14. ஜாதி முறை நமக்கு முன்பு உதவியதா? இப்போது அது தேவையா?
‘ஜாதி என்பது என்ன என்பதைக் கோடியில் ஒருவர்கூடப் புரிந்துகொள்ளவில்லை. ஜாதி இல்லாத நாடே இந்த உலகில் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, ஜாதியிலிருந்துதான் ஜாதியில்லாத ஒரு நிலையை அடைகிறோம். அந்தத் தத்துவ அடிப் படைமீதுதான் ஜாதியே அமைந்துள்ளது. மனித இனத் தின் லட்சியம் பிராமணன். எனவே எல்லோரையும் பிராமணன் ஆக்குவதே, இந்தியாவைப் பொறுத்தவரை செயல்திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால், கீழ் ஜாதியினரை உயர்த்துவதற்கான முயற்சிகள் எப்போதும் நடைபெற்று வந்துள்ளதைக் காண்பீர்கள். அப்படிப் பல பிரிவினர் உயர்த்தப் பட்டிருக்கிறார்கள். எல்லோரும் பிராமணர் ஆகின்ற வரையில் இது நடந்து கொண்டிருக்கும். இதுதான் என் திட்டம். யாரையும் கீழே கொண்டுவராமல் இதைச் செய்ய வேண்டும். இந்தப் பணியைப் பெரும்பாலும் செய்ய வேண்டியது பிராமணர்களே. தனிச்சலுகை பெற்றுத் திளைத்த எதுவும் தனக்கே குழித்தோண்டிக் கொள்ள வேண்டியது கடமை. இது எவ்வளவு விரைவில் நடக்குமோ, அந்த அளவிற்கு எல்லோருக்கும் நன்மை. காலம் தாழ்த்தக் கூடாது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைவிட நமது ஜாதிமுறை சிறந்தது, அது முற்றிலும் நல்லது என்று நான் சொல்லவில்லை. ஜாதி இல்லாதிருந்தால் உங்கள் நிலை எப்படி இருந்திருக்கும்? ஜாதிப்பிரிவு இல்லை என்றால் உங்கள் படிப்பும் மற்றவையும் எப்படி இருந்திருக்க முடியும்? ஜாதி இல்லாதிருந்தால், ஐரோப்பியர்கள் நம்மிடமிருந்து படிக்க எதுவுமே இருந் திருக்காது, முகமதியர்கள் எல்லாவற்றையும் அழித் திருப்பார்கள்.
‘இந்திய சமுதாயம் இயங்காமல் நிற்கிறதா? அது எப்போதும் செயல்பட்டுக் கொண்டேதான் இருக் கிறது. அன்னியர் படையெடுப்பு போன்ற காலங்களில் அது மெதுவாக இயங்குகிறது, பிற காலங்களில் விரைவாக இயங்கும். இதைத்தான் என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன். அவர்களை நான் குறை கூறவில்லை. நான் அவர்களது பண்டைக் காலத்தை ஆழ்ந்து நோக்குகிறேன். அந்தச் சூழ்நிலையில் எந்த நாடும் இதைவிட மேலான செயலைச் செய்திருக்க முடியாது. அவர்கள் நன்றாகவே செயலாற்றியுள்ளனர், அவர்களிடம் நான் கூறுகிறேன். இன்னும் சிறப்பாகச் செயலாற்றும்படி மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.’