4. சமுதாயப் பொதுவுடமைக் கோட்பாட்டின் பலவீனங்கள்?
ஆனால் இவை உயிரற்ற எந்திரங்கள் போன்ற மக்களால் செய்யப்படுகின்றன. இங்கே மனத்தின் செயலில்லை, இதயத்தின் மலர்ச்சி இல்லை, வாழ்வின் துடிப்பில்லை, நம்பிக்கைப் பெருக்கு இல்லை, சங்கற்பத்தின் வலிமையானதூண்டுதல் இல்லை, ஆழ்ந்த இன்ப அனுபவம் இல்லை, ஆழ்ந்த துன்பத்தின் ஸ்பரிசம் இல்லை, புதியன கண்டுபிடிக்கின்ற மதிநுட்ப எழுச்சி இல்லை, புதுமையில் நாட்டம் இல்லை, புதியவற்றைப் பாராட்டுகின்ற பண்பு இல்லை. இந்த மனத்திலிருந்து மேகங்கள் ஒருபோதும் அகல்வதில்லை, காலைக் கதிரவனின் பிரகாசமான உருவம் இந்த இதயத்திற்கு ஒருபோதும் இன்பம் ஊட்டுவதில்லை. இதைவிட நல்ல நிலை உண்டு என்பதுகூட இந்த மனத்தில் படுவதில்லை. மனத்தில் தோன்றினாலும் நம்பிக்கை வராது, நம்பிக்கை வந்தாலும், முயற்சி இல்லை ; முயற்சி இருந்தாலும் ஊக்கம் இல்லாததால் அது அழிந்துவிடுகிறது.
நியதிகளின்படி வாழ்வதுதான் பெருமை என்றால், பாரம்பரியமாக வந்த நியதிகளையும் வழக்கங்களையும் தவறாமல் பின்பற்றுவதுதான் தர்மம் என்றால் மரத்தைவிட தர்மவான் யார்? ரயிலைவிட பெரும் பக்தரும் தூய ஞானியும் யார்? ஒரு கல் இயற்கை நியதி எதையாவது மீறுவதை யாராவது கண்டுள்ளார்களா? பசுவோ எருமையோ குற்றம் செய்ததை எப்போதாவது யாராவது பார்த்ததுண்டா?
பெரிய கப்பல், மாபெரும் ரயில் எந்திரம்இவையெல்லாம் ஜடப்பொருட்கள். அவை இயங்கும், திரும்பும், ஓடும்; ஆனாலும் அவை ஜடம், அறி வற்றவை. தன்னுயிரைக் காத்துக்கொள்வதற்காக தண்ட வாளத்திலிருந்து விலகி ஓடுகின்ற சிறு புழு உள்ளதே, அது ஏன் அறிவுள்ளது? எந்திரத்தில் சங்கற்பத்தின் வெளிப்பாடு இல்லை. இயற்கை நியதியை மீற அது ஒருபோதும் முயல்வதில்லை. புழு இயற்கை நியதியை எதிர்க்க விழைகிறது; வெற்றி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இயற்கைக்கு எதிராக எழுகிறது. எனவே அது அறிவுள்ளது. இந்த சங்கற்ப சக்தி வெளிப்படுகின்ற அளவிற்கு இன்பம் பெருகும்.