கர்மயோகம் 2

ஆரம்பநிலைப் பாடங்கள்

2.கடமை என்பது என்ன?

கர்மயோகத்தைப்பற்றி ஆராயும்போது கடமை என்றால் என்ன என்பதுபற்றி அறிய வேண்டியது அவசியமாகும். நான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் அது என் கடமை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், அப்போது அதை என்னால் செய்ய முடியும்.

கடமை என்ற கருத்து பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உள்ளது. தன் நூலாகிய குரானில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதுதான் என் கடமை என்று முகமதியன் கூறுகிறான்.

வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் தன் கடமை என்று சொல்கிறான் இந்து. கிறிஸ்தவனோ பைபிளில் கூறப்பட்டது தான் தன் கடமை என்கிறான், எனவே பல்வேறு வாழ்க்கை நிலைகளுக்கும், பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்ப கடமை என்ற கருத்தும் பல்வேறு விதமாக மாறுபடுவதை நாம் காண்கிறோம்.

உலகம் தழுவியதான் சில நுண் கருத்துக்களை விளக்குகின்ற மற்ற சொற்களைப் போலவே கடமை என்னும் சொல்லின் பொருளையும் முழுமையாக விளக்க முடியாது. அதன் செயல்பாட்டு முறைகளையும் விளைவுகளையும் வைத்து ஓரளவுக்கு அதைப் புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான்.

சில குறிப்பிட்ட காரியங்கள் நம் முன் நிகழும்போது, இயல்பாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஒரு குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளும் உள்ளுந்தல் நம்மிடம் தோன்றுகிறது. இத்தகைய உள்ளுந்தல் எழுந்ததும் மனம் அந்தச் சூழ்நிலையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறது. அந்தச் சூழ்நிலையில் இன்ன வகையில் நடந்துகொள்வது நல்லது என்று சிலவேளைகளில் நினைக்கிறது. வேறு சிலவேளைகளிலோ, அதே சூழ்நிலையில் அப்படி நடப்பது தவறு என்று நினைக்கிறது.

எல்லா இடங்களிலும் கடமையைப் பற்றிய பொதுவான கருத்து என்னவென்றால் நல்லவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். என்பதே.

ஒரு செயலைக் கடமையாக்குவது எது? ஒரு கிறிஸ்தவன் தனக்கு முன் சிறிது மாட்டிறைச்சியைக் காண்கிறான்; ஒன்று அவன் அதைச் சாப்பிட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இன்னொருவனுக்குக் கொடுத்து, அவன் உயிரைக் காக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை என்றால் கடமையிலிருந்து தான் தவறியாதகவே கட்டாயமாக அவன் எண்ணுவான். ஆனால் ஓர் இந்து அதைச் சாப்பிடத் துணிந்தாலோ அவனும் தன் கடமையிலிருந்து வழுவிவிட்டதாகவே நினைப்பான். பயிற்சியும் படிப்பும் ஓர் இந்துவை அப்படி நினைக்கச் செய்கின்றன.

கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் தக் எனப்படும் பயங்கரமான ஒரு கொள்ளைக் கூட்டத்தினர் இருந்தனர். யாரை வேண்டுமானாலும் கொல்வதும், அவர்களுடைய பொருட்களைக் கொள்கையடிப்பதும் தங்கள் கடமை என்று அவர்கள் எண்ணினர். எவ்வளவு அதிகம் பேரைக் கொல்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்களைச் சிறந்தவர்களாகக் கருதினார்கள். சாதாரணமாக ஒருவன் தெருவில் சென்று மற்றொருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டால், தான் தவறு செய்துவிட்டதற்காக அவன் வருந்த வேண்டும், அது தான் சரி, அதே மனிதன் போர்வீரனாகப் படையில் சேர்ந்து ஒருவனை அல்ல, இருபது பேரைக் கொன்றாலும் தன் கடமையைச் சிறப்பாகச் செய்ததாகவே நிச்சயமாக மகிழ்வான். எனவே செயலைக் கொண்டு கடமை வரையறுக்கப் படுவதில்லை.

அதனால் கடமை என்பதற்குப் புறச்சார்பான விளக்கம் தருவது என்பது இயலாத ஒன்று. ஆனால் அகச்சார்பான விளக்கம் இருக்கிறது. எந்தச் செயல் நம்மைக் கடவுளை நோக்கிச் செலுத்துகின்றதோ அது நற்செயல், நமது கடமை. எது நம்மைக் கீழ் நிலைக்கு இழுத்துச் செல்கிறதோ அது தீயது. நமது கடமை அல்ல. அகச்சார்பான இந்தக் கோணத்தில் நாம் பார்த்தால் சில செயல்களில் நம்மை உயர்த்தவும் உன்னதமாக்குவதற்குமான போக்கு இருப்பதையும், மற்றும் சிலவற்றில் நம்மைச் சீரழித்து தீயவர்கள் ஆக்குகின்ற போக்கு இப்பதையும் காணலாம். பல்வேறு நிலைகளிலும் சூழ்நிலைகளிலும் செயல்படுபவர்களான மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் இன்ன செயல் இன்ன போக்குக் கொண்டதாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஒருபோதும் வரையறுக்க முடியாது. ஆனால் எல்லா காலங்களிலும் எல்லா நெறியினருக்கும் எல்லா நாட்டினருக்குமான கடமையென்று மனிதகுலம் முழுவதுமே ஒருமனதாக ஏற்றுக்கொண்ட கருத்து ஒன்று உள்ளது ஒரு சம்ஸ்கிருத சுலோகம். அதை இப்படிச் சுருக்கமாகக் கூறுகிறது.

எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது. எந்த உயிருக்கும் துன்பம் தராமல் இருப்பது புண்ணியம் எதையும் துன்புறுத்துவதுபாவம்.

பிறப்பையும் வாழ்க்கை நிலையையும் அடிப்படையாகக் கொண்ட கடமைகளைப்பற்றி பகவத்கீதை பல இடங்களில் கூறுகிறது. பிறப்பும் வாழ்க்கையும் மற்றும் சமுதாயத்தில் ஒருவன் பெறுகின்ற இடமுமே அவனது வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் மீது அவன் கொள்கின்ற மனநிலையையும் தார்மீக நிலையையும் பெருமளவிற்கு நிர்ணயிக்கின்றன. எனவே நாம் எந்தச் சமூகத்தில் பிறந்துள்ளோமோ, அந்தச் சமுதாயத்தின் லட்சியங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப நம்மை உயர்த்தவும் உன்னதப்படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை ஆகிறது.

ஆனால் லட்சியங்களும் பழக்க வழக்கங்களும் எல்லா சமூகங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே போல் இருப்பதில்லை என்பதை நாம் கட்டாயம் நினைவில்கொள்ள வேண்டும். இதனை அறியாதது தான் நாடுகளுக்கு இடையேயுள்ள வெறுப்புணர்ச்சிக்கு முக்கியக் காரணம். தன் நாட்டின் நடைமுறையை ஒட்டிதான் என்ன செய்தாலும் அவையே செய்த்தக்கவற்றுள் சிறந்தவை. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் தீயவர்கள் என்று அமெரிக்கன் கருதுகிறான். இந்துவோ தன் பழக்க வழக்கங்கள் மட்டுமே சரியானவை, உலகத்திலேயே உயர்ந்தவை. அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொடியவர்கள் என்று நினைக்கிறான். இது நாம் எல்லோருமே செய்யக்கூடிய சர்வ சாதாரணமான தவறு. இது தீங்கு விளைவிப்பது. உலகத்தில் தரும சிந்தனைக் குறைவிற்கு அரைவாசி இதுதான் காரணம்.

நான் இந்த நாட்டிற்கு வந்து சிகாகோ பொருட்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒருவன் என் தலைப்பாகையைப் பிடித்து இழுத்தான். நான் திரும்பிப் பார்த்தேன். அவன் நன்றாக உடை உடுத்தி, நல்ல மனிதன் போலவே இருந்தான். அவனிடம் பேசத் தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கண்டபோது அவன் குறுகிப் போனான் .மற்றொருமுறை அதே பொருட்காட்சிச் சாலையில் வேறொருவன் என்னைப் பிடித்துத் தள்ளினான். ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று நான் கேட்டேன். நான் கேட்டவுடனே அவனும் வெட்கிப்போய் சற்று தடுமாற்றத்துடன், ஏன் நீ இப்படி விசித்தரமாக உடை உடுத்தி இருக்கிறாய்? என்று மன்னிப்புக் கேட்கும் தொனியில் கேட்டான். இவர்களின் கனிவெல்லாம் சொந்த மொழி, சொந்த உடை என்ற எல்லைக்குள் நின்றுவிடுகின்றன. வல்லரசுகள் சாதாரண நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இத்தகைய எண்ணமே முக்கியக் காரணம். இந்த எண்ணம் அவர்களிடம் மனிதாபிமானத்தையே வற்றச் செய்துவிடுகிறது. தன்னைப்போல் நான் ஏன் உடை உடுத்தவில்லை என்று கேட்டுவிட்டு, என் உடை காரணமாக என்னைக் கேவலப்படுத்த முயன்றானே ஒருவன் அவன் ஒரு நல்ல மனிதனாக, நல்ல தந்தையாக, நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால் மாறுபட்ட உடையில் ஒருவனைக் கண்டதும் அவனது இயல்பிலுள்ள கனிவு மறைந்து விடுகிறது.

புதியவர்கள் எல்லா நாடுகளிலுமே ஏமாற்றப்படுகின்றனர். ஏனென்றால் அங்கே தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்படித்தான் அவர்கள் தாங்கள் கண்ட நாடுகளைப் பற்றியெல்லாம் தவறான கருத்துக்களைத் தங்கள் நாட்டிற்கு எடுத்து செல்கிறார்கள், மாலுமிகளும் படைவீரர்களும் வியாபாரிகளும் தங்கள் நாடுகளில் கனவில்கூட நடந்துகொள்ள முடியாத அசாதாரணமான விதங்களில் எல்லாம் வெளிநாடுகளில் நடந்து கொள்கிறார்கள். அதனால்தான் சீனர்கள், ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் அன்னியப் பேய்கள் என்று கூறுகிறார்கள் போலும். ஆனால் அவர்களே மேலை நாடுகளின் இந்த நல்ல, கனிவுமிக்க பக்கத்தைக் கண்டிருந்தால் இத்தகைய முடிவிற்கு வந்திருக்க மாட்டார்கள்.

 இதனை நாம் முக்கியமாக நினைவில்கொள்ள வேண்டும், மற்றவர்களின் கடமைகளை எப்போதும் அவர்களின் கண்கொண்டே பார்க்க வேண்டும். பிறருடைய பழக்கவழக்கங்களை ஒருபோதும் நமது சொந்த அளவுகோலால் மதிப்பிடக் கூடாது. நான் உலகின் அளவுகோலாக இருக்க முடியாது. நான்தான் உலகை அனுசரித்துப் போக வேண்டும் தவிர, உலகம் என்னை அனுசரித்துப் போகாது. இவ்வாறு சுற்றுச் சூழ்நிலை நமது கடமைகளின் இயல்பை மாற்றுவதைக் காண்கிறோம், எனவே, ஒவ்வொரு குறிப்பிட்ட வேளையில் நமக்கென்று அமைந்த கடமைகளை அந்தந்த வேளைகளில் செய்வதே இந்த உலகில் நாம் செய்யத் தக்கவற்றுள் மிகச் சிறந்தது. பிறவியால் நமக்கு அமைந்த கடமையைச் செய்வோம். அதை முடித்தபின் நமது வாழ்வு மற்றும் சமுதாயத்தில் நமது நிலைகளின் காரணமாக நமக்கு ஏற்படுகின்ற கடமைகளைச் செய்வோம்.

மனித இயல்பில் பெரிய அபாயம் ஒன்று உள்ளது. அவன் ஒருபோதும் சுய ஆராய்ச்சி செய்வது கிடையாது. சிம்மாசனத்தில் அமர்ந்து ஆளத் தகுந்த அரசனாகவே அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். அத்தகையவனாகவே அவன் இருந்தாலும், தனது நிலைக்கு உரிய கடமைகளை முதலில் செய்து முடித்துக் காட்டவேண்டும். மேலான கடமைகள் அதன்பிறகு அவனுக்கு வந்து சேரும். உலகில் நாம் நேர்மையாக வேலை செய்யத் தொடங்கினாலே போதும், இயற்கை நமக்குத் தேவைப்படுகின்ற அடிஉதைகளைக் கொடுத்து நமது நிலை எதுவென்பதை நாம் அறியுமாறு செய்துவிடும். தனக்குத் தகுதியில்லாத ஓர் இடத்தில் யாரும் நெடுங்காலம் சுகமாக இருக்க முடியாது. இயற்கையின் இத்தகைய வேலைமுறைக்கு எதிராக முணுமுணுப்பதில் பயனில்லை.

எனவே கீழான வேலையைச் செய்பவன் தாழ்ந்தவனில்லை. கடமைகளை வைத்து யாரையும் எடைபோடக் கூடாது. அவன் அவற்றை எந்த விதத்தில், எத்தகைய உணர்வுடன் செய்கிறான் என்பதைக் கொண்டே எல்லோரையும் மதிப்பிட வேண்டும்.

கடமைப்பற்றிய இந்தக் கருத்துக்கூட மாறுவதையும், எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாபோது தான் மகத்தான செல்களைச் செய்ய முடியும் என்பதையும் போகப் போகக் காணலாம் .

ஆனால் கடமையுணர்வுடன் செயல்புரிவதன் மூலவே எந்தக் கடமையுணர்வும் இன்றிச் செயல்புரிகின்ற நிலை உண்டாகும். இந்த நிலையில் செயல் என்பது வழிபாடாக இல்லை. அதைவிட மேம்பட்டதாகிவிடும். அப்போது தான் செயலுக்காகச் செயல்புரிய முடியும்.

நன்னெறி என்பதற்காக நாம் செய்தாலும் அன்புணர்வால் செய்தாலும், கடமை என்பதன் அடிப்படைத் தத்துவமும் மற்ற எல்லா யோகங்களைப் போன்றதே. நம்மில் ஜீவபாவனையைக் குறைத்து அதன்மூலம் உண்மையான மேலான ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்வதே, வாழ்க்கையின் கீழ்நிலைகளில் மனிதனின் ஆற்றல் விரயமாவதைத் தடுத்து, அதன் மூலம் ஆன்மா தன்னைத் தானே உயர்நிலைகளில் வெளிப்படச் செய்வதே அதன் நோக்கம். தொடர்ந்து கீழான ஆசைகளை மறுப்பதாலேயே இதனை நாம் சாதிக்க முடியும். கடமைக்கு இது மிகவும் தேவையாகும். அறிந்தோ அறியாமலோ சமுதாய அமைப்புக்கள் எல்லாமே இவ்வாறு செயல். அனுபவம் என்ற இரண்டின் வழியாகவும் விரிவடைந்து வந்ததே. சுயநலத்தைக் குறைப்பதன் மூலம் மனிதனின் உண்மை இயல்பு எல்லையற்று விரிவதற்கு நாம் வழிவகுக்கிறோம்.

கடமை அவ்வளவு இனிமையான ஒன்றல்ல; அன்பு என்னும் எண்ணெய் இடாமல் அதன் சக்கரங்கள் எளிதாகச் சுழலாது, மாறாக தொடர்ந்து உராய்ந்த வண்ணமே இருக்கும். அன்பு இல்லாவிடில் பெற்றோர் குழந்தைகளுக்கும், குழந்தைகள் பெற்றோருக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் தங்கள் கடமையை எவ்வாறு செய்ய இயலும்? நமது வாழ்வில் தினமும் சிறுசிறு பூசல்களாகிய உராய்வுகளைச் சந்திக்க வில்லையா? அன்பின் வழியாக மட்டுமே கடமை இனிமையானதாக இருக்க முடியும், இனி, சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்க முடியும்.

புலன்களுக்கும் மனித வாழ்வில் தினமும் சந்தித்தே தீர வேண்டியதான கோபங்களுக்கும் பொறாமைக்களுக்கும் இன்னும் எத்தனையோ அற்பத்தனங்களுக்கும் அடிமையாவதுதான் சுதந்திரமா?

நாம் வாழ்வில் சந்திக்கின்ற இத்தகைய சிறு நெருடல்களுக்கு நடுவில் பொறுமையுடன் அவற்றைச் சகித்துக் கொள்வதே சுதந்திரத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடாக இருக்க முடியும். எரிச்சல் மற்றும் பொறாமைக்கு எளிதில் வசப்படுகின்ற இயல்புடையவர்களாகிய பெண்கள் எளிதில் கணவனைக் குறைகூறி விடுகிறார்கள். அதுதான் தங்கள் சுதந்திரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தாங்கள் அடிமைகளாக இருப்பதையே அதன்மூலம் நிரூபிப்பதை அவர்கள் அறியவில்லை. மனைவியிடம் குற்றம் காண்கின்ற கணவர்களின் விஷயமும் இதுதான்.

கற்பு என்பதே ஆண், பெண் இருபாலாரிடமும் இருக்க வேண்டிய முதல் நன்னெறியாகும். ஒரு மனிதன் எவ்வளவுதான் வழிதவறியவனாக இருந்தாலும் மென்மையும் அன்பும் நிறைந்த கற்புமிக்க மனைவியால் திருந்தாத மனிதன் அபூர்வமே. உலகம் அந்த அளவிற்கு இன்னும் கெட்டுவிடவில்லை. மிருகத்தனமான கணவர்களைப் பற்றியும் ஆண்களின் ஒழுக்கமின்மையைப் பற்றியும் உலகமெங்கும் நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் ஆண்களுக்குச் சம அளவில் கொடுமையும் ஒழுக்கமின்மையும் நிறைந்த பெண்கள் இல்லையா? எல்லா பெண்களும், அவர்கள் எப்போதும் நிலைநாட்ட விரும்புவதுபோல், நல்லவர்களாகவும் தூயவர்களாகவும் இருப்பார்களேயானால், இந்த உலகத்தில் ஒழுக்கம் கெட்ட ஆண் ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தூய்மையாலும் கற்பாலும் வெற்றிகொள்ள முடியாத எந்த மிருகத்தனம் உள்ளது? கணவனைத் தவிர பிற ஆடவர்கள் எல்லோரையும் தன் குழந்தையாகக் கருதி, அவர்களுடன் தாயின் நிலையிலேயே பழகுகின்ற நற்பண்புமிக்க, கற்பு நிறைந்த ஒரு பெண்ணின் முன்னால் வருகின்ற எந்த மனிதனும் அவன் எவ்வளவுதான் கொடியவனாக இருந்தாலும் புனிதத்தின் சூழலை உணராமல் இருக்க முடியாது. அந்தப் பெண்ணின் தூய்மையின் ஆற்றல் அவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்! அதுபோலவே ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ நினைக்க வேண்டும், மதபோதகனாக விரும்புகின்ற ஒவ்வொருவரும் பெண்களைத் தாயாகக் கருதி, அவர்களிடம் அந்த நிலையிலேயே பழக வேண்டும்.

உலகில் தாயின் இடம் மிகவும் உயர்ந்தது. அந்த ஓர் இடத்தில்தான் மிகவுயர்ந்த சுயலமின்மையைக் கற்கவும் செயல்முறைப்படுத்தவும் முடியும். தாயன்பை விட மேலான அன்பு ஒன்று இருக்க முடியுமானால் அது இறையன்பு மட்டுமே. மற்ற எல்லாமே தாழ்ந்தவைதான். முதலில் பிள்ளைகளைப்பற்றி நினைப்பதும் அதன்பிறகே தன்னைப்பற்றி நினைப்பதும் ஒரு தாயின் கடமையாகிறது. அப்படியில்லாமல் எந்தப் பெற்றோராவது தங்களையே முதலில் நினைப்பார்களானால் அந்தப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அமைகின்ற உறவு பறவைகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் இடையிலுள்ள, அதாவது சிறகு முளைத்ததும் பெற்றோரை மறந்து விடுகின்ற உறவாகவே அமையும்.

பெண்களையெல்லாம் இறைவனுடைய தாய்மையின் பிரதிநிதிகளாக நினைக்கும் ஆண்மகன் உண்மையில் பேறு பெற்றவன். ஆண்களையெல்லாம் இறைவனின் தந்தைக் குணத்தின் பிரதிநிதிகளாகக் காணும் பெண் உண்மையில் பேறுபெற்றவள், பெற்றோர்களை பூமியில் தெய்வ வடிவங்களாகக் காணும் பிள்ளைகள் பேறு பெற்றவர்கள்.

நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன்மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர்நிலையை அடைந்து விடலாம்.

ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி முதலியவற்றில் நெடுங்காலம் ஈடுபட்டிருந்தார். பல ஆண்டுகளின் கடினமான தவம் மற்றும் பயிற்சிகளுக்குப் பிறகு, ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரதுதலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே உயர்ந்த மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். உடனே ஆத்திரத்துடன், என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள் என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார். யோகி அல்லவா! அவரது தலையிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளைச் சாம்பலாக்கிவிட்டது. அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு தலைகால் புரியாத மகிழ்ச்சி கொண்டார்.

சிறிநேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி வழக்கம்போல், உணவிற்காக அருகிலுள்ள ஊருக்குச் சென்றார். இங்கு ஒரு வீட்டில் முன் நின்று, அம்மா, பிச்சை இடுங்கள் என்று கேட்டார் மகனே கொஞ்சம் இரு என்று வீட்டிற்குள்ளிருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி பேதைப் பெண்ணே என்னைக் காக்க வைப்பதற்கு உனக்கு என்ன தைரியம்! என் சக்தியை நீ அறியவில்லை என்று நினைத்தார் இப்படி அவர் நினைத்ததுமே

உள்ளிருந்து மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல என்று குரல் வந்தது, துறவி திகைத்துவிட்டார் எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவளது கால்களில் வீழ்ந்து தாயே நீங்கள் எப்படி அறிந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அவள் மகனே எனக்கு உன்னைப்போல் யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோயுற்றிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டியதாயிற்று. கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனப்பூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன். இப்போது திருமணம் முடிந்துவிட்டது. எனவே கணவருக்கு என் கடமையைச் செய்து வருகிறேன். நான் செய்யும் யோகம் எல்லாம் இதுதான். என் கடமைகளைச் செய்துவந்ததாலே என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. காட்டில் நடந்ததையும் தெரிந்து கொண்டேன். இதற்கு மேலும் உயர்ந்த ஏதாவதை அறிந்துகொள்ள விரும்பினால் இன்ன நகரத்திலுள்ள சந்தைக்குச் செல். அங்கே ஒரு வியாதனை நீ சந்திப்பாய் அவன் பயனுள்ள பலவற்றை உனக்குப் போதிப்பான் என்றாள்.

முதலில் அந்தத் துறவி நகரத்தில் ஒரு வியாதனிடம் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்றும் விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். சந்தையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான வியாதன் ஒருவன் பெரிய கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே விலைபேசுவதும் விற்பதுமாக இருந்தான். கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறேன். இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே என்று அதிர்ந்தார் துறவி. இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது அமர்ந்திருங்கள் என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தார் துறவி.

நெடுநேரம் கழிந்தது. வேலை முடிந்தது. வியாதன் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு துறவியிடம் வந்து வாருங்கள் வீட்டிற்குப் போகலாம் என்றான் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்காக இருக்கை ஒன்றை அளித்து இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான்.பிறகு துறவியிடம் வந்து ஐயா, என்னிடம் வந்துள்ளீர்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்கு ஒரு பெரிய விளக்கமே தந்தான். அந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் உள்ளது. வேதாந்தத்தின் மிகவுயர்ந்த தத்துவ விளக்கங்களுள் ஒன்று இந்த கீதை. வியாதன் தன் விளக்கத்தை முடித்தபோது துறவி திகைத்து விட்டார் பின்னர் வியாதனைப் பார்த்து. நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? உங்கள் ஞானத்திற்கு இந்தத் தொழில் இழிந்ததும் கேவலமானதும் ஆயிற்றே என்று கேட்டார். இதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி மகனே கடமைகளுள் எதுவும் இழிந்ததோ கேவலமானதோ இல்லை. என்னுடைய பிறப்பு கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. என்னுடைய இளம் வயதில் பரம்பரைத் தொழிலாக இதனை நான் கற்றுக் கொண்டேன். எனக்குப் பற்றேதும் இல்லை. ஓர் இல்லறத்தானாக என் கடமைகளைச் செய்ய முயற்சிக்கிறேன். என் பெற்றோரை மகிழ்விப்பதற்கான சேவைகள் அனைத்தையும் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது. நான் துறவியாகவில்லை. வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என்னிடம் நீங்கள் பார்ப்பவை கேட்டவை எல்லாம், எனது நிலைக்கு உரிய கடமைகளைப் பற்றின்றிச் செய்ததால் கிடைத்ததாகும் என்றான்.

இந்தியாவில் ஒரு மகான் இருக்கிறார். அவர் மிகப் பெரிய யோகி. கண்ட மகான்களுள் விந்தையானவர் விசித்திரமானவர். அவர் யாருக்கும் எதுவும் உபதேசிப்பதில்லை. அவரிடம் எதைக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். குருநிலையை வகிப்பது தன் தகுதிக்கு மீறிய விஷயம் என்று அவர் எண்ணினார். அவரால் அது முடியாது. ஆனால் ஒரு கேள்வி கேட்டபின் சில நாட்கள் காத்திருந்தால், நாம் அவரோடு சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது நமது கேள்வி பற்றிய விஷயத்தை அவரே எழுப்பி, ஆச்சரியப்படத் தக்க வகையில் அதற்கான விளக்கம் தருவார். அவர் ஒரு முறை கர்மத்தின் ரகசியத்தை என்னிடம் இவ்வாறு கூறினார். முடிவையும் வழியையும் ஒன்றாக்கு நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். அந்த வேலையை ஒரு வழிபாடாக, மிகவுயர்ந்த வழிபாடாக, அந்த நேரத்திற்கு உங்கள் வாழ்க்கை முழுவதையும் அதில் செலுத்திச் செய்யுங்கள். மேற்சொன்ன கதையில் வந்த பெண்ணும் வியாதனும் ஆர்வத்துடனும் இதயபூர்வமாகவும் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். அதன் பலனாக அவர்கள் ஞானம் பெற்றார்கள். வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள கடமைகளைச் செய்தாலும் பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும் என்பதையே இது காட்டுகிறது.

பலன் கருதி வேலை செய்பவன்தான் தனக்கென்று வாய்த்த கடமையைப்பற்றிக் குறைப்பட்டுக் கொள்வான். ஆனால் பலனில் பற்றில்லாதவர்களுக்கு எல்லா வேலைகளுமே ஒரேபோல் நல்லவைதாம். சுயநலத்தையும் புலனின்ப நாட்டத்தையும் அழித்து ஆன்ம சுதந்திரம் பெறுவதற்குத் தகுந்த கருவிகள்தாம்.

நாம் எல்லோருமே நம்மைப்பற்றி மிகப் பெரிதாக எண்ணிக் கொள்கிறோம். நமது விருப்பத்தைவிட, தகுதிக்கு ஏற்பவே நமக்குக் கடமைகள் வந்து சேர்கின்றன. போட்டி பொறாமையை எழுப்புகிறது. இரக்கத்தை அழித்து விடுகிறது. முணுமுணுப்பவர்களுக்கு எல்லா கடமைகளுக்குத் திருப்தி தராது. அவர்களின் வாழ்க்கையே தோல்விதான். நமக்கென வாய்க்கின்ற கடமைகளை எப்போதும் தாயாரான முழுமனத்துடன் செய்து கொண்டே போவோம். அப்போது நிச்சயம் ஒளியைக் காண்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s