2. கல்வியின் தத்துவம்
மனிதன் உள்ளத்தில் புதைந்திருப்பது
மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வியெனப்படும். மனிதனிடத்து அறிவு இயல்பாக அமைந்திருப்பது; அது புறத்தேயிருந்து வருவதொன்றன்று; அது அகத்தே அமைந்திருப்பது. ஒரு மனிதன் ‘அறிகிறான்’ என்று சொல்லுகிறோம். அதை மனோதத்துவ நூலிற்கேற்ற மொழியில் சொல்லின் ‘அதைக்கண்டு கொள்கிறான் அல்லது அறியாமைத் திரையை விலக்குகிறான்’ என்று சொல்லுதல் வேண்டும். ஆராய்ந்து பார்க்குமிடத்து எல்லையற்ற அறிவுக் களஞ்சியமாகிய ஆன்மாவை மூடியிருக்கும் அறியாமைத் திரையை நீக்குதலே கற்றல்’ என்பதன் பொருளாகும். தத்துவ அறிஞராகிய நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்கிறோம். [Law of Gravitation] அது அவர் வருவாரென்று எங்காவது மூலையில் காத்துக்கொண்டிருந்ததா? இல்லை. அது அவர் உள்ளத்திலேயேயிருந்தது. உற்ற காலம் வந்ததும் அவர் அதைக்கண்டு வெளிப்படுத்தினார். உலகு இதுகாறும் பெற்ற அறிவு முழுவதும் மனதிலிருந்து வெளிவந்ததே. உலகிலுள்ள அறிவு அனைத்தும் பொதிந்த எல்லையற்ற நூற்களஞ்சியம் நமது உள்ளத்து ஆராய்ச்சிக்கு வெறும் தூண்டுகோல் மட்டுமே. நமது உள்ளத்தை நாம் அறிவதற்கு அவசியமான குறிப்பையும், சந்தர்ப்பத்தையும் கொடுக்கும் கருவியே அது. பழம் விழுந்த குறிப்பினைக் கண்ட நியூட்டன், அதன் காரணத்தை ஆராயத் தமது உள்ளத்தை உற்று நோக்கினார். முன்பு கண்டுபிடித்த முடிவுகளோடு ஒரு புது முடிவு புலப்பட்டது. அங்ஙனம் அவர் கண்ட முடிவினை நாம் புவியீர்ப்பு விசை எனக் கொள்கிறோம். அவ்விதி, பழத்திலோ அல்லது பூமியின் நடுவிலோ இருக்கவில்லை.
கற்றல் என்றால் என்ன ?
ஆகவே ஞானம் அனைத்தும் நம் உள்ளத்திலே தானிருக்கிறது. இவை சாதாரணமாக மறைந்து கிடக்கின்றன. இவற்றை மூடியிருக்கும் திரையை அகற்றுதலே கல்வி கற்றலாகும்; இவ்வாறு திரையைப் படிப்படியாக அகற்றுவது அறிவின் வளர்ச்சியே ஆகிறது. எவனொருவனுடைய உள்ளத்தினின்றும் இத்திரை பெரிதும் அகன்றுவிட்டதோ அவன் பேரறிஞன் ஆகிறான். இங்ஙனம் அகலப் பெறாதவன் பேதையாயிருக்கிறான். முற்றும் அகலப் பெற்றவன் முழுதும் உணர்ந்த ஞானியாகிறான். கல்லினுள்ளே நெருப்பு இருப்பது போல உள்ளத்தினுள் அறிவு அமைந்திருக்கிறது. கல்லை ஒன்றோடொன்று உரசும் போது தீ வெளியாகிறது. புறத்தே தோன்றும் குறிப்பின் மூலம் அறிவு வெளியாகிறது. சகல அறிவும் ஆற்றலும் நம் உள்ளத்திலேயே இருக்கின்றன. எல்லாவிதமான சக்திகள், இயற்கையின் ரகசியங்கள், ஆற்றல்கள் எனப் பலவாறாக நாம் கூறும் அனைத்தும் மனத்துள்ளேயிருக்கின்றன. மனித ஆன்மாவே சகல ஞானத்திற்கும் பிறப்பிடமாயிருக்கிறது. எண்ணற்ற காலமாக நமது மனதில் புதைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்துவதே கல்வியாகும்.
உண்மையில் எவரும் மற்றவரிடம் கற்பதில்லை . ஒவ்வொருவரும் தமக்குத் தாமேதான் கற்றுக்கொள்ள வேண்டும். புறத்தேயுள்ள ஆசான் தூண்டுகிறார். அதனால், அகத்தே உள்ள ஆசான் விழித்தெழுந்து அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்கிறார்.
குழந்தை தானாகவே கற்கிறது
நம்முடைய அனுபவத்தினாலும், எண்ணங்களினாலுமே எல்லாம் தெளிவாகின்றன. பல ஏக்கர் கொண்ட நிலத்தைக் கவர்ந்து, பரந்து வானளாவி வளர்ந்திருக்கும் ஆலமரம், அதன் சிறு விதையில் அடங்கியிருந்தது. அந்த விதை கடுகில் கால் பங்கிருக்கலாம். இம்மரத்தில் காணும் சக்தியனைத்தும் அந்த நுண்ணிய வித்தில் அடங்கியிருந்தது. அதேபோல் இப்போது காணப்படும் அபார மூளைகளும் ஆதியில் அணு அளவேயான விதையில் புதைந்திருந்தன. இது விந்தையாகத் தோன்றும்; ஆனால் உண்மை ! நாம் ஒவ்வொருவரும் அணுவுக் கணுவான ஜீவ அணுவிலிருந்தே தோன்றியிருக்கிறோம். நம் சக்திகளனைத்தும் அணுவுக்குள் அடங்கியிருந்தன. நம் சக்திகளனைத்தும் உணவிலிருந்து வந்தனவெனச் சிலர் நினைக்கலாம். ஆனால், அப்படிச் சொல்ல முடியாது. ஏனெனில், மலையளவு உணவைக் குவித்தாலும் இச்சக்தியை உண்டாக்க முடியுமா? மனித ஆன்மாவில் அளவற்ற சக்தி அடங்கியிருக்கிறது. மனிதன் அதை உணர்ந்திருக்கலாம் அல்லது உணராமலிருக்கலாம்; எனினும் எல்லையற்ற ஆற்றல் ஆன்மாவினுள் அடங்கி நிற்கிறது என்பது உண்மை . இதைச் சரியாக உணர்ந்த மாத்திரத்தில் மனிதன் இச்சக்தியை வெளிப்படுத்த முடியும்.
இந்தத் தெய்வ ஒளி அனைவரின் மனதிலும் மறைந்திருக்கிறது. அது ஓர் இரும்புப் பாத்திரத்தினுள் வைத்த விளக்கைப் போன்றது. இரும்பின் மூலம் விளக்கின் ஒளி பிரகாசிக்க முடியாது. ஆனால், தூய்மையினாலும் சுயநலமின்மையாலும் பாத்திரத்தின் தன்மையைக் கண்ணாடியாக மாற்றி, அவ்வொளியை பிரகாசிக்கச் செய்ய முடியும். ஸ்ரீராமகிருஷ்ண தேவரைப் போன்ற பெரியோர்கள், இவ்விதம் இரும்புப் பாத்திரம் கண்ணாடிப் பாத்திரமாக மாறுவது போல், தூய நிலையை அடைந்தவர்கள். அவர்கள் மூலம் அவர்களுக்குள்ளிருக்கும் தெய்வீக ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.
குழந்தை வளர உதவி செய்க
ஒரு செடியை அதன் இயற்கையை மீறி வளரச்செய்ய முடியாது. அதைப்போன்றதே குழந்தைக்குக் கல்வி புகட்டுதலும். செடி தன் இயற்கைப்படி தானே வளரும்; அங்ஙனமே குழந்தையும் தன் இயற்கையை ஒட்டியே சுயமாகக் கற்றுக்கொள்கிறது. ஆனால், நாம் ஒன்று செய்ய முடியும். குழந்தை சுபாவப்படி வளருவதற்கு உதவி செய்யமுடியும். அதன் வளர்ச்சியை நாம் துரிதப்படுத்த முடியாது. ஆனால், அதன் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பவற்றை நாம் நீக்கலாம். அதற்கு மேல் அது பெறும் அனுபவத்திலிருந்துதான் அறிவு வளர்ச்சி உண்டாகும். ஒரு செடியின் வளர்ச்சிக்கு உதவியாயிருக்கும் பொருட்டு, பூமியைக் கிளறிவிடலாம். சுற்றிலும் வேலியிட்டு மற்ற பிராணிகள் அதை அழிக்காமல் காப்பாற்றலாம்; அது வளருவதற்கான எரு, தண்ணீர், காற்று முதலியவற்றை அதற்குக் கொடுக்கலாம். இவ்வளவோடு நம் வேலை நின்று விடுகிறது. அதற்கு வேண்டியதை அது தானே உட்கொண்டு ஜீரணிக்க வேண்டும்; அது போலத்தான் ஆசிரியர் செய்யும் உதவியும். ஆசிரியர்கள் தாங்கள் கற்பிப்பதாக எண்ணுவதனாலேயே எல்லாவற்றையும் கெடுத்துவிடுகின்றனர். சகல ஞானமும் மனிதனுக்குள்ளேயே புதைந்திருக்கிறது. அதைத் தூண்டி எழுப்புதலே தேவை. அதுவே ஆசிரியரின் கடமை. சிறுவர்கள் தங்கள் சொந்த அறிவை உபயோகப்படுத்தவும், தங்கள் கை, கால், கண், செவி ஆகியவற்றைச் சரியாகப் பயன்படுத்தவும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு நாம் அவர்களுக்கு உதவிசெய்தால் அதுவே போதுமானது.
கட்டாய முறை தவறு
கழுதையை நன்கு அடித்தால் அது குதிரையாகுமென்று யாரோ சொல்லக்கேட்டு அவ்விதமே ஒருவன் செய்தான் என்று ஒரு கதையுண்டு. இத்தகைய முறையிலேயே நம் பிள்ளைகளுக்கு இப்போது கல்வியளிக்கப்படுகிறது. இம்முறை ஒழிய வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் பெற்றோர் அதிகமாகப் தலையிட்டு சிறு விஷயங்களிலும் தங்கள் விருப்பம் போல் செய்யும்படி வற்புறுத்துவதனாலேயே பிள்ளைகள் தங்களின் சுய சிந்தனையை இழந்து சரியான வளர்ச்சியடையாமற் போய்விடுகின்றனர். ஒவ்வொருவரிடமும் பல உணர்ச்சிகள் இருக்கின்றன. அவை சரியாக திருப்தி செய்யப் பெறவேண்டும். பலாத்கார முறையில் சீர்திருத்தம் செய்ய முயல்வதில் சீர்திருத்தத்தின் நோக்கம் குன்றுகிறதே ஒழிய நிறைவேறுவதில்லை. ஒருவனுக்குச் சுதந்திரம் அளித்தால் அவன்பலம் பெற்றுச் சிங்கம் போல் மாற வழியுண்டு. ஆனால், அவனை கட்டாயப்படுத்தி அடக்கி வைத்தால் அவன் தன் குறைகளை மறைத்து நரிபோலாவான்.
உடன்பாட்டு முறை
நாம் உடன்பாட்டு முறையில் உயர்ந்த எண்ணங்களையும், இலட்சியங்களையும் கொடுக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் மக்களைப் பலவீனப்படுத்துகின்றன. பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளை எப்பொழுதும் எழுதும்படியும் படிக்கும்படியும் வற்புறுத்திக்கொண்டும், “நீங்கள் உதவாக்கரைகள், மடச்சாம்பிராணிகள்” என்று சதா திட்டிக்கொண்டும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அப்பிள்ளைகள் பல சமயங்களில் இப்படியே உதவாக்கட்டைகளாகவும், மடையர்களாகவும் ஆனதை நீங்கள் கண்டதில்லையா? அன்புடன் புத்திமதி சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்தினால் அவர்கள் கண்டிப்பாகச் சரியான வளர்ச்சியைப் பெறுவார்கள். உடன்பாட்டு முறையில் அவர்களுக்கு உயர்ந்த கருத்துக்களைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் சுயமாகத் தாங்களே தங்கள் காரியங்களை நிர்வாகம் செய்யக்கூடிய சக்தியைப் பெறுவார்கள். மொழியிலாகட்டும் அல்லது இலக்கியத்திலாகட்டும் கல்வியிலாகட்டும் அல்லது இதர கலைகளிலாகட்டும், நினைவிலாகட்டும் அல்லது செயலிலாகட்டும் மக்கள் செய்யும் குற்றங்களைச் சுட்டிக்காட்டி, குறைகூறுவதில் மட்டும் பயனில்லை. ஆனால் அவர்கள் குற்றங்களின்றி எவ்விதம் இன்னும் நன்றாகத் தங்கள் பணிகளைச் செய்யமுடியும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். மாணவர்களின் தன்மையை அனுசரித்துக் கற்பித்தலே கல்வி பயிற்றுவதற்கு ஏற்ற முறை. நம்முடைய முந்தைய வாழ்க்கைகள் நமது மனத்தின் போக்கைத் தீர்மானம் செய்கின்றன. எனவே, நமக்குக் கொடுக்கப்படும் கல்விப் பயிற்சி நமது மனப்போக்குக்கு ஏற்றதாயிருக்க வேண்டும். ஒவ்வொருவனையும் அவன் இருக்கின்ற நிலையிருந்து முன்னேறும்படி உதவிசெய்யவேண்டும். மிகவும் கீழானவர்கள் என்று நாம் நினைத்தவர்களைக்கூட ஸ்ரீராமகிருஷ்ண தேவர் ஊக்கமளித்து அவர்களின் வாழ்க்கையின் போக்கையே புதிதாக மாற்றியமைத்த அற்புதத்தை நாம் அறிவோம். எவருடைய தனிப்பட்ட சுபாவத்தையும் அவர் அழிக்கவில்லை. மிகத் தாழ்ந்தவர்களுக்கும் உற்சாகமளிக்கக்கூடிய வார்த்தைகளைச் சொல்லி அவர்களை முன்னேற்றமடையச் செய்தார்.
சுதந்திரமே வளர்ச்சிக்கு அவசியம்
சுதந்திரமே மனித வளர்ச்சிக்கு முதல் அவசியம். “இந்தக் குழந்தைக்கு அல்லது அந்தக் குழந்தைக்கு நான் விமோசனம் அளிப்பேன்” என்று யாராவது சொல்லத் துணிவார்களேயானால், அது தவறு, முற்றிலும் தவறு என்று நான் சொல்வேன். தயவுசெய்து ஒதுங்கி நில்லுங்கள்; அவரவர் பிரச்சினைகளை அவரவர்களே தீர்த்துக் கொள்வார்கள். கடவுளுக்கு மீறின சக்தி இருக்கிறதென்று நினைக்க உங்களுக்கு அவ்வளவு அகம்பாவமா? ஒவ்வோர் ஆன்மாவும் கடவுளின் வடிவம் என்பதை நீங்கள் உணரமாட்டீர்களா? எல்லோரையும் கடவுளாகப் பாருங்கள். சேவை செய்யத்தான் உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்கு அந்தப் பாக்கியம் இருந்தால் கடவுளின் குழந்தைகளுக்குச் சேவை செய்யுங்கள். ஆண்டவனின் குழந்தைகளுக்கு உதவி செய்ய முடியுமானால், நீங்கள் அவன் அருள் பெற்றவர்களாவீர்கள். மற்றவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்காமலிருக்க, நீங்கள் இதைப்பெற்றது ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கிறதென்பதற்கு அறிகுறி என்று உணருங்கள்! இச் சேவையை இறைவனின் ஆராதனையாகப் பாவித்துச் செய்வீர்களாக!