9. பொருளாதார முன்னேற்றத் திட்டத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்?
சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும்பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளிக்கப்பட வேண்டும், உணவளிக்கப்பட்டுப் பரிபாலிக்கப்பட வேண்டும்; அதுவரை எந்த அரசியலும் பயன் தராது.
நமக்கு இப்போது வேண்டியது என்ன தெரியுமா? அன்னியரின் கட்டுபாடுகள் இன்றி, நமது பல்வேறு துறை அறிவுகளுடன் ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்பதே. தொழிற்கல்வி வேண்டும். தொழில்வளம் பெருகுவதற்கான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். மக்கள் வேலை தேடி அலைவதை விட்டுவிட்டு கைத்தொழிலில் ஈடுபட்டு நாலு காசு சம்பாதிக்கத் தகுதி உடையவர்களாக வேண்டும்.
ஒருமுறை கண்களைத் திறந்துபார். பொன் விளையும் பூமியான இந்தப் பாரதத் திருநாட்டில் ஒருபிடி உணவிற்காக மக்கள் அல்லாடும் பரிதாபத்தைப் பார். உங்கள் படிப்பால் இந்தப் பரிதாபக் குரல்களின் தேவை நிறைவேறுமா? ஒருபோதும் நிறைவேறாது. மேலை விஞ்ஞானத்தின் உதவியுடன் பூமியை நன்றாக உழுது, உணவுப் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.
‘இவ்வளவு தண்ணீரும் மண்வளமும் நிறைந்த இந்த நாட்டில், மற்ற எந்த நாட்டையும்விட இயற்கை பல ஆயிரம் மடங்கு விளைச்சலை உற்பத்தி செய்யும் இந்த நாட்டில் பிறந்த உங்கள் வயிற்றுக்கு உணவில்லை; உடம்பில் போர்த்திக்கொள்ளத் துணியில்லை . மற்ற நாட்டில் நாகரீகங்கள் பரவுவதற்குக் காரணமான பொருட்கள் உற்பத்தியாகும் இந்த நாட்டில், அன்னபூரணியின் நாட்டில் உங்களுக்கு இந்த இழிநிலை. உங்கள் நிலைமை நாயின் நிலைமையைவிடக் கேவலமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் உங்கள் வேதத்தையும் வேதாந்தத்தையும் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறீர்கள்! சாதாரணத் தேவையான எளிய உணவும் உடையும் கொடுக்க முடியாத நாட்டிற்கு, எதற்கெடுத்தாலும் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்கின்ற ஒரு நாட்டிற்குப் பெருமை என்ன வேண்டிக் கிடக்கிறது?
முதலில் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற உன்னைத் தயார் செய்துகொள். ‘உங்கள் நாட்டிலுள்ள மூலப்பொருட்களைப் பயன்படுத்தி அயல் நாட்டினர் பணமாகக் குவிக்கிறார்கள். நீங்களோ பொதி சுமக்கின்ற கழுதைகளைப்போல் அவர்களின் மூட்டைகளைச் சுமக்கிறீர்கள். இந்தியாவின் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, தங்கள் அறிவைப் பயன்படுத்தி, பலவகையான பொருட்களை உற்பத்தி செய்து, அவர்கள் பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். நீங்களோ உங்கள் புத்தியைப் பூட்டி வைத்துவிட்டு, உங்கள் சொத்தையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, “சோறு, சோறு” என்று பரிதாபமாக அலைகிறீர்கள்!’