10. முன்பு வைசியர்களின் ஆதாய நோக்கச் செயல்களைப் பார்த்தோம். ஆங்கிலேய ஆட்சியின்போது இந்தியா எப்படி இருந்தது?
பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ஒரு நல்ல காரியம் நடந்தது; ஆனால் அது அவர்கள் அறியாமல் நடந்த ஒன்று: அது, அவர்கள் இந்தியாவை மீண்டும் ஒரு முறை உலக அரங்கில் கொண்டுவந்தது; வெளியுலகத் தொடர்பை இந்தியாவின்மீது திணித்தது. இந்திய மக்களின் நலனை நோக்கிற்கொண்டு அது செய்யப் பட்டிருந்தால் ஜப்பானுக்கு இத்தகைய அனுகூல சந்தர்ப்பங்கள் வாய்த்தன-அதன் விளைவுகள் இன்னும் அற்புதமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ரத்தத்தை உறிஞ்சுவதே முக்கிய நோக்கமாக இருக்கும்போது எந்த நன்மையும் செய்ய முடியாது.
நவீனமாக்கப்பட்ட, அரைப்படிப்பு பெற்ற, தேசியத் தன்மை இல்லாத சில நூறுபேரே நவீன ஆங்கில இந்தியா காட்டுகின்ற சித்திரம் எல்லாம். இதைத்தவிர வேறு எதுவுமே இல்லை.
நாட்டை வெற்றிகொள்ள ஆங்கிலேயர் போட்டி யிட்டபோது பல நூற்றாண்டுகளாக தலைவிரித்தாடிய – அராஜகம், 1857-லும் 1858-லும் ஆங்கிலேயர் செய்த படுகொலைகள், பிரிட்டிஷ் ஆட்சியின் தவிர்க்க முடியாத விளைவாகியுள்ள அவற்றைவிட பயங்கரமான பஞ்சங்கள் (சுதேசி அரசில் ஒருபோதும் பஞ்சம் வந்ததில்லை), இந்தப் பஞ்சங்கள் கொள்ளைகொண்டு போகின்ற கோடிக்கணக்கான மக்கள்- இவையெல்லாம் இருந்தும் மக்கள்தொகை சிறப்பாக அதிகரித்து வந்துள்ளது. ஆனாலும் நாடு முற்றிலும் சுதந்திரமாக இருந்தபோது, அதாவது முகமதிய ஆட்சிக்கு முன்பிருந்த அளவு மக்கள்தொகை இன்னும் ஏற்படவில்லை. இந்தியர்களின் உழைப்பும் விளைச்சலும் அவர்களிட மிருந்து பறிக்கப்படாமல் இருந்தால் இப்போது இந்தியாவில் உள்ளவர்களைப்போல் ஐந்து மடங்கு மக்களைச் சுகவசதியோடு பராமரிக்க முடியும்.
இதுதான் அங்குள்ள நிலைமை. இனிமேல் கல்வி யும் பரவுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது; பத்திரி கைச் சுதந்திரம் ஏற்கனவே பறிக்கப்பட்டு விட்டது. நீண்டகாலத்திற்கு முன்பே நாங்கள் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டுவிட்டோம். மக்களுக்குத் தரப்பட்டிருந்த சிறு சுய ஆட்சியையும் சில ஆண்டுகளாக வேகமாகப் பறித்து வருகின்றனர். அடுத்து என்ன நிகழுமோ என்று கவனித்தவண்ணம் உள்ளோம் நாங்கள்! குற்றமற்ற முறையில் விமர்சித்து சில வார்த்தைகள் எழுதியதற்காக மக்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது, விசாரணை எதுவுமில்லாமல் சிறையிலிடப் படுகின்றனர்; தன் தலை எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது.
சில ஆண்டுகளாக ஒரு பயங்கரமான ஆட்சி இந்தியாவில் இருந்து வருகிறது. ஆங்கிலப் படையினர் எங்கள் ஆண்களைக் கொன்றும், பெண்களை பலவந்தப்படுத்தியும் வருகின்றனர். இவ்வாறு செய்வதற்காக அவர்களுக்கு எங்கள் பணத்தில் வழிச்செலவும், உபகாரச் சம்பளமும் கொடுத்து வீட்டிற்கு அனுப்புகின்றனர், அவ்வளவுதான். நாங்கள் ஒரு பயங்கரமான இருள்நிலையில் உள்ளோம். ஆண்டவன் எங்கு உள்ளான்? மேரி, எப்போதும் இன்பநோக்கைக் கைக்கொள்ள உனக்கு முடியும். ஆனால் என்னால் முடியுமா? சொல், இந்தக் கடிதத்தை நீ வெறுமனே வெளியிடுவதாக வைத்துக்கொள்வோம். சமீபத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டத்தால் இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அரசு இங்கிருந்து என்னை இந்தியாவிற்கு இழுத்துச் சென்று விசாரணை இன்றியே கொன்றுவிட முடியும். இதில் உங்கள் கிறிஸ்தவ அரசுகள் எல்லாம் மகிழ்ச்சியே அடையும் என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் கிறிஸ்தவரல்லாத பாவிகள் அல்லவா? நானும் உறக்கத்தில் ஆழ்ந்து, இன்பநோக்குவாதி ஆகிவிடட்டுமா? மிகப்பெரிய இன்பநோக்குவாதி நீரோ மன்னன்! இந்த பயங்கர விஷயங்களைப்பற்றி எழுதுவது பயனுடையது என்று பத்திரிகைக்காரர்கள் நினைப்பதில்லை. ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் செய்தி அதிகாரி வேண்டுமானால் நேர் எதிரான செய்தியை அதிகாரிகளின் ஆணைக்கேற்ப இட்டுக்கட்டித் தந்துவிடுகிறார்! வேற்று மதப் பாவிகளைப் படுகொலை செய்வது கிறிஸ்தவர்களுக்கு நியாயமான பொழுதுபோக்கு! உங்கள் பாதிரிகள் கடவுளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் போகிறார்கள், ஆனால் ஆங்கிலேயரிடம் பயந்துபோய் உண்மை பேசும் தைரியம் இல்லாமல் கிடக்கிறார்கள். அப்படி அவர்கள் பேசினால் மறுநாள் ஆங்கிலேயர்கள் அவர்களை உதைத்து வெளியே தள்ளிவிடுவார்கள்.
கல்வியை வளர்ப்பதற்காக முன்பிருந்த அரசுகளால் அளிக்கப்பட்டிருந்த சொத்து, நிலங்கள் அனைத்தும் விழுங்கப்பட்டு விட்டன. இப்போதுள்ள அரசு, கல்விக்காக ரஷ்யா செலவழிப்பதைவிட குறைவாகவே பணம் செலவழிக்கிறது. அந்தக் கல்வியையும்தான் என்னவென்று சொல்லட்டும்!
சுயசிந்தனையை சிறிது காட்டினாலும் அது நெரிக்கப்பட்டு விடுகிறது.
மதப் பிரிவுகளைப் பொறுத்தவரையில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் எல்லாம் ஒன்றிற்கும் உதவாத வெறும் கலவைகள் மட்டுமே. ‘எப்படியாவது எங்களை உயிர்வாழ அனுமதியுங்கள்’ என்று ஆங்கிலேய எஜமானர்களிடம் மன்றாடுகின்ற குரல்கள் மட்டுமே அவை. நாங்கள் புதிய பாரதம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம்- அது உண்மையான உன்னதமான பாரதம். என்ன நிகழப் போகிறது என்பதைக் காண்பதற்காக காத்திருக்கிறோம். நாடு விரும்பும்போது மட்டுமே நாங்கள் புதிய கருத்துக்களை நம்புகிறோம், எங்களுக்கு உண்மையானவையாக அமைபவற்றிலேயே நம்பிக்கை கொள்கிறோம். பிரம்மசமாஜத்தைப் பொறுத்தவரை, ‘நல்லது என்று எஜமானர்கள் சொல்வதே’ அவர்களுக்கு உண்மையின் உரைகல். இந்திய ஆராய்ச்சியும் அனுபவமும் எதை நல்லதென்று கருதுகின்றனவோ அதுவே எங்கள் உரைகல். போராட்டம் தொடங்கிவிட்டது. போராட்டம் பிரம்ம சமாஜத்தினருக்கும் எங்களுக்கும் அல்ல; ஏனெனில் அவர்கள் ஏற்கனவே மறைந்துவிட்டனர். அவர்களைவிட கடினமான ஆழம் மிகுந்த, அதிபயங்கரமான ஒரு பிரிவுடனேயே எங்கள் போராட்டம் நிகழ்கிறது.