11. ஆதாய நோக்கத்துடன் செயல்புரிவது மொத்த வளர்ச்சிக்கு எவ்வாறு ஊறு விளைவிக்கிறது?
சுதந்திரம் இல்லாமல் எவ்வித வளர்ச்சியும் சாத்தியமில்லை. நமது முன்னோர்கள் மதச்சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள், அற்புதமானதொரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதன் பலனாக நமது சமூகம் – ஒரு வார்த்தையில் சொல்வதானால்அதிபயங்கரமாக, காட்டுமிராண்டித்தனமானதாக இருக்கிறது. மேலை நாட்டிலோ சமூகத்திற்கு எப்போதும் சுதந்திரம் இருந்துவந்தது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள். அதற்கு மாறாக அவர்களது மதத்தையும் பாருங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம்.
நமது முன்னோர் ஆன்மீக விஷயங்களுக்கு எல்லா சுதந்திரமும் அளித்தனர், அதன் பயனாக மதம் வளர்ச்சி கண்டது. ஆனால் உடம்பை எல்லாவிதமான பந்தத்திற்கும் உள்ளாக்கி வைத்தார்கள், அதனால் சமூகம் வளராமல் போயிற்று. மேலைநாட்டில் இதற்கு நேர்மாறான நிலைமை இங்கு சமூகத்திற்குச் சகல சுதந்திரமும் உண்டு, மதத்திற்குச் சுதந்திரம் எதுவும் இல்லை. இன்று மேலைநாட்டில் மதத்திற்கும், அதேபோல் கீழை நாட்டில் சமூக அமைப்பிற்கும் உள்ள தளைகள் தளர்ந்து வீழ்ந்து வருகின்றன.