தொண்டன் – சிறந்த தலைவன் 5

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.


பூஜை அறையே எல்லாமாக ஆகிவிடக் கூடாது :

ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. பெரிய மகரிஷிகள் உலகத்துக்கு விசேஷச் செய்தியுடன் வருகிறார்களே தவிர, பெயர் புகழுக்காக அல்ல. ஆனால், அவர்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்களுடைய செய்திகளைத் தூக்கி எறிந்து விட்டு, அந்த மகான்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் உலகத்தின் சரித்திரம் இப்படித்தான் உள்ளது. மக்கள் அவருடைய (ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய ) பெயரை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது பற்றி நான் கவனம் செலுத்தவில்லை . ஆயின் அவரது உபதேச மொழிகள், அவரது வாழ்க்கை , அவரது செய்தி, உலகமெங்கும் பரவுவதற்காக உதவி பண்ணுவதில் எனது ஆயுள் முழுவதையும் அர்ப்பணிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டுப் பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக்கூடிய போக்குச் சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்திய, சிதைந்து. குலைந்துபோன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழித்துறை இல்லாமற்போகவே, இவர்கள் மணி அடிப்பதிலும், மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள்.


வெறும் மூடபக்தன் ஆகாதே :

பாரத தேசத்திலிருந்த ஒரு சந்நியாசி கூறினார். “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன். முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில் பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பி விடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறிபிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது” என்றார்.

மூடபக்தனின் கதை :

….. துவைதிகளான, பாரத வைஷ்ணவர்கள், சகிப்புத் தன்மையற்ற ஒரு வகுப்பினராவர். சைவர்களில், துவைதக் கிளையில் ஒரு வகுப்பைச் சேர்ந்த கண்டாகர்ணன் (மணிக்காதன்) என்ற பக்தனைப்பற்றிய கதையொன்று வழங்கி வருகிறது. அவன் சிவபெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள பக்தனாதலால் வேறொரு தெய்வத்தின் பெயரைக் காதால் கேட்கவும் விரும்ப மாட்டான். அதனால் மற்றத் தெய்வங்களின் பெயர்களைக் கூறும் எந்தக் குரலையும் அமிழ்த்திவிடும் பொருட்டுத் தன் இரு காதுகளிலும் இருமணிகளைத் தொங்க விட்டுக் கொண்டான். சிவபெருமானிடம் அவன் பேரன்பு பூண்டவனாதலால் அப்பெருமான் அவனுக்குச் சிவன்-விஷ்ணு என்னும் பேதமில்லை என்பதை அறிவிக்க வேண்டி அவன் முன் பாதி திருமாலாகவும், பாதி சிவன் வடிவாகவும் ஒரு நாள் காட்சி தந்தார். அவ்வமயம் அந்த பக்தன் அவர் முன் தூபங் காட்டினான். தூபத்தின் நறுமணம் திருமாலின் நாசியிற் புகுவதைக் கண்டபோது அதனுள் தனது விரலைப் புகுத்ததி அக்கடவுள். அந்த நறுமணத்தை நுகரமுடியாதபடி தடுக்கலானான். கண்டாகர்ணனின் முழு மூடபக்தியின் வெறி அவ்வாறிருந்தது.


குருட்டு வெறியனாகாதே :

குருட்டு வெறியர்களில் பலரகம் உண்டு. சிலர் மது வெறியர்கள். சிலர் புகை பிடிப்பதில் வெறியர்கள். மனிதர்கள் புகை பிடிப்பதை நிறுத்தினால் யுகப் பிரளயம் வந்து விடும் என்று சிலர் நினைக்கிறார்கள்… சில வெறியர்கள், கணவனை இழந்த பெண்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் எல்லாத் தீமைகளும் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இது குருட்டு வெறியாகும்.

நான் சிறு பையனாக இருந்தபோது வேலை செய்வதற்குத் தேவையாக இந்தக் குருட்டு வெறி முக்கியமான அம்சமாகும் என நினைத்தேன். ஆனால் வயதாக ஆக அப்படியல்லவென்று கண்டு பிடித்து விட்டேன்.

… ஒருவன் எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு திரியலாம்; அவனை யாரும் நம்ப முடியாது; அவனிடம் எந்தப் பெண்ணும் பத்திரமாக இருக்கமுடியாது. ஆனால் ஒருவேளை இந்த அயோக்யன் மது அருந்தாதவனாக இருக்காலம். அப்படியிருந்தால் மது அருந்துகிறவன் மகா மோசம்; அவனிடம் நல்லது எதுவுமே இல்லையென்று அந்த அயோக்யன் நினைக்கிறான்; தான் செய்கிற தீய செயல்களெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. இது மனிதனுக்கு இயல்பான சுயநலத்தன்மையாகும்; ஓரவஞ்சனைக் குணமாகும்.

இந்தக் குருட்டுப் பிடிவாத வெறியர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுடைய ஈரல் கெட்டுப் போயிருக்கலாம். அஜீர்ணக்காரர்களாக இருக்கலாம். அல்லது ஏதாவது நோய் வாய்ப்பட்டவர்களாக இருக்கலாம். நாளடைவில் இந்தக் குருட்டு நம்பிக்கை வெறிகூட ஒருவகை வியாதிதான் என்று வைத்தியர்கள் கண்டுபிடிக்கக்கூடும். கடவுள் என்னை அதிலிருந்து காப்பாற்றட்டும்!

என்னுடைய அனுபவங்களின் முடிவாக நான் ஒன்று நினைக்கிறேன். பிடிவாதமாக, மூடத்தனமான பலவிதச் சீர்திருத்தங்களைப் பண்ண முயலுவதை நிறுத்துவது நல்லது. அது ஒரு விதத்தில் புத்திசாலித்தனமாகும். உலகம் மெல்ல முன்னேறிவருகிறது. அதை மெல்லவே முன்னேறும் படி விட்டு விடலாமே! நாம் ஏன் அவசரப்படவேண்டும்? நன்றாகத் தூங்குங்கள்; நரம்புகள் நல்ல நிலையிலிருக்கும்படி கவனித்துக் கொள்ளுங்கள்; சரியான உணவைச் சாப்பிடுங்கள்; உல கிடம் அநுதாபம் காட்டுங்கள். குருட்டு வெறியர்கள்தாம் வெறுப்பை உண்டாக்குகிறார்கள்… –

…..இந்த முரட்டுப் பிடிவாதக் காரர்களின் கோஷ்டியிலிருந்து நீங்கள் வெளிவந்தால் உண்மையில் அன்பு காட்டுவதும் அநுதாபம் காட்டுவதும் எப்படியென்பதை நீங்கள் கற்றுக்கொள்ளக் கூடும். நீங்கள் அன்பு, அநுதாப நிலையை எய்தினால் இந்த எளிய ஜந்துகளைக் கண்டிப்பதற்கு மனமின்றி உங்கள் கோபசக்தி குறைந்து போகும்; அவர்களது குறை கண்டு அநுதாபந்தான் கொள்ளுவீர்கள்.

….ஓர் அரசன் இருந்தான். அண்டைநாட்டு அரசகுமாரன் தன் தலைநகர் மீது படையெடுத்து, அதை முற்றுகையிட முன்னேறி வருவதாக அவன் கேள்விப்பட்டுத் தனது சபையைக் கூட்டினான். நாட்டை எதிரியிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பதற்காக யோசனைகளைக் கூறும்படி மக்களைக் கேட்டுக்கொண்டான். எஞ்சினியர்கள் தலை நகரைச் சுற்றி உயரமான ஒரு மண்சுவர் கட்டி, வெளியில் ஓர் அகழி வெட்டி வைக்க வேண்டும் என்று யோசனை சொன்னார்கள். தச்சர்கள் மரச்சுவர் எழுப்பச் சொன்னார்கள். சக்கிலியர்கள் “தோலுக்கு இணையாக எதுவுமே இல்லை; எனவே தோலால் சுவர் எழுப்பலாம்” என்றார்கள். ஆனால் இரும்புக் கொல் லர்கள், “நீங்கள் கூறுவதெல்லாம் சுத்தப்பிசகு, சுவரை இரும்பால் தான் கட்டவேண்டும்” என்றனர். அடுத்ததாக வழக்கறிஞர்கள் முன்வந்து நாட்டைக் காப்பதற்கு மிகச்சிறந்த வழி, எதிரியிடம் போய் மற்றவர் சொத்துக்களைத் தம் வசப்படுத்துவது நீதிக்குப் புறம்பானது, தவறு என, சட்ட ரீதியாகச் சொல்லுவதே சிறந்த வழியென்று வாதாடினார்கள். கடைசியாகப் புரோகிதர்கள் வந்தார்கள். எல்லோரையும் துச்சமாக நோக்கிவிட்டு அவர்கள் வெறுப்புடன் நகைத்தார்கள். ‘நீங்கள் எல்லாம் பைத்தியக்காரர்களைப் போலப் பேசுகிறீர்கள். முதல் முதலில் யாக யக்ஞங்களால் தேவதைகளைத் திருப்திப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நம்மை யாரும் ஜயிக்க முடியாது” என்றார்கள். தமது நாட்டைக் காப்பதற்குப் பதிலாக அவர்கள் தமக்குள்ளே தர்க்கம் பண்ணிக் கொண்டு, தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டார்கள். அதனிடையில் எதிரி முன்னேறி வந்து அந்த நகரத்தை தாக்கித் தகர்த்து விட்டான். மனிதர்கள் இப்படித்தான் குருட்டுப் பிடிவாதத்துடன் வாழுகிறார்கள்.


எல்லா பலவீனத்தையும் மூடநம்பிக்கையையும் கைவிடுக:

…..நான் உபதேசிக்கும், எல்லாவற்றிலும் முதல் தேவையாக ஒன்றைக் கூறுவேன். எது ஆத்மீகத்துக்கோ, அறிவுக்கோ, உடலுக்கோ பல வீனத்தை உண்டாக்குகிறதோ, அதை உங்கள் கால் கட்டைவிரலால் கூடத் தொடாதீர்கள். சமயம் என்பது மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள வலிமையை வெளிப்படுத்துவதாகும். எல்லையில்லாத சக்தி படைத்த ஒரு ‘ஸ் பிரிங்’ இந்தச் சிறிய உடலுக்குள்ளே சுருண்டு கிடக்கிறது. அந்த ஸ்பிரிங் மெல்ல விரிவடைந்து வருகிறது. அது விரிந்துகொண்டே செல்லச் செல்ல, ஓர் உடலுக்கு பிறகு மறு உடல் எடுத்து அவை ஒவ்வொன்றும் தகுதியற்றதாக ஆகும் பொழுது, அந்த உடலை எறிந்துவிட்டு, அதைவிட உயர்ந்த உடலை எடுத்துக் கொள்கிறது. இதுதான் மனிதனுடைய – சமயத்தினுடைய – நாகரிகத்தினுடைய வரலாறு ஆகும். இதுதான் முன்னேற்றம் எனப்படும்.

சோதிடம், ரகசிய வித்தைகள் இவற்றையெல்லாம் நாடுவது பொதுவாக பலவீனமான மனத்தின் அறிகுறி என்பது உங்களுக்குத் தெரியவரும். ஆகவே நமது மனத்தில் இவை முக்கியமானதாக ஆகும்பொழுது நாம் போய் ஒரு டாக்டரிடம் உடம்பைக் காட்டி, நல்ல உணவு சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சோதிடரைப் பற்றிய பழைய கதை ஒன்று உண்டு. ஒரு நாள் அந்த மனிதர் ஓர் அரசரிடம் போய், “அரசே! நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறீர்கள்” என்று சொன்னார். அரசர் நடுங்கிப் பயந்துபோய், அப்பொழுதே அங்கேயே அச்சத்தால் உயிரை விட்டுவிடுவார் போலிருந்தது. ஆனால் அவருடைய மந்திரி, புத்திசாலி. இந்தச் சோதிடர்களெல்லாம் அறிவிலிகள் என்று மன்னரிடம் மந்திரி கூறினார். ஆனால் மன்னர் அவரை நம்பவில்லை. மன்னருக்கு இந்தச் சோதிடர்கள் அறிவிலிகள் என்பதை நிரூபிக்க வேறெந்த வழியும புலப்படாமற் போகவே அரண்மனைக்கு அந்தச் சோதிடரை மீண்டும் ஒரு முறை மந்திரி அழைத்தார். இரண்டாம் முறை வந்தபோது, “நீங்கள் போட்ட கணக்குகளெல்லாம் சரிதானா?” என்று சோதிடரை மந்திரி வினவினார். எவ்விதத் தவறும் அதில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு, எதற்கும் தம்மையே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக, முழுக் கணக்கையும் மீண்டும் ஒருமுறை போட்டுப் பார்த்து விட்டுப் பிறகு தமது முடிவு முற்றிலும் சரிதான் என்று பதிலளித்தார். மன்னரின் முகம் வெளிறிப் போய்விட்டது. மந்திரி சோதிடரைப் பார்த்து, “ஐயா! நீங்கள் எப்பொழுது மரணடைவீர்கள்?” என்று கேட்டார். “பன்னிரண்டு ஆண்டுகளில்” என்று சோதிடர் பதிலளித்தார். அந்தக் கணமே மந்திரி தமது வாளை உருவிச் சோதிடரின் உடலிலிருந்து கழுத்தைத் துண்டித்து வீழ்த்தினார். பிறகு மன்னரை நோக்கி, “இந்தச் சோதிடன் பொய்யன் என்பது தெரிகிறதா? இந்தக் கணமே இவன் செத்துக் கிடக்கிறான் பாருங்கள்”, என்றார்.

கஷ்டங்களைத் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும் :

……. ஒரு தடவை நான் காசியில் இருந்தபோது அவ்வூரின் ஒரு பகுதியின் வழியே போய்க்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பக்கத்தில் பெரியதொரு குளமும் மறுபுறத்தில் உயரமான சுவரும் காணப்பட்டது. இடைவழியில் தரைமீது ஏராளமான குரங்குகள் இருந்தன. காசியிலுள்ள பருத்த உடலுள்ள மந்திகள் அவை. சில சமயம் அவை வெறியுடனிருக்கும். அந்தத் தெருவழியே கடந்து செல்ல என்னை அநுமதிக்கக் கூடாது என்று அவற்றின் மனத்தில் பட்டு விட்டது போலும். ஆகவே நான் அவ்வழியாகப் போன போது அவை கூச்சலிட்டு, கீச்சிட்டுக் கத்திக்கொண்டே என் கால்களைப் பிடித்துக் கொண்டன. அவை நெருங்கிவர ஆரம்பித்ததும் நான் ஓடத்துவங்கினேன். நான் எனது வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க அவையும் வேகமாக ஓடி நெருங்கி வந்து கடிக்க ஆரம்பித்தன. தப்புவது அசாத்தியம் என்றே தோன்றிற்று. அந்தக் கணத்திலேயே அறிமுகமில்லாத யாரோ ஒரு புதிய மனிதர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் “அந்த மிருகங்களை எதிர்த்து நில்” என்று என்னிடம் உரக்கக் கூவினார். நான் திரும்பிப் பார்த்து அந்தக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின் வாங்கிவிட்டு இறுதியாக ஓடியே விட்டன. வாழ்க்கை முழுவதற்கும் அது ஒரு படிப்பினை. கஷ்டங்களைக் கண்டு நாம் எதிர்த்து நிற்கும்போது, குரங்குகளைப் போல அவை பின் வாங்கி ஓடுகின்றன.

இரண்டு விதமான தைரியங்கள்

தைரியங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பீரங்கி முனை வாயில் அஞ்சாது எதிர்த்து நிற்பது. மற்றொன்று ஆத்மீக உறுதிப்பாடு, துணிவு. பாரதத்தின்மீது படையெடுத்து வந்த ஒரு சக்கரவர்த்திக்கு அவனது ஆசிரியர், நாட்டிலுள்ள சில ரிஷிகளைச் சந்தித்து வருமாறு கூறியிருந்தார். நெடுநேரம் தேடிய பிறகு, மிக வயது முதிர்ந்த ஒரு மனிதர் ஒரு பாறையின் மீது உட்கார்ந்திருப்பதைச் சக்கரவர்த்தி கண்டார். சிறிது நேரம் சக்கரவர்த்தி அவருடன் உரையாடிய பின்னர் அம்மனிதரது ஞானத்தைக் கண்டு அவரிடம் பெருமதிப்புக் கொண்டார். தம்முடன் தம் நாட்டுக்கு வந்து விடுமாறு அந்த ரிஷியை அழைத்தார். “நான் வரமாட்டேன். எனது இந்தக் காட்டிலே நான் முழுத் திருப்தியுடன் தான் இருக்கிறேன்”, என்று அந்த ரிஷி பதிலளித்து விட்டார். அதற்கு மன்னன், “உங்களுக்கு நான் பணம், பதவி, செல்வம் எல்லாம் தருகிறேன். நான் உலகின் சக்கரவர்த்தி”, என்றான். “வேண்டாம்; எனக்கு அவற்றைப்பற்றி அக்கறையில்லை”, என்று ரிஷி பதிலளித்தார். அதற்குச் சக்கரவர்த்தி “நீர் வராவிட்டால் உம்மைக் கொன்று விடுவேன்” என்றான். ரிஷி சிரித்தார். “சக்கரவர்த்தியே, நீ சொன்ன வார்த்தைகளில் எல்லாம் அதிக முட்டாள்தனமான சொல்லை இப்பொழுதுதான் கூறினாய். உன்னால் என்னைக் கொல்ல முடியாது. என்னைச் சூரியன் உலர்த்த மாட்டான்; நெருப்பு எரிக்காது,வாள் வெட்டாது; ஏனெனில் நான் பிறப்பு அற்றவன்; இறப்பு அற்றவன்; எப்பொழுதும் வாழுகிறவன், சர்வசக்தி வாய்ந்தவன்! எங்கும் நிறைந்த ஆத்மா நான்” என்று மறுமொழி கூறினார். இதுதான் ஆத்மீக ரீதியான தைரியம் ஆகும். மற்றது சிங்கம் அல்லது புலியின் தைரியம்….

துணிவும் தாராள மனப்பான்மையும் பூண்டிரு:

தென்கடல் தீவுகளில் ஏற்பட்ட ஒரு புயலில் ஒருமுறை சில கப்பல்கள் சிக்கிக்கொண்ட கதையைப் படித்தேன், “இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்” பத்திரிகையில் அந்தப்படம் வெளியாகியிருந்தது. ஆங்கில நாட்டைச் சார்ந்த ஒரு கப்பல் மட்டும் புயலைச்சமாளித்து விட்டது. மற்றவையெல்லாம் உடைந்து விட்டன. மூழ்கப்போகிற மனிதர்கள் தமது கப்பலின் மேல் தட்டில் நின்று கொண்டு புயலுக்கு மத்தியில் கப்பலை நடத்திச் செல்லுகிற மக்களுக்கு உற்சாகமூட்டி வந்த காட்சியை அப்படம் காட்டிற்று. அதுபோல நீங்களும் துணிவும் தாராள மனப்பான்மையும் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கிற இடத்துக்குப் பிறரைக் கீழே இழுக்காதீர்கள்….


விருப்பத்துடன் சகித்துக் கொள்ளுங்கள்:

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்து விட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை . ஏன்? உலகில் தீமை எதுவும் இல்லை என்பதனால் அல்ல. அந்தச் சுமையை அம்மனிதன் சுய விருப்பத்துடன், தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டிருப்பதால், அவன் யாரையும் கண்டிப்பதோ, குற்றம் சாட்டுவதோ இல்லை. யார்பிறரைக்காப்பாற்ற வருகிறானோ – காப்பாற்றப்படுகிற மனிதனல்ல, காக்கிறவன் – அவன் தன் பாதை வழியே பெருமகிழ்வோடு போக வேண்டும்.

எதையும் நாடிச் செல்லாதே. எதையும் தவிர்க்காதே. வருவதை ஏற்றுக்கொள். எதனாலும் பாதிக்கப்படாமலிருப்பது ஒரு பெரும் சுதந்திரமாகும். வெறுமனே சகித்துக் கொண்டிராதே. பற்றற்றிரு. இன்பம் வரும்… நல்லதுதான்; யார் தடுக்கிறார்கள்? துன்பம் வரும்; அதனையும் வரவேற்போம். எருதின் கதையை நினைவிற் கொள்ளுங்கள். ஓர் எருதினுடைய கொம்பின் மீது ஒரு கொசு வந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தது. சிறிது நேரம் கழித்து அந்தக் கொசுவுக்கு மனச்சாட்சி உறுத்தவே அது “ஐயா எருதாரே! நான் நெடுநேரமாக இங்கே உட்கார்ந்திருக்கிறேன். ஒருக்கால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும், வருந்துகிறேன். போய் விடுகிறேன்” என்று கூறிற்று. ஆனால் அந்த எருது “ஓ, அப்படியொன்றுமே இல்லை. உங்கள் குடும்ப சகிதமாகவே வந்து என் கொம்பின் மேல் தங்கிப் போங்களேன். நீங்கள் என்னை என்ன செய்துவிட முடியும்?” என்று பதிலளித்தது.

துன்பம் வரும்போது அதனிடம் நாமும் ஏன் அவ்வாறு கூறக் கூடாது?….


தவறுகளும் தோல்விகளும் தேவதைகளுக்குத்தான் ஏற்படாது:

சிந்தனைதான் நம்மைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி. மனத்தை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு. அவற்றைப் பற்றி நாள்தோறும் கேட்டுக்கொண்டிரு. மாதாமாதம் அவற்றைப் பற்றிச் சிந்தனை செய். தோல்விகளை லட்சியம் பண்ணாதே. அவை மிக சகஜமானவை. தோல்விகள் வாழ்க்கையை அழகு பண்ணுகின்றன. அவையின்றி வாழ்வு எப்படியிருக்கும்? போராட்டங்கள் இல்லையென்றால் வாழ்க்கையே வாழத் தகுதியற்றதாக ஆகிவிடும். வாழ்க்கையாகிற கவிதை எங்கேயிருக்கும்? போராட்டங்களை, தவறுதல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே. பசு பொய் சொன்னதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசு தானே, மனிதனல்லவே! ஆதலால் இந்த தோல்விகளைப்பற்றி, சறுக்கி, வழுக்கி வீழ்வது பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாதே. ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் லட்சியத்தைப் பிடித்துக் கொள். ஆயிரம் தடவை தோற்றுப் போனாலும் மீண்டும் ஒரு தடவை முயற்சி பண்ணிப் பார்…

பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது.

நமது தவறுகளுக்கு இங்கே இடமுண்டு. முன்னேறிச் சென்றுகொண்டே இரு. சரியில்லாத ஒரு செயலைச் செய்து விட்டதாக நீ நினைத்தால் திரும்பிப் பார்த்துக்கொண்டே இராதே. அதே தவறுகளை இதற்கு முன்னர் நீ செய்திராவிட்டால், நீ இன்றுள்ள நிலையில் இருப்பாய் என்று நம்புகிறாயா? ஆகவே உனது தவறுகளுக்கு நன்றி செலுத்து! தேவதைகளுக்குத்தான் தவறு என்றால் என்னவென்று தெரியாது. அதிர்ஷ்டங்கள் வாழ்க! இன்பங்கள் வாழ்க! உனது பங்குக்கு எது வந்தாலும் கவலைப்படாதே. லட்சியத்தில் விடாப்பிடியாக இரு. முன்னேறிச் செல். சிறுதவறுகளையும், அற்ப விஷயங்களையும் நினைத்துத் திரும்பிப் பாராதே. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணி வகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்.

உங்களது தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள்:

இமாலயப் பகுதிகளில் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னே மிக நீண்ட பாதை கிடந்தது. ஏழைத் துறவிகளான எங்களைச் சுமந்து செல்ல எவரையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆகவே கால் நடையாகவே முழுவதும் செல்ல நேரிட்டது. எங்களுடன் கூடக் கிழவர் ஒருவர் இருந்தார். நூற்றுக்கணக்கான மைல்களுக்கு வழி முழுவதும் ஒரே ஏற்ற இறக்கமாக உள்ளது. தமக்கு முன்னே உள்ள நீள் வழியைக் கண்டதும் அந்தக் கிழவரான துறவி, “ஓ! ஐயனே! இவ்வளவு தூரத்தை எப்படிக் கடந்து செல்வது? இனிமேல் என்னால் நடக்கவே முடியாது. எனது மார்பு வெடித்தே விடும்” என்றார். “உங்கள் காலுக்குக் கீழே பாருங்கள்” என்று கூறினேன். அவரும் பார்த்தார். “உங்களுடைய கால்களின் கீழே இருக்கிற பாதை நீங்களே கடந்து வந்த பாதையாகும். உங்கள் முன்னே நீங்கள் காணுகின்ற பாதையும் இதைப் போன்றதேதான். அதுவும் விரைவில் உங்களது காலின் கீழ் வந்துவிடும்” என்றேன். மிகப் பெரிய உயர்ந்த விஷயங்களெல்லாம் உங்கள் காலில் கீழ் உள்ளன. ஏனெனில் நீங்கள் தெய்வீக நட்சத்திரங்கள். இவையெல்லாம் உங்கள் காலில் கீழ் கிடக்கின்றன. நீங்கள் விரும்பினால் கைப்பிடி நிறைய நட்சத்திரங்களை எடுத்து விழுங்கிவிட முடியும். உங்களது உண்மை இயல்பு அப்படிப்பட்டதாகும். வலிவுடனிருங்கள். எல்லாமூட நம்பிக்கைகளையும் கைவிட்டு விட்டு அப்பாற் செல்லுங்கள். விடுதலை பெறுங்கள்.

ஆரவாரமில்லாத உறுதியான வேலை :

….பெரிய பதவியில் அமர்ந்திருக்கிற ஒவ்வொருவனும் பெரியவனாக இருப்பான். மேடையின்மீது பிரமாதமான வெளிச்சமுள்ள விளக்குகள் ஒளி வீசுகையில் கோழையும் கூடத் துணிவுள்ளவனாக ஆகி விடுவான். உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது! யாருக்குத் தான் நெஞ்சு துடிக்காது? தனது முழு சக்தியையும் காட்டி வேலை செய்கிறவரையில் யாருடைய நாடிதான் படபடவென வேகமாகத் துடிக்காது? ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் சிறு புழுதான் உண்மையில் மிக உயர்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. அது மௌனமாகத் தன் கடமையைச் செய்கிறது. உறுதியாகக் கணத்துக்குக் கணம், மணிக்கு மணி அது தன் வேலையைச் செய்து கொண்டே போகிறது.

…. ஒரு அணில் இருந்ததாம். அது மணலில் புரண்டுவிட்டு முன்னும் பின்னும் ஓடிப் பாலத்தின் மேல் சென்று தன் மீதுள்ள மணலை உதறிற்றாம். இவ்வாறாகச் சிறு அளவில் இராமருடைய அணையில் மணலைப் போட்டு அந்த அணில் வேலை செய்ததாம். குரங்குகள் சிரித்தன. ஏனெனில் அவை முழு மலைகளையும், முழுக் காடுகளையும் பெரிய மணல் மூட்டைகளையும் அணைக்காகச் சுமந்து வந்தன. ஆதலால் மணலில் புரண்டுவிட்டுத் தன் உடலைச் சிலிர்த்து உதறிய அச்சிறு அணிலைக் கண்டு அவை சிரித்தன. இராமர் அது கண்டு “இந்தச் சிறு அணில் வாழ்க; தனது முழுச் சக்தியுடன் தன்னுடைய வேலையை அது செய்து வருகிறது. ஆகவே உங்களிடையே மிகப் பெரியவரைப்போல, அந்த அளவுக்கு இதுவும் உயர்ந்ததாகும்” என்று கூறினார். பிறகு அந்த அணிலின் முதுகை மெதுவாக வருடினார். இராமரது விரல்பட்ட இடத்தில் கோடு உண்டாகி இன்றும் அணிலின் முதுகில் நீளமாக அது காணப்படுகிறது.

ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான் :

ஒவ்வொரு கடமையும் புனிதமானதுதான். கடமையில் பக்தியுடனிருப்பது தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.

நமக்கு மிக நெருங்கியுள்ள கடமையை, நாம் இப்பொழுது ஏற்றெடுத்துள்ள கடமையைச் செம்மையாகச் செய்வதால் நம்மை நாம் மேலும் அதிகமாகப் பலப்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறாகப் படிப்படியாக நமது பலத்தை அதிகரித்துக்கொண்டே போனால் நாம் ஒரு பெரும் நிலையைக்கூட எய்திவிடக் கூடும். அப்பொழுது வாழ்க்கையிலும், சமூகத்திலும் எல்லோரும் மிக விரும்பிப் போற்றுகிற, கௌரவிக்கிற கடமைகளைக்கூடச் செய்து முடிக்கிற நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.

நாம் ஒவ்வொருவரும் எந்த இடத்துக்குத் தகுந்தவர்களோ இந்த இடத்தில்தான் இருக்கிறோம். ஒவ்வொரு பந்துக்கும் தக்கதொரு குழி உண்டு. ஒருவனுக்கு மற்றவர்களைவிட அதிகமான திறமை இருக்குமானால் உலகம் அதைக்கூடக் கண்டுபிடித்து விடும். ஏனெனில் இயற்கையிலேயே எங்கு பார்த்தாலும் ஒவ்வொன்றையும் பொருத்தமான இடத்தில் அமைக்கிற மாறுதல் நிகழ்ந்தே வருகிறது. ஆகவே முணுமுணுப்பதில் பயனில்லை. ஒரு பணக்காரன் தீயவனாக இருக்கலாம். இருப்பினும் அந்த மனிதனைப் பணக்காரனாக்கிய சில நல்ல குணங்கள் அவனிடம் இருந்தே தீரும். வேறொரு மனிதனுக்கும் அதே குணங்கள் ஏற்பட்டால் அவனும் பணக்காரனாக ஆகிவிடலாம். ஆகவே சண்டையிடுவதாலும், குற்றஞ் சொல்லிக் கொண்டிருப்பதாலும் என்ன பயன்? அப்படிச் செய்வதால் நமக்கு நல்ல நிலை ஏற்பட்டு விடாது.

உனது விதியைப் பற்றி முணுமுணுக்காதே :
ஒவ்வொரு கடமையையும் சுவையுடன் செய் :

….ஒ மனிதன் தனக்குக் கிடைத்துள்ள சிறு அளவு வேலையை எண்ணி முணுமுணுப்பானாயின் அவன் எல்லாவற்றுக்குமே முணுமுணுப்பான். முணுமுணுத்துச் சிடுசிடுத்து மிகுந்த துக்ககரமான வாழ்க்கையை அவன் நடத்துவான். அவன் செய்வதெல்லாம் தோல்வியிலேயே முடியும். ஆனால் தனது கடமைகளை மகிழ்வோடு செய்துகொண்டு, பணியாகிய ரதத்தின் சக்கரத்தில் தோள் கொடுத்துத் தள்ளுகிறவன், ஒளியைக் காண்பான். உயர்தரமான கடமைகள் அவன் பங்குக்குக் கிடைக்கும்.

பலனை எதிர்பார்த்து அதில் பற்றுக் கொண்டு வேலை செய்கிற மனிதன் தனக்கு கிடைத்துள்ள கடமையின் தன்மையைப் பற்றி முணு முணுப்பான். ஆனால் பற்றற்ற ஊழியனுக்கு எல்லாக் கடமைகளுமே ஒரே மாதிரியானவை தான். எந்தக் கடமையானாலும் அது சுயநலத்தையும், சிற்றின்பத்தையும் கொன்றுவிடவும், ஆத்மாவுக்கு விடுதலை தேடித்தரவும், திறமைவாய்ந்த கருவியாகவே அமையும்….

முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவும் அவனை ஒரு போதும் திருப்திப்படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல் விமயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்துகொண்டே செல்வோம். நமது கடமையாக எது வந்தெய்துகிறதோ அதனைச் செய்துகொண்டே போவோம். வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைக் கொடுத்துத் தள்ள எப்பொழுதும் ஆயத்தமாக இருந்து கொண்டிருப்போம். அப்படியிருந்தால் நாம் ஒளியைக் கண்டே தீருவோம்.

எந்த வேலையும் அற்பமானதல்ல. தன்னுடைய மனத்துக்குப் பிடித்தமான காரியத்தை ஒரு அடி முட்டாள் கூடச் செய்து முடித்துவிட முடியும். ஆனால் எந்த வேலையையும் தனக்கும் பிடித்தமானதாக, சுவையுள்ள வேலையாக ஆக்கிக் கொள்ளுகிறவன் புத்திசாலியெனப் படுவான்.

இந்த உலகிலிருக்கிற எல்லாமே ஆலமரத்து விதை போல நுண்ணியதாக, கடுகு போலத் தோற்றமளித்தாலும், அதற்குள்ளே பெரிய ஆலமரம் மறைந்துள்ளது. இதைக் கவனித்துத் தெரிந்து கொண்டு, எல்லாப் பணிகளையும் உண்மையிலேயே உயர்ந்ததாக ஆக்குவதில் வெற்றி பெறுகிற மனிதனே புத்திசாலியாவான்.

பிறரைக் குற்றஞ் சொல்லாதே : உன்னையே ஆராய்ந்து பார்:

….நாம் தாக்கப்படக்கூடிய நிலையில் இருந்தாலன்றி நம்மை எதுவும் தாக்கிப் பாதிக்காது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய உடல் வியாதியால் பாதிக்கப்படுவதற்கு ஆயத்தமாக இராதவரை வியாதி என்னை அணுகாது. வியாதியானது கிருமிகளை மாத்திரம் பொறுத்ததல்ல. ஏற்கனவே உடலில் இருக்கிற சில தன்மைகளைப் பொறுத்ததாகும். நமக்கு ஏற்றது தான் கிடைக்கிறது. தகுதியே இல்லாமல் துன்பம் ஏற்படாது என்பதை நாம் நமது கர்வத்தைக் கைவிட்டு உணர்ந்து கொள்வோம். தகுதியில்லாமல் நமக்குத் தாக்குதலோ அடியோ கிடையாது. எனது சொந்தக் கைகளாலேயே வழிவகுக்காமல் எந்தத் தீமையும் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை . நாம் அதனைத் தெரிந்துகொள்ள வேண்டும். உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும், நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால்தான் கிடைத்தது என்பது தெரியவரும். நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது. இப்படிச் சிந்தித்தால் நாம் சாந்தமான கம்பீரமான மன நிலைக்கு வந்து சேருவோம். அத்துடன்கூட இந்த ஆராய்ச்சியின் மூலமாக நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். அதாவது, வெளிஉலகத்தைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது. ஆனால் என்னிடம் எது இருக்கிறதோ-அதாவது எனது சொந்த அக உலகம்அது என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. இந்த இரண்டும் ஒன்று சேருவதால்தான் தோல்வி ஏற்படுமாயின், இந்த இரண்டும் சேருவதன் மூலம் தான் எனக்கு அடி கிடைக்க வேண்டுமென்றால், என்னிடமிருக்கிற பங்கை நான் கூட்டிச் சேர்க்கமாட்டேன். அப்பொழுது எப்படித் தாக்குதல் வரும்? என்னை என்னால் நன்றாக அடக்கியாள முடிந்தால் தாக்குதல் ஒருபோதும் என்னை அணுகவே முடியாது.

……ஆகவே உங்களது தவறுகளுக்காக வேறு எவரையும் குற்றஞ் சாட்டாதீர்கள். உங்களது கால்களிலே நில்லுங்கள். முழுப் பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். “நான் அனுபவிக்கிற இந்தத் துன்பத்துக்கு நானே பொறுப்பு என்றால் இதனை நானே தான் நீக்க வேண்டும் என்பது நிரூபணமாகி விடுகிறது” என்று கூறுங்கள். நான் நிர்மாணித்ததை என்னால் அழிக்கவும் முடியும். வேறொருவர் உண்டாக்கியதை என்னால் ஒருக்காலும் அழிக்க முடியாது. ஆகையால் எழுந்து நில்லுங்கள். துணிவுடனிருங்கள். வலிவுடனிருங்கள். முழுப்பொறுப்பையும் உங்களது தோள் மீதே, நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான சக்தி, துணை எல்லாம் உங்களிடமே உறைந்துள்ளன. “மடிந்து போன முற்காலம் மடிந்தவற்றைப் புதைக்கட்டும்.” முடிவற்ற வருங்காலம் உங்கள் முன்னே உள்ளது. நீங்கள் பேசுகிற ஒவ்வொரு பேச்சும், சிந்திக்கிற சிந்தனையும், செய்கிற செயலும் வருங்காலத்தில் உங்கள் மீது பாய்வதற்கு ஆயத்தமாக, ஒரு குவியலாகச் சேர்ந்து உள்ளன. நீங்கள் செய்த கெட்ட சிந்தனைகளும், கெட்ட செயல்களும், புலிகளைப் போலப் பாய்வதற்கு ஆயத்தமாக இருப்பதைப் போலவே நம்பிக்கையுணர்ச்சியைத் தூண்டுகிற மற்றொரு விஷயமும் உள்ளது. அதாவது நீங்கள் செய்யக்கூடிய, நல்ல சிந்தனைகளும் நல்ல செயல்களும் நூறாயிரம் தேவதைகளின் பலத்துடன் உங்களை எப்பொழுதும் எல்லாக் காலத்துக்கும் காப்பாற்றுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இதனை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது விதிக்கு நாமே பொறுப்பு :

….. ஒருவன் சம்பாதிக்காவிட்டால் அவனுக்கு எதுவும் கிடைக்காது. இது நிரந்தரமான சட்டம். அப்படியல்லவென்று சில சமயம் தோன்றலாம். ஆனால் நாளடைவில் அது உண்மைதானென்று தெளிவடைகிறோம். ஒரு மனிதன் செல்வந்தன் ஆவதற்காக ஆயுள் முழுவதும் பாடுபடலாம். ஆயிரக்கணக்கான பேர்களை அவன் ஏமாற்றலாம். ஆனால் கடைசி முடிவாகத் தான் பணக்காரனாவதற்குத் தகுதியுடையவனல்லன் என்பதைத் தெரிந்து கொள்வான். அவனது வாழ்க்கையே, அவனுக்குத் தொல்லையாகவும், தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. சுகபோகங்களை அநுபவிப்பதற்காக நாம் ஏராளமான பொருள்களைச் சேர்த்து வைத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் எதைச் சம்பாதித்தோமோ அதுதான் உண்மையில் நமக்கு ஒட்டும். முட்டாள் ஒருவன் உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் வாங்கலாம். அவனது நூல் நிலையத்தில் அவை இருக்கும். ஆனால், எதனை படிக்க அவனுக்குத் தகுதியுண்டோ அதையேதான் அவன் படிப்பான். அவனுக்குத் தகுதியை உண்டாக்குவது அவனது “கர்மா”

நமது தகுதி என்ன, நம்மால் எதனை ஜீரணிக்க முடியும் என்பதை நமது கர்மா முடிவு செய்கிறது. நாம் இன்றிருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு. நாம் எப்படி ஆகவேண்டுமென்று விரும்புகிறோமோ அவ்வாறு நம்மை ஆக்கிக் கொள்ளுவதற்கு நம்மிடம் ஆற்றல் உள்ளது. இன்று நாமிருக்கும் நிலை நமது பழங்காலச் செயல்களின் விளைவாக ஏற்பட்டது என்றால் அதைத் தொடர்ந்து மற்றொரு கருத்தும் வருகிறது. அதாவது நாம் வருங்காலத்தில் எப்படி மாற வேண்டுமென்றிருக்கிறோமோ, அந்த நிலையை இக்காலத்திய நமது நடவடிக்கைகளால் உண்டாக்க முடியும். ஆகவே எப்படிச் செயல்பட வேண்டும் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்……..

நமக்குள்ளிருந்தே உதவியெல்லாம் கிடைக்கும் :

……நாம் பட்டுப் புழுவைப் போலிருக்கிறோம். நமது உடலிலிருந்து வெளிப்படும் பொருளைக் கொண்டே நாம் பட்டு நூல் கூடு உண்டாக்குகிறோம். நாளடைவில் அதிலேயே சிறையிடப்படுகிறோம். ஆனால் இது நிரந்தரமானதல்ல. அந்தக் கூட்டுக்குள்ளேயே நாம் நிச்சயமாக ஆத்மஞான அநுபூதியை வளர்த்துக் கொள்வோம். பின்னர் வண்ணாத்திப் பூச்சியைப் போலச் சுதந்திரமாக வெளி வருவோம்; இந்தக் கர்ம வலையை, நம்மைச் சுற்றி நாமேதான் பின்னிக் கொண்டோம். நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமாக, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர்விட்டுக் கதறுகிறோம். உதவியானது வெளியிலிருந்து வராது. நமக்குள்ளிருந்தேதான் வரும், உலகிலுள்ள எல்லாக் கடவுள்களிடமும் முறையிட்டுப் பார். பல ஆண்டுகள் கதறினேன். இறுதியாக எனக்கு உதவியளிக்கப்பட்டதை நான் கண்டேன். ஆனால் எனக்குள்ளேயிருந்துதான் உதவி வந்தது. தவறுதல் காரணமாக நான் செய்ததையெல்லாம் திருப்பி மாற்ற வேண்டியிருந்தது. அது ஒன்றுதான் வழி. என்னைச் சுற்றிலும் நானே வீசிக் கொண்ட வலையை நான் வெட்டியெறிய வேண்டியிருந்தது. இவ்விதம் செய்வதற்கான சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது. ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக அறிவேன். அதாவது எனது அபிலாஷைகளில் ஒன்று கூட – அது நல்வழிப்பட்டதோ, தீயவழிப்பட்டதோ, எப்படியாயினும் சரி – வீணாகவில்லை. எனது ஆயுளில் நான் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால் கவனியுங்கள். இந்தத் தவறுகள் ஒவ்வொன்றையும் நான் செய்திராவிட்டால் நான் இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது என்பது திண்ணமாக எனக்குத் தெரியும். ஆகவே எனது தவறுகளைப் பற்றி எனக்கு முழுத் திருப்திதான். அதற்காக நீங்கள் வீட்டுக்குப்போய் வேண்டுமென்றே தவறிழைக்க வேண்டுமென்று நான் கூறுவதாக நினைத்துச் சோர்ந்து போகவேண்டாம்; கடைசியில் எல்லாம் நேராகிவிடும் என்று தெரிந்து கொள்ளுங்கள், அது வேறு விதமாக ஆக முடியாது. ஏனெனில் நல்ல தன்மை நமது இயல்பு ஆகும். தூய்மை இயற்கையான நிலையாகும். அந்த இயற்கையை ஒருநாளும் அழிக்கவே முடியாது. நமது அடிப்படையான சுபாவம் எப்பொழுதும் ஒரே விதமாகவே இருக்கும்.


நல்லொழுக்கத்தை எப்படி நிலைநாட்டுவது?

….மனிதனானவன் ஒரு மையப்புள்ளியைப் போல் விளங்குகிறான். உலகிலுள்ள எல்லாச் சக்திகளையும் தன்னை நோக்கி இழுக்கிறான். தனது கேந்திரத்தில் எல்லாவற்றையும் உருக்கி ஒரு பெரிய சக்திச் சுழலாக வெளியில் மீண்டும் அனுப்புகிறான்……..

…..நல்லது-தீயது, இன்ப-துன்பம் இவையெல்லாம் அவனை நோக்கி ஓடுகின்றன. அவனைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒழுக்கப் பண்பு எனும் போக்கை உருவாக்குகின்றான். அதனை வெளிக்காட்டி, வெளியில் அதனை வீசுகிறான். எதை வேண்டுமானாலும் உறிஞ்சி இழுத்துகொள்ள அவனுக்குச் சக்தி இருப்பது போல அதனை வெளியில் எடுத்து வீசவும் அவனுக்குச் சக்தி உண்டு.

…..தொடர்ந்தாற் போல ஒரு மனிதன் தீய சொற்களைக் கேட்டு, தீயனவற்றையே செய்து வந்தால் அவனுடைய மனம் தீய பதிவுகளால் நிரம்பிக் கிடக்கும். அவை அவனது சிந்தனையும் வேலையையும் பாதித்து விடும்; அப்படிப் பாதிப்பதால் தீய பதிவுகள் எப்பொழுதுமே வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றின் விளைவு தீயதாகவே இருந்து தீரும். அந்த மனிதன் தீயவனாகவே இருப்பான். அவனால் அதைத் தவிர்க்க முடியாது. அவனிடமுள்ள மனப் பதிவுகளின் மொத்தத் தொகுப்பானது, தீய காரியங்களைச் செய்வதற்கான பலமான உந்து சக்தியாக, தூண்டுகோலாக அமைகிறது. அவன் தன்னுடைய மனப் பதிவுகளின் கையில் இயந்திரம் போல, அவை அவனை தீயவை செய்யக் கட்டாயப்படுத்தும்.

அதுபோலவே ஒரு மனிதன் நல்ல கருத்துக்களையே நினைத்து நல்லனவற்றையே செய்து வந்தால் இந்த மனப்பதிவுகளின் மொத்தத் தொகுப்பும் நல்லதாகவே இருக்கும். முன் கூறியதைப் போலவே அவன் விரும்பாவிட்டாலும் கூட அவனை நல்லதையே செய்ய அது கட்டாயப்படுத்தும். ஒரு மனிதன் இவ்வளவு தூரம் நல்ல காரி பங்களைச் செய்து, இத்தனை நல்ல சிந்தனைகளைச் சிந்தித்தும் வந்ததால், நல்லனவே செய்வதற்கான மனப்போக்கு அவனுக்குத் தடுக்க முடியாததாக ஆகிவிடுகிறது. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவனது இயல்பான போக்குகளின் மொத்தத் தொகுதியாக உள்ள அவனது மனமானது அவனைத் தவறிழைக்க விடாது. அவனது சுபாவங்கள் அவனைத் திருப்பி விட்டு விடும். அவன் பூரணமாகவே நல்ல வாசனைகளின் ஆளுகையின் கீழ் வாழ்வான். நிலைமை இப்படி ஆகும் போது ஒரு மனிதனின் நல்லொழுக்கமானது ஸ்திரப்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.

…… ஒரு மனிதன் வீணையில் ஒரு ராகத்தை வாசிக்கும் போது ஸ்வரப்படியில் ஒவ்வொரு இடத்திலும் கவனமான சுய நினைவுடன் ஒவ்வொரு விரலையும் வைப்பான். விரல்களின் அசைவு பழக்கமாக ஆகிறவரை அவன் இந்தச் செயலைத் திரும்பச் திரும்பச் செய்வான். பிறகு நாளடைவில் ஒவ்வொரு தனி ஸ்வரத்தையும் பற்றிக் குறிப்பாகக் கவனம் செலுத்தத் தேவையின்றியே அவன் ராகங்களை வாசித்து விடுவான். இது போலவே நமது இயல்புகளெல்லாம், மனப்போக்கெல்லாம் முற்காலத்தில் நல்ல ஞாபகத்துடன் வேண்டுமென்றே நாம் செய்த செய்கைகளின் விளைவுதான் என்பது தெரிகிறது.

புலனடக்கத்தால் விளையும் ஆற்றல் :

நமது உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்து விடும்போது, ஏராளமான சக்தியை விரயம் செய்கிறோம். நமது வரம்புகளைச் சிதற அடிக்கிறோம். மனத்தை அமைதி குலையச் செய்கிறோம். அந்நிலையில் மிகக் குறைந்த அளவில் தான் வேலை நடக்கிறது. வேலையின் வடிவத்தில் வெளிச் செல்ல வேண்டிய சச்தி வெறும் உணர்ச்சியாகச் செலவாகி விடுகிறது. அதனால் எவ்விதப் பயனுமில்லை . மனமானது மிக அமைதியாக, குளிர்ந்த நிலையில் இருக்கும் பொழுது அதன் முழுச் சக்தியும் நல்ல காரியங்களைச் செய்வதில் செலவாகிறது. உலகில் தோன்றிள்ள மகத்தான ஊழியர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படித்துப் பார்த்தால் அவர்கள் அபார அமைதி வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ளுவீர்கள். அவர்களது மனத்தின் சம நிலையை எதுவும் குலைக்காதுபோல் தோன்றும். அதனால்தான் கோபமடைகிற மனிதனால் பெரிய அளவில் வேலை செய்ய முடியாமற் போகிறது. எந்த ஒரு மனிதனை எதுவுமே கோபமூட்டாதோ, அவன் பெரும் காரியங்களைச் செய்கிறான். கோபம், வெறுப்பு அல்லது வேறு ஏதேனும் ஒரு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கிறவனால் வேலை செய்ய முடியாது. தன்னையே துண்டு துண்டாக உடைத்துக் கொள்ளுவதைத் தவிர அவனால் நடை முறையில் எதுவும் செய்ய முடிவதில்லை. சாந்தமான, மன்னிக்கிற, சம சித்தமுள்ள, அமைதியில் ஸ்திரப்பட்ட உள்ளம்தான் பெருத்த அளவில் வேலை செய்கிறது.

மனதில் ஏற்படுகிற வெறி உணர்ச்சியின் ஒவ்வொரு அலையையும் நீ கட்டுப்படுத்துவது உன்னுடைய சேமிப்பு நிதிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. ஆகையால் ஒருவர் கோபித்தால் அவரிடம் திருப்பிக் கோபிக்காமல் இருப்பது நல்ல கொள்கையாகும். எல்லா நெறியொழுக்கத்துக்கும் இது பொருந்தும். “கெட்ட தன்மைகளைத் தடுக்காதே” என்று கிறிஸ்து சொன்னார். அது நீதிநெறிப்படி நல்லதுதான் என்பதை மட்டுமன்றி அது நாம் கடைப்பிடிக்கக் கூடிய மிக உத்தமமான கொள்கையாகும் என்பதை நாமே கண்டுப் பிடிக்கிறவரையில் நமக்குப் புரிவதில்லை. ஏனெனில் கோபத்தை வெளிக்காட்டுகிற மனிதனுடைய சக்தி நஷ்டமாகிறது. கோபமும் வெறுப்பும் கலந்த நிலைக்கு உனது மனம் செல்லுவதற்கு நீ அனுமதிக்கக் கூடாது.

…… நான்கு குதிரைகள் பூட்டிய “கோச்சு” வண்டியொன்று எவ்விதத் தங்குதடையின்றி மலைச் சரிவில் பாய்ந்து வரலாம்! அல்லது கோச்சு வண்டிக்காரன் அக் குதிரைகளைக் கட்டுப்படுத்திச் சரியானபடி ஓட்டலாம். இந்த இரண்டில் எதில் சக்தி தெரிகிறது? அவற்றை ஓட விடுவதிலா, பிடித்து நிறுத்துவதிலா? வானத்தில் பறந்து செல்லுகிற ஒரு பீரங்கி குண்டானது நெடுந்தூரம் பிரயாணம் செய்துவிட்டுப் பிறகு கீழே விழுகிறது. மற்றொன்று ஒரு சுவரின் மீது தாக்க, அதன் பிரயாணம் நின்று போய் விடுகிறது. குண்டு சுவரின் மீது மோதுவதாலும் கடுமையான உஷ்ணம் உருவாகிறது. கட்டுப்படுத்தித் தடுப்பதால் சக்தி உருவாகிறது. சுயநல நோக்கத்தைப் பின் தொடர்ந்து செல்லுகிற எல்லாச் சக்தியும் விரயமாகி விடுகிறது. உன்னிடம் திரும்பி வருவதற்கான சக்தியை அது உண்டாக்காது. ஆயின் அதனைக் கட்டுப்படுத்தினால் அது நமது வளர்ச்சிக்குப் பயன்படும். இந்தப் புலனடக்கம் தன்னடக்கமானது. பலம் மிக்க மனோ சக்தியை உண்டாக்கவும், கிறிஸ்துவை அல்லது புத்தரை உருவாக்கிய ஒழுக்கப் பண்பை உண்டாக்கவும் துணை செய்யும்…….

……பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்க வேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிடம் கடுங்கோபமாக இருக்கிறாள். இந்நிலையில் அவள் இருக்கும்பொழுது உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப் போய் புதிய அலை எழுகிறது. அதுதான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது. கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி நினைக்க வேண்டும். யாரிடமிருந்தாவது பரிசாக எதையாவது பெறவேண்டுமென்ற எண்ணம் எழுந்தால் அதற்கு எதிர்ப்பான எண்ணத்தால் எண்ணத்தை மாற்றிவிட வேண்டும்.

…..மிக ஆழ்ந்த மௌனமாக இருக்கும்போது, தனிமை நிலையில் மூழ்கி இருக்கும்போது அந்த நேரத்தில் தீவிரமான நடவடிக்கையைக் கண்டுபிடித்துச் செய்யக்கூடியவன் லட்சிய மனிதனாவான், அவன் மிகத் தீவிரமான நடவடிக்கைகளுக்கிடையே பாலைவனத்திலுள்ளது போன்ற அமைதியையும் தனிமையையும் அனுபவிப்பான். அந்த மனிதன் புலனடக்கத்தின் ரகசியத்தைத் தெரிந்து கொண்டு தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டுள்ளான். பெரிய நகரத்தினூடே அதில் காணப்படுத்திக் போக்குவரத்துக் குழப்பக் கூக்குரலிடையே அவன் போகிறான். போகும்போது ஒரு ஒலியும் எட்டமுடியாத குகையில் இருப்பதுபோல அவனது மனம் மிகுந்த அமைதியுடனிருக்கிறது. ஆனால் அதனிடையேயும் அவனது மனமானது எப்பொழுதுமே தீவிரமாக வேலை செய்கிறது. கர்மயோகத்தின் லட்சியம் இதுதான். இந்நிலையை நீங்கள் எய்திவிட்டால் வேலையின் ரகசியத்தை உண்மையிலேயே கற்றுக் கொண்டுவிட்டீர்கள் எனலாம்.

உண்மையான எண்ணங்களின் ஆற்றல் :

……. கௌதம புத்தர், தாம் இருபத்தைந்தாவது புத்தரென அடிக்கடி கூறக்கொள்வதை அவரது வாழ்வில் நாம் படித்திருக்கிறோம். வரலாறு கண்ட புத்தர் தமக்கு முன் சென்றவர்கள் அமைத்த அஸ்திவாரத்தின் மீதுதான் தமது அமைப்பை நிறுவியிருக்க வேண்டும் என்றாலும் அவருக்கு முன்னால் வந்து போன இருபத்துநான்கு பேர்களையும் வரலாறு அறியாது.

உத்தமமான உயர்ந்த புருஷர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், வெளிக்குத் தெரியாமலும் இருப்பார்கள். சிந்தனையின் சக்தியை உண்மையில் அவர்களேதான் அறிவார்கள். அவர்களுக்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரியும். அதாவது அவர்கள் ஒரு குகைக்குள் சென்று, கதவுகளை அடைத்துவிட்டு ஐந்து உண்மையான கருத்துக்களை வெறுமனே நினைத்துவிட்டு, மடிந்து போய் விட்டாலும் இந்த ஐந்து எண்ணங்களும் சாசுவதமாக இருக்கும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியும். அத்தகைய எண்ணங்கள் மலைகளைக் குடைந்துகொண்டு, கடல்களைக் கடந்து கொண்டு, உலகமெங்கும் பிரயாணம் செய்யும். மனித இதயங்களில் அவை ஆழமாகப் புகுந்து அந்தக் கருத்துக்களை மனித வாழ்க்கையில், நடைமுறையில், வாழ்ந்து காட்டக்கூடிய ஆண்களையும், பெண்களையும் நிர்மாணித்து உயர்த்தும்.


நீங்களே ரிஷிகள் ஆகிவிட வேண்டும்!

ரிஷிகள் உபதேசித்ததை மட்டும் நீங்கள் கற்றிருந்தால் போதாது. அந்த ரிஷிகள் மறைந்து விட்டார்கள். அவர்களது அபிப்பிராயங்களும் அவர்களுடன் மறைந்து விட்டன. நீங்களே ரிஷிகளாக வேண்டும். இதுவரை பிறந்துள்ள மிகப் பெரிய மனிதர்களைப் போல நமது அவதார புருஷர்களுக்கு இணையாக நீங்களும் மனிதர்கள் தாம். வெறும் ஏட்டுப் படிப்பினால் என்ன விளைந்து விடும்? தியாகத்தினால் கூட எதைத்தான் சாதித்துவிட முடியும்? மந்திர தந்திரங்களால் ஆவது என்ன? நீங்கள் உங்கள் கால்களிலேயே நிற்க வேண்டும்.

உண்மையான மனிதன் :

ஆண்மை வீர்யமுள்ளவர்களைத் தயாரிக்க இந்தப் புதிய வழி முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். உண்மையான மனிதன் சக்தியின் வடிவமாக இருக்க வேண்டும். அத்துடன் பெண்மையுள்ளமும் படைத்திருக்க வேண்டும். உங்களைச் சுற்றி வாழும் லட்சக்கணக்கான ஜீவன்களைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும். இருப்பினும் உறுதியுடன் வளைக்க முடியாமலும் நீங்களிருக்க வேண்டும். அத்துடன் கீழ்ப்படிகிற குணமும் உங்களுக்கு இருக்க வேண்டும். வெளிப் பார்வைக்குச் சற்று முரண்பட்ட குணங்களாக இவை தோன்றினாலும்கூட இந்த நற்குணங்கள் உங்களுக்கிருக்க வேண்டும். உங்களுக்கு மேலுள்ள அதிகாரி உங்களை ஆற்றில் குதித்து முதலையைப் பிடிக்க வேண்டுமென்று கட்டளையிட்டால் முதலில் நீங்கள் கீழ்ப்படிந்து விட்டுப் பிறகு காரணம் கேட்க வேண்டும். கட்டளை தவறாக வந்தாலும் முதலில் கீழ்ப்படிந்து விட்டுப் பிறகு அதை மறுத்துப் பேசுங்கள்.

நாம் பல சம்பிரதாய கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறோம். அதிலிருக்கிற தீமையென்னவெனில், ஒருவனுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனே அவன் புதிய ஒரு சம்பிரதாயத்தை ஆரம்பிக்கிறான். காத்திருப்பதற்கு அவனிடம் பொறுமையில்லை. ஆகவே உங்கள் சங்கத்திடம் உங்களுக்கு ஆழ்ந்த மதிப்பு இருக்க வேண்டும். அதில் கீழ்ப்படியாமைக்கு இடமே இல்லை……. நமது பாசறையில் துரோகிகளுக்கு இடமில்லை. காற்றைப் போல நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அத்துடன் இந்தச் செடியைப் போலவும் நாயைப் போலவும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

இந்தக் காலத்திற்குத் தேவையானவர்கள் சந்நியாசிகள்:

சில பேர்கள் வாழ்க்கையிலிருந்து வெளிவந்து, கடவுளுக்காக மாத்திரமே வாழ்ந்து உலக நன்மைக்காகச் சமயத்தைப் பாதுகாக்க வேண்டும்…. துறந்தால், அத்துறவில் உறுதியாக நில்லுங்கள். போரில் நூறுபேர் வீழ்ந்தால் அவர்கள் கையிலுள்ள கொடியை நீங்கள் தாங்கிப் பிடித்து முன்னே கொண்டு செல்லுங்கள். கடவுள் சத்திய வடிவம். யார் தோற்றாலும் பரவாயில்லை. கீழே விழுகிறவன், மற்றொருவனிடம் கொடியைக் கொடுத்து விடட்டும். அவன் அதை கொண்டு முன்னேறட்டும். கொடி ஒரு போதும் கீழே விழாது.

…எளியவர்களான கிருகஸ்தர்கள் என்ன பண்ணுவார்கள். பாவம்! அவர்களுக்குச் சிறிய ஒரு வாழ்க்கை உள்ளது. துறவிகள், சிவனின் பூத கணங்கள்தான் இதைச் செய்ய வேண்டும். “ஹர! ஹர! சம்போ !” என்ற முழக்கத்தால் வானத்தைக் கிழிக்க வேண்டியவர்கள் சந்நியாசிகளே.

-…வருங்காலத்தைப் பற்றி எனது நம்பிக்கை இளைஞர்களைப் பொறுத்துத்தான் இருக்கிறது. ஒழுக்கமுள்ள, புத்திசாலிகளான, பிறருக்குத் தொண்டு புரிவதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுகிற, கீழ்ப்படிதலுள்ள இளைஞர்கள் வேண்டும். எனது கருத்துக்களை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்காகத் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்து அதன் மூலம் நமக்கும், பொதுவாகத் தமது நாட்டுக்கும் நன்மை உண்டாக்கவேண்டும். மற்றபடி, சாதாரணத் தரத்திலுள்ள பையன்கள் கோஷ்டி கோஷ்டியாக வந்து கொண்டிருக்கிறார்கள்; வந்து கொண்டுதானிருப்பார்கள். அவர்கள் முகத்தில் மந்த சுபாவமானது எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது. அவர்களது உடல் வேலைக்குப் பயனின்றி பலவீனமாக உள்ளது; மனத்தில் தைரியம் இல்லை. அவர்களைக் கொண்டு எதைத்தான் சாதிக்க முடியும்? நசிகேதனின் நம்பிக்கையுடன் பன்னிரண்டு சிறுவர்கள் கிடைத்தால் இந்த நாட்டின் சிந்தனையையும், அபிலாஷை நாட்டங்களையும் புதியதொரு பாதையில் என்னால் திருப்பி விட்டுவிட முடியும்.

நல்ல திறமைசாலிகளாக எனக்குத் தோன்றுகிறவர்களில் சிலர் திருமணத்தளையால் தம்மை விலங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் உலக ரீதியான பெயர், புகழ் அல்லது செல்வத்தைத் திரட்டுவதற்காகத் தம்மையே விற்றுக் கொண்டு விட்டார்கள். மீதியிருக்கிற பெரும்பான்மை மக்கள், எந்த ஒரு உயர்ந்த கருத்தையும் வாங்கிக் கொள்ளத் தகுதி, திறமையற்றவர்களாக உள்ளனர்.

ஆயினும்கூட நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடவில்லை என்பது உண்மைதான். ஏனெனில் இறைவன் திருவுள்ளப்படி இந்தச் சாதாரணப் பையன்களிடமிருந்தே காலப்போக்கில், பணியிலும் ஆத்மிகத்திலும் சிறந்த மகாவீரர்கள் உதித்து வருங்காலத்தில் எனது கருத்துக்களை நடைமுறையில் நடத்திக் காட்டுவார்கள்.

படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி இணைக்க வேண்டும்:

படித்த இளைஞர்களிடையே பணிபுரியுங்கள். அவர்களை ஒன்று திரட்டி இணையுங்கள். மகத்தான செயல்களை, மகத்தான தியாகங்களின் மூலமாகவேதான் நிறைவேற்ற முடியும். ….வேலை செய்யுங்கள்; கற்பனையுள்ள கருத்தை, திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். எனது வீரமிக்க, உயர்ந்த நல்ல ஆத்மாக்களே! சக்கரத்தில் உங்களது தோளைக் கொடுத்துத் தள்ளுங்கள். பெயர், புகழ் அல்லது வேறு எந்தப் பொருளற்ற விஷயத்தையும் எதிர்பார்த்துத் திரும்பிப் பாராதீர்கள், நில்லாதீர்கள். பரிபூரணமாக சமர்ப்பணமாகி வேலை செய்யுங்கள். “புல்லைக்கூடக் கயிறாகத் திரித்துப் பின்னி இணைத்தால் அதைக்கொண்டு மத யானையையும் கட்டிப்போட்டுவிட முடியும்” என்பதை நினைவிற்கு கொள்ளுங்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் எனது பிரார்த்தனை :

உலக குருவாகி, உலகெல்லாம் ஒன்றுதான் என்ற இணைப்புச் செய்தியைப் பிரசாரம் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் உங்களது இதயக் கமலத்தில் வாசம் செய்ய வேண்டும்; அதன் மூலம் உங்களது விருப்பங்களெல்லாம் ஈடேறிய பின்னர் கலங்காத உள்ளத்துடன், மோகமென்னும் பயங்கரமான பெருங்கடலிலிருந்து மற்ற மக்களை மீட்க முழு ஆற்றலுடன் நீங்கள் முயல வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும். வீரன்தான் முக்தியை எளிதில் எட்டிப்பிடித்து எய்த முடியும். கோழை அல்ல. வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள். மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது. “மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்” என்பது உண்மைதான்; சந்தேகமில்லை. இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும்.

மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் கிடக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள். “அச்சமற்றிரு” என்று வேதாந்தக் கொள்கை முரசடித்து உணர்த்துகிறது பாருங்கள்! கம்பீரமான அவ்வொலி உலகில் வாழ்கிற எல்லா மக்களுடைய உள்ளங்களிலுமுள்ள முடிச்சுச் செடுக்குகளை அவிழ்த்து விடட்டும்.

ஹிந்துக்களே! மயக்கந்தெளிந்து எழுங்கள் :

“உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத” – “எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நில்லாதே” என்று ஒவ்வொரு ஆத்மாவையும் அறைகூவி அழைப்போம். எழுங்கள்! பலவீனமாகிற இந்த மனமயக்கத்திலிருந்து எழுந்திருங்கள். உண்மையில் எவனுமே பலவீனனல்லன். ஆத்மா முடிவில்லாதது; சர்வசக்திதான், எல்லாம் உணர்ந்ததாகும். எழுந்து நில்லுங்கள். உங்கள் சுயசக்தியை வற்புறுத்துங்கள். உங்களுக்குள் உறைகிற தெய்வத்தைப் பிரகடனம் பண்ணுங்கள். அவரை மறக்காதீர்கள். அளவுக்கு மீறிய செயலின்மை, வரம்பு கடந்த பலவீனம், மிதமிஞ்சிய மோஹ மயக்கம் – இவை நமது இனத்தவரிடையே சூழ்ந்திருந்தது; இன்றும் சூழ்ந்துள்ளது.

இன்றைய ஹிந்துக்களே! தாமாகவே மயக்கந் தெளிந்து எழுந்திருங்கள். அதற்கான வழி உங்கள் புனித நூல்களில் காட்டப்பட்டுள்ளது. உங்களது உண்மையான ஸ்வரூபத்தை நீங்களே கற்றுணருங்கள்; ஒவ்வொருவருக்கும் அவரவர்களது ஸ்வரூபத்தைக் கற்பியுங்கள். உறங்குகிற ஆத்மாவை அறைகூவி அழையுங்கள். எப்படித்தான் அது விழித்தெழுகிறது பாருங்கள்! உறங்குகிற இந்த ஆத்மா விழித்தெழுந்து வேலை செய்யத் தொடங்கினால் சக்தி வரும்; புகழ் ஓங்கும்; நல்ல குணங்களெல்லாம் தோன்றும்; மிகச் சிறந்தவையெல்லாமே வந்தெய்தும்.

மீண்டும் இளமைத் துடிப்புப் பெற்ற, புகழ் ஓங்கிய பாரதம்:

வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை. அதில் எனக்கு அக்கறையுமில்லை. ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத் தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதனமான அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள். தனது அரியணையில் அமர்ந்திருக்கிறாள். மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள். சாந்தியும், அருளும் கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s