3. கல்வி கற்கும் முறை
மன ஒருமைப்பாடு
அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனதை ஒருமுகப்படுத்தல் என்பது. கல்வியின் இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். சாதாரண மனிதனிலிருந்து சகல சித்திகளையும் பெற்ற யோகிவரை, எல்லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். இரசாயனக் கூடத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி தன் மனோசக்தி முழுவதையும் ஒருமுகப்படுத்தி இரசாயனப் பொருட்களின் மேல் செலுத்துகிறான். அப்பொழுது அவருக்கு அதன் உண்மைத்தன்மை புலனாகி அதைப்பற்றிய அறிவு உண்டாகிறது. வானவியல் விஞ்ஞானி தன் மனோசக்தியை ஒருமுகப்படுத்தித் தொலைநோக்குக் கண்ணாடியின் மூலம் தான் ஆராய விரும்பும் கோள்களின் மீது செலுத்துகிறான். அப்பொழுது நட்சத்திரங்களும், சூரிய மண்டலங்களும் முன்வந்து அவருக்குத் தங்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன. கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களும், கல்வி பயிலும் மாணவர்களும், இன்னும் அறிவு வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் அனைவரும் இவ்விதம் தங்கள் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலமே தங்கள் அறிவை அபிவிருத்தி செய்து கொள்கின்றனர்.
மனதின் சக்தி
மனதை ஒருமுகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும். செருப்புத் தைப்பவனுக்குங்கூடத் தன் வேலையில் மனதை ஒருமுகப்படுத்தினால் நன்றாகச் செருப்புத் தைக்க முடியும். சமையல்காரன் தன் மனதை ஒருமுகப்படுத்தினால் நன்றாகச் சமையல் செய்வான். பணம் சம்பாதிப்பதிலாகட்டும், கடவுளைத் தொழுவதிலாகட்டும் – எதைச்செய்வதிலாகட்டும் மன ஒருமைப்பாடு அதிகமாயிருக்கும் வரை அது நன்றாக நடைபெறும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச் சுடரைப் பெறுவதற்கு இது ஒன்றே சிறந்த வழியாகும்.
மனிதருக்குள் வித்தியாசத்தின் காரணம்
சாதாரண மனிதன் தன் மனோசக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் வீண் செய்துவிடுகிறான். இதனால்தான் அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனதைப் பெற்றவன் ஒரு தவறும் செய்யமாட்டான். மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. மிருகங்களைப் பழக்குகிறவர்கள் அவற்றுக்குச் சொல்லிக்கொடுப்பதை அவை அடிக்கடி மறந்து விடுவதை அறிவீர்கள். எந்த விஷயத்தின் மீதும் அவை அதிகநேரம் மனதை ஒருமுகப்படுத்த முடியாததே அதற்குக் காரணம். இதில்தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் அவனிடத்திலுள்ள மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பொறுத்துதான் இருக்கிறது.
அதன் பலன்
எத்துறையிலும் வெற்றி பெறுவது இதைப் பொறுத்து தான் இருக்கிறது. ‘ சங்கீதம், ஓவியம், சிற்பம், முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாக தேர்ச்சிபெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான். மனதை ஒருமுகப்படுத்தி நமக்குள்ளேயே செலுத்தினால், நம்முள்ளிருக்கும் நம் புலன்கள் அனைத்தும் நம் வசப்பட்டு நாம் எண்ணியவாறு செயல்படும். கிரேக்கர்கள் தாங்கள் ஒருமுகப்படுத்திய மனதை வெளி உலகின்மேல் செலுத்தினார்கள். அதன் காரணமாகச் சிற்பம், இலக்கியம் முதலிய கலைகளில் பூரணத்துவத்தை அடைந்தார்கள். இந்தியர்கள் தாங்கள் ஒருமுகப்படுத்திய மனதை நம் வெளிப்புலன்களுக்கு எட்டாத ஆன்மீகத் துறையில் செலுத்தியதின் பயனாக யோகாசனத்தை அபிவிருத்தி செய்தார்கள். உலகத்தின் இரகசியங்களை மூடிவைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமை மாத்திரம் நாம் பெறவேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது மன ஒருமைப்பாடுதான்.
அறிவுக் களஞ்சியத்தின் ஒரே திறவுகோல்
மன ஒருமைப்பாட்டின் சக்தியே அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோல். நாம் இருக்கும் இப்போதைய நிலையில் நம்மனம் ஒருமுகப்படாது. பல நூறு விஷயங்களில் செல்வதால் நம் மன சக்தி வீணாகிறது. நம் மனதை ஒருமுகப்படுத்த முயல ஆரம்பித்த உடனே நாம் விரும்பாத பல எண்ணங்களும் உணர்ச்சிகளும் தோன்றி மனதை ஒருமுகப்படுத்த விடாமல் செய்கின்றன. இவற்றை அடக்கி மனதை நம் வசப்படுத்துவது எங்ஙனம் என்பதே இராஜயோகம் நமக்கு கற்பிக்கும் விஷயம். தொடர்ச்சியாக தியானம் செய்வது மன ஒருமைப்பாட்டைத் தரக்கூடிய சிறந்த சாதனமாகும்.
கல்வியின் இலட்சியம் விஷயங்களைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. மன ஒருமைப்பாடே கல்வியின் அடிப்படையான இலட்சியம் என்பது எனது முடிவு. நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் விஷயங்களைப் பற்றிப் படிக்கவே மாட்டேன், மன ஒருமைப்பாட்டுடன் மனதை எந்த இடத்திற்கும் எக்கணத்திலும் செலுத்தும் சக்தியை விரிவடையச் செய்வேன். அதற்குமேல் அவ்வுயர்ந்த சக்தியாகிய ஆயுதத்தைக் கொண்டு என்னால் விரும்பிய விஷயங்களை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
பன்னிரண்டு வருடங்கள் பிரம்மச்சரியத்தைத் தவறாது கடைபிடித்து வருபவன் அளவற்ற சக்தியைப் பெறுகிறான். பிரம்மச்சரியம் சரியாகக் கடைபிடிக்கப்பட்டால் உயர்ந்த அறிவையும் ஆன்மீக சக்தியையும் அது நமக்களிக்கிறது. நம் விருப்பங்களை அடக்கியாளுவது நமக்குப் பெரும் பயனை அளிக்கிறது.
பிரம்மச்சரியத்தின் அவசியம்
காம உணர்ச்சியை அடக்கி அதை மகத்தான ஆன்மீக சக்தியாக மாற்றிக் கொள்ளுங்கள். ஆன்மீக சக்தி அதிகரிக்காத வரையில் ஒருவனால் மாபெரும் காரியங்களைச் சாதிக்க இயலாது. நிறைந்த ஆன்மீக சக்தி இருப்பவர்கள்தாம் கடினமான காரியங்களைச் செய்து முடிக்க இயலும். பிரம்மச்சரியத்தைச் சரிவர கடைபிடிக்காத காரணத்தினால் தான் நம் நாடு இவ்வளவு சீர் குலைந்திருக்கிறது. பிரம்மச்சரியத்தைச் சரிவர கடைபிடிப்பதின் மூலம் எதையும் விரைவில் கற்கமுடியும். ஒரு தரம் கேட்டதும் தெளிவாக தெரிந்து கொள்ளும் சக்தியையும் சிறந்த ஞாபக சக்தியையும் அத்தகையவன் பெறுகிறான். பரிசுத்தமான மனம் அளவில்லாப் பலமும், மனத்திட்பமும், சக்தியும் பெறுகிறது. பூரண பரிசுத்தமின்றி ஆன்மீக பலம் கிடையாது. பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தவர்கள் சமுதாயத்தில் மகத்தான செல்வாக்கைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். ஆன்மீகத் துறையில் சிறந்து விளங்கியிருந்தவர்கள் அனைவரும் பரிசுத்தமான வாழ்க்கையை ஏற்றவர்களாகவே இருந்திருக்கின்றனர். இப்பரிசுத்த வாழ்க்கை அவர்களுக்கு அரியசக்தியை அளிக்கிறது.
ஒவ்வொரு மாணவனுக்கும், பிரம்மச்சரியத்தை அனுசரித்துப் பரிசுத்தமான வாழ்க்கையைப் பின்பற்றத் தக்க பயிற்சியை அளிக்க வேண்டும். அதற்குப்பிறகுதான் தன்னம்பிக்கையும், சிரத்தையும் உண்டாகும். பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, காயம் என்ற மூன்றிலும், எல்லா இடங்களிலும், சந்தர்ப்பங்களிலும் பரிசுத்தமாயிருப்பது. புறத்தூய்மை மாத்திரம் போதாது. பரிசுத்தமில்லா எண்ணங்கள், பரிசுத்தமில்லாச் செய்கைகளைப் போலவே தீமை விளைவிக்கக் கூடியவை. பிரம்மச்சாரியாக இருக்க விரும்புகிறவர், தான் எண்ணும் எண்ணங்களிலும், பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும் தூய்மையுடைவராக இருத்தல் வேண்டும்.
சிரத்தையே அடிப்படை
நம் மக்கள் மனதில் மறுபடியும் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். எதையும் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை நம் மக்களுக்குள் தோற்றுவித்தாலன்றி, நம் சமூகத்துள் இப்பொழுது தோன்றியிருக்கும் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. நமக்கு வேண்டியவை சிரத்தையும் தன்னம்பிக்கையுமே. மனிதனுக்கும் மனிதனுக்கும் வித்தியாசத்தை உண்டு பண்ணுவது, அவரவருக்கிருக்கும் தன்னம்பிக்கையிலும், சிரத்தையிலுமுள்ள வித்தியாசமே தவிர வேறு எதுவுமன்று. ஒருவனைப் பலமுள்ளவனாக்குவது அவனிடமிருக்கும் தன்னம்பிக்கையே. மற்றொருவனைப் பலவீனன் ஆக்குவது அவனிடம் அத்தன்னம்பிக்கை இல்லாமையே. தன்னைப் பலமற்றவனாக நினைப்பவன் பலமற்றவனாகவே ஆகிறான் என்று எங்கள் குருதேவர் உரைப்பதுண்டு. அது முற்றிலும் உண்மை . அளவற்ற தன்னம்பிக்கை உங்கள் மனதில் புக வேண்டும். மேலை நாட்டு மக்களிடம் காணப்படும் சக்தி அவர்களுக்குத் தங்கள் உடல் பலத்திலுள்ள நம்பிக்கையினின்றும் உண்டானது. நீங்கள் ஆன்மாவில் நம்பிக்கை வைத்தால், இன்னும் பன்மடங்கு சக்திபெற முடியுமன்றோ ?
எல்லாம் நமக்குள்ளே
இந்த ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொள்ளும்படி மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தான் பலமற்றவன் சக்தியற்றவன் என்று சதா நினைப்பவனிடமிருந்து ஒரு நன்மையும் விளைவதில்லை. ஒருவன் அல்லும் பகலும், தான் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன், தாழ்ந்தவன், சக்தியற்றவன், ஒன்றுமில்லாதவன் என்றே நினைப்பானேயானால் அவன் சக்தியற்றவனாகவே ஆகிறான். ‘நான் சகல சக்தியும் பெற்றவன்: எதையும் செய்யக்கூடியவன்’ என்று நினைப்பானேயானால் அப்படியே ஆகிறான். நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய பெரிய உண்மை இது. நாம் அனைவரும் சர்வ சக்தியும் வாய்ந்த மகா சக்தியின் குழந்தைகள். நாம் எல்லையில்லாத தெய்வீகச் ஜோதியினின்றும் தோன்றிய பொறிகள். நாம் எப்படி சக்தியற்றவர்களாக முடியும்? ‘நாம் சகல சக்தியும் பொருந்தியவர்கள்: எக்காரியத்தையும் செய்து முடிக்கச் சித்தமாய் இருப்பவர்கள்; நம்மால் எக்காரியத்தையும் செய்து முடிக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கை நம் முன்னோர்கள் மனதில் இருந்தது. அவர்கள் பெற்றிருந்த தன்னம்பிக்கையே அக்காலத்தில் உலகிற்குச் சிறந்த நாகரிகத்தை உண்டாக்கக்கூடிய சக்தியை அவர்களுக்களித்தது. எந்த தினத்தில் மக்கள் தன்னம்பிக்கையை இழந்தார்களோ அன்றிலிருந்தே நாம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்திருப்பதைக் காணலாம்.
சிரத்தையையும், தன்னம்பிக்கையையும் மக்களுக்குப் போதிப்பதே என் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். நான் மறுபடியும் கூறுகிறேன். கேளுங்கள், இத்தன்னம்பிக்கை மக்களுக்குள் இயங்கும் மகத்தான சக்திகளில் ஒன்று.
தன்னம்பிக்கையை நீங்கள் அனைவரும் பெறுங்கள்! சமுத்திரத்திலிருந்து ஒரு சிறிய குமிழியும் தோன்றலாம்; மலை போன்ற பெரிய அலையும் தோன்றலாம். ஆனால், இவ்விரண்டிற்கும் பின்னால் எல்லையற்ற அளக்கவொண்ணாத ஒரே பெரிய சமுத்திரம்தான் இருக்கிறது என்பதை உணருங்கள்! அத்தகைய எல்லையற்ற மகத்தான சக்தி எனக்கும் உங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அந்தப் பரந்த எல்லையற்ற சக்தி வாய்ந்த தெய்வீகச் சமுத்திரம் அனைவர் பின்னும் இருக்கிறது. ஆதலால், சகோதரர்களே, உயிர் கொடுக்கக்கூடிய இந்த உயர்ந்த சீரிய கொள்கையை உங்கள் குழந்தைகளுக்குப் பிறவியிலிருந்தே ஊட்டி வளர்ப்பீர்களாக!