7. சமுதாயத்திலுள்ள சிறந்த மனிதர்களால் நாம் வழிநடத்திச் செல்லப்படுவதா அல்லது தலைவர்களை ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுப்பதா?
யுதிஷ்டிரர், ராமர், தர்ம-அசோகர், அக்பர் இவர்களின் ஆட்சியில் மக்கள் மகிழ்ந்தது சரி. ஆனால் எப்போதும் நமக்கு இன்னொருவன் உணவு ஊட்டி வந்தால் மெள்ளமெள்ள நமது கை, உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும் சக்தியை இழந்துவிடும். இன்னொருவரால் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படுபவனிடம் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கான சக்தி ஒருநாளும் முழுமையாக வெளிப்படாது. எப்போதும் குழந்தையாகவே கருதி வளர்க்கப்பட்டு வந்தால், வல்லமைமிக்க இளைஞன் கூட குழந்தையாகத்தான் மாறுவான். தேவர்களுக்கு நிகரான மன்னர்களால் எப்போதும் காக்கப்பட்டு வருகின்ற குடிமக்கள் குடியாட்சிபற்றி அறிந்துகொள்வ தில்லை. எல்லாவற்றிற்கும் அரசனையே எதிர் பார்த்து, படிப்படியாக பலமிழந்து, சக்தியற்றுப் போய் விடுகின்றனர். இப்படிப் பிறரால் வளர்க்கப்படுவதும் காக்கப்படுவதும் நீடிக்குமானால் அது அந்தச் சமுதாயத்தின் அழிவிற்குக் காரணமாகிறது.
பொறுப்பை ஏற்றுக்கொள்ள எல்லோரும் ஆயத்தமாகட்டும் என்பதற்காகத்தான் வாக்கெடுப்பு, வரவு செலவு, கலந்து பேசி முடிவுக்கு வருதல் போன்றவற்றை நான் திரும்பத்திரும்பக் கூறுகிறேன். ஒருவன் இறந்துவிட்டால் அடுத்த ஒருவன், ஒருவன் என்ன, தேவையானால் பத்து பேர்கூட அவனது வேலையைச் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஆர்வம் இல்லாமல் யாரும் முழுமனத்துடன் வேலை செய்ய மாட்டான். பணியிலும் சொத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு, நிர்வாகத்தில் வாக்கு உண்டு என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளுமாறு செய்ய வேண்டும்.