தொண்டன் – சிறந்த தலைவன் 4

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.

உண்மையிலேயே வெற்றிகரமான வாழ்வின் ரகசியம்
அல்லது
‘வேலை’ செய்வதில் உள்ள விஞ்ஞான முறையும் கலையும்

உள்ளத்தையும் மூளையையும் உயர் லட்சியங்களால் நிரப்பி வையுங்கள் :

தசைகளின் மூலமாகச் சிறிதளவு சக்தியை வெளிப்படுத்துவதற்கு “வேலை” என்ற பெயர். ஆனால் சிந்தனை எங்கே இல்லையோ, அங்கே வேலையும் இராது. ஆகையால் உங்களது மூளையை உயர்ந்த சிந்தனைகளால், மகோன்னதமான லட்சியங்களால் நிரப்பி வையுங்கள். இரவும் பகலும் அவற்றை உங்கள் கண் முன் வையுங்கள்; அதிலிருந்து மகத்தான வேலை உருவாகி வெளிவரும்.

வானத்தை எல்லோரும் பார்க்க முடியும். நிலத்தில் ஊர்ந்து செல்கிற புழுவும் கூட நீலவானத்தைப் பார்க்கத்தான் செய்கிறது. ஆனால் வானத்திலிருந்து அது எவ்வளவு தூரத்திலிருக்கிறது பாருங்கள்! நமது லட்சியமும் அப்படித்தான் இருக்கிறது. அது நெடுந்தொலைவில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் நாம் அதனை அடைந்தே தான் தீர வேண்டும். ஈடு இணையற்ற மகோன்னதமான ஒரு லட்சியத்தை நாம் கண்டிப்பாக வைத்துக் கொள்ளத் தான் வேண்டும். துரதிர்ஷ்டவசமாகப் பெரும்பான்மையான மக்கள் தமது இருண்ட வாழ்க்கையில் எந்த ஒரு லட்சியமும் இன்றித் தட்டுத் தடுமாறி அலைகிறார்கள். லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள மனிதன் ஆயிரம் தவறுகள் இழைக்கிறான் என்றால் லட்சியமற்றவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்கிறான் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆகவே லட்சியம் ஒன்றை வைத்துக் கொள்வது மிக நல்லது. இந்த லட்சியத்தைப் பற்றி முடிந்த அளவு அதிகமாக நாம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அது நமது உள்ளங்களில் நுழைந்து, மூளைகளில் நுழைந்து, நமது இரத்தக் குழாய்களில் கூட நுழைந்து ஒவ்வொரு துளி இரத்தத்திலும் துடி துடிக்கிறவரையில், நமது உடலிலுள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் வியாபித்து நிற்கிற வரையில் லட்சியத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதைக் குறித்துத் தியானம் செய்யவேண்டும். உள்ளம் நிரம்பிப் பெருகும் போது வாய் பேசுகிறது. உள்ளம் நிரம்பிப் பெருகும் பொழுது கைகளும் வேலை செய்கின்றன.

முத்துச் சிப்பியைப் போல் இருங்கள் :

நீங்கள் முத்துச் சிப்பியைப் போல இருக்க வேண்டும். பாரத நாட்டில் அழகான ஒரு கற்பனைக் கதையுள்ளது. அதாவது சுவாதி நட்சத்திரம் உச்சமாக இருக்கும் பொழுது மழை பெய்து, அதிலிருந்து ஒரு மழைத்துளி சிப்பிக்குள் விழுந்தால், அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடுமாம். முத்துச் சிப்பிகளுக்கு இது தெரியும். சுவாதி நட்சத்திரம் பிரகாசிக்கும் பொழுது அவை மேலே வருகின்றன. அரியதான அந்த மழைத்துளியைப் பிடித்து வைத்துக் கொள்ள அன்று காத்திருக்கின்றன. அவற்றுக்குள்ளே ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன.

நாமும் அதுபோலவே இருக்க வேண்டும். முதலில் செவிகளால் கேட்க வேண்டும்; பிறகு புரிந்துகொள்ள வேண்டும்; அதன் பின்னர் மனத்தை அலைக்கழிக்கிற எல்லாக் காரியங்களையும் கைவிட்டுவிட்டு, வெளிக்கவர்ச்சிகளால் பாதிக்கப்படாதபடி மனக்கதவை மூடித் தாழிட்டு, அந்தப் பேருண்மையை நமக்குள்ளேயே வளர்த்துக் கொள்வதில் முழு மனத்துடன் ஈடுபட வேண்டும். ஒரு கருத்து புதுமையாக இருக்கிறது என்பதற்காக மட்டும் அதனை ஒப்புக்கொண்டு ஏற்று வேலை செய்து விட்டு அதை விடப் புதிதாக வேறு ஒன்று கிடைத்ததும் பழையதைக் கைவிடுவதால் உனது சக்தியை வீணடித்து விடுவாய். இது அபாயகரமானது. ஒரே வேலையை ஏற்றெடுத்துக்கொள். அதனைச் செய். அந்த வேலையை இறுதி வரையில் செய். முடிவைக் காண்பதற்கு முன்னால் அதனைக் கைவிடாதே. ஒரே ஒரு கருத்துக்குத் தனது மனத்தைப் பறிகொடுத்துவிட்டுப் பைத்தியமாக ஆகக்கூடிய மனிதன் மட்டுந்தான் இறுதி ஒளியைக் காண்பான். இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக வாய் வைத்து மேய்கிறவன் ஒரு நாளும் எதையும் எய்தமாட்டான். அவ்வாறு செய்வதால் அவனுக்குச் சிறிதளவு உற்சாகக் கிளுகிளுப்பு ஏற்படலாம், ஆனால் அத்துடன் அது மாய்ந்து போகும்…..

… ஒரு கருத்தை ஏற்றுக்கொள். அந்த ஒரு கருத்தை உனது வாழ்வாக மாற்றிக் கொண்டு விடு. பிறகு அதைப் பற்றியே சிந்தனை செய்ய வேண்டும். அதைப் பற்றியே கனாக்காண வேண்டும்; அந்தக் கருத்தைக் கொண்டே உயிர் வாழவேண்டும். உனது மூளை, தசைகள், நரம்புகள், உனது உடலின் உறுப்புக்கள் இவையெல்லாம் அந்தக் கருத்தால் நிரம்பி விடட்டும்; மற்றெல்லாக் கருத்துக்களையும் அப்படியே கைவிட்டு விடு. வெற்றிக்கு இதுவே வழி. ஆத்மிகச் சிங்கங்கள் இந்த வழிமுறை மூலம்தான் உண்டாக்கப்படுகிறார்கள். மற்ற மக்கள் எல்லோரும் பேசுகிற வெறும் இயந்திரங்கள்தான்……

……… வெற்றி பெற வேண்டுமானால் உங்களுக்கு அபாரமான விடாமுயற்சியும், அபாரமான மன வலிமையும் இருக்க வேண்டும். இடைவிடாது முயற்சி செய்கின்ற ஓர் ஆத்மா, “நான் கடல் நீர் முழுவதையும் குடித்து விடுவேன். எனது மனோ வலிமையால் மலைகளைப் பொடிப் பொடியாக்கி விடுவேன்” என்று கூறுகிறது. அத்தகைய சக்தித் துடிப்பும், அத்தகைய மனோசக்தியும் பூணுங்கள். கஷ்டப்பட்டுவேலை செய்யுங்கள். நீங்கள் குறிக்கோளைக் கண்டிப்பாக எய்தி விடுவீர்கள்.


மகாவீரர் உங்கள் லட்சியமாகட்டும் :

மகாவீர ஹனுமானின் ஒழுக்கப்பண்பினை உங்களது லட்சியமாக நீங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். ராமச்சந்திரரின் ஆணையால் அவர் எவ்வாறு கடலைக் கடந்தார் என்பதைப் பாருங்கள். வாழ்வையோ சாவையோ பற்றி அர் ஒரு சிறிதும் அக்கறைப்படவில்லை. புலன்களனைத்தும் அவர் வசப்பட்டிருந்தன. ஆச்சரியகரமான விவேகி அவர். தனி ஒரு மனிதனுக்கு எப்படித் தொண்டாற்ற வேண்டும் என்பதற்குப் பெரும் உதாரணமாக விளங்கிய அவரது வாழ்க்கையை ஒட்டி நீங்கள் உங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஒன்றிலிருந்து மற்ற எல்லா லட்சியங்களும் படிப்படியாக உங்கள் வாழ்வில் வெளித் தோன்றும். மறு பேச்சின்றி குருவுக்குக் கீழ்ப்படிவது, பிரம்மசரியத்தைக் கடுமையாகக் கடைப்பிடிப்பது, இது தான் வெற்றியடைவதன் ரகசியம். தொண்டாற்றுகிற லட்சியத்தை ஹனுமான் தமது வாழ்வின் ஒரு பக்கத்தில் பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம் என்றால் மறுபுறம் சிங்கத்தை ஒத்த அவரது தைரிய உணர்ச்சி உலகத்தை பிரமிப்படைய வைக்கிறது. ராமருடைய நன்மைக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வதில் அவருக்கு எள்ளளவும் தயக்கமில்லை. ராம சேவையைத் தவிர மற்ற அனைத்திடமும் அவருக்குத் தினையளவும் அக்கறை கிடையாது. பிரம்ம பதவி, சிவபதவி, அல்லது உலக தேவதைகளின் பதவி கிடைப்பது பற்றிக் கூட அவருக்கு அக்கறையே இல்லை. ஸ்ரீராமனின் கட்டளையை நிறைவேற்றுகிற ஒரு காரியம் மாத்திரமே அவரது வாழ்க்கையின் விரதமாகும். அத்தகைய முழுமனமுள்ள பூரண பக்தியே நமக்குத் தேவை.

தேடுங்கள் : உங்களுக்குக் கிடைக்கும்,

சோம்பேறியான வழிப்போக்கன் ஒருவன் ஒருநாள் ஒரு வீதி வழியே மெல்லப் போய்கொண்டிருந்தான். ஒரு கிழவர் தம் வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான், உடனே அங்கு நின்று அவரிடம் ஒரு குறிப்பிட்ட கிராமம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்று தயங்கியவாறே கேட்டான். “பெரியவரே! இன்ன கிராமம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது?” என்று வினவினான். கிழவர் பதில் அளிக்கவில்லை . பல தடவை அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டான். பிறகும் பதிலில்லை. அலுத்துப்போய் அவன் தன் வழியே நடக்கத் தொடங்கினான். உடனே கிழவர் எழுந்து நின்று “நீ கேட்கிற கிராமம் இங்கிருந்து ஒரு மைல் தூரத்தில்தான் உள்ளது” என்றார். உடனே வழிப் போக்கன் “ஏன்? இதற்கு முன்னர் உங்களிடம் கேட்டபோது நீர் ஏன் பேசவில்லை ?” என்று வினவினான். அதற்கு மறுமொழியாகக் கிழவர், “ஏனெனில் அப்பொழுது தயங்கித் தடுமாறிக் கொண்டு அந்த ஊருக்குப் போவது பற்றி அக்கறையின்றி நீ காணப்பட்டாய். ஆனால் இப்பொழுது நல்ல உறுதியுடன் புறப்பட்டு விட்டாய். பதில் பெறுவதற்கு உனக்கு உரிமையுண்டு” என்றார்.

என் மகனே! இக்கதையை நீ நினைவிற் கொள்வாயா? வேலை செய்யப் போ. மற்றவை எல்லாம் வரும்.

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் (கீதை 9, சு 22.)

“என்னைத் தவிர வேறு எதனையும் எண்ணாமல் என்னிலே உறைந்து என்னையே சார்ந்து வாழ்கிறவனுக்குத் தேவைப்படுகிற அனைத்தையும் நான் அளித்துவிடுகிறேன்.”

…..கிறிஸ்துவின் சொற்களை நினைவிற் கொள்ளுங்கள்: “கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அது உங்களுக்குக் கிடைக்கும். தட்டுங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும்” இதில் ஒவ்வோர் எழுத்தும் உண்மைதான். அது வெறும் சொல் அலங்காரமோ, கற்பனையோ அல்ல….

……. நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவைதான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், “கண்கள்” என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது. ஒளி இருந்திருக்கவில்லையென்றால் உங்களுக்குக் கண்களே இருந்திருக்காது. ஒலிதான் காதுகளை உண்டாக்கியது. உறுப்புத் தோன்றுவதற்கு முன் உணர வேண்டிய பொருள் முதலிலே தோன்றியிருந்தது.

கேளுங்கள், அது கொடுக்கப்படும்

….. ஒரு விருப்பத்துக்கும் வேறொரு விருப்பத்துக்குமிடையே வேறுபாடு உண்டென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு சிஷ்யன் தன் குருவிடம் சென்றான். “ஐயனே! எனக்குச் சமயம் வேண்டும்” என்று கூறினான். குருநாதன் அந்த இளைஞனைப் பார்த்தார். ஒன்றும் பேசாமல் சற்றே சிரித்தார். அந்த இளைஞன் தினமும் வருவான். சமயம் வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வான். ஆனால் அந்த இளைஞனைவிடப் பெரியவருக்கு விஷயங்களெல்லாம் நன்கு தெரியும். ஒரு நாள் உஷ்ணம் அதிகமாக இருந்தது. ஆற்றுக்குப்போய் குளித்து விட்டு வரலாமென்று அந்த இளைஞனைப் பெரியவர் அழைத்துப் போனார். ஆற்றுக்குப் போனதும் இளைஞன் நீரில் மூழ்கினான். பெரியவர் அவனைப் பின் தொடர்ந்தே சென்று அவன் தண்ணீருக்குள் இருக்கும் பொழுது அவனை அழுத்தி வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அந்த இளைஞன் திக்குமுக்காடித் துடித்த பிறகு அவனை விட்டு விட்டார். “தண்ணீருக்குள் இருந்தபோது நீ மிக முக்கியமாக எதை விரும்பினாய்?” என்று கேட்டார். “ஒரு தடவை மூச்சு இழுத்து விடுவதற்காகக் காற்றை விரும்பினேன்” என்று பதிலளித்தான் சிஷ்யன். “அந்த அளவு தீவிரத்துடன் நீ கடவுளைக் காண வேண்டுமென விரும்புகிறாயா? அப்படி விரும்பினால் ஒரு கணத்திலேயே அவனை அடைவாய்” என்று குரு கூறினார். “அத்தகைய தாகம், அத்தகைய தீவிர விருப்பம், இல்லையேல் சமயம் உனக்குக் கிடைக்காது. உனது மூளை, அறிவு, உனது புத்தகங்கள், உனது அமைப்பு முறைகள் இவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நீ எவ்வளவுதான் போராடினாலும் உனக்குச் சமயம் கிடைக்காது” என்றார் குரு.

புத்தரைப் போன்று உணர்ச்சி கொள்ளுங்கள்: அவரைப் போலவே ஆகிவிடுவீர்கள் :

……மனப்பூர்வமாக மற்றவர்களைப் பற்றிய உணர்ச்சி உனக்கு உள்ளதா? உணருகிறாய் என்றால் நீ ஒருமையை நோக்கி வளர்ந்து செல்கிறாய். பிறர்பொருட்டு நீ மனவெழுச்சி கொள்ளாவிட்டால், உலகில் பிறந்த அறிவாளிகளில் நீ மிகமிகப் பெரியவனாக இருந்தாலும்கூட, நீ ஒன்றுமில்லாத பூஜ்யம்தான். நீ வெறும் வறட்டு அறிவாளி; நீ அப்படியேதான் வாழ்வாய்…..

தீர்க்கதரிசிகளுடைய சக்தி எங்கே உறைந்துள்ளதென்று நீ உலக வரலாற்றிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறாயா? எங்கு இருந்தது? அறிவுத் திறமையிலா? அவர்களில் எவராவது ஒரு புத்தகத்தையோ, தத்துவ சாஸ்திரத்தையோ, மிக நுணுக்கமான அநுமானங்களுடன் கூடிய தர்க்க சாஸ்திரத்தையோ இயற்றியிருக்கிறார்களா? ஒருவர் கூட அவ்வாறு எழுதவில்லை. அவர்கள் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசினார்கள். கிறிஸ்துவைப் போன்ற மனப் பூர்வமான உணர்ச்சி கொண்டால் நீ கிறிஸ்து ஆவாய். புத்தரைப் போன்ற ஆழ்ந்த உணர்ச்சி கொண்டால் நீ புத்தராக ஆவாய்; இதய பூர்வமான உணர்ச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறமையைக் கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது. அறிவு என்பது நடமாடும் சக்தியில்லாத உடல் உறுப்புக்களைப் போன்றதாகும். அவற்றினுள்ளே உணர்ச்சியானது புகுந்து அவற்றை நடமாட வைக்கும்பொழுதுதான் அவை அசைந்து கொடுத்து வேலை செய்கின்றன. உலகம் முழுவதும் இதுவே நிலை; இதனை நீங்கள் எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும்………

வால்மீகியின் முதற் பாட்டு-தீவிரமான இரக்க உணர்ச்சியிலிருந்து தோன்றிற்று :

……மகரிஷியான வால்மீகி புனித கங்கா நதியில் நீராடுவதற்காக ஒரு நாள் சென்ற போது ஒரு புறா ஜோடியானது வானத்தில் வட்டமிட்டுப் பறந்து கொண்டே ஒன்றையொன்று முத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தது. மகரிஷி மேலே பார்த்தார். அக் காட்சியால் மனங்களித்தார். ஆனால் மறுகணமே அவரைத் தாண்டிப் பாய்ந்து சென்ற ஓர் அம்பு ஆண் புறாவின் மீது தைத்து அதனை உடனே கொன்றது. புறா செத்துத் தரை மீது விழுந்ததும் பெண்புறா, ஆண் புறாவின் சடலத்தைச் சுற்றிச் சுற்றித் துக்கத்துடன் வட்டமிட்டுப் பறந்தது. ஒரு கணத்துக்குள் மகரிஷிக்குச் சகிக்க முடியாத துக்கம் மூண்டு விட்டது. திரும்பி அந்த வேடனை நோக்கினார்.

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாச்வதீஸ் ஸமா:
யத் க்ரௌஞ்ச மிதுனாதேக மவதீ: காம மோஹிதம்.

(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம்)

”நீ ஈவிரக்கம் சிறிதுமற்ற ஒரு கொலை பாதகன். அன்பைக்கண்டும்கூட உனது கொலைக்கரம் நிற்கவில்லையே?” என்று கதறினார்.

‘இது என்ன? நான் என்ன பேசுகிறேன்?’ என்ற கவி தமக்குள்ளேயே சிந்தித்தார். “இதுபோல இதற்கு முன்னர் நான் பேசியதே கிடையாதே?’ என்று எண்ணமிடலானார். உடனே அசரீரி வாக்கு ஒலித்தது, “அஞ்சாதே; உன் வாக்கிலிருந்து வெளிவருவது கவியாகும். உலக நன்மைக்காக ராம சரித்திரத்தைக் கவிதையாக எழுது” என்று கட்டளை பிறந்தது. முதற் கவிதை இப்படித்தான் துவங்கியது. ஆதி கவியான வால்மீகியின் வாயிலிருந்து புறப்பட்ட முதற்கவிதை தீவிரமான இரக்க உணர்ச்சியின் காரணமாக எழுந்தது. அதற்குப் பிறகுதான் ராமனின் சரித்திரமாகிய அழகொழுகும் ராமாயணத்தை அவர் இயற்றினார்.


சரியான நோக்கு :

…… நீ செய்கிற நற்பணியெல்லாம் உனக்காக, உனது சொந்த நலனுக்காகத் தான். நீயும் நானும் போய்த் தூக்கி விடுவோம் என்று எதிர்பார்த்துக் கடவுள் சாக்கடையில் ஒன்றும் விழுந்து கிடக்கவில்லை. ஆஸ்பத்திரியையோ அல்லது வேறு ஒன்றையோ கட்டிவிட்டு அவருக்கு நாம் உபகாரம் செய்துவிட்டதாக எதுவும் எண்ணவேண்டாம். வேலை செய்ய அவர் உன்னை அனுமதிக்கிறார். உலகமாகிற இந்தப் பெரிய உடற்பயிற்சிக் கூடத்தில் உன் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொள்ள அவர் அனுமதியளித்திருக்கிறார். தனக்கு உபகாரமாக இருப்பதற்கு அல்ல. நீயே உனக்கு உதவி பண்ணிக் கொள்ளலாம் என்பதற்காகக் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். நீ உதவி பண்ணா விட்டால் அதற்காக ஓர் எறும்பாவது செத்துப் போகும் என்று நீ நினைக்கிறாயா? நினைத்தால் அது மகா மோசமான தெய்வ நிந்தனையாகும்….

… இறைவனுக்காக வேலை செய்கிற வாய்ப்பான பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் அவருக்கு உதவியெதுவும் செய்யவில்லை. உங்களுடைய மனத்திலிருந்து உதவி என்ற சொல்லை அகற்றிவிடுங்கள், உங்களால் உதவி பண்ணவே முடியாது. உதவி பண்ணுவது என்பது தெய்வ நிந்தனையாகும்.

அவரை வழிபட நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உலகத்துக்கு முன்னே அத்தகைய பக்தி வணக்கத்துடன் நில். அப்பொழுது பூரணமான பற்றின்மைக் குணம் உனக்குக் கிடைக்கும். இதுவே. உனது கடமை. வேலை செய்யும் போது கொள்ள வேண்டிய சரியான நோக்கு இது. கர்ம யோகம் கற்பிக்கிற ரகசியம் இதுதான்.


சுயநலமின்றி வேலை செய்பவனே மிக உயர்ந்த மகிழ்வடைவான்

பிச்சைக்காரனுக்கு ஒரு போதும் மகிழ்வே இல்லை. பிச்சைக் காரனுக்குக் கிடைக்கிற பிச்சையில் பரிதாப உணர்ச்சியும், ஏளனமும் கலந்திருக்கும் அல்லது குறைந்த பட்சமாக ‘இந்தப் பிச்சைக்காரன் மட்டமானவன்’ என்ற எண்ணமாவது அதில் தொக்கி நிற்கும். தனக்குக் கிடைப்பதை அவன் ஒருகாலும் உண்மையான மகிழ்வுடன் அநுபவிக்க முடியாது.

நாமெல்லாம் பிச்சைக்காரர்கள். நாம் எதைச் செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாமெல்லாம் வியாபாரிகள். வாழ்க்கையை, நல்ல குணங்களை, சமயத்தை நாம் விலை பேசுகிறோம். அந்தோ! அன்பைக்கூட நாம் வியாபாரம் பண்ணுகிறோமே!

வியாபாரத்துக்காக நீ வந்தால், கொடுக்கல் வாங்கல் பேரம் பண்ணுவதானால், வாங்கி விற்கிற காரியம் செய்வதானால், வாங்குதல் விற்பனை இவற்றுக்கான சட்டங்களுக்கு உட்பட வேண்டும். வியாபாரத்தில் நல்ல காலமும் பொல்லாத காலமும் உண்டு; விலையில் ஏற்றமும் சரிவும் உண்டு. லாபமே கிடைக்குமென்று எப்பொழுதும் எதிர்பார்க்கிறாய்! இது கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்துக் கொள்வது போன்றது. அதில் உன்முகம் பிரதிபலிக்கிறது. நீ வெறுப்புடன் முகத்தைச் சுளித்தால், கண்ணாடியிலும் அதுவே தெரியும். நீ சிரித்தால் கண்ணாடியும் சிரிக்கும். இதுதான் வாங்குவதும் விற்பதும், கொடுக்கலும் வாங்கலும்.

நாம் சிக்கிப் பிடிபடுகிறோம். எப்படி? நாம் கொடுப்பதனால் பிடிபடுவதில்லை. திரும்பப் பலனை எதிர்பார்ப்பதனால் தான் பிடிபடுகிறோம். நாம் அன்பு காட்டிவிட்டு அதற்குப் பதிலாகத் துன்பத்தை அடைகிறோம். அது நாம் அன்பு காட்டுகிற காரணத்தால் அல்ல. நாம் திரும்ப அன்பைப் பெற எதிர்பார்ப்பதால்தான். எங்கே தேவை, விருப்பம் இல்லையோ அங்கே துன்பமில்லை. விருப்பம், தேவை – இது தான் எல்லாத் துன்பங்களுக்கும் தந்தையாகும். விருப்பங்களெல்லாம் வெற்றி தோல்விச் சட்டங்களால் கட்டுண்டு கிடப்பவையாகும். விருப்பம் துன்பத்தை உடன் கொண்டு வந்தே தீரும்.

… துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்கள் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிடப் பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப் படுகிறார்கள். “மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் ஆசையாகும்!” என்று நீ படித்ததில்லையா?…

“…நான் பணிக்காகப் பணி புரிகிறேன்” என்று கூறுவதைவிட எளிய காரியம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த நிலையை அடைவதைவிடக் கடினமானது வேறொன்றுமில்லை. வேலைக்காகவே வேலை செய்கிற ஒரு மனிதனின் திருமுகத்தைக் காண நான் கைகால்களை மண்டி போட்டுத் தவழ்ந்து இருபது மைல் தூரம் போக ஆயத்தமாக இருக்கிறேன். எங்கேயோ ஒரு உந்து சக்தி அவருக்கிருக்கிறது. அவருக்குப் பண ஆசையில்லையென்றால் அதிகார ஆசை இருக்கும். அதிகார ஆசை இல்லையென்றால் லாப நோக்கமிருக்கும். எப்படியோ, எங்கேயோ ஒரு உந்து சக்தி மறைந்திருக்கிறது.

….இவ்வாறாக ஓர் உள்காரணத்தை மனத்திற் கொண்டு செய்கிற வேலை துன்பத்தைக் கொண்டு வருகிறது. எந்த வேலையை நமது மனத்துக்கு நாமே அதிபதியாக நாம் செய்கிறோமோ அந்த வேலை மட்டுமே பற்றின்மையையும், ஆனந்தத்தையும் கொடுக்கும்.


சுயநலமின்றி வேலை செய்கிறவனே மிகச் சிறப்பாக வேலை செய்கிறான்.

… ஏதாவது ஓர் உள் நோக்கம் இன்றி வேலை செய்ய முடியாது என்று பல பேர்கள் கூறியுள்ளார்கள். மூர்க்கமான வெறிக்குணத்தினால் ஆட்கொள்ளப்பட்டு மனிதர்கள் வேலை செய்வதை அவர்கள் கண்டிக்கிறார்கள். அதைத் தவிர சுயநல எண்ணமின்றி வேலை செய்வதை அவர்கள் பார்த்ததே இல்லை. ஆகவேதான் இவ்வாறு பேசுகிறார்கள்.

…..பண ஆசையோ, புகழ் ஆசையோ வேறெந்த ஆசையோ இன்றி, எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், வேலை செய்கிறவன்தான் மிகச் சிறப்பாக வேலை செய்ய முடியும். அவ்வாறு ஒரு மனிதனால் செய்ய முடியும்பொழுது அவன் ஒரு புத்தனாக ஆகிவிடுவான். அத்தகைய மனிதனிடமிருந்து உலகத்தையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை தோன்றும். இந்த மனிதன் கர்மயோகத்தினுடைய மகோன்னதமான லட்சியத்தைப் பிரதிபலிக்கிறான்.

….” கடவுளைப் பற்றி நீ கொண்டிருக்கிற பல்வேறு விதமான கருத்துக்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆத்மாவைப் பற்றி நுணுக்கமான கோட்பாடுகளை யெல்லாம் விவாதிப்பதால் என்ன பயன்? நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்,” என்று கூறிய தேவ புருஷர் புத்தர் ஒருவர்தான். அவர் தமது வாழ்க்கையில் தினையளவும் சுயலாப நோக்கமின்றி வாழ்ந்தார். அவரைவிட யார்தான் அதிகமாக வேலை செய்தார்கள்? எல்லோரையும்விட மிக உயர்ந்த நிலைக்குப் புத்தரைப் போல மேலே சென்றுள்ள ஒரு மனிதனையேனும் சரித்திரத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்…

…அவர் தான் லட்சிய நிலையை எய்தின உதாரண புருஷரான கர்மயோகி. சிறிதும் உள்நோக்கமின்றி வேலை செய்தவர் அவர். உலகில் பிறந்த மாந்தருள் தலையாயவர் அவர் என்பதை மனிதகுல வரலாறு காட்டுகிறது. உணர்ச்சி மயமான உள்ளமும் கூர்மையான புத்தியும் அவரிடம் இணைந்து கலந்து திகழ்ந்தன. அதற்கு ஒப்புவமையே கிடையாது. உலகில் வெளிப்பட்ட ஆத்ம சக்தி அவருடையதாக இருந்தது.

….கடலிலிருந்து சூரியன் நீரை உறிஞ்சி எடுக்கிறான்- திருப்பித் தருவதற்காக. பெறுவதற்கும் தருவதற்குமாக அமைந்த இயந்திரம் நீ. கொடுப்பதற்காக நீ வாங்குகிறாய். ஆகவே பிரதிபலனாக எதனையும் கேட்காதே. ஆனால் நீ எவ்வளவுக்கு அதிகமாகக் கொடுக்கிறாயோ அவ்வளவு அதிகம் உனக்கும் கிடைக்கும். இந்த அறைக்குள்ளிருக்கும் காற்றை நீ எவ்வளவு விரைவாகக் காலி பண்ணுகிறாயோ, அதே வேகத்துடன் வெளிக்காற்றால் இந்த அறை நிரம்பிப் போகும். ஆனால் நீ எல்லாக் கதவுகளையும் மூடி, சந்துகளையெல்லாம் அடைத்து வைப்பாயானால் உள்ளே இருப்பது அப்படியே இருக்கும். ஆயின் வெளியிலிருப்பது ஒரு போதும் உள்ளே வராது. அத்துடன் உள்ளேயிருப்பது தேங்கிப் போய், இழிந்து விஷமயம் ஆகிவிடும். நதியானது தொடர்ந்தாற் போலக் கடலுக்குள் சென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து அது நிறைவு பெற்றுக் கொண்டேயிருக்கிறது. கடலுக்குள்ளே நுழைவதைத் தடுக்காதே; தடுத்தால் அக்கணமே மடிந்து போவாய்.


சுயநலமின்றி வேலை செய்கிறவனே மிக உயர்ந்த வெற்றியைப் பெறுகிறான் :

பற்றுணர்ச்சிதான் மனிதனுக்குத் தளை ஆகிறது. மனித குலத்துக்கும், இயற்கைக்கும் பற்றற்ற நிலையில் சமர்ப்பணம் செய்யப்படுகிற வேலைதான், எந்த விதமான தளையையும் உடன் கொண்டு வருவதில்லை .

சுதந்திரமாகவும் அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது, வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அது போலத்தான் வாழ்க்கையெல்லாம். பொது வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். மேடைப் பேச்சாளனுக்குக் கொஞ்சம் கைதட்டலும் ஆரவாரக் கூச்சலும் எதிர்ப்பும் தேவைப்படுகிறது. அதெல்லாம் இன்றி அவனை ஒரு மூலையில் இருத்தினால் அவனைக் கொன்று விடுவீர்கள். ஏனெனில் அது அவனுக்குத் தேவையாகும். இதுதான் அடிமைத் தனத்தின் மூலம் வேலை செய்வதாகும். இத்தகைய சூழ்நிலையில் எதையாவது பிரதிபலனாக எதிர்பார்ப்பது சுபாவமாக ஆகிவிடுகிறது.

வெற்றி முகமாக உள்ள ஒரு மனிதனுக்குப் பின்னணியில் எங்கேயோ ஓர் இடத்தில் அபாரமான நேர்மைக் குணமும் அபாரமான நாணயமும், இருந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் அவன் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு அதுவே காரணம். பூரணமாக அவன் சுயநலமற்றவனாக இல்லாமற் போகலாம். இருப்பினும் அந்நிலையை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கிறான். பரிபூரணமாகவே அவன் சுயநலமற்றிருந்தால் புத்தரைப் போலவோ, கிறிஸ்துவைப் போலவோ அவனும் மகா புருஷனாகியிருக்க முடியும்; எங்கு நோக்கினாலும் சுயநலமின்மையின் தரத்தைப் பொறுத்துத்தான் வெற்றியின் தரமும் அமைகிறது.

உண்மையான வெற்றிக்கு, உண்மையான மகிழ்வுக்கு மகத்தான ரகசியம் இதுதான். பிரதிபலனாக எதையும் கோராத மனிதன்தான், பூரணமாகச் சுயநலமற்ற மனிதன்தான் மாபெரும் வெற்றியை அடைகிறான். ஆனால் அத்துடன் அதுவும் பொருத்தமற்றதொரு புதிராகவும் தோன்றுகிறது. வாழ்க்கையில் சுயநமில்லாத மனிதன் ஏமாற்றப்படுவதையும் நாம் பார்க்கிறோமே! மேல் போக்காகப் பார்த்தால் அது உண்மைதான். கிறிஸ்து சுயநலமற்றவராயிருந்தார். ஆயினும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். அது உண்மையேதான். ஆனால் அவரது சுயநலமின்மைதான் மகத்தானதொரு வெற்றிக்குக் காரணமாக, மூலமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். தமது உண்மையான வெற்றியின் அருளாசியால் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் உயர்வளித்தார்.

குறுகிய நோக்கமான ‘நான்’ என்ற உணர்ச்சியைக் கைவிடுக:

ஒரு மனிதன் யோகத்தின் மூலமாக வேலை செய்யும்போது ‘நான் இதைச் செய்கிறேன். அதைச் செய்கிறேன்’ என்ற எண்ணம் ஒரு போதும் தோன்றாது. மேல் நாட்டு மக்கள் இதை ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை. “நான்” என்ற தன்மையுணர்ச்சி போய் விட்டால், அகங்காரம்-மமகாரம் போனால், ஒரு மனிதன் எப்படித்தான் வேலைசெய்ய முடியும் என்று கேட்கிறார்கள். தன்னைப் பற்றிய நினைப்பையே இழந்து, ஒரு மனிதன் கவனமும் கருத்தும் குவிந்து, வேலை செய்வானாயின் அவன் செய்கிற வேலை எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். இந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் காணலாம்.

நமக்குத் தெரியாமலே நாம் பல காரியங்களைச் செய்கிறோம். உதாரணமாக உணவைத் தெரியாமலே ஜீரணிக்கிறோம். இன்னும் பலவற்றை நினைவோடு செய்கிறோம். மற்றவற்றைச் சமாதி நிலையில் மூழ்கினாற் போலச் செய்கிறோம். அந்நிலையில் நமது சிறிய அகங்காரத்துக்கு இடமில்லை.

ஓவியந் தீட்டுகிறவன், தான் என்ற அகங்காரத்தை இழந்துவிட்டுத் தனது ஓவியத்தில் முற்றிலும் மூழ்கி விடுவானாயின், அவனால் மிக உத்தமமான ஓவியங்களைத் தீட்டமுடியும்….யோகத்தின் மூலம் இறைவனுடன் ஒன்றி விட்ட மனிதன், எல்லாச் செயல்களையும் மனங்குவிந்து தியானத்தில் மூழ்கிச் செய்வான். தன்னலம் எதனையும் கருதமாட்டான். அத்தகைய வேலை நடப்பதன் மூலம் உலகத்துக்கு நன்மையேதான் ஏற்படுமே தவிர, தீமை எதுவும் தோன்றாது……எல்லாக் காரியங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டுமென்று கீதை உபதேசிக்கிறது.

நம்மை உள்ளே போட்டு அடைத்து வைக்கிற உடையாத நெடுஞ்சுவர் ‘அகங்காரம்’ தான். “நான் இதைச் செய்கிறேன். அதைச் செய்கிறேன். எல்லாவற்றையும் செய்கிறேன்” என்று எல்லாவற்றுக்கும் நம்மையே சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம்.

சோனியாக இருக்கிற இந்த ‘நான்’ என்ற தன்மையை ஒழித்து விடுக. நம்முள் இருக்கிற இந்த பேயைச் சாகடித்துவிட வேண்டும். “நான் அல்ல. நீங்கள்தான்.” இதனை எப்பொழுதும் கூறுக. உணருக, வாழ்ந்து காட்டுக. “நான்” என்னும் அகங்காரம் உள்ள உலகத்தை நாம் துறந்து கைவிட்டாலன்றி, சுவர்க்க சாம்ராஜ்யத்தினுள் ஒரு போதும் நுழைய முடியாது.

…… மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டுவிடுவார்கள். “நான்” “எனது” என்று அவர்கள் ஒருபோதும் சொல்லுவதில்லை; கருவியாக இருப்பதே பெரும் பாக்யம் என்று வாழ்வார்கள். புத்தர்களையும் கிறிஸ்துக்களையும் நிர்மாணிக்கிறவர்கள் இத்தகையவர்களே…

……. அவர்களெல்லாம் முழுவதும் கொள்கையின் வடிவங்கள்தாம்; மனிதர்களல்ல.

…கடவுள் தம்மை முற்றிலும் மறைத்துக் கொண்டுள்ளார். அவரது வேலையும் இணையற்று உள்ளது. ஆகவே யாரால் தன்னை முற்றிலும் மறைத்துக் கொள்ள முடியுமோ அவரது சாதனை அபாரமானதாக ஆகிறது. உனது அகங்காரத்தை ஜயித்து விடு; பிறகு உலகமெல்லாம் உன்னுடையதாகிவிடும்.

அதிர்ஷ்டத்தின் ரகசியம் :

…..எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாதவனுக்கு எல்லாம் வந்து சேருகிறது. அதிருஷ்டம் ஒரு மாய சரசக்காரியைப் போல. அவளை யார் விரும்புகிறார்களோ, அவர்களை அவள் லட்சியம் பண்ண மாட்டாள்… யாருக்குப் பணத்தைப் பற்றிக் கவலையே இல்லையோ, அவன் மீது பணம் மழை போலப் பொழிகிறது. அது போலத்தான் புகழும் ஒரு தொல்லையாக, பளுவாக ஆகிவிடும் அளவுக்கு வந்த சேருகிறது. அவற்றை வென்றவனிடம்தான் அவை வருகின்றன. அடிமைக்கு ஒருபோதும் எதுவுமே கிடைக்காது. உலகத்திலிருக்கிற அற்பத்தனமான, முட்டாள்தனமான வஸ்துக்களை நம்பி எதிர்பார்த்து எவர் வாழவில்லையோ, அவை இன்றியே எவரால் வாழ முடியுமோ, அவர்தான் எஜமானராக இருப்பார். ஒரு லட்சியத்துக்காக, அந்த ஒரே லட்சியத்துக்காக வாழ வேண்டும். அந்த லட்சியம் மிகப் பெரியதாக, மிக்க பலம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்; மனத்தில் அதைத் தவிர வேறு எதற்கும் இடமிராத அளவுக்கு அது வியாபித்து இருக்கவேண்டும். வேறு எதற்கும் நேரமிருக்கக் கூடாது, வேறெதற்கும் இடமிருக்கக் கூடாது.

கருவிக்கும் அதே அளவு முக்யத்துவம் கொடுக்க வேண்டும்:

ஒரு வேலையின் குறிக்கோளைப் பற்றி எவ்வளவு கவனம் செலுத்துவோமோ, அதே அளவு கவனம் அதை அடையும் வழிமுறை பற்றியும் செலுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் நான் கற்ற மிகப் பெரிய படிப்பினைகளில் இது ஒன்று ஆகும்… முடிவைப்பற்றிக் கவலைப்படுவது போல, வழி முறையைப் பற்றியும் கவலைப் படவேண்டும். வெற்றி பெறுவதற்கான ரகசியம் இதுதான்.

நமது வாழ்க்கையிலுள்ள ஒரு பெரும் கேடு என்னவெனில் நாம் லட்சியத்தினால் மிகத் தீவிரமாகக் கவரப்படுகிறோம்; குறிக்கோள் நமக்கு மயக்க வெறியூட்டுகிறது. நமக்குப் போதையளிக்கிறது. நமது மனம் முழுவதையும் சூழ்ந்துகொண்டு விடுகிறது; அதன் காரணமாக அந்த லட்சியத்தை எய்துவதற்கான நுண்ணிய விவரங்கள் நமது பார்வையில் அடியோடு தென்படுவதேயில்லை.

ஆனால் தோல்வி ஏற்படும்போதெல்லாம் அதற்கான காரணத்தை நாம் நுட்பமாக அலசி ஆராய்ந்தால் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சந்தர்ப்பங்களில், நாம் அவ்வேலையைச் செய்ய வேண்டிய வழிமுறை பற்றிக் கவனம் செலுத்தாமற் போனதே காரணம் என்பது தெரியவரும். கடைப்பிடிக்க வேண்டிய பாதையை, பயன்படுத்த வேண்டிய கருவியை, நன்கு செவ்வனே தயாரிப்பதிலும் அதனைப் பலப்படுத்துவதிலும் தக்க கவனத்தை நாம் செலுத்துவதுதான் தேவையாகும். வழி சரியாக இருந்தால் முடிவு தானே தேடிவரும். காரணம்தான் காரியத்தை உண்டாக்குகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். பலன் தானே ஏற்படாது. காரணங்கள் திட்டவட்டமானதாக, பொருத்தமானதாக, ஆற்றல் வாய்ந்ததாக இருந்தால் ஒழியப் பலன் ஏற்படாது. ஒரு தடவை லட்சியத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு, வழி முறைகளைத் தீர்மானித்து விட்டால், லட்சியத்தை அநேகமாக நாம் மறந்தே விடலாம்; ஏனெனில் வழிமுறையானது அப்பழுக்கற்றிருக்குமாயின் லட்சியத்தைக் கடைசியில் நிச்சயமாக அடைந்தே தீருவோம். காரணம் சரியாக இருக்குமாயின் காரியத்தைப் பற்றி எவ்விதக் கஷ்டமுமில்லை. பலன் வந்தே தீரும். காரணத்தை நாம் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டால் காரியம் தானே சரிப்பட்டுவிடும். லட்சியத்தை அடைவது என்பது காரியம். அதற்கானக்கருவிகள், வழிமுறைகள் என்பவை காரணம். ஆகையால் கருவியைப்பற்றி, வழி முறையைப் பற்றிக் கவனம் செலுத்துவதுதான் வாழ்க்கையிலுள்ள மாபெரும் ரகசியம்………


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s