8. பொருளாதார முன்னேற்றத்திற்கு திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும்?
நாடு குடிசைகளில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஒரு நாட்டின் விதியை நிர்ணயிப்பதில்லை, பாமர மக்களின் நிலைமையைப் பொறுத்தது அது. உங்களால் அவர்களை உயர்த்த முடியுமா?
இந்தியர்களின் உழைப்பும் விளைச்சலும் அவர் களிடமிருந்து பறிக்கப்படாமல் இருந்தால் இப்போது இந்தியாவில் உள்ளவர்களைப்போல் ஐந்து மடங்கு மக்களைச் சுகவசதியோடு பராமரிக்க முடியும்.
உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது.
இப்போதைய தேவைகளைப்பற்றி ஜப்பானியர்கள் இப்போது பூரணமாக விழிப்புப் பெற்றுள்ளார்கள் என்று தோன்றுகிறது. அவர்களிடம் இப்போது பூரணக் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன்கூடிய படை உள்ளது. அந்தப் படை, அவர்களின் அதிகாரிகளுள் ஒருவர் கண்டுபிடித்த துப்பாக்கி வசதியுடன் கூடியது. அந்தத் துப்பாக்கி வேறு எந்த வகைத் துப்பாக்கிக்கும் ஈடுகொடுக்க கூடியது. கப்பற்படையையும் அவர்கள் தொடர்ந்து பெருக்கி வருகிறார்கள். ஜப்பானிய எஞ்ஜினீயர் ஒருவரால் நிர்மாணிக்கப்பட்ட சுமார் ஒரு மைல் நீளமுள்ள ஒரு சுரங்கத்தையும் நான் கண்டேன்.
தீக்குச்சித் தொழிற்சாலைகளின் காட்சியே காட்சி! தேவையான அனைத்தையும் தங்கள் நாட்டிலேயே செய்துகொள்வதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஜப்பானிய நீராவிக் கப்பல் போக்குவரத்து உள்ளது; விரைவில் பம்பாய்க்கும் யோகோஹாமாவுக்கும் இடையிலும் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த அவர்கள் எண்ணியுள்ளனர்.