15. எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டுமா?
நம்மிடையே பல ஜாதிகள் இருந்தாலும், ஒரு ஜாதியின் உட்பிரிவுக்குள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய தற்காலத் திருமண முறை இருந்தாலும் (இது எங்கும் பரவியிருக்கும் முறையல்ல) நாம் உண்மையில் ஒரு கலப்பு ஜாதியினரே.
பிறப்பிலேயே சிறப்பு வாய்ந்தவர்கள் என்று எந்த ஜாதியினர் பெருமையடித்துக் கொண்டாலும் அது வெறும் கற்பனை. மொழி வேறுபாடுகளின் காரணமாக, கர்வம் தென்னிந்தியாவைப்போல் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.
புத்தரிலிருந்து ராம்மோகன்ராய் வரையிலும் ஒவ் வொருவரும், ஜாதியை ஒரு மத அமைப்பு என்று கொள்கின்ற தவறுக்கு உள்ளாயினர்; அந்தக் தவறின் காரணமாக மதம் ஜாதி இரண்டையுமே தகர்க்க முற்பட்டனர், தோல்வியைத் தழுவினர். ஆனால் புரோகி தர்கள் என்னதான் உளறினாலும் ஜாதி என்பது இறுகிப்போன ஒரு சமுதாய அமைப்பே. அது தனது பணியைச் செய்து முடித்த பிறகு இப்போது இந்தியாவின் சுற்றுச் சூழலெங்கும் தனது துர்நாற்றத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு, அவர்கள் இழந்த சமுதாய தனித்துவத்தை மீண்டும் அளிப்பதன்மூலம் மட்டுமே அந்தத் துர்நாற்றத்தை அகற்ற முடியும். இங்கு பிறந்த ஒவ்வொருவனும் தான் மனிதன் என்பதை அறிந்துள்ளான். இந்தியாவில் பிறக்கின்ற ஒவ்வொருவனும் தான் சமுதாயத்தின் அடிமை என்பதையே அறிகிறான். வளர்ச்சிக்கு ஒரே அறிகுறி சுதந்திரம். சுதந்திரத்தை விலக்குங்கள், விளைவு சீரழிவாகவே இருக்கும். தற்காலத்தில் போட்டிகள் புகுந்ததும் ஜாதி எவ்வளவு விரைவாக மறைந்தொழிகிறது, பாருங்கள். அதை ஒழிக்க எந்த மதமும் தேவையில்லை. வியாபாரியான, செருப்புத் தைக்கின்ற, மது தயாரிக்கின்ற பிராமணர்களை வட இந்தியாவில் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. ஏன்? போட்டிதான். இப்போதைய அரசாங்கத்தின்கீழ், தான் வாழ்வதற்காக யாரும் எதையும் செய்யலாம். விளைவு? தலைதெறிக்கும் போட்டாபோட்டி. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் தாழ்ந்த படியில் சோம்பிக் கிடப்பதற்குப் பதிலாகத் தாங்கள் பிறந்ததற்கான உன்னத நிலையைத் தேடுகின்றனர்; தேடிக் காணவும் செய்கின்றனர்.
இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம், ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும்தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளைவிடப் பலவீனர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது, கல்வி கற்பித்தல் என்பது சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு பிராமணனுக்குத் தேவையில்லை . பிராமணனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவையானால் சண்டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர்கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும். ஒரு பொருள் மிகுதியாக உள்ள இடத்திற்கு அந்தப் பொருளையே கொண்டுசெல்வது பைத்தியக்காரத்தனம் அல்லவா? ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பாமரர்கள் இவர்கள் உங்கள் தெய்வங்களாக இருக்கட்டும்.