4. ஆசிரியரும் மாணவர்களும்
குருகுல முறையில் கல்வி கற்பதே உயர்ந்த முறையென்பது எனது எண்ணம். கல்வி கற்பிப்பதில் ஆசிரியரின் சொந்த வாழ்க்கை மிக முக்கியமானது. சுடர் விட்டெரியும் ஜோதி போன்ற தூய ஒழுக்கமுடைய ஆசிரியருடன் ஒருவன் தன் குழந்தைப் பிராயத்திலிருந்து வசித்தல் வேண்டும். அவ்வாசிரியர் உயரிய கல்விப் பயிற்சிக்கு உயிருள்ள, உயர்ந்ததோர் உதாரணமாக விளங்க வேண்டும். நம் தேசத்தில் கல்வி கற்பிக்கும் வேலை எப்போதும் தியாகிகள் வசமே இருந்து வந்திருக்கிறது. இப்பணி மறுபடியும் தியாக புருஷர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
பழங்காலக் கல்விமுறை
நம் நாட்டில் பழங்காலத்திலிருந்த கல்விமுறை தற்கால முறையிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தது. மாணவர்கள் யாதொரு – சம்பளமும் கொடுக்கவேண்டியிருக்கவில்லை. கல்வியறிவு மிகவும் புனிதமானது; எனவே, அதை எவரும் விலைக்குத் தரலாகாதென்று கருதப்பட்டது. கல்வி யாதொரு விலையுமின்றி இலவசமாக அளிக்கப்பட வேண்டுமென அக்காலத்தில் எண்ணினார்கள். ஆசிரியர்கள் யாதொரு கட்டணமுமின்றி மாணவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். அதுமாத்திரமல்லாமல், பலர் அவர்களுக்கு உணவும் உடையும் அளித்தனர். இவ்வாசிரியர்களின் இத்தகைய சேவைக்காக பணம் படைத்த பலர் மானியங்கள் அளித்தனர். இவற்றின் உதவியைக் கொண்டு அவர்கள் தங்கள் மாணவர்களைக் காப்பாற்றினார்கள். பழங்காலத்தில் மாணாக்கனாக விரும்பியவன், குருவுக்காக விறகு பொறுக்கிக் கொடுத்தல் போன்ற சேவைகளைச் செய்து குருவை நாடுவான்.
குருவும் அவனுடைய தகுதியை அறிந்து அவனுக்கு வேதங்களை உபதேசிப்பார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றிலும் அவன் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற விரதத்தின் அறிகுறியாக, முஞ்சை என்ற ஒரு விதப் புல்லின் மூன்று புரியாலான முப்புரிநூலை அவன் மார்பில் அவர் இடுவார்.
மாணவர் இலக்கணம்
ஆசிரியர்களும் மாணவர்களும் சில குணாதிசயங்களை உடையவர்களாயிருத்தல் அவசியம். அறிவு வளர்ச்சியில் உண்மையான விருப்பமும், விடா முயற்சியும், தூய்மையுமே மாணவர்களுக்குரிய இலக்கணங்களில் முக்கியமானவை. மனோவாக்குக் காயங்களில் பூரணத் தூய்மை இன்றியமையாததாகும். கருதிய பொருள் கைகூடும் என்ற ஆன்றோர் மொழியொன்று உண்டு. அதற்கேற்ப நமக்கும் கல்வி பெறுவதில் நிறைந்த ஆர்வம் இருக்க வேண்டும். நாம் முழு மனதுடன் விரும்பினாலொழிய ஒரு பொருளும் நமக்குக் கிடைக்காது. அதற்காக இடைவிடாத முயற்சி வேண்டும். நம் மனதிலிருக்கும் தாழ்ந்த குணங்களையொழிக்க ஓயாது போராட வேண்டும். தாழ்ந்த தன்மையை அகற்றி, உயர்ந்த தன்மை வெற்றி பெறும்வரை இந்த போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வித ஊக்கத்துடன் முயற்சி செய்யும் மாணவர்கள் நிச்சயமாக வெற்றிபெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆசிரியரின் இலக்கணம்
ஆசிரியரோ தான் கற்பிப்பவற்றின் மெய்ப் பொருளை உணர்ந்தவராயிருத்தல் வேண்டும். எல்லோரும் தம் மதத்திலுள்ள வேத நூல்களைப் படிக்கிறார்கள். ஆனால், இவர்கள் பெரும்பாலும் அந்த நினைவையும் நூல்களிலுள்ள இலக்கண இலக்கிய நயங்களைப் பாராட்டுகிறார்கள். சொற்சுவை கற்பித்துக் கொண்டு அதனை விரிவுபடுத்துவதிலேயே திருப்தி பெறுகிறவர்கட்குப் பொருட்சுவை எவ்வாறு விளங்கும்? வேதத்தின் மெய்ப்பொருளை அறிவதுதான் உண்மை ஆசிரியரின் இலக்கணம் ஆகும்.
ஆசிரியரின் இரண்டாவது குணம், அவர் மாசற்றவராக இருத்தல் வேண்டும் என்பது. ஆசிரியருடைய ஒழுக்கத்தையும் நடத்தையையும் பற்றி நாம் ஏன் பார்க்கவேண்டும்? அவர் சொல்வது சரியென்று நாம் பார்த்தால் போதாதா?’ என்று கேட்பவர் பலருண்டு. இது சரியன்று. சத்தியத்தை தான் உணரவும் அதை மற்றவர்கட்கு போதிக்கவும், இதயபூர்வமான பரிசுத்தம் அவசியம். அவர் முற்றிலும் பரிசுத்தமாயிருந்தாலொழிய, அவர் வார்த்தைக்கு மதிப்பும் பலனும் இருக்காது. ஆசிரியராயிருப்பவர் மாணவனது அறிவை விரிவடையச் செய்வது மட்டுமல்லாமல், தன்னுடைய சக்தியில் கொஞ்சம் மாணவனுக்குக் கொடுத்து உதவுகிறவராய் இருக்க வேண்டும். தன் உயர்ந்த தன்மையில் ஓர் அம்சத்தை மாணவனுக்கு ஆசிரியர் அளிக்கிறார். ஆதலால் ஆசிரியர் பூரண தூய்மையுடையவராயிருத்தல் அவசியம்.
மூன்றாவதாக, ஆசிரியர் எவ்விதமான பயனையும் எதிர்பாராமல் கற்பிக்க வேண்டும். பணத்துக்காகவோ பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ அவர் கற்பிக்காமல், மாணவன் பேரிலும், மானிட வர்க்கத்தின் பேரிலும் உள்ள அன்பின் காரணமாகவே அவர் தன் பணியை ஆற்ற வேண்டும். அன்பின் மூலம்தான் ஆன்மீக உணர்ச்சியை ஒருவருக்கொருவர் அளிக்க முடியும். பொருள், புகழ்- இவற்றில் ஆசையிருக்குமாயின், இவ்வன்பு உண்டாகாது.
ஆசிரியரிடத்தில் நம்பிக்கை
பெற்றோரிடத்துப் பிள்ளைகள் எவ்விதம் நடக்க வேண்டுமோ அவ்விதமே ஆசிரியர்களிடத்திலும் நடக்க வேண்டும். ஆசிரியர்களிடத்தில் நம்பிக்கையும், பணிவும், பக்தியும் இல்லாவிடில் நம் மனதில் அறிவு வளர்ச்சி உண்டாகாது. இம்முறையைப் பின்பற்றாததேசங்களில் ஆசிரியர் சாதாரண ஆசிரியராகவேயிருக்கிறார். ஆசிரியர் தன் சம்பளத்திலேயே கருத்தை வைத்திருக்கிறார். மாணவனும் ஏதோ வெறும் விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் வருகிறான். பாடம் முடிந்ததும் இருவரும் அவரவர் வழியே செல்கின்றனர். ஆனால், தனி மனிதனிடம் அதிக நம்பிக்கை வைப்பது பலவீனத்தையும், மூட நம்பிக்கையையும் சில சமயங்களில் உண்டாக்கலாம் என்பதை நாம் மறக்கலாகாது. ஆசிரியரைக் கடவுள் போல வழிபடுங்கள்; ஆனால், அவரைக் குருட்டுத்தனமாய் நம்பாதீர்கள்! அவரைப் பூரண அன்புடன் நேசியுங்கள்; ஆனால் உங்கள் மனதின் தனித்தன்மையைப் பலி கொடுக்காதீர்கள்!
மாணவரிடம் அனுதாபம்
ஆசிரியர்கள், மாணவர்களின் இயல்பையறிந்து கற்பிப்பதில் தங்கள் சக்தி முழுவதையும் செலுத்த வேண்டும். உண்மையான அன்பும் அனுதாபமுமின்றி சரியாகக் கற்பிக்க முடியாது. எவரிடமும் இருக்கும் நம்பிக்கையைக் குலைக்க முயலாதீர்கள்; உங்களால் முடியுமானால் உயர்ந்த எண்ணங்களைக் கொடுக்க முயலுங்கள்! ஆனால், அவனுடைய பற்றுக் கோடுகளைக் கெடுக்க வேண்டாம். தன்னிடம் பயில வரும் மாணவர் ஆயிரம்பேர் இருப்பினும், ஒரு நிமிடத்தில் அவர்களின் தன்மையை அறிந்து அவர்கள் போலத் தன்னையும் ஆக்கிக் கொள்கிறவர்தான் உண்மை ஆசிரியராவார். மாணவனுடைய மனதின் நிலைமைக்குத் தன்மனதையும் இழுத்துக்கொண்டு வந்து தன் மனம் முழுவதையும் அவன் மனதின்பாற் செலுத்தி, அவன் பார்க்கிறமாதிரி விஷயங்களைப் பார்த்து, அவன் சிரமங்களை அறிந்து, அவற்றைப் போக்கி, அவன் மனதில் அறிவு வளர்ச்சியை உண்டாக்குபவரே உண்மை ஆசிரியராவார். உண்மையில் அத்தகைய ஆசிரியர்களால்தான் கல்வி கற்பிக்க முடியும்.