9. இந்தியாவின் சமுதாய மாற்றத்தில் மதத்தின் பங்கு
இந்தப் போராட்டம் இந்தியாவில் மீண்டும் மீண்டும் நடந்துள்ளது. ஆனால் அவையனைத்தும் மதத்தின் பெயரால் நடந்தன. ஏனெனில் மதம்தான் இந்தியாவின் வாழ்க்கை , மதம்தான் அதன் மொழி, மதம்தான் அனைத்து இயக்கங்களுக்கும் சின்னம். சார்வாகர், சமணர், பௌத்தர், சங்கரர், ராமானுஜர், கபீர், நானக், சைதன்யர் போன்றவர்களிலும், பிரம்ம சமாஜம் ஆரிய சமாஜம் போன்ற பிரிவுகளிலும் நுரையோடும் இரைச்சலோடும் எழுந்து முன்வருவது மத அலை; பின்னாலோ சமுதாயக் குறைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
ஒரே இனத்தின் பல பிரிவினர் ஒரே விதமான தெய்வங்களைத்தான் வணங்குகின்றனர். உதாரணமாக பாபிலோனியர்களின் ‘பால்’, ஹீப்ருக்களின் ‘மொலாக்’.
எல்லா ‘பால்’களையும் ‘பால்-மெரோடக்’ என்ற பெயரில் ஒன்றுசேர்ப்பதற்காக பாபிலோனியா வில் மேற்கொண்ட முயற்சிகள், எல்லா மொலாக்கு களையும் ‘மொலாக் யாவே’ அல்லது ‘யாஹு’ என்ற பெயரில் ஒன்றுசேர்க்க இஸ்ரேலில் மேற்கொண்ட முயற்சிகள்.
பாரசீகர்களால் அழிக்கப்பட்ட பாபிலோனி யர்கள்; ஹீப்ருக்கள் பாபிலோனிய புராணங்களைத் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி, ஒரே கடவுளைக் கொண்ட ஒரு மதத்தைப் (Monotheism) படைத்தார்கள்.
சர்வாதிகார மன்னர் ஆட்சியைப் போன்றது ஒரே தெய்வக் கொள்கை. இது கட்டளைகளை உடனே நிறைவேற்றுகிறது; எல்லா அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஆனால் அதற்குமேல் அதற்கு வளர்ச்சி கிடையாது. கொடுமையும் கொலையும் அதன் இழிவான அம்சங்கள். இத்தகைய கொள்கையின் ஆதிக்கத்தின்கீழ் வருகின்ற எல்லா நாடுகளும் சில ஆண்டுகள் மின்னித் திளைத்துவிட்டு விரைவிலேயே அழிந்துவிடுகின்றன.
இந்தியாவிலும் இதே பிரச்சினை எழுந்தது. அதற்குத் தீர்வு காணப்பட்டது-ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி. வெற்றிகண்ட எல்லாவற்றிற்கும் இதுதான் ஆதார சுருதி, வளைவு அமைப்பின் அடிக்கல் இதுவே. இதன் விளைவே வேதாந்தியின் அற்புதச் சகிப்புத் தன்மை .
இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதி களுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்? தாது யார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள்போல், ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? தாழ்ந்த குலத்தினரை எண்ணி ராமானுஜர் உருகவில்லையா? மிகவும் தாழ்ந்த குலத்தினரைக்கூடத் தமது நெறியில் அனுமதிப்பதற்கு அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபடவில்லையா? முகமதியர்களையும் தமது நெறியில் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா?
மாபெரும் சகாப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராச்சாரியரும் பிறரும்தான் ஜாதிகளையும் உருவாக்கியவர்கள். அவர்கள் கட்டிவிட்ட வினோதக் கதைகளை எல்லாம் உங்களுக்குச் சொல்ல முடியாது, சொன்னாலும் உங்களுள் சிலருக்குக் கோபம் வரலாம். எனது பயணங்களின்மூலமும் அனுபவங்களின் வாயி லாகவும் அவைகளைக் கண்டுபிடித்து, ஆச்சரியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். சில வேளைகளில் அவர்கள் பலுசிஸ்தானத்தின் நாடோடிக் கும்பல் களைப் பிடித்து, க்ஷத்திரியர்கள் ஆக்குவார்கள்.
ஓர் ஆன்மீக எழுச்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட நாடு முழுவதிலும் ஓர் அரசியல் ஒருமைப்பாடு ஏற்படுவதை இந்திய வரலாறு முழுவதிலும் காண்கிறோம். பிறகு இந்த ஒருமைப்பாடு அதைத் தோற்றுவித்த ஆன்மீக எழுச்சியைப் பலப்படுத்தவும் செய்தது.