகிறார்கள் இந்த உலகம் நமக்காக எவ்வளவு அமைந்திருக்கிறதோ நாமும் உலகிற்காக அவ்வளவு அமைந்திருக்கிறோம்.

எனவே நாம் உரிய முறையில் செயல்புரிய வேண்டுமென்றால், பற்று வைப்பதை முதலில் விட வேண்டும் இரண்டாவது இந்த உலகின் குழப்பத்தில் கலந்துகொள்ளாமல் சாட்சியாக இருந்து வேலை செய்துகொண்டே போக வேண்டும். உங்கள் குழந்தைகளை ஒரு தாதியின் மனப்பான்மையோடு பாருங்கள் என்பார் என் குருதேவர். அவள் உங்கள் குழந்தையைத் தன் குழந்தை போலவே கைகளில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள். பற்றாக இருந்த அனைத்தும் அவளுக்கு மறந்து போய்விடும் உங்கள் குழந்தையை விட்டுவிட்டு இன்னொரு குழந்தையைச் சீராட்டுவதில் அவளுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்படுவ தில்லை இத்தகைய மனப்பான்மைதான் உங்களுடையது என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்திடமும் உங்களுக்கு இருக்க வேண்டும்.

உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருக்குமானால் இந்த உலகத்தில் உங்களுடையது என்று கருதுகின்ற எல்லாமே உண்மையில் அவருடையது என்று நம்புங்கள். மிகப் பெரிய பலவீனங்கள், சில வேளைகளில் மிகப் பெரிய நன்மையாகவும் சில வேளைகளில் மிகப் பெரிய வலிமையாகவும் வேடம்தரித்து வருகின்றன. நம்மை எதிர்பார்த்துச் சிலர் வாழ்கிறார்கள். நாம் ஒருவருக்கு நன்மை செய்ய முடியும் என்று எண்ணுவது பலவீனம் இதுவே நம்முடைய பற்றுக்கள் அனைத்திற்கும் பிறப்பிடம். இந்தப் பற்றின் மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட நம்மை எதிர்பார்த்து வாழவில்லை என்பதை நாம் நம் மனத்திற்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு பிச்சைக்காரன் கூட நம் தானத்தை எதிர் பார்த்து வாழவில்லை . ஒரு ஜீவன் கூட நம் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை நம் உதவியை எதிர்பார்த்து ஓர் உயிர்கூட வாழவில்லை. அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மைப் போல் லட்சக்கணக்கான மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை உதவிக் கொண்டுதான் இருக்கும் உங்களுக்காகவும் எனக்காகவும் இயற்கையின் போக்கு நிற்காது. பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகின்ற மிகப் பெரும் பேறு என்பதை முன்பே கூறினேன். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம் இது இதை முழுமையாக அறிந்து கொண்டால் நாம் துயருறவே மாட்டோம்; சமுதாயத்தில் எங்கும் எவரோடும் சேர்ந்து வாழலாம். அதனால் தீங்கு நேராது. மனைவி, கணவன், வேலைக்காரர் பட்டாளம், அரசாள நாடுகள் என்று நீ பெற்றிருக்கலாம் ஆனால் இந்த உலகம் உனக்காக அல்ல, நீ இருந்தே தான் ஆகவேண்டும் என்ற தேவையும் உலகிற்கு இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் நீ செயல் படுவாயானால் இவற்றால் உனக்கு எந்தத் துன்பமும் வராது.

இந்த ஆண்டில் உங்கள் நண்பர்கள் சிலர் இறந்திருக்கலாம். அவர்கள் திரும்பி வருவதற்காக உலகம் சுற்றாமல் அப்படியே நின்று காத்துக்கொண்டா இருக்கிறது ? அதன் செயல்பாட்டுப் பிரவாகம் தான் நின்றுவிட்டதா? இல்லையே! அது போய்க்கெண்டுதான் இருக்கிறது. எனவே நீங்கள் இந்த உலகத்திற்குச் செய்ய வேண்டிய ஏதோ உள்ளது என்ற எண்ணத்தை உங்கள் மனத்திலிருந்து உடனே விலக்கிவிடுங்கள். உலகிற்கு உங்கள் எந்த உதவியும் தேவையில்லை. இந்த உலகத்திற்கு உதவுவதற்காகத்தான் தான் பிறந்திருப்பதாக எந்த மனிதனாவது நினைத்தால் அது வெறும் முட்டாள்தனம் அது கர்வம் நற்குணம் என்ற போர்வையில் தோன்றும் சுயநலம்.

 2.

 உலகம் உங்களையோ வேறு யாரையுமோ சார்ந்திருக்கவில்லை என்னும் இந்தக் கருத்தை ஏற்றுச் செயல்படும்படி உங்கள் மனத்தையும் நரம்புகளையும் பயிற்றுவித்து விட்டீர்களானால், எந்தச் செயலில் இருந்தும் வேதனை வடிவில் வருகின்ற எதிர்விளைவு உண்டாகாது நீங்கள் ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து அதற்குப் பிரதியாக எதையுமே நன்றியைக்கூட எதிர்பார்க்காமல் இருந்தீர்களானால் அவன் நன்றி மறந்தாலும் உங்களுக்குத் துன்பம் வராது. ஏனெனில் நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை பிரதிபலனாக எதையும் பெறும் உரிமை உங்களுக்கு உண்டென்று ஒரு போதும் நீங்கள் எண்ணவில்லை. அவன் எதைப் பெறுவதற்குத் தகுதி இருந்ததோ அதையே கொடுத்தீர்கள். அவனது வினைப்பயன் அதை அவனுக்குப் பெற்றுத் தந்தது, உங்கள் வினைப்பயன் உங்களை அவனிடம் அதைச் சேர்ப்பவர்கள் ஆக்கியது. அப்படி யிருக்க எதையோ கொடுத்துவிட்டதாக நீங்கள் ஏன் பெருமை கொள்ள வேண்டும். பணம் மற்ற பொட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் சுமை தூக்கி மட்டுமே நீங்கள் உலகம் தன் வினைப்பயன் மூலமே அவற்றைப் பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கிறது இதில் நீங்கள் எப்படிப் பெருமை கொள்ள முடியும்? நீங்கள் உலகிற்குக் கொடுப்பதில் பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.

பற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களுக்கு நன்மையோ தீமையோ எதுவும் இல்லை.நன்மை தீமை என்ற வேறுபாட்டை உருவாக்குவதே சுயநலம்தான். இது புரிந்துகொள்ளச் சற்றுக் கடினமானது. ஆனால் நீங்களே அனுமதிக்காமல் பிரபஞ்சத்திலுள்ள எதற்கும் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆற்றல் இல்லை என்பதைக் காலப்போக்கில் நீங்கள் புரிந்துகொள்ளவே போகிறீர்கள் ஆன்மா ஒரு முட்டாளாகி தன் சுதந்திரத்தை இழக்காதவரை எந்த ஆற்றலும் மனித ஆன்மாவை எதுவும் செய்ய முடியாது. பற்றின்மை என்பதன்மூலம் உலகின் மற்ற எதுவும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கவும், தவிர்க்கவும் செய்கிறீர்கள். நீங்கள் அனுமதிக்காதவரையில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் உரிமை எதற்குமே கிடையாது என்று சொல்லிக் கொண்டிருப்பது எளிது. ஆனால் தன்மீது எதையும் ஆதிக்கம் செலுத்தவிடாத மனிதனின் உண்மை அடையாளம் என்ன ? புறவுலகம் அவன் மீது செயல்படுவதன் காரணமாக சுகமோ துக்கமோ அடையாத அவனது அடையாளம் என்ன? நல்லதோ, கெட்டதோ அவன் மனத்தில் எந்த மாறுபாட்டையும் ஏற்படுத்தாது; எந்தச் சூழ்நிலையிலும் அவன் சமமாக இருப்பான் இதுதான் அடையாளம்.

இந்தியாவில் வியாசர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். இவரே வேதாந்த சூத்திரங்களை இயற்றியவராகக் கருதப்படுகிறார். சிறந்த மகான் அவர். அவரது தந்தை நிறைநிலையை அடைய முயன்றார் முடியவில்லை, அதுபோலவே அவரது பாட்டனும் முப்பாட்டனும் கூட முயன்று தோற்றுப் போனார்கள் வியாசரால் கூட முற்றிலுமாக அந்த நிலையை அடைய முடியவில்லை. ஆனால் அவரது மகன் சுகர் நிறைநிலை எய்தியவராகப் பிறந்தார். வியாசர் தன் மகனுக்கு ஞானத்தைப் போதித்தார் தாமே தத்துவ உபதேசம் செய்த பிறகு சுகரை ஜனகரின் அரசவைக்கு அனுப்பினார் ஜனகர் ஒரு மாமன்னர் ஜனக விதேகர் என்று அழைக்கப்பட்டவர். விதேகர் என்றால் உடம்பில்லாதவர் என்று பொருள் மன்னராக இருந்தாலும் தாம் உடம்பு என்பதை முற்றிலும் மறந்து விட்டிருந்தார் அவர் தாம் ஓர் ஆன்மா என்ற உணர்வுதான் அவரிடம் எப்போதும் இருந்தது அவரிடம் கற்றுக் கொள்வதற்காகவே சுகர் அனுப்பப்பட்டிருந்தார்.

பிரம்மஞானத்தைக் கற்பதற்காக சுகர் தம்மிடம் வரப்போவதை ஜனகர் அறிந்தார். எனவே முன்னேற்பாடாக அவர் சில காரியங்களைச் செய்தார். சுகர் அரண்மனை வாசலுக்கு வந்தபோது காவலர்கள் அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிறகு ஓர் ஆசனம் மட்டும் அளித்தனர் மூன்று பகலும் இரவும் அவர் அப்படியே அமர்ந்திருந்தார் ஒருவரும் அவருடன் பேசவில்லை நீ யார் ? எதற்காக வந்தாய்? என்று கூட ஒருவரும் கேட்கவில்லை சுகரோ மகரிஷியான வியாசரின் மகன் வியாசரோ நாடு முழுவதாலும் போற்றிப் பாராட்டபடுபவர் சுகரும் மிகுந்த மரியாதைக்குரிய ஒருவர் ஆனால் மிகச் சாதாரணமான கீழ்நிலைக் காவலர்கூட அங்கே அவரைப் பொருட் படுத்தவில்லை,

பின்னர் ஒரு நாள் மந்திரிகளும் உயர்பதவியில் உள்ள அனைவரும் திடீரென்று சுகரிடம் வந்து அவரைச் சிறப்பாக வரவேற்று மிகுந்த மரியாதையுடன் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். அழகிய அறைகளைக் காட்டினர் வாசனைத் திரவியங்கள் கலந்த நீரில் குளிப்பாட்டினர். அற்புதமான ஆடைகளை அணிவித்தனர். எட்டு நாட்கள் இப்படி மிகச் சிறந்த ஆடம்பரத்தில் அவரை வைத்தனர் ஆனால் தமக்களிக்கப்பட்ட இத்தகைய மாறுபட்ட உபசரிப்புகளினால் சுகரின் ஆழ்ந்த கம்பீரம் கலந்த அமைதி தவழும் முகத்தில் ஒரு சிறு மாற்றம்கூடத் தென்படவில்லை வாசலில் காத்திருந்த போதும் இப்போது இந்த ஆடம்பரத்திலும் அவர் ஒரு போலவே இருந்தார்.

பிறகு அவர் மன்னரின் முன்னிலையில் அழைத்து வரப்பட்டார். அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திறுந்தார் அங்கே இசையும் நடனமும் வேறு பல கேளிக்கைகளும் நடந்து கொண்டிருந்தன மன்னர் சுகரிடம் ஒரு கிண்ணத்தில் விளிம்பைத் தொடும் அளவு பாலை ஊற்றிக் கொடுத்து அதில் ஒரு துளிகூடச் சிந்தாமல் அந்தச் சபையை ஏழுமுறை சுற்றி வருமாறு கூறினார். பாலனாகிய சுகர் அந்தக் கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இசையும் இனிய முகங்களும் அலைமோதும் அந்தச் சபையை வலம்வரத் தொடங்கினார் மன்னர் விரும்பியது போலவே ஏழுமுறை சுற்றி வந்தார் ஒரு துளி பால்கூடச் சிந்தவில்லை அவரே அனுமதிக்காமல் உலகின் எதுவும் அவரது மனத்தைப் பாதிக்க முடியாது கிண்ணத்தை அவர் ஜனகரிடம் கொடுத்தார். அப்போது ஜனகர் அவரிடம் உன் தந்தை உனக்கு என்ன கற்றுக் கொடுத்தாரோ நீயாக எவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறாயோ அவற்றை மீண்டும் சொல்லிக் கொடுக்கத்தான் என்னால் முடியும் நீ உண்மையை அறிந்துவிட்டாய வீடு செல் என்றார்.

இவ்வாறு தனக்குத்தானே கட்டுப்பாடு உள்ளவன் மீது வெளியிலுள்ள எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது. அவனிடமிருந்து அடிமைத்தனம் விடைபெற்று விடுகிறது அவனது மனம் சுதந்திரமாகிவிட்டது அத்தகையவன் மட்டுமே இந்த உலகில் நன்றாக வாழ்வதற்குத் தகுதி உடையவன்.

மனிதர்கள் பொதுவாக உலகத்தைப்பற்றி இரண்டு கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். சிலர் துன்பநோக்குக் கொண்டவர்கள் இந்த உலகம் எவ்வளவு கொடூரமானது எத்தனை கொடியது என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்றும் சிலர் இன்ப நோக்குக் கொண்டவர்கள் அவர்கள் உலகம் தான் எவ்வளவு அழகானது எத்தனை அற்புதமானது என்கிறார்கள். மனத்தைக் கட்டுப்படுத்தாதவர்களுக்கு இந்த உலகம் முழுக்கமுழுக்கத் தீமை நிறைந்ததாக அல்லது நன்மை தீமை இரண்டும் சேர்ந்ததாகவாவது தான் காட்சியளிக்கும் நாம் நம் மனத்திற்கு எஜமானர் ஆகும்போது இதே உலகம் இன்பமயமாகிவிடுகிறது. அதன் பின் நன்மை தீமை என்ற நிலையில் எதுவும் நம்மைப் பாதிக்காது எல்லாமே அவற்றிற்குரிய சரியான இடத்தில் எப்போதுமே இயைபாக இருப்பதை நாம் உணர்வோம். உலகம் ஒரு நரகம் என்று தொடங்குபவர்களும் சுயக் கட்டுப்பாட்டுப் பயிற்சியில் வெற்றி பெற்றுவிடுவார்களானால் உலகமே சொர்க்கம் என்றே முடிப்பதைக் காணலாம். நாம் உண்மையான கர்மயோகிகளாக இருந்து அத்தகைய நிலையை அடைவதற்காக நம்மைப்பயிற்றுவித்துக் கொள்ள விரும்பினால் நாம் எங்கே தொடங்கினாலும் பூரணமான தன்னல மறுப்பில்தான் சென்று சேர்வோம். ஆன்மாபோல் தோன்றுகின்ற சிறிய நான் என்பது அழிந்ததுமே முன்பு தீமை நிறைந்ததாகக் காட்சியளித்த உலகம் சொர்க்கமாகத் தெரியும் சீரும் சிறப்பும் நிறைந்ததாகத் தெரியும் உலகின் சூழலே ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும் அப்போது உலகில் உள்ள ஒவ்வொரு மனித முகமும் நல்லதாகவே தெரியும் இது தான் கர்மயோகத்தின் லட்சியமும் நிறைவும் ஆகும் அன்றாட வாழ்வில் அதன் பெருமையும் இதுதான்.

நமது பல்வேறு யோகங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கியே நம்மை அழைத்துச் சென்று நிறைநிலை எய்த வைக்கின்றன. எந்த யோகத்தை எடுத்துக் கொண்டாலும் சரி தீவிரமாகப் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்வதில்தான் ரகசியமே இருக்கிறது, முதலில் கேட்க வேண்டும் பிறகு சிந்திக்க வேண்டும், அதன் பிறகு பயிற்சி செய்ய வேண்டும். எல்லா யோகங்களுக்கும் இதுதான் வழி. முதலில் அவற்றைக் கேட்டு அது என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் தொடர்ந்து கேட்கும் போதும் சிந்திக்கும்போதும் புரியாத பல விஷயங்கள் புரியும்.

எடுத்தஎடுப்பிலேயே எல்லாவற்றையும் புரிந்து கொள்வது கடினம். சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் விளக்கம் உங்களிடமே உள்ளது. உண்மையில் இதுவரை யாரும் யாராலும் கற்பிக்கப்பட்டதில்லை. ஒவ்வொருவரும் தன்னைத்தானே கற்பித்துக் கொள்ள வேண்டும். அக ஆசிரியர் விழிப்புற்றுச் செயல்படவும் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்குமான ஒரு தூண்டுதலை மட்டுமே புற ஆசிரியர் செய்கிறார். அதன் பின்னர் விஷயங்களை உணர்ந்து கொள்ளும் நமது சொந்த ஆற்றாலாலும் சிந்திக்கும் திறனாலும் எல்லாம் மேலும் மேலும் தெளிவாகிறது அவற்றை நாம் நம்முள்ளேயே உணரவும் செய்கிறோம் இந்த உணர்வு திடமான சுயேச்சையாற்றலாக வளரவும் செய்கிறது முதலில் உணர வேண்டும் அந்த உணர்ச்சியே சுயேச்சையின் சங்கல்பமாகிறது அந்தச் சங்கல்பத்திலிருந்து செயல் புரிவதற்கான மாபெரும் ஆற்றல் பிறக்கிறது அது உங்கள் நாடி நரம்புகளிலும் தசைகளிலும் பாய்ந்து பரவுகிறது. உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவும் சுயநலம் கலவா கர்மயோகம் செய்வதற்குரிய ஒருகருவியாக மாறும் வரை நீங்கள் விரும்பிய பூரணமான தன்னல மறுப்பும் முழுமையான சுயநலமின்மையும் அடையப்படும்வரை அந்த ஆற்றல் பாய்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை எந்தக் கொள்கையையோ கோட்பாட்டையோ நம்பிக்கையையோ சார்ந்திருப்பதல்ல நீங்கள் கிறிஸ்தவரோ யூதரோ யூதர்கள் அல்லாத இனத்தைச் சேர்ந்தவரோ அது பெரிய விஷயமல்ல நீங்கள் சுயநலமற்றவர்களா அதுதான் கேள்வி நீங்கள் சுயநலமில்லாதவர் என்றால் ஒரு மத நூலைக்கூடப் படிக்காமலே ஒரு சர்ச்சுக்குள்ளோ கோயிலுக்குள்ளோ கூட நுழையாமலே நிறைநிலை அடைய முடியும் நமது யோகங்கள் ஒவ்வொன்றும் மற்ற யோகங்களின் உதவியில்லாமலே ஒருவனை நிறைநிலைக்குக் கொண்டுசெல்லும் ஆற்றல் பெற்றவை ஏனெனில் எல்லாயோகங்களுமே ஒரே லட்சியத்தைக் கொண்டவை கர்மயோகம் ஞானயோகம் பக்தி யோகம் ஆகிய ஒவ்வொரு யோகமும் பிற யோகங்களைச் சாராமல் நேரடியாக மோட்சத்திற்கு இட்டுச் செல்கின்ற வழிகள் ஆகும் கர்மமும் ஞானமும் வேறானவை என்று முட்டாள்கள் மட்டுமே கூறுவார்கள் அறிவாளிகள் அப்படிச் சொல்லமாட்டார்கள் அவை வேறானவை போல் தோன்றினாலும் இறுதியில் நிறைநிலை என்னும் ஒரே குறிக்கோளுக்குத்தான் இட்டுச் செல்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s