1. எத்தகைய சமுதாய மாற்றம் தேவை?
கடந்த நூற்றாண்டில் ஆர்ப்பரித்த சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் ஆரவாரம் மட்டுமே. இந்த ஒவ்வொரு சீர்திருத்தமும் முதல் இரண்டு ஜாதிகளை மட்டுமே தொடுகிறது, மற்றவைகளைத் தொடுவதில்லை. விதவைத் திருமணப் பிரச்சினை இந்தியப் பெண்களுள் எழுபது சதவீதத்தினரைத் தொடுவதே இல்லை . இத்தகைய பிரச்சினைகள் எல்லாம் பாமர மக்களின் பணத்தால் கல்வியறிவு பெற்ற, உயர்ஜாதிப் பெண் களுக்காகவே பேசப்படுகிறது. இதைக் கவனத்தில் வையுங்கள். ஒவ்வொரு முயற்சியும் அவர்களின் சொந்த நன்மைக்காகவே செய்யப்படுகிறது. இது சீர்திருத்தம் ஆகாது. பிரச்சினையின் அடிமட்டத்திற்கு, அதன் வேருக்கே நீங்கள் செல்ல வேண்டும். இதையே நான் முற்றிலுமான, நுனி வரையிலான சீர்திருத்தம் (Radical reform) என்று சொல்கிறேன்.