1. நாம் புரிந்துகொண்டுள்ள குடியரசிற்கும் சமுதாயப் பொதுவுடமைக் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
பல தனி உயிர்களின் சேர்க்கை சமஷ்டி , ஒவ்வொரு தனி உயிரும் வியஷ்டி. நீங்களும், நானும் ஒவ்வொருவரும் வியஷ்டி; சமுதாயம் சமஷ்டி.
வியஷ்டிக்குச் சுதந்திரம் உண்டா, இல்லையா? உண்டானால் எந்த அளவிற்கு உண்டு? வியஷ்டி தன் விருப்பத்தையும் சுகத்தையும் சமஷ்டிக்காக முற்றிலும் தியாகம் செய்ய வேண்டுமா?- இவை எல்லா சமுதாயங்களிலும் நித்திய பிரச்சினைகளாக உள்ளவை. எல்லா சமுதாயங்களும் இந்தப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண முயல்கின்றன. இவை பேரலைகள்போல், நவீன மேலைநாட்டுச் சமுதாயத்தை எதிர்க்கின்றன. சமுதாய மேன்மைக்காகத் தனிநபர் சுதந்திரத்தைத் தியாகம் செய்வதற்கு ஆணையிடுகின்ற கொள்கை பொதுவுடைமை, தனிநபருக்காக வாதிடுவது தனியுடைமை.