6. ஆட்சியாளர்கள் எப்படி பலவீனமடைந்தார்கள்?
சமுதாயத் தலைமை, அறிவு வலிமை உள்ளவர் களிடமோ, தோள் வலிமை உள்ளவர்களிடமோ, பண வலிமை உள்ளவர்களிடமோ யாரிடம் இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் குடிமக்களே. சமுதாயத் தலைவர்கள் எவ்வளவு தூரம் இந்த சக்தி மையத்திலிருந்து விலகி நிற்கிறார்களோ, அவ்வளவுதூரம் வலிமை குறைந்து விளங்குவார்கள். ஆனால் மாயையின் விசித்திர விளை யாட்டைப் பாருங்கள்- தெரியாமலோ, நேராகவோ, ஏமாற்றியோ, பலத்தினாலோ, தந்திரமாகவோ பணத்தாலோ இந்தச் சக்தி யாரிடமிருந்து எடுக்கப் படுகிறதோ, அவர்களிடமிருந்து தலைமை வகுப்பினர் விரைவில் அகன்றுவிடுகின்றனர். நாளடைவில் புரோகிதர்கள் சக்தியின் இருப்பிடமாகிய குடிமக்களிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்டனர். அதனால்தான் தற்காலிகமாக குடிமக்களின் பக்கபலம் பெற்றிருந்த அரச சக்தியிடம் அவர்கள் தோற்க நேர்ந்தது. பிறகு இந்த அரச சக்தியும் தனக்குப் பரிபூரண சுதந்திரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, தனக்கும் குடிமக்களுக்கும் இடையே கடப்பதற்குக் கடினமானதொரு பெரிய பிளவை உண்டாக்கியது. விளைவு? குடிமக்களின் பக்கபலத்தைச் சற்று அதிகமாகவே பெற்ற வைசியர்களால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள், அல்லது ப் அவர்களின் கைப்பொம்மை ஆனார்கள். வைசியர்கள் இப்போது தாங்கள் விரும்பியதை அடைந்துவிட்டார்கள். அவர்களும் குடிமக்களின் உதவி இனி தேவையில்லை என்று கருதி, அவர்களிடமிருந்து விலக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனவே வைசிய சக்தியுடைய அழிவின் விதையும் விதைக்கப்பட்டுவிட்டது.