கர்மயோகம் 6

உயர்நிலைப் பாடங்கள்

2.செயல்புரிவதன் ரகசியம்

பிறருடைய பௌதீகத் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உதவுவது உண்மையிலேயே பெரிய விஷயம் தான் ஆனால் அந்தத் தேவை எவ்வளவு பெரியது அந்த உதவி எவ்வளவு காலம் நீடித்து நிற்கும் என்பதைப் பொறுத்தே அந்த உதவியின் சிறப்பு அமைகிறது .ஒருவனது தேவைகளை ஒரு மணி நேரத்திற்குப் பூர்த்தி செய்வது அவனுக்கு ஓர் உதவிதான் ஒரு வருடத்திற்குப் பூர்த்தி செய்தோமானால் அது அதைவிடப் பெரிய உதவி அவனது தேவைகளை என்றென்றைக்குமாக நாம் பூர்த்தி செய்ய முடியுமானால் அதுவே அவனுக்குச் செய்யக்கூடிய மகத்தான உதவி.

ஆன்மீக ஞானம் ஒன்றினாலேயே நமது துன்பங்களை என்றென்றைக்குமாக ஒழிக்க முடியும். மற்ற எல்லா அறிவும் நமது தேவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே நீக்கும். தேவைகளை எழுப்பு கின்ற மூலக்காரணத்தை ஆன்ம ஞானத்தால் மட்டும் முற்றிலுமாக வேரறுக்க முடியும். எனவே ஒருவனுக்கு அளிக்க முடிந்த உதவிகள் அனைத்திலும் ஆன்மீக உதவியை தலைசிறந்தது. ஆன்மீக ஞானத்தைத் தருபவனே மனித குலத்திற்கு மிகச் சிறந்த நன்மை செய்பவன். அவ்வாறு மனிதனுக்கு ஆன்மீக உதவி செய்துள்ளவர்களையே மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர்களாக எந்தக் காலத்திலும் நாம் காண்கிறோம். ஏனெனில் வாழ்வின் நமது செயல்பாடுகள் அனைத்திற்கும் உண்மையான அடிப்படை ஆன்மீகமே. ஆன்மீக வலிமையும் ஆன்ம நிறைவும் உடைய ஒருவன் அவன் விரும்புவானானால் எல்லா துறைகளிலும் பேராற்றல் பெற்றவனாக விளங்க முடியும். ஆன்மீக வலிமை இல்லாமல் ஒருவனால் தன் பௌதீகத் தேவைகளைக் கூடச் சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

ஆன்மீக உதவிக்கு அடுத்து வருவது அறிவு வளர்ச்சிக்கான உதவி. உணவு மற்றும் உடைகள் அளிப்பதைவிட வித்யா தானம் அல்லது அறிவு தானம் எவ்வளவோ மேலானது. ஒருவனது உயிரைக் காப்பதை விட அது சிறந்தது. ஏனென்றால் மனிதனின் உண்மையான உயிர்நாடி உண்மையான வாழக்கை அறிவில் மட்டுமே அமைந்துள்ளது. அறியாமை என்பது மரணம். அறிவுதான் வாழ்வு. அறியாமையிலும் துன்பத்திலும் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை பயனற்றது.

அடுத்து இயல்பாக வருவது ஒருவனது உடல் சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் உதவி .

எனவே பிறருக்கு உதவி செய்வதைப்பற்றி நினைக்கும் போது பௌதீகத் தேவைகளைத் தீர்க்கும் உதவிகள் மட்டுமே நாம் அளிக்க முடிந்தது என்று தவறாக எண்ணி விடக் கூடாது. பௌதீகத் தேவைகளைத் தீர்க்கும் உதவி உதவிகளில் எல்லாம் கடைசியானது மட்டுமல்ல சிறியதும் ஆகும் .அது ஒருவனுடைய தேவையை நிரந்தரமாகத் தீர்ப்பதில்லை பசியால் நான் படும் துன்பம் சாப்பிட்டால் தீர்ந்துவிடும் ஆனால் பசி மீண்டும் வருகிறது. இனிமேல் தேவைகள் எதுவும் இல்லை என்ற அளவிற்கு நான் திருப்தியுறும்போதுதான் என் துன்பம் தீர முடியும் .அப்போது பசி என்னை வாட்ட முடியாது. எந்தக் கவலையும் துயரமும் என்னைப் பாதிக்க முடியாது. எனவே ஆன்ம சக்தியை அளிக்கவல்ல உதவியே முதன்மையானது. அறிவை அளிப்பது அடுத்தது. உடலுதவி கடைசியானது. பௌதீகத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதால் உலகத்தின் துன்பங்களை எல்லாம் தீர்த்து விட முடியாது .மனிதனின் இயல்பு மாறும் வரையில் இந்த பௌதீகத் தேவைகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். துன்பங்களும் அவனை வருத்திக்கொண்டுதான் இருக்கும் .எத்தனை பௌதீக உதவிகளாலும் அதனை முழுவதுமாகத் தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு மனிதர்களைத் தூயவர்கள் ஆக்குவதுதான்.

நாம் காணும் எல்லா தீமைகளுக்கும் எல்லா துன்பங்களுக்கும் மூல காரணம் அறியாமையே .மனிதன் ஒளி பெறட்டும் தூயவனாகட்டும் ஆன்மீக வலிமை பெறட்டும் கல்வி பெறட்டும் அதன்பிறகு மட்டுமே உலகின் துன்பங்கள் தீரும் அதற்கு முன்பு அல்ல. நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டையும் தர்மசாலையாக மாற்றலாம் நாடு முழுவதையும் ஆஸ்பத்திரிகளால் நிரப்பலாம் ஆனால் மனிதனின் குணம் மாறும் வரையில் அவனுடைய துன்பம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இடையீடின்றி நாம் செயல்புரிய வேண்டும் என்று பகவத்கீதை மீண்டும்மீண்டும் கூறுவதை நாம் படிக்கிறோம். இயல்பாகவே எல்லா செயல்களும் நன்மை தீமைகளின் கலவையாகவே உள்ளன. யாருக்கோ எங்கோ சிறிதாவது நன்மை தராத ஒரு செயலை நாம் செய்ய முடியாது. அதுபோலவே எங்காவது யாருக்காவது சிறிது துன்பம் தராத செயலையும் செய்ய முடியாது. எல்லா செயல்களும் நன்மை தீமைகளின் கலவையாகவே இருக்கும் என்றாலும் இடைவிடாமல் செயல் புரியவே நாம் கட்டளையிடப் பட்டிருக்கிறோம். நன்மை தீமை இரண்டும் அவற்றிற்குரிய பலன்களைக் கொடுக்கின்றன அவற்றிற்குரிய கர்மத்தை உண்டாக்குகின்றன. நற்செயல் நம்முள் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது தீய செயல் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் நல்லவை கெட்டவை இரண்டுமே ஆன்மாவைப் பந்தத்தில் பிணைக்கின்றன. செயல்கள் இவ்வாறு நம்மைப் பந்தத்தில் பிணைக்காதிருக்க கீதை வழி காட்டுகிறது. நாம் செய்கின்ற செயலில் பற்றுக் கொள்ளாதிருந்தால் அது ஆன்மாவைப் பிணைக்காது.

பற்றற்றுச் செயல்புரிவது என்றால் என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்ள முயல்வோம். இடைவிடாது செயல்புரிய வேண்டும் ஆனால் அதில் பற்று வைக்க கூடாது என்பது கீதையின் மையக் கருத்து .இதைப் புரிந்துகொள்ள சம்ஸ்காரம் என்பது பற்றி நமக்குச் சிறிது தெரிய வேண்டும். சம்ஸ்காரம் என்பதை ஓரளவிற்கு இயல்பான மனப்பாங்கு என்று மொழிபெயர்க்கலாம் .மனத்தை ஒரு குளத்திற்கு ஒப்பிடலாம் அதில் எழுகின்ற அலை மற்றும் சிற்றலை ஒவ்வொன்றும் அடங்கும்போது முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை மீண்டும் அந்த அலை திரும்பி வருவதற்கான அறிகுறியோடு கூடிய அடையாளத்தை விட்டுச் செல்கிறது .இவ்வாறு அலை மீண்டும் எழுவதற்கான சாத்தியக்கூறுடன் கூடிய அடையாளமே சம்ஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம் உடம்பின் ஒவ்வோர் அசைவும் நாம் எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் சித்தத்தில் ஒரு பதிவை விட்டுச் செல்கிறது இந்தப் பதிவுகள் மேற்பரப்பில் தென்படாதிருக்கலாம் ஆனாலும் ஆழ்மனத்தில் நாம் அறியாமலே செயல்புரியும் அளவு வலிமை படைத்தவை .

ஒவ்வொரு கணமும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை மனத்திலுள்ள இந்தப் பதிவுகளின் மொத்தமே உருவாக்குகிறது. இப்போது இந்தக் கணத்தில் நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னுடைய கடந்தகால சம்ஸ்காரங்களுடைய மொத்தத்தின் விளைவாகும். இதுதான் உண்மையில் குணம் என்று அழைக்கப்படுகிறது ஒரு மனிதனுடைய குணத்தை இந்த சம்ஸ்காரங்களின் மொத்தமே நிர்ணயிக்கிறது. நல்ல சம்ஸ்காரங்கள் மேலோங்கியிருந்தால் குணம் நல்லதாக அமைகிறது. தீயவை மேலோங்கியிருந்தால் குணம் தீயதாக அமைகிறது. ஒரு மனிதன் தொடர்ந்து தீய வார்த்தைகளைக் கேட்டு தீய எண்ணங்களையே எண்ணி தீய செயல்களையே செய்து கொண்டிருந்தால் அவனது மனம் தீய சம்ஸ்காரங்களால் நிறைகிறது அவை அவனது சிந்தனையையும் செயலையும் அவன் அறியாமலே ஆட்டிப்படைக்கின்றன.

உண்மையில் இந்தத் தீய சம்ஸ்காரங்கள் தொடர்ந்து செயல்பட்ட வண்ணமே இருக்கின்றன. அவற்றின் விளைவு தீமையாகத்தான் இருக்கும் அதன் காரணத்தால் அந்த மனிதன் தீயவனாக இருக்கிறான் அவனால் இதைத் தவிர்க்க முடியாது. இந்தச் சம்ஸ்காரங்கள் மொத்தமும் தீய செயல்களைச் செய்வதற்கான ஆற்றல் மிக்க தொரு தூண்டுசக்தியை அவனுள் உருவாக்கும் தன் சம்ஸ்காரங்களின் கையில் மனிதன் எந்திரம் போலாகி விடுகிறான் அவை அவனைத் தீமை செய்யும்படிக் கட்டாயப்படுத்துகின்றன.

அதுபோலவே ஒருவன் நல்ல நினைவுகளையே நினைத்து நற்செயல்களையே செய்தால் சம்ஸ்காரங்களின் மொத்தமும் நல்லதாக இருக்கும் .இவை அவனது நினைப்பும் முயற்சியும் இல்லாமலேயே அவனை நற்செயல்களில் தூண்டுகின்றன. நல்லது செய்வதிலிருந்து தடுக்க முடியாத மனப்பாங்கு உண்டாகும் அளவிற்கு ஒருவன் மிக அதிகமாக நல்லவற்றைச் செய்வானானால் மிக அதிகமாக நல்லவற்றையே நினைப்பானானால் தன்னையும் மீறி அவன் தீமை செய்ய முயன்றாலும் அவனது மனப்பாங்குகளின் மொத்தமும் சேர்ந்து அவனைத் தீமை செய்ய விடாமல் தடுத்துவிடும். அப்போதுதான்அவன் முழுக்க முழுக்க நல்ல மனப்பாங்குகளின் ஆதிக்கத்தில் இருக்கிறான் .அந்த நிலையில் ஒரு மனிதனின் நற்பண்பு நிலைபெற்றுவிட்டது என்று கூறலாம்.

ஆமை தலையையும் கால்களையும் தன் ஓட்டிற்குள் இழுத்துக்கொண்டால் நீங்கள் அதைக் கண்டதுண்டமாக வெட்டிக் சிதைத்தாலும் அது வெளியே வராது .அதுபோல் தன் சங்கல்பங்களையும் புலன்களையும் கட்டுப்படுத்திய மனிதனின் இயல்பு மாறாமல் நிலை பெற்றுவிடும் அவன் அக ஆற்றல்களைத் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கிறான். அவனது சங்கல்பமின்றி அவற்றை வெளிப்படுத்த எதனாலும் முடியாது. நல்ல எண்ணங்களைத் தொடர்ந்து நினைப்பதால் மனத்தின் மேற்பரப்பில் நல்ல சம்ஸ்காரங்களே சஞ்சரிக்கின்றன. அதனால் நல்லது செய்வதற்கான மனப்பாங்கு வலிமை பெறுகிறது. அதன் விளைவாக நாம் புலன்களைக் கட்டுப்படுத்தலாம் என்று உணர்கிறோம் இவ்வாறுதான் குணம் நிலைபெற முடியும். அதன்பிறகு மட்டுமே ஒருவன் உண்மையை அடைகிறான் அத்தகையவன் என்றென்றைக்கும் பத்திரமாக இருப்பான் அவனால் எந்தத் தீமையும் செய்ய முடியாது நீங்கள் அவனை எந்தச் சூழ்நிலையில் வைத்தாலும் அவனுக்கு அபாயம் இல்லை.

இப்படி நல்ல மனப்பாங்கினைப் பெற்றிருப்பதைவிட உயர்ந்த நிலை ஒன்று உள்ளது. அது முக்தியில் நாட்டம். எல்லா யோகங்களின் லட்சியமும் ஆன்ம சுதந்திரமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லா யோகங்களும் வேறுபாடின்றி இந்த லட்சியத்திற்கு நன்மை அழைத்துச் செல்கின்றன.

இங்கே ஒரு பிரச்சினை எழுகிறது முக்தி என்றால் முழு சுதந்திரம் தீமைத் தளையிலிருந்தும் அதுபோலவே நன்மைத் தளையிலிருந்தும் சுதந்திரம் பெறுவது . இரும்புச் சங்கிலியைப் போலவே தங்கச்சங்கிலியும் தளைதான். என் கையில் முள் ஒன்று குத்தியிருக்கிறது அதை எடுப்பதற்கு இன்னொரு முள்ளையே பயன்படுத்துகிறேன் எடுத்து முடிந்ததும் இரண்டையுமே எறிந்துவிடுகிறேன். இரண்டாவது முள்ளை நான் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை ஏனெனில் இரண்டும் முட்களே. அது போலவே தீய இயல்புகள் நல்ல இயல்புகளால் சமன் படுத்தப்பட வேண்டம் நல்ல சம்ஸ்காரங்களின் புதிய அலைகளைப் பாய்ச்சி தீய சம்ஸகாரங்களை ஏறக்குறைய அவை மறைகின்ற வரையில் ஒடுங்குகின்ற வரையில் மனத்தின் ஒரு மூலையில் கட்டுப்படுத்தப்படும் வரையில் நீக்க வேண்டும் அதற்குப் பிறகு நல்ல இயல்புகளையும் வெற்றி கொள்ள வேண்டும். இவ்வாறு பற்று பற்றின்மை ஆகிறது. செயல்புரி ஆனால் எந்தச் செயலோ எண்ணமோ மனத்தில் ஆழ்ந்த பதிவை உண்டாக்காமல் பார்த்துக்கொள். அலைகள் வந்து போகட்டும் உடம்பிலிருந்தும் மூளையிலிருந்தும் பெரிய பெரிய செயல்கள் புறப்படட்டும் ஆனால் அவை மனத்தில் ஆழ்ந்த பதிவு எதையும் உண்டாக்க அனுமதிக்காதீர்கள்.

இதைச் செய்வது எப்படி ? நாம் பற்றுக்கொள்கின்ற எந்தச் செயலின் பதிவும் நிலைத்து விடுவதைக் காண்கிறோம். ஒரு நாளில் நான் நூறு பேரைச் சந்தித்திருக்கலாம். நான் நேசிக்கின்ற ஒருவரையும் அவர்களுள் சந்திக்கிறேன் இரவு நான் படுக்கைக்குச் செல்லும்போது பகலில் பார்த்த முகங்களையெல்லாம் நினைவிற்குக் கொண்டு வர முயல்கிறேன் . அப்போது அந்த ஒரே முகம் ஒரு வேளை நான் ஒரு நிமிடம் மட்டும் பார்த்திருந்தாலும் நான் நேசிக்கின்ற அந்த முகம் மட்டுமே என் மனக்கண் முன் வருகிறது மற்ற எல்லா முகங்களும் மறைந்து விடுகின்றன. இதன் காரணம் என்ன? அந்தக் குறிப்பிட்ட நபரிடம் நான் கொண்டுள்ள பற்றுதான் மற்ற முகங்களைவிட அந்த முகத்தின் ஆழ்ந்த பதிவை என் மனத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. உடலியலின்படி எல்லா முகங்கள் ஏற்படுத்திய பதிவுகளும் ஒரே போன்றவைதாம் நான் பார்த்த எல்லா முகங்களின் உருவங்களும் என் விழித்திரையில் ஒரேபோல் தான் விழுந்தது, மூளையும் ஒரேபோல் தான் அவற்றைக் கிரகித்தது. ஆனால் மனத்தில் ஏற்பட்ட விளைவு ஒன்றுபோலில்லை நான் பார்த்தவற்றுள் பெரும்பாலானவை ஒருவேளை முற்றிலும் புதிய முகங்களாக இருக்கலாம். அவர்களைப்பற்றி இதற்கு முன் நான் நினைத்துக்கூட இருக்க மாட்டேன் ஆனால் நான் ஒரு கணம் மட்டுமே பார்க்க முடிந்த அந்த ஒரு முகத்திற்கு மட்டும் அதனுடன் தொடர்புடைய சமப் பதிவுகள் என்னுள்ளே இருந்தன. ஒரு வேளை அந்த முகத்தைப் பல ஆண்டுகளாகவே நான் என் மனத்தில் பார்த்து வந்திருக்கலாம். அவரைப் பற்றிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் எனக்குத்தெரிந்திருக்கலாம் இப்போது நான் கண்ட ஒருகணத் தோற்றம் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த அவரைப் பற்றிய ஆயிரமாயிரம் நினைவுகளை எழுப்பிவிட்டன மற்ற முகங்களைவிட அவரது முகம் தொடர்பான இந்த சம்ஸ்காரம் ஒருவேளை நூற்றுக்கணக்கான முறை உண்டாகியிருப்பதால் மனத்தில் ஆழ்ந்த விளைவை ஏற்படுத்திவிட்டது.

எனவே பற்றற்றிரு.செயல்கள் நடைபெறட்டும். மூளை மையங்கள் செயல்படட்டும். இடைவிடாமல் செயலில் ஈடுபடு. ஆனால் ஓர் அலை கூட மனத்தை வெல்ல அனுமதிக்காதே. அன்னியன் போல், ஒரு யாத்திரீகன் போல் இந்த உலகத்தில் வேலை செய். இடைவிடாமல் வேலை செய். ஆனால் உன்னைப் பந்தப் படுத்திக் கொள்ளாதே. பந்தம் என்பது பயங்கரமானது. இந்த உலகம் நமது நிலையான இருப்பிடம் அல்ல. நாம் கடந்து செல்கின்ற பல தளங்களுள் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். இயற்கை அனைத்தும் ஆன்மாவிற்கே தவிர, ஆன்மா இயற்கைக்காக அல்ல என்னும் மகத்தான சாங்கியக் கூற்றை நினைவில்கொள். இயற்கை இருப்பதன் ஒரே காரணம் ஆன்மா பண்படுவது மட்டுமே. இயற்கையின் இருப்பிற்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. ஆன்மா ஞானம் பெற வேண்டும், அதன் மூலமாக முக்தி பெற வேண்டும். அதற்காகவே இயற்கை இருக்கிறது. இது எப்போதும் நம் நினைவில் இருக்குமானால் நாம் நம்மை இயற்கையுடன் பிணைத்துக் கொள்ள மாட்டோம். இந்த உலகம் நாம் படிப்பதற்கான புத்தகம். வேண்டிய ஞானத்தை நாம் பெற்றுக்கொண்ட பிறகு, அந்தப் புத்தகத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை அறிந்துகொள்வோம்.

எப்படியோ, இந்த உலகம் தான் நாம் என்றே நாம் எண்ணுகிறோம். உலகிற்காகத்தான் ஆன்மா, உடலுக்காகத்தான் உயிர் என்று எண்ணத் தலைப்படுகிறோம். பொதுவாகச் சொல்வார்களே அது போல் மனிதன் உண்பதற்காகவே வாழ்கிறான், வாழ்வதற்காக உண்பதில்லை என்றே நாம் நினைக்கிறோம். இந்தத் தவறையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் உலகத்தையே நாம் என்று கருதி, அதில் பற்றுக் கொள்கிறோம். இந்தப் பற்று மனத்தில் ஆழ்ந்த பதிவை உண்டாக்குகிறது. இது நம்மைக் கட்டுப்படுத்தி சுதந்திரமாகச் செயல் புரிய விடாமல் அடிமைகள் போல் வேலை செய்ய வைக்கிறது.

ஓர் எஜமானனைப்போல் வேலை செய்ய வேண்டும். அடிமையைப் போல் அல்ல என்பதே இந்த உபதேசத்தின் சுருக்கம்.இடைவிடாமல் வேலை செய். ஆனால் அடிமையைப்போல் வேலை செய்யாதே. மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை நீ பார்த்த தில்லையா? முற்றிலும் ஓய்ந்திருக்க யாராலும் முடிவதில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் அடிமைகளைப்போல் வேலை செய்கிறார்கள். பலன் துன்பம்தான். இவையெல்லாம் சுயநலம் சார்ந்த வேலை. சுதந்திரத்தின் மூலமாகச் செயல்புரி, அன்பின் வழியாக வேலை செய்!

அன்பு என்னும் வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். சுதந்திரம் இல்லாதவரையில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது. நீங்கள் ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, சங்கிலியில் கட்டி, உங்களுக்காக வேலை செய்யச் சொல்லுங்கள்; அவன் மாடுபோல் வேலை செய்வான் . ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. நாமும் உலகப் பொருட்களுக்காக அடிமைபோல் வேலை செய்தோமானால் நம்மிடம் அன்பு இருக்க முடியாது; நாம் செய்யும் வேலையும் உண்மையான வேலையாகாது.

உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் செய்யப் படுகின்ற வேலைகளும் சரி, நமக்காகவே செய்யப்படுகின்ற வேலையும் சரி, இது உண்மையே. சுயநலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை.

இதோ ஒரு சோதனை: அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும் . அமைதியையும் ஆசிகளையும் விளைவாகக் கொண்டு வராத அன்புச் செயல்கள் எதுவுமே இல்லை. உண்மை இருப்பு, உண்மை அறிவு, உண்மை அன்பு மூன்றும் ஒன்றோடு ஒன்று நிரந்தரமாக இணைந்தவை. இந்த மூன்றும் ஒன்றிலேயே உள்ளன. இதில் எங்கே ஒன்று உள்ளதோ அங்கு மற்றவை இருந்தே தீரும். இவை இரண்டற்ற ஒன்றேயான ஸத்சித் ஆனந்தப் பொருளின் மூன்று நிலைகள். அந்த ஒரு பொருளே நடைமுறை நிலைக்கு வரும்போது, இருப்பு அல்லது ஸத் என்பதை நாம் உலகமாகக் காண்கிறோம். அறிவு அல்லது சித் உலகப் பொருட்களைப் பற்றிய அறிவாக மாறுகிறது; ஆனந்தம் மனித இதயம் அறிந்த உண்மையன்பு அணைத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. எனவே உண்மையன்பு என்பது காட்டுபவரிடமோ காட்டப்படுபவரிடமே வேதனையை உண்டாக்கும் வண்ணம் ஒரு போதும் செயல்படாது.

ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவள் முழுக்கமுழுக்கத் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டுமென்று அவன் நினைக்கிறான் அவளுடைய நடத்தை ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் கண்காணிக்கிறான். அவள் அவனது அருகிலேயே அமர வேண்டும், அவனது அருகிலேயே நிற்க வேண்டும், உண்பதும் போவதும் வருவதும் எல்லாமே அவனுடைய கட்டளைப்படியே நடக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவளது அடிமையாகி விட்ட அவன், அவளும் தன் அடிமையாக வேண்டும்.என்ற ஆசைப்படுகிறான். இது அன்பு அல்ல. இது அடிமைகளின் பக்குவப்படாத ஒருவிதப் பற்று; அன்பு போல் தன்னைக் காட்டிக் கொள்கிறது, அவ்வளவுதான்.

இது அன்பு அல்ல, ஏனெனில் இது துன்பத்தைத் தருகிறது. இவன் விரும்பியதை அந்தப் பெண் செய்யாவிட்டால் அது இவனை வேதனைக்கு உள்ளாக்குகிறது. அன்பிற்கு ஒருபோதும் வேதனை தரும் எதிர்விளைவு இருக்காது. அன்பு ஆனந்தத்தை மட்டுமே எதிர்விளைவாகத் தருகிறது. ஆனந்தத்தைத் தராத அன்பு அன்பல்ல. அது வேறு ஏதோ வொன்றைத் தவறாக அன்பென்று நினைப்பதாகும். வேதனை, பொறாமை சுயநல உணர்ச்சிகள் எவையும் எதிர்விளைவாக உண்டாகாவண்ணம் உங்கள் கணவன், மனைவி, மக்கள், உலகம் பிரபஞ்சம் அனைத்தையும் நேசிப்பதில் நீங்கள் வெற்றி பெற்றீர்களானால் பற்றின்றி இருக்கத் தகுந்த நிலையில் இருக்கிறீர்கள்.

அர்ஜுனா என்னைப் பார் நான் செயல்புரிவதை ஒரு கணம் நிறுத்தினாலும் இந்தப் பிரபஞ்சம் அழிந்து போகும். செயல்புரிந்து நான் அடைவதற்கு எதுவும் இல்லை. நானே இறைவன். பின் நான் ஏன் வேலை செய்யவேண்டும் ? ஏனெனில் நான் உலகை நேசிக்கிறேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இறைவன் பற்றின்றி இருக்கிறார். ஏனென்றால் அவர் அன்பு செய்கிறார். உண்மையன்பு நம்மைப் பற்றற்றவர்கள் ஆக்குகிறது. எங்கெல்லாம் பற்று இருக்கிறதோ, உலகப் பொருட்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதோ, அங்கே இருப்பதெல்லாம் வெறும் ஜடப் பொருளணுக்களின் இரண்டு தொகுதிகளுக்கிடையே உள்ள பௌதீகக் கவர்ச்சியே அது; இரண்டு உடம்புகளை நெருக்கமாக, மிக நெருக்கமாக எப்போதும் ஈர்த்துக் கொண்டிருக்கின்ற ஏதோ ஒன்று அது. போதிய அளவு அந்த இரண்டு உடம்புகளும் நெருங்க முடியாவிட்டால் வேதனை விளைகிறது. உண்மையன்பு ஒரு போதும் பௌதீகக் கவர்ச்சியைச் சார்ந்திருப்பதில்லை. அத்தகைய அன்பு கொண்டவர்கள் ஆயிரம் மைல்கள் இடைவெளியில் இருக்கலாம். ஆனால் அவர்களது அன்பு ஒருபோலவே இருக்கும் அது அழிவதில்லை, எந்த வேதனையான எதிர்விளைவையும் உண்டாக்குவதில்லை.

இத்தகைய பற்றின்மை ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு அடையக்கூடிய ஒன்று. இந்த நிலையை அடையும் போது அன்பின் லட்சியத்தை அடைந்து விடுகிறோம்;சுதந்திரர்களாகி விடுகிறோம்; இயற்கையின் கட்டுக்கள் நம்மிடமிருந்து விலகிவிடுகின்றன. உலகம் உண்மையாக எப்படி இருக்கிறதோ அப்படியே நாம் காண்போம். அதன் பின் இயற்கை நம்மை எந்தச் சங்கிலியாலும் கட்டுவதில்லை. நாம் முழுக்க முழுக்கச் சுதந்திரர்களாகி விடுவோம்; செயல்களின் பலன்களைப் பொருட்படுத்த மாட்டோம். அந்தப் பலன்கள் என்ன என்பதைப்பற்றி யாருக்குக் கவலை!

நீ உன் குழந்தைகளுக்குத் தருபவற்றிற்கு எதையாவது திருப்பிக் கேட்பாயா? உன் குழந்தைகளுக்காக உழைப்பது உனது கடமை, அதோடு விஷயம் முடிந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, நகருக்கோ, நாட்டிற்கோ நீங்கள் எதையாவது செய்யும்போதும் இதே மனநிலையைக் கைக்கொள்ளுங்கள்; அதாவது எதையும் பிரதியாக எதிர்பார்க்காமல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்வதுபோலவே செய்யுங்கள். பிரதி பலனைப்பற்றி எந்த எண்ணமும் இல்லாமல், செய்கின்ற அனைத்தையும் உலக வேள்வியில் ஓர் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கின்ற நிலையில் உங்களால் எப்போதும் இருக்க முடியுமானால், நீங்கள் செய்கின்ற வேலை உங்களைப் பற்றுக்கொள்ளச் செய்யாது. பிரதியாக எதையாவது எதர்பார்க்கும்போதுதான் பற்றுவருகிறது. அடிமைகளைப்போல் வேலை செய்தால் சுயநலமும் பற்றுமே உண்டாகிறது. மனத்தின் எஜமானர்களாகச் செயல்புரிந்தாலோ பற்றின்மையால் வரும் ஆனந்தம் விளைகிறது.

நியாயம் நீதி என்றெல்லாம் அடிக்கடிப்பேசுகிறோம். ஆனால் உலகிலோ நியாயம் நீதியெல்லாம் வெறும் சிறுபிள்ளைப் பேச்சாகவே உள்ளது. மனிதனின் நடத்தையை வழிநடத்துகின்ற இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒன்று, அதிகாரம் மற்றொன்று, கருணை. அதிகாரம் செலுத்துவது என்பது உண்மையில் சுயநலத்தின் செயல்பாடுதான். உலகில் உள்ள ஆண் பெண் அனைவருமே தங்கள் அதிகாரத்தையும் சலுகையையும் பயன்படுத்தி முடிந்த அளவு லாபம் தேடவே முயல்கின்றனர். கருணை என்பதே சொர்க்கம்தான். நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றால் நாம் கருணை நிறைந்தவர்கள் ஆக வேண்டும். நீதியும் உரிமையும் கூட கருணையையே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களுக்குப் பலனை எதிர்பார்ப்பது நமது ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கிறது; அது மட்டுமல்ல இறுதியில் அது துன்பத்தையே கொண்டு வருகிறது.

கருணை, சுயநலம் கலவாத தானம் போன்ற லட்சியங்களை வாழ்வில் செயல்முறைப்படுத்த மற்றொரு வழி உள்ளது. நாம் சகுணக் கடவுளை நம்புவர்களாக இருந்தால் செயலை வழிபாடாகச் செய்வதே அந்த வழி. இங்கே நாம் செய்கின்ற செயல்களின் பலன் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து விடுகிறோம். இதன் மூலம் நாம் அவரை வழிபடுகிறோம். எனவே நாம் செய்வதற்குப் பிரதியாக மக்களிடமிருந்தோ உலகிடமிருந்தோ எதையும் எதிர்பார்க்க நமக்கு உரிமையில்லாமல் போகிறது. இறைவன் இடையீடின்றிச் செயல்புரிந்தும் பற்று என்பது அவரிடம் ஒருபோதும் இல்லை. தாமரை இலையைத் தண்ணீர் நனைக்க முடியாது. அதுபோலவே சுயநலம் அற்றவனை அவனிடம் பலன்களில் நாட்டத்தை ஏற்படுத்தி, அவனைப் பிணைக்க கர்மத்தால் முடியாது சுயநலமும் பற்றும் இல்லாதவன் நெருக்கம் மிக்கதும் பாவமே உருவானதுமான ஒரு நகரத்தின் நடுவே வாழ்ந்தாலும் பாவம் அவனை நெருங்காது.

முழுமையான தன்னல மறுப்பைக் கீழ்வரும் கதை விவரிக்கிறது; குருசேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. எல்லோரும் அந்த யாகததின் சிறப்பையும்பெருமையையும் கண்டு வியந்து அத்தகைய ஒரு யாகத்தை இதுவரை உலகம் கண்டதில்லை என்று பாராட்டினர். யாகம் நிறைவுற்ற பின்னர் அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பில் ஒரு பகுதி பொன்னாகவும் மற்றப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருந்தது உள்ளே நுழைந்த அது யாக மண்டபத்தில் விழுந்து புரண்டது. பின்னர் எல்லோரையும் பார்த்து, நீங்கள்எல்லோரும் பொய்யர்கள் இது யாகமே அல்ல என்று கூறியது கேட்டவர்கள் திகைத்தார்கள் என்ன இது யாகம் அல்ல என்றா சொல்கிறாய் எவ்வளவு பொன்னும் பொருளும் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா? எல்லோருக்கும் செல்வந்தர்களாகி மகிழ்ச்சியில் திளைக்கின்றனரே இதுவரை மனிதன் செய்தவற்றுள் மிக அற்புதமான யாகம் இது என்றனர்.

அதற்குக் கீரிப்பிள்ளை கூறியது: முன்பொரு முனை சிறிய கிராமம் ஒன்றில் பிராமணர் ஒருவர் தன்மனைவி மகன் மற்றும் மருமகளோடு வாழ்ந்து வந்தார். அவர்கள் மிகவும் ஏழைகள். பிறருக்குப் படிப்பும் சாஸ்திரமும் சொல்லித் தந்து அதனால் கிடைக்கும் மிகக் குறைந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை அந்த நாட்டில் மூன்று வருடங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. முன்பு எப்போதையும் விட அந்தப் பிராமணக் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியது. பல நாட்கள் பட்டினியில் கழிந்தன அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் காலையில் அந்தப் பிராமணருக்கு பார்லி மாவு கிடைத்தது. அதைப் பக்குவம் செய்து பங்கிட்டு நால்வரும் உண்ணத்தொடங்கினார். அந்த வேளையில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது பிராமணர் கதவைத் திறந்தார் எதிரே விருந்தினர் ஒருவர்நின்று கொண்டிருந்தார்.

இந்தியாவில் விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்கு உரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும். எனவே அந்த ஏழைப் பிராமணர் விருந்தாளியை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் தன் பங்கு உணவை அந்த விருந்தாளிக்குக் கொடுத்துச் சாப்பிடும்படி உபசரித்தார். வந்தவரோ கணநேரத்தில் மாவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, ஐயோ நீங்கள் என்னைக் கொல்கிறீர்களே! பத்து நாட்களாக நான் பட்டினிகிடக்கிறேன் . இந்தச் சொற்ப உணவு என் பசியைத் தூண்டி அல்லவா விட்டுவிட்டது என்று கதறினார். உடனே அந்தப் பிராமணரின் மனைவி கணவரிடம் என் பங்கை அவருக்குக் கொடுங்கள் என்று கூறினாள். பிராமணரோ வேண்டாம் என்றார். அதற்கு அவள் வந்திருப்பவர் ஏழை வீட்டிற்கு வந்த விருந்தினரின் பசியைப் போக்கி உபசரிப்பது இல்லறத்தார்களாகிய நமது கடமை அவருக்குத் தர உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது என்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டியது மனைவியாகிய என் கடமை என்று கூறித் தன் பங்கை அந்த விருந்தாளிக்கு கொடுத்தாள். விருநாளியின் பசி தீரவில்லை அவர் துடித்தார். இதைப் பார்த்த அந்தப் பிராமணரின் மகன் தந்தையின் பாரத்தைச் சுமப்பதில் உதவ வேண்டியது மகனின் கடமை இதோ என் பங்கு என்று தனது பங்கை அந்த விருந்தாளியிடம் கொடுத்தான். அப்படியும் விருந்தாளியின் பசி அடங்க வில்லை. அவர் மிகுந்த வேதனைப்பட்டார் இதைக் கண்ட அந்த மகனுடைய மனைவி தன் பங்கையும் கொடுத்தாள். அதை உண்டபின் அவரது பசி தீர்ந்தது அவர்களை வாழ்த்தி விடைபெற்றார். அந்த விருந்தாளி ஆனால் வீட்டிலுள்ள நால்வரும் பசியின் கொடுமையால் அன்றிரவே இறந்து போனார்கள்,

அந்த மாவில் கொஞ்சம் அங்கே தரையில் சிந்தியிருந்தது. நான் அந்த மாவின் மீது புரண்டபோது என் பாதி உடம்பு பொன்னாகியது. அதை நீங்கள் இதோ பார்க்கிறீர்கள். அது போன்ற யாகம் எங்காவது நடைபெறுகிறதா என்று அன்றிலிருந்து நான் உலகம் முழுவதும் தேடுகிறேன். ஆனால் எங்கேயும் காண முடியவில்லை. என் மீதி உடல் பொன்னாகவும் இல்லை அதனால் தான் இது யாகமே இல்லை என்கிறேன்.

தானம் பற்றிய இந்தக் கருத்து இப்போது இந்தியாவிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது. மாமனிதர்கள் குறைந்து வருகிறார்கள். நான் முதன் முதலில் ஆங்கிலம் கற்றுக் கொண்டபோது கடமையுணர்வு கொண்ட ஒரு சிறுவனைப் பற்றிய ஆங்கிலக் கதையொன்றைப் படித்தேன் . தான் வேலை செய்து பெற்றுவந்த கூலியில் சிறு தொகையைத் தன் தாய்க்குக் கொடுத்தான் அவன். இதைப் புகழ்ந்து நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அது என்ன பிரமாதமோ! இந்துச் சிறுவன் ஒருவனுக்கு இந்தக் கதையின் நீதி புரியவே புரியாது. தனக்காகவே ஒவ்வொருவனும் என்ற மேலை நாட்டுக் கருத்தை அறிந்த பின்னரே இப்போது அந்தக் கதை எனக்குப் புரிகிறது. சிலரோ அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு தாய் தந்தை மனைவி மக்களைக்கூடத் தவிக்கும் படி விட்டுவிடுகிறார்கள். இல்லறத்தானின் லட்சியம் ஒரு போதும் ஓரிடத்திலும் இதுவாக இருக்கக் கூடாது.

இப்போது கர்மயோகம் என்பது எது என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். சாகின்ற நிலையிலும் கூட கேள்வி எதுவும் கேட்காமல் ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். கோடி முறை நீங்கள் ஏமாற்றப் பட்டாலும் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள், ஏழைகளுக்குச் செய்யும் உதவிபற்றிப் பெருமையடித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றி பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். மாறாக நீங்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். ஒரு லட்சிய இல்லறத் தானாக இருப்பது ஒரு லட்சியத் துறவியாக இருப்பதை விடக் கடினம் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். உண்மையான கர்மயோகம் உண்மை யான துறவு வாழ்வைவிடக் கடினமான தில்லை என்றாலும், நிச்சயமாக, துறவு வாழ்விற்கு ஈடான கடுமை நிறைந்ததே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s