6. தேசத்தொண்டர்கள்—அவர்களுக்கு வேண்டுவதென்ன?
இதயத்தினின்று எழும் உணர்ச்சி வேண்டும், வெறும் அறிவினால் என்ன பயன் விளையும்? அறிவு சில அடி தூரம் சென்று நின்று விடும். இதயத்தின் மூலமாகவே இறைவன் அருள் சுரக்கின்றான் ஆதலின், சீர்திருத்தக்காரர்களே! தேசபக்தர்களே! உங்கள் இதயத்தில் உணர்ச்சி கொள்ளுங்கள்.
நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள், முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடான கோடி மக்கள் இன்று மிரு கங்களினின்றும் அதிக வேற்றுமை யில்லாமல் வாழ் கிறார்களென்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக் கான மக்கள் இன்றைய தினம் பட்டினி கிடக் கிறார்களென்பதையும், லட்சக்கணக்கானவர்கள் பல் லாண்டுகளாகப் பட்டினி கிடந்து வருகிறார்களென் பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் கருமேகம் இந் நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமை தியைக் குலைத்து உங்களுக்குத் தூக்கமில்லாமல், செய்து விடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து நரம்புக் குழாய்களில் ஓடி இதய அடிப்புகளுடன் சோர்ந்து அடிக்கின்றதா? ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களைப் பைத்தியமே யாக்கிவிட்டதா? இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனதை முற்றும் கவர்ந்து விட்டதா? இதனால் உங்கள் பெயர், புகழ், மனைவி, மக்கள், உடைமை இவை அனைத்தையும், உங்கள் உடலையுங் கூட மறந்து விட்டீர்களா? தேச பக்தனாவதற்கு முதற்படி இதுவேயாகும்.
அன்பு, வெற்றியளித்தல் நிச்சயம், உங்கள் சகோதரரிடத்து உங்களுக்கு அன்பு உண்டா? கடவுளைத்தேட நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? ஏழை கள், துன்பப்படுபவர்கள், பலவீனர்களெல்லோரும் கடவுளர் அல்லரா? அவர்களை ஏன் நீங்கள் முதலில் ஆராதிக்கக் கூடாது? கங்கைக் கரையில் கிணறு தோண்டுவதேன்? அன்பின் அளவற்ற சக்தியில் நம் பிக்கைவையுங்கள், பெயர், புகழ் முதலியவை இங்கு யாருக்கு வேண்டும்? பத்திரிகைகள் என்ன சொல்கின் றன வென்று நான் கவனிப்பதேயில்லை. உங்களிடம் அன்பு இருக்கிறதா? இருந்தால் உங்களால் ஆகா தது ஒன்றுமில்லை. நீங்கள் சுயநலம் அறவே துறந் தவர்களா? அங்ஙனமாயின் உங்களை எதிர்த்து நிற் கக் கூடிய சக்தியாதொன்றுமில்லை. எங்கும் ஒழுக் கமே பிரதானமானது. எத்தகைய பெரும் அபாயத் திலும் இறைவன் உங்களைக் காத்தருள் புரிவா னென்று நம்புங்கள். உங்கள் தாய் நாட்டுக்கு வீரர்கள் தேவை; வீரர்களாயிருங்கள்.
குறுகலான பொந்துகளிலிருந்து வெளிவாருங் கள். உங்களைச் சுற்றிலும் நன்கு நோக்குங்கள். தேசங் கள் எப்படி முன்னேறுகின்றனவென்று பாருங்கள். உங்களுக்கு மனிதர்களிடம் அன்புண்டா? உங்கள் நாட்டினிடம் அன்புண்டா ? அப்படியானால் வருக; இன்னும் பெரிய, சிறந்த இலட்சியங்களுக்காகப் போராடுவோம். பின்னால் திரும்பிப் பார்க்க வேண் டாம்; உங்களுக்கு உயிரினும் அருமையானவர்கள் புலம்பி அழும் சத்தம் கேட்கினும் திரும்பிப் பார்க்க வேண்டாம். முன்னோக்கிச் செல்லுங்கள்.
என் மகனே! அன்புக்கு எப்போதும் தோல்வி கிடையாது. இன்றோ, நாளையோ பல யுகங்களுக்குப் பிறகோ சத்தியம் ஜயமடைதல் நிச்சயம். அன்பே வெற்றி கொள்ளும். உங்கள் சகோதரர்களிடம் உங்களுக்கு அன்புண்டா?
நம்பிக்கை, அனுதாபம்! தீவிர நம்பிக்கை, அதி தீவிர அனுதாபம்! இவை இருப்பின் உயிரும், மரண மும், பசியும், குளிரும் ஒன்றுமில்லையாகும்.
எப்போதும் தன்னம்பிக்கையை வளருங்கள். தீரச் சிறுவர்களே! நீங்களனை வரும் அரும்பெருங் காரியங்களைச் செய்யப் பிறந்தவர்களென்று நம்புங்கள்.
” உலகில் மற்ற எல்லோரும் தத்தமக்குரிய வேலையைச் செய்துவிட்டனர். உலகைப் பரிபூரண மாக்கப் பாக்கியிருக்கும் வேலை நான் செய்ய வேண் டியதே” என்று நம்மில் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். அத்தகைய பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
என் மகனே! உறுதியாக நில். பிறர் உதவியை எதிர்பாராதே. வேறு மனிதர்களின் உதவியைக் காட்டிலும் ஆண்டவனுடைய உதவி எவ்வளவோ பெரிய தல்லவா? பரிசுத்தனாயிரு. பகவானை நம்பு. அவரை நம்பியுள்ள வரை நீ நேர்வழியில் செல்கிறாய். உன்னை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது.
பரஞ்சோதியின் ஒளியை வேண்டிப் பிரார்த்திப்போமாக. காரிருளிலே ஓர் ஒளிக்கிரஹம் தோன் றும். பகவான் நமது கையைப் பிடித்து வழிகாட்டி அழைத்துச் செல்வார்.
ஆண்டவன் மகிமையே மகிமை. அவரே நமது படைத் தலைவர். எனவே, முன்னேறுங்கள், யார் விழுகிறார்கள் என்று திரும்பிப் பார்க்க வேண்டாம். மேலே நடந்து செல்லுங்கள். இவ்வாறே நாம் சென்று கொண்டிருப்போம். ஒருவன் விழுந்தால் மற்றொருவன் அவ்வேலையை ஏற்றுக்கொள்வான்.
சகோதரர்களே! நாம் ஏழைகள்; திக்கற்ற வர்கள். ஆனால் இவ்வுலகில் பரமாத்மாவின் கருவி களாக அமைந்தவர்கள் எல்லோரும் நம்போன்ற ஏழைகளாகவே யிருந்துள்ளார்கள்.
தீரர்களே! வேலை செய்து கொண்டே போங் கள்; விட்டு விடாதீர்கள். ‘முடியாது’ என்ற பேச்சு வேண்டாம். வேலை செய்யுங்கள்; இறைவன் அவ் வேலைக்குத் துணையாயிருப்பான். உங்களிடம் மகா சக்தி கோயில் கொண்டிருப்பதை உணருங்கள்.
குழந்தாய்! நான் வேண்டுவதென்ன தெரியுமா? இரும்பினை யொத்த தசை நார்கள்; எஃகினை யொத்த நரம்புங்கள்; இவற்றினுள்ளே இடியேறு போன்ற வலிவுள்ள மனம்-இவையே எனக்கு வேண்டும். பலம், ஆண்மை , க்ஷத்திரிய வீரியத்துடன் கூடிய பிரம்ம தேஜஸ்-இவை வேண்டும்.
பயம் என்பதையே யறியாத இரும்பினாலான உள்ளமும் இதயமும் தேவை.
உண்மையில் நீங்கள் என் குழந்தைகளானால் யாதொன்றுக்கும் அஞ்சமாட்டீர்கள்; எதைக் கண் டும் தயங்கி நிற்க மாட்டீர்கள். சிங்க ஏறுகளை யொத்திருப்பீர்கள். இந்தியாவை மட்டுமன்று, உலக முழுவதையும் நாம் எழுப்பியாக வேண்டும்.
துறவே முக்கியம். துறவு இன்றி எவனும் பிற ருடைய தொண்டில் தன் இதய முழுவதையும் ஈடு படுத்த முடியாது. சந்நியாசி எல்லோரையும் சமநோக்குடன் பார்க்கிறான். அனை வருக்கும் தொண்டு செய்வதற்கே தன்னைச் சமர்ப்பிக்கிறான்.
சத்தியம், அன்பு, உண்மை உள்ளம் இவற்றை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது. நீங்கள் உண்மை யாளர்களா? உயிரே போகுங் காலத்திலும் சுய நலத்தை மறந்தவர்களா? உங்களிடம் அன்பு உண்டா? அங்ஙனமெனில் அஞ்ச வேண்டாம். யமனுக்கும் பயப்பட வேண்டாம்.
மனிதர்கள், மனிதர்களே வேண்டும். மற்ற எல்லாம் தாமே வந்து சேரும். பலம், வீரியம், நம் பிக்கை, மாசற்ற உண்மை -இவையுடைய இளைஞர் கள் தேவை. இத்தகையர் நூறு பேர் இருந்தால் உலகத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணி விடலாம்.
வேஷதாரியாகாமல், கோழையாயிராமல் ஒவ் வொருவரையும் மகிழ்விக்க முயல்க. தூய்மையுட னும் உறுதியுடனும் உன் கொள்கைகளைக் கடைப் பிடித்து ந… தற்போது உன் வழியில் எவ்வளவு தடைகள் இருப்பினும், நாளடைவில் உலகம் உனக்குச் செவி கொடுத்தே தீரவேண்டும்.
கீழ்ப்படியும் நற்குணத்தைப் பயிலு. ஆனால் உன்னுடைய சொந்த நம்பிக்கையை மட்டும் கை விடாதே. தலைவர்களுக்குக் கீழ்ப்படிதல் இல்லாத வரையில் சக்திகளை ஒன்று திரட்டுதல் சாத்தியமில்லை. தனி மனிதர்களின் சக்திகளை ஒன்று சேர்க்காத வரையில் எந்தப் பெரிய காரியமும் செய்ய இயலாது.
நம்பிக்கையுடனும் பலத்துடனும் உறுதியாக நில். உண்மை , கண்யம், தூய்மை இவற்றைக் கைக் கொள்.
மக்களுக்குத் தொண்டு செய்யும் பாதையில் நீ முன்னேறி வருங்கால் அதனுடன் சமமாக ஆத்ம சாதன மார்க்கத்திலும் முன்னேறி வருவாய்.
வேலை செய்யத் தொடங்கு; மகத்தான சக்தி தானே வருவதைக் காண்பாய். ‘ என்னால் வகிக்க இயலாது’ என்று நீ நினைக்குமளவுக்கு ஏராளமான சக்தி உன்னை வந்தடையும். பிறருக்காகச் செய்யும் அற்பமான ஊழியமும் உள்ளிருக்கும் சக்தியை எழுப்ப வல்லது. பர நலத்தைப் பற்றிச் சிறிதளவு நினைத்து வருதலும் இதயத்துக்கு நாளடைவில் பெரு வலிமை தருகின்றது. உங்கள் எல்லோரையும் நான் உயிருக்குயிராக நேசிக்கிறேன். ஆயினும் நீங்களனை வரும் பிறருடைய தொண்டில் உயிர்விட வேண்டு மென்பதே என் மனோர தமாகும். அவ்வாறு நீங்கள் உயிர் நீத்தால் அதைக் கண்டு நான் மகிழ்ச்சியே யடைவேன்.
ஒவ்வொருவரிடத்தும் பொறுமையைக் கைக் கொள்…. ஆட்சி செலுத்த விரும்பாதே. எவன் சிறந்த ஊழியம் செய்ய வல்லவனோ அவனே அரசரில் சிறந்தவனாவான்.
விவாதங்களில் நீ ஏன் தலையிட்டுக் கொள்ள வேண்டும்? பலர் பல அபிப்பிராயங்கள் கூறலாம். அவற்றைப் பொறுமையுடன் கேட்டுக் கொள். பொறுமை, தூய்மை, விடாமுயற்சி இவையே கடைசியில் வெற்றி பெறும்.
மரணம் வரையில் நான் இடைவிடாது வேலை செய்வேன். மரணத்திற்குப் பின்னரும் உலக நன்மைக்காக உழைப்பேன். சத்தியமும் நன்மையும் அசத்தியத்தையும் தீமையையும் விட எவ்வளவோ மடங்கு சக்தி வாய்ந்தவை. அவை உன்னிடம் இருந் தால், முன்னேற்றம் நிச்சயம்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள், ஆனால் அதற்கு அத்யந்த உண்மை உள்ளமும் பரிபூரண சுய நலத் தியாகமும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தூய்மையும் வேண்டும்.
மகனே! பொறுமை கொள். நீ என்றும் எதிர் பார்த்ததை விட அதிகமாய் உன் முயற்சி செழித் தோங்கும். ஒவ்வொரு காரியமும் ஜெயம் பெறு வதற்கு முன் நூற்றுக் கணக்கான கஷ்டங்களைக் கடந்தே ஆகவேண்டும். முயற்சியுடையவர்கள் இன் றில்லா விட்டால் நாளை நிச்சயமாக ஒளி காண் பார்கள்.
அளவற்ற பொறுடை, அளவில்லாத தூய்மை, முடிவில்லா முயற்சி இவையே நல்ல காரியங்களில் வெற்றிபெறும் இரகசியங்களாம்.
சோம்பல் ஒழியுங்கள்; இகபர சுகா நுபவங்க வைத் தள்ளுங்கள். ஜனங்களை இறைவன் பாதத்தில் கொண்டு சேர்ப்பதற்காகத் தீயினில் குதியுங்கள்.
உங்கள் சகோதரர்களுக்குத் தலைமை வகிக்க முயலற்க! அவர்களுக்கு ஊழியமே செய்க. தலைமை வகிக்கும் பைத்தியமானது வாழ்க்கையென்னும் கட லில் எத்தனையோ பெரிய கப்பல்களை யெல்லாம் மூழ்கடித்து விட்டது. மரணம் நேரினும் சுயநலம் கருதவேண்டாம். தொண்டினை மறக்க வேண்டாம்.
பிறருக்கு வழிகாட்டவாவது, பிறரை அடக்கி யாளவாவது எப்போதும் முயல வேண்டாம். அனை வருக்கும் ஊழியராயிருங்கள். எல்லாவற்றினும் முக்கியமானது இதுவாகும்.
அதிகார ஆசை, பொறாமை…இவ்விரண்டினி டமும் மிக ஜாக்கிரதையாயிருத்தல் வேண்டும். ‘‘தலைவன் நான்” என்று சொல்லிக் கொண்டு முன் வந்தால் யாரும் உங்களுக்கு உதவி செய்யமாட் டார்கள். வெற்றிபெற விரும்பினால் முதலில் “நான்” என்னும் உணர்ச்சியைக் கொன்றுவிடுங்கள்.
முதலிலேயே பெரிய திட்டங்களைப் போட்டுக் கொண்டு கிளம்ப வேண்டாம். நிதானமாக ஆரம்பி யுங்கள்; மேன் மேலும் நிதானமாக முன்னேறுங் கள்.
எனது தீரச் சிறுவர்களே! உத்தமப் புதல்வர்களே! செயல், செயல் புரியத் தொடங்குங்கள். உங் கள் தோள்களைக் கொடுத்து (தேச முன்னேற்ற மென்னும்) தேரின் சக்கரத்தைக் கிளப்புங்கள், பெயர், புகழ் முதலிய மடமைகளுக்காக நின்று திரும்பிப் பார்க்கவேண்டாம்.
உங்கள் இதயங்களையும், மனோர தங்களையும், இவ்வுலகினைப் போல் விசாலமாக்கிக் கொள்ளுங் கள். . மத வெறியனின் உறுதி, உலகாயதனின் விசா லப்பார்வை- இவை இரண்டும் நமக்கு வேண்டும். நீராழியின் ஆழமும் எல்லையற்ற ஆகாயத்தின் விஸ் தாரமும் உடைய இதயம் வேண்டும்.
எப்போதும் ஆக்க முறையையே கடைப்பிடி. பிறரைக் குறைகூற வேண்டாம். நீ சொல்ல வேண்டியதைச் சொல். நீ போதிக்க வேண்டியதைப் போதி அவ்வளவுடன் நின்றுவிடு. பிற எல்லாம் ஆண்டவன் திருவுளம்.