கர்மயோகம் 4

ஆரம்பநிலைப் பாடங்கள்

4.கர்மயோகத்தின் லட்சியம்

 வெவ்வேறு பாதைகள்மூலம் நாம் ஒரே குறிக்கோளை அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான கருத்தாகும். இந்தப் பாதைகளை நான் பொதுவாக கர்மம், பக்தி, யோகம், ஞானம் என்று நான்காகப் பிரித்திருக்கிறேன். ஆனால் இந்தப் பிரிவுகள் துல்லியமாகக் கோடிட்டுப் பிரிக்கப்படாதவை. ஒவ்வொன்றும் முற்றிலும் தனியானவை அல்ல, ஒன்றோடொன்று கலந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கலப்பில் எந்த அடையாளம் முக்கியமாகத் தென்படுகிறதோ, அதை வைத்து அந்தப் பிரிவை அழைக்கிறோம். கர்மத்தைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதவர்கள். பக்தியுடன் வழிபடுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாதவர்கள், வெறும் ஞானத்தைத் தவிர வேறெதுவும் அற்றவர்கள் என்று தனித்தனியாக யாரையும் நீங்கள் காண முடியாது. எத்தகைய மனப்போக்கு, எந்த அடையாளம் ஒருவரிடம் சிறந்து விளங்குகிறதோ, அதற்கு ஏற்ப இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன. கடைசியில் இந்த நான்கு பாதைகளும் சேர்ந்து ஒன்றாகிவிடுவதை நாம் கண்டோம். எல்லா மதங்களும், எல்லா செயல்முறைகளும், எல்லா வழிபாட்டு முறைகளும் ஒரே குறக்கோளை நோக்கியே நம்மை அழைத்துச் செல்கின்றன.

அந்த லட்சியம் எது என்பதைக் காட்ட நான் முயன்றுள்ளேன். நான் புரிந்துகொண்டாடி, அந்த லட்சியம் முக்திதான். சுதந்திரம்தான் நம்மைச் சுற்றி நாம் காண்கின்ற ஒவ்வொன்றும், அணுவிலிருந்து மனிதர் வரையில், உயிரற்ற ஜடப் பொருளணுவிலிருந்து உலகின் மிகச் சிறிந்த உணர்வுப் பொருளான மானிட ஆன்மாவரையில் எல்லாமே சுதந்திரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் பிரபஞ்சம் முழுவதுமே சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தின் விளைவுதான்.

எந்தக் கூட்டுப்பொருளை எடுத்துக்கொண்டாலும் அதன் ஒவ்வொரு அணுவும் தன் சொந்த வழியில் செல்லவே,பிற அணுக்களிலிருந்து பறந்து விலகவே முயல்கின்றன. அவை அவ்வாறு விலகிச் செல்லாமல் மற்ற அணுக்கள் அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

பூமி சூரியனிலிருந்து பறந்தோட முயல்கிறது. சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்லத் துடிக்கிறது. ஒவ்வொரு பொருளும் எல்லையற்று அகன்று வியாபிக்கின்ற தன்மை உடையதாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்தின் அடிப்படையும் சுந்திரத்திற்கான ஒரு போராட்டமே.

இந்த இயல்பின் உந்துவேகத்தால்தான் மகான் பிரார்த்திக்கிறார். திருடன் கொள்ளையடிக்கிறான். செயலின் பாதை சரியான திசையில் இல்லை என்றால், அதை நாம் தீமை என்கிறோம். இதே உந்துவேகம் சரியான உயர்ந்த வழியில் வெளிப்படுமானால் அதை நன்மை என்று கூறுகிறோம். ஆனால் இரண்டிலும் உந்துவேகம் ஒன்றுதான். சுதந்திரத்திற்கான போராட்டம்தான்.

தான் கட்டுண்ட நிலையில் இருப்பதை அறிந்து மகான் வேதனை கொள்கிறார். அதிலிருந்து விடுபட விரும்புகிறார். அதற்காக இறைவனை வணங்குகிறார். குறிப்பிட்ட சில பொருட்கள் தன்னிடம் இல்லையென்பதால் வேதனை கொள்கிறான் திருடன். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்து, அதிலிருந்து விடுபட விரும்புகிறான், அதனால் திருடுகிறான். எனவே உணர்வுள்ளதாகட்டும். உணர்வற்றதாகட்டும் இயற்கை அனைத்திற்கும் ஒரே லட்சியம் சுதந்திரம் தான். அறிந்தோ அறியாமலோ ஒவ்வொன்றும் அந்தச் சுதந்திரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு மகான் தேடுகின்ற சுதந்திரம், திருடன் தேடுகின்ற சுதந்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மகான் நாடுகின்ற சுதந்திரம் அவரை எல்லையற்ற இன்பத்திற்கு விவரிக்க முடியாத ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்கிறது. திருடன் நேசிக்கின்ற ஒன்றோ அவனது ஆன்மாவை மேலும் மேலும் பல்வேறு சங்கிலிகளால் கட்டிக் சிறையிடுகிறது.

சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தின் வெளிப்பாட்டை ஒவ்வொரு மதத்திலும் காண முடியும். எல்லா நன்னெறிகளுக்கும் சுயநலமின்மைக்கும், அதாவது சிறிய உடம்பே தாங்கள் என்று மனிதர்கள் எண்ணுவதிலிருந்து விடுபடுவதற்கும் அதுதான் அடிப்படையாக உள்ளது. நல்லது செய்கிறான் என்றால் பிறருக்கு உதவுகிறான் என்றால் நான் எனது என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவனால் அடங்கிக் கிடக்க முடியவில்லை என்பதே பொருள். இந்தச் சுயநலத்தை எவ்வளவு விடலாம் என்பதற்கான எல்லைகள் எதுவும் இல்லை. முழுமையான சுயநலமின்மையே லட்சியம் என்றுதான் மிகச் சிறந்த நன்னெறிக் கோட்பாடுகள் எல்லாமே போதிக்கின்றன. இந்த முழுமையான சுயநலமின்மையை ஒருவன் அடைந்தால் அவன் என்ன ஆவான்? அவன் அதன்பிறகு ஒரு சிறியவனாக, திரு. இன்னார் ஆக இருக்க மாட்டான்; எல்லையற்ற விரிவைப் பெற்று விடுவான். முன்பு அவனுக்கிருந்த சிறியதான தனி மனிதத்துவம் என்றென்றைக்குமாக அவனிடமிருந்து போய்விடும். அவன் எல்லையற்றவனாகி விடுவான்.

இந்த எல்லையற்ற விரிவுதான் எல்லா மதங்களுடையவும் ஒழுக்கங்களுடையவும் தத்துவங்களுடையவும் போதனையின் லட்சியமாகும். மனிதனைச் சிறிய உடம்பிற்குள் மட்டுமே காண்பவர்கள் இந்தக் கருத்தைத் தத்துவரீதியாக விளக்குவதைக் கேட்டாலே அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் நன்னெறிபற்றி உபதேசிக்கும்போது அவர்களும் இதே கருத்தைத்தான் சொல்கிறார்கள், அவர்களும், மனிதனின் சுயநலமின்மைக்கு ஓர் எல்லையை ஏற்படுத்துவதில்லை. மனிதனை இந்தச் சிறிய உடம்பிற்குள் மட்டுமே காண்பவர்களுள் ஒருவன் தங்கள் பாதைமூலம் முழுமையான சுயநலமின்மையை அடைந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அவனை வேறு பாதைகள்மூலம் அதேநிலையை அடைந்தவர்களிடமிருந்து எப்படி வேறுபடுத்திக் காண்பது? அவன் இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றாகிவிட்டான். அப்படி ஆவதுதான் எல்லோருடைய குறிக்கோளாகும். ஆனால் இந்த அப்பாற்விக்குத் தன் ஆராய்ச்சியறிவை அதன் சரியான முடிவுவரை தொடர்ந்து செல்வதற்கான தைரியமில்லை. இதுதான் வேற்றுமை.

தன்னலமற்ற செயலின்மூலம் மனித வாழ்வின் லட்சியமான அந்தச் சுதந்திரத்தை அடைவதுதான் கர்ம யோகம். தன்னலச் செயல் ஒவ்வொன்றும் நாம் லட்சியத்தை அடைவதிலிருந்து நம்மை விலக்குகிறது. சுயநலமற்ற செயல் ஒவ்வொன்றும் நம்மை அந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. அதனால்தான் ஒழுக்கம் என்பதற்குக் கொடுக்க முடிந்த ஒரே விளக்கம் இதுதான். சுயநலமாக உள்ளது தீயொழுக்கம், சுயநலமின்மையாக உள்ளது நல்லொழுக்கம்.

ஆனால் விளக்கங்களுக்கு வரும்போது விஷயம் அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை. உதாரணமாக, நான் முன்பே, சொல்லியதுபோல் சூழ்நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரே செயல் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சுயநலமற்றதாக இருக்கும், மற்றொரு சூழ்நிலையில் சுயநலமுடையதாகி விடும். எனவே நாம் ஒரு பொதுக்கருத்தை மட்டுமே கூற முடியும். விளக்கங்களைப் பொறுத்தவரையில் அந்தச் செயல் நிகழும் காலம், இடம், சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்வதற்கு விட்டுவிட வேண்டும். ஒரு நாட்டில் ஒருவிதமான நடத்தை நன்னெறியாகக் கருதப்படும். மற்றொரு நாட்டில் அதே நடத்தை தீயொழுக்கமாகக் கொள்ளப்படும் ஏனென்றால் சூழ்நிலை வேறுபடுகிறது.

இயற்கை முழுவதன் லட்சியமும் சுதந்திரம்தான் முழுமையான சுயநலமின்மையின் மூலம் மட்டுமே சுதந்திர நிலையை அடைய முடியும். சுயநலமற்ற ஒவ்வோர் எண்ணமும் வாக்கும் செயலும் மனிதனை லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. எனவே அவை நன்னெறி என்று அழைக்கப்படுகின்றன. இந்த விளக்கம் ஒவ்வொரு மதத்திற்கும் நீதிநெறிக் கோட்பாட்டிற்கும் பொருந்துவதை நீங்கள் காணலாம்.

சில பிரிவுகளில் நீதிநெறி என்பது பரம்பொருளிடமிருந்து, கடவுளிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவன் ஏன் இதைச் செய்ய வேண்டும், ஏன் அதைச் செய்யக்கூடாது? என்று கேட்டால், அது இறைவனின் ஆணை என்று பதிலளிக்கிறார்கள். எதிலிருந்து வந்ததாக இருந்தாலும், அவர்களின் நீதிநெறிக் கோட்பாட்டிற்கும், சிறிய நான் என்ற உங்கள் தனித்துவத்தை எண்ணாதீர்கள். அதனை விட்டுவிடுங்கள். என்பதுதான் மையக்கருத்தாக இருக்கிறது. இத்தகைய உன்னதமான நீதிநெறிக் கருத்து இருந்தாலும் தங்கள் தனித்துவத்தை விட வேண்டும் என்று நினைக்கும்போது சிலர் அஞ்சி நடுங்குகிறார்கள். முழுக்க முழுக்கச் சுயநலமற்ற, தனக்கென்று எதையும் நினைக்காத, தனக்கென்று எதையும் செய்யாத, தனக்கென்று எதையும் பேசாத ஒருவனைப்பற்றி எண்ணிப் பார்த்து, அவனது நான் எங்கே இருக்கிறது என்று சொல்லும்படி, இந்தச் சிறிய நான் என்பதைப் பற்றிக்கொண்டிருக்கும்

ஒருவனிடம் கூறுங்கள். சுயநலம் அழிந்தவனின் தனித்துவம் எங்கே இருக்கிறது என்று அவன் சொல்லட்டும். தனக்கென்று நினைத்தும், செயல்பட்டும், பேசியும் இருக்கும்வரைதான் ஒருவனுக்கு நான் என்ற எண்ணம் இருக்கும். பிறரை அண்டசராசரங்களை எல்லாவற்றையும் மட்டுமே உணரும்போது அவனது நான் அது எங்கே இருக்கிறது? அது ஒரேயடியாக மறைந்துவிட்டது.

எனவே கர்மயேகம் என்பது, சுயநலமின்மை மற்றும் நற்செயல்களைச் செய்வதன் மூலம் சுதந்திரம் பெற வைக்கின்ற ஒரு நீதிநெறிக் கோட்பாடாகும். ஒரு நெறியாகும். கர்மயோகி எந்தவிதமான கோட்பாட்டையும் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அவனுக்குக் கடவுளிடம்கூட நம்பிக்கை வேண்டும் என்பதில்லை. ஆன்மா எது என்பதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சுயநலமின்மையை உணர வேண்டும் என்ற சிறப்பான சொந்த லட்சியம் அவனுக்கு உள்ளது. அதை அவன் தன் சொந்த வழியில் நிறைவேற்றிக் கொள்ளவும் வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் இந்த உண்மை அவன் முன் பிரகாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் ஞானி தன் அறிவின் மூலமாகவும் அக விழிப்புணர்வின் மூலமாகவும், பக்தன் தன் அன்பின் மூலமாகவும் தீர்வு காண்கின்ற அதே பிரச்சினையை ஒரு கர்மயோகி எந்தவிதமான கொள்கை மற்றும் கோட்பாட்டின் துணையின்றி, வெறும் செயலின்மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டியவனாக இருக்கிறான்.

இப்போது அடுத்த கேள்வி வருகிறது. செயல் என்பது என்ன? உலகத்திற்கு நன்மை செய்வது என்பது என்ன? நம்மால் உலகிற்கு நன்மை செய்ய முடியுமா? சரியாகச் சொல்வதானால் உலகிற்கு உதவி செய்ய முடியாது; சாதாரண நிலையிலிருந்து சொல்வதானால் உதவி செய்ய முடியும். நிரந்தரமான நன்மையை நாம் உலகிற்குச் செய்ய முடியாது. அப்படிச் செய்ய முடியுமானால் உலகம் இப்போதுள்ள நிலையில் இருந்திருக்காது. நாம் ஒரு மனிதனின் பசியை ஐந்து நிமிடங்களுக்குத் தீர்த்து வைக்கலாம், ஆனால் அவனுக்கு மறுபடியும் பசி எடுக்கவே செய்யும். ஒருவனுக்கு நாம் எவ்வளவு இன்பங்களை அள்ளி வழங்கினாலும், அவையெல்லாம் கண நேரத்திற்கே நிலைக்கும். திரும்பத்திரும்ப வருகின்ற இந்த சுகதுக்கம் எனப்படுகின்ற காய்ச்சலை நிரந்தரமாகக் குணப்படுத்த யாராலும் முடியாது. அழியாத இன்பம் என்ற ஏதாவது ஒன்றை உலகத்திற்குக் கொடுக்க முடியுமா? கடலில் ஏதாவது ஓரிடத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தாமல் அலைகள் எழ முடியாது. மனிதனின் தேவைகளையும் ஆசைகளையும் கருத்திற்கொண்டு பார்த்தால், இந்த உலகத்தில் இருக்கின்ற நிலை பொருட்களில் ஒட்டுமொத்தம் எப்போதும் ஒரே அளவில்தான் இருக்கிறது. அதைக் குறைக்கவோ கூட்டவோ முடியாது. இன்று நான் அறிந்துள்ள மனித இனத்தின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதே துன்பங்களையும் இன்பங்களையும், இதே சுகங்களையும் துக்கங்களையும் இதே உயர்வு தாழ்வுகளையும் எப்போதும் நாம் காணவில்லையா? அன்றும் இன்றும் சிலர் பணக்காரர்களாகவும் சிலர் ஏழைகளாகவும், சிலர் உயர்ந்தவர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும் சிலர் நோயாளிகளாகவும்தானே இருக்கிறார்கள்! இந்த வேற்றுமைகள் பழங்காலத்தில் எகிப்தியரிடமும் கிரேக்கர்களிடமும் ரோமானியரிடமும் இருந்தது போலவே இன்று அமெரிக்கரிடம் உள்ளன. வரலாற்றைப் பொறுத்தவரையில் இவை என்றும் ஒரேபோல்தான் இருக்கின்றன.

சுகதுக்கங்களின் இந்த நீக்க முடியாத வேற்றுமைகளின் கூடவே அவற்றை நீக்குவதற்கான போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் காண்கிறோம். பிறரது வாழ்க்கைப் பாதையைச் சமன்படுத்திச் சீராக்குவதற்காகக் கடினமாகப் பாடுபடுகின்ற ஆயிரமாயிரம் ஆண்களையும் பெண்களையும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தந்துள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள்? பந்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அடித்து விளையாட மட்டுமே நம்மால் முடியும். உடம்பு நிலையில் வேதனைகளை விலக்கினால் அது மனத்தின் நிலையில் செல்கிறது. தாந்தே காட்டும் நரகத்தைப் போலுள்ளது இது. அங்கே கருமிகளுக்கு தங்கக்கட்டி ஒன்றைக் கொடுக்கிறார்கள், அவர்கள் அதை உருட்டிஉருட்டி ஒரு மலையுச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் சிறிதுதூரம் மேலே கொண்டு சென்றதும் அது உருண்டு கீழே வந்துவிடும். பொற்காலம் பற்றிய நமது பேச்சுக்கள் எல்லாம் சிறுவர் கதைபோல் கேட்க மிகவும் சுவையாக உள்ளன; அதற்குமேல் அவற்றிற்கு மதிப்பில்லை. பொற்காலம் பற்றிக் கனவுகாணும் எல்லா நாடுகளுமே, அந்தக் காலம் வரும்போது அதன் மேன்மையான அம்சம் எல்லாம் பிறரைவிடத் தங்களுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் பொற்காலத்தைப் பற்றிய அதிஅற்புதமான சுயநலமற்ற கருத்தாம்!

நம்மால் இந்த உலகத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது, அதுபோலவே வேதனையையும் அதிகப்படுத்த முடியாது. இந்த உலகத்தில் காணப்படுகின்ற இன்ப துன்பங்களின் மொத்த அளவு எப்போதும் ஒருபோலவே இருக்கும், நாம் செய்வதெல்லாம் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும், அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் அதைத் தள்ளுவதுதான், ஆனால் அது எப்போதும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அப்படி இருப்பது அதன் இயல்பு. ஏற்றமும் இறக்கமும், எழுச்சியும் வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு. அப்படியில்லை என்று கருதுவது சாவே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது. சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது. ஏனெனில் வாழ்வு என்றால் அதில் சாவு என்பதும் அடங்கியே உள்ளது. அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.

விளக்கு எரியும்போது அழிந்துகொண்டே இருக்கிறது, அதுதான் அதனுடைய வாழ்க்கை. நீங்கள் வாழ்வை விரும்பினால், அதற்காக ஒவ்வொரு கணமும் செத்துக் கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு தோற்றங்களே வாழ்வும் சாவும். ஒரே அலையின் வீழ்ச்சியும் எழுச்சியுமே அவை; இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையாகின்றன ஒருவன் வீழ்கின்ற பக்கத்தைப் பார்த்துவிட்டு துன்பநோக்கு உடையவனாகிவிடுகிறான் மற்றொருவன் எழுகின்ற பக்கத்தைப் பார்த்துவிட்டு இன்பநோக்கு உடையவனாகிறான். சிறுவன் பள்ளி செல்கிறான். தாயும் தந்தையும் அவனுக்கு வேண்டியதையெல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள். அவனுக்கு எல்லாமே ஆனந்தமயமாக இருக்கின்றன. அவனுடைய தேவைகளும் சொற்பமே. அவன் எல்லாவற்றையும் இன்பமயமாகக் காண்கிறான். வயதானவனோ பல்வேறான தன் அனுபவங்களின் காரணமாக பரபரப்பின்றி இருக்கிறான். அவனது உற்சாகம் பெருமளவு தணிந்துவிடுகிறது. அதுபோலவே, நாற்புறமும் அழிவின் சின்னங்களே காணப்படுகின்ற பழைய நாடுகள், புதிய நாடுகளைவிட உணர்ச்சி குன்றிக் காணப்படுவது இயல்பு தான். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுக்கு நாடு, ஆயிரம் ஆண்டுக்குக் காடு என்ற ஒரு பழமொழி உள்ளது. இவ்வாறு நாடு காடாவதும் காடு நாடாவதும் எங்குமே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பார்க்கின்ற பக்கத்தைப் பொறுத்து மக்களை இன்ப அல்லது துன்பநோக்குக் கொண்டவர்களாக ஆக்கத்தான் செய்கிறது.

அடுத்து, நாம் எடுத்துக்கொள்வது சமத்துவக் கருத்து. இந்தப் பொற்காலக் கருத்துக்கள் மனிதர்களை வேலையில் ஈடுபடுத்துவதற்குச் சிறந்த தூண்டுசக்திகளாக விளங்கி வருகின்றன. கடவுள் இந்த உலகை ஆள்வதற்கு வரப் போகிறார், அதன்பின் எந்தவித வேற்றுமைகளும் இருக்காது என்று இந்தக் கருத்தைப் பல மதங்களும் தங்கள் ஓர் அம்சமாகப் பிரச்சாரம் செய்கின்றன. இந்தக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்பவர்கள் வெறும் கொள்கைவெறியர்கள். ஆனால் மனிதர்களுள் மிக நேர்மையானவர்களும் இந்த வெறியர்கள்தாம். இந்தக் கொள்கைவெறியின் வெறும் கவர்ச்சியின் அடிப்படையில்தான் கிறிஸ்தவ மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தக் கவர்ச்சிதான் கிரேக்க மற்றும் ரோமானிய அடிமைகளை அந்த மதத்தின்பால் ஈர்த்தது, பொற்காலத்தை உருவாக்கப்போகின்ற இந்த மதத்தின் கீழ் இனிமேல் அடிமைத்தனமே இருக்காது, உண்பதற்கும் உடுப்பதற்கும் அளவில்லாமல் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் கிறிஸ்தவ மதத்தில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்தார்கள். இந்தக் கருத்தை முதலில் பிரச்சாரம் செய்தவர்கள் கொள்கைவெறி பிடித்த அறிவிலிகள் என்பதில் சந்தேகமே இல்லை; ஆனால் அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள்.

நவீன காலத்தில், இந்தப் பொற்கால லட்சியம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உருவில் எல்லாம் வருகிறது. இதுவும் கொள்கைவெறிதான். உண்மையான சமத்துவம் என்பது இந்த உலகத்தில் எந்தக் காலத்திலும் இல்லாததும், ஒருபோதும் இருக்க முடியாததும் ஆகும். இங்கே நாம் எல்லோரும் எப்படிச் சமமாக இருக்க முடியும்? இருக்க முடியாத இந்தச் சமத்துவத்தின் பொருள் அழிவு என்பதே, இந்த உலகத்தை இப்போதைய நிலையில் வைத்திருப்பது எது? சமநிலையிலிருந்து வழுவியதுதான் பிரபஞ்ச சிருஷ்டிக்கு முந்தைய பிரளய நிலையில் முழுமையான சமநிலை இருந்தது, அதன்பிறகு இந்தப் பிரபஞ்சத்திற்கு உருவம் கொடுத்த ஆற்றல்கள் எவ்வாறு தோன்றின? போராட்டத்தால் போட்டியால், சண்டையால்தான்.ஜடப் பொருளின் அணுக்களைச் சமநிலையில் வைத்தால், படைப்புச் செயல் ஏதாவது நடைபெறுமா? முடியாது என்று விஞ்ஞானம் கூறுவது நமக்குத் தெரியும். தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துங்கள், தண்ணீரின் ஒவ்வொரு துளியும் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதியவாறு மீண்டும் பழைய அமைதியான நிலைக்குத் திரும்ப முயல்வதைக் காணலாம் இதுபோலவே நாம் பிரபஞ்சம் என்று அழைக்கின்ற இந்த எல்லாமே அதிலுள்ள பொருட்கள் எல்லாமே முழுமையான சமநிலையைத் திரும்ப அடைவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. அதை அடைந்து விட்டால் மறுபடியும் ஒரு சலனம் எழுகிறது. உடனே ஜடப்பொருள் அணுக்கள் சேர்கின்றன. படைப்புச் செயல் நடைபெறுகிறது. சமநிலையின்மைதான் படைப்பின் உண்மையான அடிப்படை, அதேவேளையில், சமநிலையைக் குலைக்கின்ற சக்திகள் படைப்பிற்கு எவ்வளவு முக்கியமோ, சமநிலையை அடையப் போராடுகின்ற சக்திகளும் அதே அளவு முக்கியமானதாகும்.

முழுமையான சமத்துவம், அதாவது எல்லா நிலைகளிலும் போராடிக் கொண்டிருக்கின்ற எல்லா சக்திகளும் முழுமையான சமநிலை அடைவது என்பது இந்த உலகில் ஒருபோதும் ஏற்பட முடியாததாகும். அத்தகைய நிலையை அடையும்முன்னரே இந்த உலகம் எந்த உயிரும் வாழத் தகுதியற்ற இடமாகிவிடும்; யாருமே இங்கு இருக்க மாட்டார்கள். எனவே இந்தப் பொற்காலம், முழுமையான சமத்துவம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்கள் என்பது மட்டுமல்ல. அவற்றை நடைமுறையில் கொண்டு வர முயற்சிசெய்தோமானால்.நிச்சயமாக இந்த உலகின் அழிவுநாளுக்கே அது நம்மை அழைத்துச் செல்லும்.

மனிதர்களுக்கிடையே வேறுபாடுகளை உண்டாக்குவது எது? பெருமளவிற்கு அறிவுத்திறம்தான். நாம் எல்லோரும் ஒரே அறிவுத் திறத்துடன் பிறந்திருக்கிறோம் என்று பைத்தியக்காரனைத் தவிர வேறு யாரும் இன்று சொல்ல மாட்டார்கள். வேறுபட்ட ஆற்றல்களுடன்தான் நாம் இந்த உலகிற்கு வருகிறோம். சிலர் மாமனிதர்களாகவும் சிலர் சாதாரண மனிதர்களாகவும்தான் பிறக்கிறோம். பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்ட இந்த நிலையிலிருந்து விடுபட வழியே இல்லை.

செவ்வந்தியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில்தான் உங்கள் முன்னோர்கள் இங்கு வந்தார்கள். இந்த நாட்டில்தான் அவர்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள்! எல்லோருமே சமம் என்றால், ஏன் அந்தச் செவ்வந்தியர்கள் இங்கே எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை? நகரங்களை உண்டாக்கவில்லை? உங்கள் முன்னோர் வேறுபட்ட அறிவுத்திறத்துடனும் பூர்வ சம்ஸ்காரங்களுடனும் இங்கே வந்தார்கள். அவை செயல்பட்டு இவ்வாறெல்லாம் வெளிப்பட்டது. முழுக்கமுழுக்க வேற்றுமையே இல்லாத நிலை என்பது மரணமே. எதுவரை இந்த உலகம் இருக்குமோ, அதுவரையில் இந்த வேற்றுமைகளும் இருக்கும்; இருந்தேயாக வேண்டும். படைப்பின் ஒரு கல்பம். ஒரு சுழற்சி முடியும்போது மட்டுமே முழுமையான சமத்துவம் நிலவுகின்ற பொற்காலம் வரமுடியும் . அதற்கு முன்னால் சமத்துவம் என்பது இருக்க முடியாது என்றாலும் அந்தப் பொற்காலத்தை அடைவதற்கான ஆர்வம் ஒரு மகத்தான தூண்டுசக்தியாகச் செயல்படுகிறது. படைப்பு நடப்பதற்குச் சமமின்மை தேவையாவதுபோல், அதைச் சமப்படுத்துவதற்கான முயற்சியும் அவசியம். முக்திபெற்று இறைவனிடம் திரும்பச் செல்வதற்கான போராட்டம் இல்லையென்றால் படைப்பும் உண்டாகாது. இந்த இரண்டு சக்திகளுக்கு இடையே உள்ள வேற்றுமைதான், மனிதர்கள் செயல்படுவதற்கான நோக்கங்களின் இயல்பைத் தீர்மானிக்கிறது. செயல்புரிவதற்கான இந்த நோக்கங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுள் சில பந்தத்திற்கு இட்டுச் செல்வனவாகவும் மற்றுள்ளவை முக்திக்கு அழைத்துச் செல்வனவாகவும் உள்ளன.

சக்கரத்திற்குள் சக்கரங்களாக உள்ள இந்த உலகம் ஒரு பயங்கர எந்திரம். நாம் அதில் கையை வைத்து மாட்டிக் கொண்டோமானால் நம் கதை முடிந்தது. குறிப்பிட்டதொரு கடமையைச் செய்து முடித்ததும், ஓய்வாக இருக்கலாம் என்றுதான் நாம் ஒவ்வொரு வரும் நினைக்கிறோம். ஆனால் அந்தக் கடமையில் ஒரு பகுதியைச் செய்து முடிக்கும் முன்பே மற்றொரு கடமை தயாராகக் காத்திருக்கிறது. உலகமாகிய இந்த மகத்தான சிக்கலான எந்திரத்தால் நாம் அனைவரும் இழுத்துச் செல்லப்படுகிறோம். இதிலிருந்து மீள இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று, அந்த எந்திரத்தைப் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அதனை அதன் போக்கில் போகவிட்டு விலகி நிற்பது, அதாவது ஆசைகளை விடுவது, சொல்வதற்கு இது மிகவும் எளிது, ஆனால் செயலுக்கு வரும்போது பெரும்பாலும் முடியவே முடியாதது. கோடியில் ஒருவரால்கூட இது முடியுமா என்பது சந்தேகமே, மற்ற வழி சம்சாரத்தில்மூழ்கி, செயலின் ரகசியத்தை அறிந்து கொள்வது. இதுதான் கர்மயோகத்தின் வழி. உலக எந்திரத்தின் சக்கரங்களிலிருந்து விலகி ஓடாதீர்கள்! அதனுள்ளேயே நின்று செயலின் ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்! உள்ளிருந்தபடியே சரியான முறையில் வேலை செய்தால் வெளியேறவும் முடியும். வெளியேறுவதற்கான வழியும் இந்த எந்திரத்தின் வழியாகத்தான் உள்ளது.

செயல் என்றால் என்ன என்பதைக் கண்டோம். இயற்கையின் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியே செயல். அது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கும். இறைவனை நம்புபவர்கள் இதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நமது உதவியை எதிர்பார்க்கும் அளவிற்கு அவர் திறமையற்றவர் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நடந்து கொண்டிருந்தாலும், நமது லட்சியம் சுதந்திரம், நமது லட்சியம் சுயநலமின்மை, கர்மயோகத்தின்படி, செயல் புரிவதன் மூலமாக அந்த லட்சியத்தை அடைய வேண்டும். இந்த உலகை முற்றிலும் இன்பமயமாக்குவது போன்ற கருத்துக்கள் எல்லாம் கொள்கைவெறியர்களுக்கான தூண்டுசக்திகள் என்ற அளவில் நல்லவையாக இருக்கலாம். ஆனால் கொள்கைவெறி நன்மையைப்போல் தீமையையும் கொண்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கான நமது இயல்பான ஆர்வத்தைத் தவிர, செயல்புரிவதற்கு வேறு தூண்டு சக்தி எதற்கு என்று கேட்கிறான் கர்மயோகி. சாதாரண லட்சியங்களைக் கடந்தவர்களாக இருங்கள். செயல் புரியவே உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதன் பலன்களைப் பெறுவதற்கு உரிமை இல்லை. இதைப் புரிந்துகொள்வதற்கும் செயல்முறைப் படுத்துவதற்குமான பயிற்சி பெற மனிதனால் முடியும் என்று கர்மயோகி கூறுகிறான். நன்மை செய்வது என்பது ஒருவனில் ஒரு பகுதியாகிவிட்டால் அவன் வெளியிலிருந்து எந்தத் தூண்டுசக்தியையும் தேட மாட்டான். நாம் நன்மை செய்வோம். ஏனென்றால் நன்மை செய்வது நல்லது. சொர்த்திற்குப் போவதற்காக நற்செயல் புரிந்தாலும் அதுவும் அவனைப் பந்தப்படுத்திக் கீழே வீழ்த்திவிடுகிறது என்கிறான் கர்மயோகி. எந்தச் செயலானாலும், அதில் சிறிதேனும் சுயநலம் கலந்திருக்குமானால் அது நமக்குச் சுதந்திரத்தைத் தருவதற்குப் பதிலாக நமது கால்களில் மற்றொரு சங்கிலியைக் கட்டிப் பிணைக்கிறது.

எனவே கர்ம பலன்களை எல்லாம் விட்டுவிடுங்கள். அதில் பற்றுக் கொள்ளாதீர்கள் இது ஒன்றே வழி, நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் இந்த உலகம் நாமல்ல, நாமும் இந்த உலகமல்ல, உண்மையில் நாம் உடம்பு அல்ல, உண்மையில் நாம் வேலை செய்வதே இல்லை, நிரந்தரமான ஓய்விலும் அமைதியிலும் திளைத்திருக்கின்ற ஆன்மாவே நாம். நாம் ஏன் நம்மை எதனோடும் பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்? நாம் சிறிதும் பற்றில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் நல்லது. ஆனால் அதைச் சாதிப்பது எப்படி? சுயநல நோக்கம் சிறிதும் இல்லாமல் செய்யப்படுகின்ற ஒவ்வொரு நல்ல காரியமும் புதிய சங்கிலியைப் பிணைப்பதற்குப் பதிலாக ஏற்கனவே நம்மைப் பிணைத்திருக்கின்ற ஒவ்வொரு சங்கிலிகளையும் உடைக்கிறது. எந்தவொரு பிரதிபலனையும் கருதாமல் நாம் இந்த உலகத்தினுள் அனுப்புகின்ற ஒவ்வொரு நல்ல சிந்தனையும் அங்கே சேமித்து வைக்கப்பட்டு, நம்மைக் கட்டியிருக்கும் ஒவ்வொரு சங்கிலியை உடைத்து, நம்மை மேன்மேலும் தூயவர்களாக்கி, இறுதியில் மனிதருள் புனிதர்களாக ஆக்குகிறது. இவையெல்லாம் பித்துக்குளித்தனமாக, ஏதோ தத்துவமயமாக, நடைமுறைக்குச் சாத்தியமாகாத, கொள்கையளவில் மட்டுமே இருக்கக் கூடியவையாகத் தோன்றலாம். பகவத்கீதையின் இந்தக் கருத்திற்கு எதிரான பல வாதங்களையும் நான் படித்திருக்கிறேன். பலன் கருதாமல் பணி செய்ய முடியாது என்றே பலரும் சொல்கிறார்கள். கொள்கைவெறியால் தூண்டப்பட்டு செயல்படுவதைத் தவிர, பலன் கருதாப் பணி என்ற ஒன்றை அவர்கள் கண்டதே இல்லை. அதனால்தான் இப்படிச் சொல்கிறார்கள்.

கர்மயோகத்தை உண்மையிலேயே தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடித்த ஒரு மனிதரைப்பற்றி மட்டும் கூறி இதனை நிறைவு செய்கிறேன். அவர் புத்தர். கர்மயோகத்தை முழுமையாக நடைமுறையில் கொண்டு வந்த யாராவது இருப்பார்களானால் அது அவர் மட்டுமே. அவரைத் தவிர உலகின் அனைத்து மகான்களையும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவினர் தாங்கள் இறைவனின் அவதாரங்கள் என்றும் மற்றொரு பிரிவினர் தங்களை செயல்படுவதற்கான தூண்டுசக்தியை வெளியிலிருந்தே பெற்றார்கள். வெளியிலிருந்து பிரதிபலனையும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடவுளைப் பற்றிய பல்வேறான உங்கள் கொள்கையைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஆன்மாவைப் பற்றிய நுட்பமான கோட்பாடுகளையெல்லாம் விவாதித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? நன்மை செய், நல்லவனாக இரு! அது உனக்குச் சுதந்திரத்தைத் தரும். சத்தியம் என்பது எதுவாக இருந்தாலும் அந்த சத்தியத்திடம் உன்னை அழைத்துச் செல்லும் என்று கூறிய ஒரே மகான் புத்தர்தான்.

முற்றிலும் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் புத்தர். அவரைவிட அதிகமாகச் செயல்புரிந்தவர்தான் யார்? எல்லோரையும்விட இவ்வளவு உயரத்தில் திளைத்த ஒருவரை உலக வரலாற்றில் எனக்குக் காட்டுங்கள். இத்தகைய ஆழ்ந்த தத்துவ ஞானமும் இவ்வளவு பரந்த இதயமும் கொண்ட ஒரே ஒருவரை மட்டுமே மனிதகுலம் இதுவரை தோற்றுவித்துள்ளது. இந்த மகத்தான தத்துவ ஞானி மிகவுயர்ந்த தத்துவத்தை உபதேசித்தார். அதேவேளையில் மிகச் சாதாரணமான விலங்குகளிடமும் ஆழ்ந்த இரக்கம் உடையவராக இருந்தார். அவர் தனக்காக எந்தத் தனி உரிமையையும் கோரவில்லை. அவர்தான் முழுக்க முழுக்க எந்தவிதமான தூண்டுதல்களும் இல்லாமல் செயல்பட்ட லட்சியக் கர்மயோகி. இதுவரை பிறந்தவர்களுள் மாமனிதர் என்று அவரை மனித வரலாறு காட்டுகிறது. ஒப்புவமை இல்லாத அளவிற்குக் கனிவும் அறிவும் அவரிடம் சங்கமித்திருந்தது. இத்தகைய சங்கமத்தை இதுவரை பூமி கண்டதில்லை. இதுவரை வெளிப்பட்டவற்றுள் மகோன்னதமான ஆன்ம சக்தியின் நிலைக்களன் அவர். உலகம் முதன்முதலாகக் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அவர். சாஸ்திரங்கள் கூறுகின்றன என்பதற்காக ஒன்றை நம்பாதீர்கள். உங்கள் தேசிய பாரம்பரியம் என்பதற்காக நம்பாதீர்கள்! சிறு வயதிலிருந்தே உங்களுக்கு உபதேசிக்கப்பட்டது என்பதற்காக நம்பாதீர்கள்! உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள்! பகுத்து உணர்ந்துகொண்ட பிறகு, அது எல்லோருக்கும் நன்மை தரும் என்று கண்டால் அதனை நம்புங்கள். வாழ்வில் அதைச் செயல்படுத்துங்கள். மற்றவர்களும் அதைப் பின்பற்ற உதவுங்கள் என்று முதன் முதலாகத் துணிவுடன் முழங்கியவர் அவர்.

பணமோ, புகழோ வேறு எந்தப் பிரதிபலனையுமோ எதிர்பார்க்காமல் யார் வேலை செய்கிறார்களோ, அவர்களே சிறப்பாக வேலை செய்ய முடியும். அப்படிச் செயல்புரிய முடியும்போது அவன் புத்தராகி விடுகிறான். உலகத்தையே மாற்றிவிடக்கூடிய அளவு வேலை செய்வதற்கான ஆற்றல் அவனிடமிருந்து பொங்கி எழுகிறது. கர்மயோகத்தின் மிகவுயர்ந்த லட்சியத்தின் பிரதிநிதியாக அவன் விளங்குகிறான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s