7. ஆட்சியாளர்கள் பலவீனம் அடைந்தவுடன் சமுதாயத்தில் மாற்றம் உடனடியாக நிகழுமா?
பொதுமக்கள் எல்லா சக்திகளின் ஆதாரமாக இருந்தும், தங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அவர்களின் உரிமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் இப்படி இருக்கும்வரை இந்த நிலைதான் நீடிக்கும்.
குடிமக்களின் ஆற்றல் முழுவதையும் தன்னிடம் குவித்து வைத்திருப்பவனான அரசன், தன்னிடம் குவிக்கப்பட்டுள்ள இந்தச் சக்தி ‘ஸஹஸ்ர குணமுத் ஸ்ரஷ்டம்’-ஆயிரம் மடங்காகத் திருப்பித் தருவதற்காக மட்டுமே என்பதை விரைவில் மறக்கிறான். வேன மன்னனைப்போல் தானே எல்லா கடவுளும், மற்ற வர்கள் கேவலமான மனிதர்கள் மட்டுமே என்று நினைக்கிறான். நல்லதானாலும் கெட்டதானாலும் அவனது விருப்பத்திற்கு எதிராக நடப்பது பெரும் பாவம். ஆகவே காப்பாற்ற வேண்டிய அரசன் மக்களைத் துன்புறுத்துகிறான், அவர்களின் உயிரை உறிஞ்சுகிறான். சமுதாயம் பலவீனமாக இருந்தால் அரசனின் எல்லா கொடுமைகளையும் அது சகித்துக் கொள்கிறது. அதன் காரணமாக அரசனும் மக்களும் படிப்படியாக வலிமை கெட்டு பரிதாபமான நிலையை அடைகிறார்கள்; – பிறகு தங்களைவிட வலுவான இன்னொரு நாட்டிற்குப் பலியாகிறார்கள். எங்கு சமுதாயம் வலிமையாக இருக்கிறதோ, அங்கு உடனே எதிர்விளைவு உண்டாகிறது. அதன் விளைவாக வெண் கொற்றக்குடை, செங்கோல், சாமரம் எல்லாம் தூக்கி எறியப்படுகின்றன; அரியாசனமும் மற்ற அரச ஆடம் பரங்களும் கண்காட்சிச் சாலையில் வைக்கப்படும் பொருட்களாகி விடுகின்றன.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் எல்லா சமுதாயமும் வாலிபப் பருவத்தை அடைகிறது என்றும், அப்போது பொதுமக்களுக்கும் ஆள்பவர்களுக்கும் இடையே பலத்த போராட்டம் நிகழ்கிறது என்பதையும் வரலாறு காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில் விளைகின்ற வெற்றி தோல்விகளைப் பொறுத்தே சமுதாயத்தின் வளமும் நாகரீகமும் அமைகிறது.