தொண்டன் – சிறந்த தலைவன் 1

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.


”தீப்பிழம்பு போன்ற இளைஞர்கள் நமக்குத் தேவை. புத்திசாலித்தனமும் தைரியமும் வாய்ந்து மரணதேவனின் வாய்க்குள்ளே துணிச்சலாக நுழைந்து செல்லுகிறவர்கள், கடலைக்கூட நீந்திக் கடக்க ஆயத்தமானவர்கள் தேவை……….. அது போன்று நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேவை. அவர்களைப் பெறுவதற்காக மட்டுமே முழு மூச்சுடன் முயலுக; வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்தும் புதிதாக ஆட்களைச் சேர்த்து மாற்றி, நமது தூய்மைப் பயிற்சி இயந்திரத்தில் அவர்களைப் பொருத்திப் பண்படுத்திப் பழக்குங்கள்.”

‘இறைவனிடத்திலே தளராத நம்பிக்கையும் புனிதமான பணி செய்கிறோம் என்ற ஊக்கமும், ஏழைகளிடத்தும் வீழ்ச்சியுற்றோரிடத்தும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களிடத்தும் எல்லையற்ற பரிவும், அந்தப் பரிவு காரணமாக எதிர்த்து நிற்பதில் சிங்கத்தின் துணிவும் கொண்ட ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்ல வேண்டும். நம்முடைய விமோசனத்துக்கான சமய அறிவுரைகளை, பரோபகாரம் என்ற நமது வேத தத்துவங்களை, சமூக முன்னேற்றத்துக்கான வழிகாட்டும் நற்செய்திகளை, சமத்துவம் என்கிற வேத நெறிகளை அங்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடையே பரவச் செய்ய வேண்டும்.”

ஒற்றுமை இயக்கம் *

“என் வாழ்க்கையிலேயே எனது உள்ளத்தை மிகத் தீவிரமாகக் கவர்ந்திழுத்த ஒன்று அமெரிக்காவில் உள்ளது” என்று ஒரு தடவை சுவாமிஜி என் பாட்டியிடம் கூறினார். அவருக்குச் சிறிது கோபமூட்ட விரும்பிய என் பாட்டி, “யார் அந்தப் பெண், சுவாமிஜி?” என்று வினாவினாள். சுவாமிஜி சிரிப்பு பொங்கி வெடிக்க, “ஓ! எந்தப் பெண்ணுமல்ல; அதுதான் ஒற்றுமை இயக்க அமைப்பு” எனக் கூறினார். பிறகு எவ்வாறு ஸ்ரீ ராமகிருஷ்ணரது சீடர்கள் எல்லோரும் வெளியே தன்னந்தனியாகப் போவார்கள் என்றும் ஒரு கிராமத்தை அடைந்ததும் அமைதியாக ஒரு மரத்தடியில் உட்காருவார்கள் என்றும், துயரப் படுகிற மக்கள் தம்மிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள் என்பதற்காகக் காத்திருப்பார்கள் என்றும் விளக்கினார். அமெரிக்காவில் எல்லாப் பணிகளையும் ஒழுங்குற இணைக்கிற ஒற்றுமை இயக்க முறையால் பெருத்த பலன் ஏற்படுவதைக் கண்டார். ஆனால் பாரதத்தின் குணப்பண்புக்கு எந்த விதமான இயக்கம் ஒத்துவரும் என்பது பற்றி அவருக்குச் சந்தேகம் இருந்தது. ஆகவே மேனாட்டிலிருப்பதில் நல்லதாகக் காணப்படுகிறவற்றைத் தமது சொந்த மக்களின் சிறந்த நன்மைக்காக எப்படி மாற்றியமைத்துப் பயன் படுத்துவது என்ற விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனையைச் செலுத்தினார்.

– மிஸ் கார்னர்

* ‘அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர்’ என்ற புத்தகத்திலிருந்து.

ஜனநாயக அமைப்புக்கு முன்னோடியான தேவைகள்:

உலக நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்த பிறகு ஒற்றுமை இயக்கம் (சங்கம்) இல்லாமல் உயர்ந்த எதனையும், நிரந்தரமான எதனையும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். ஆனால் பாரதம் போன்ற ஒரு நாட்டில் இன்று நாம் அடைந்திருக்கிற வளர்ச்சி நிலையில்ஜனநாயக அடிப்படையில் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுப் பொதுவாக எல்லோரும் கூடிப் பெரும்பான்மையாக ஒட்டுப் போட்டு முடிவுக்கு வருகிற ஐனநாயக அடிப்படையில் ஓர் இயக்கத்தை ஆரம்பிப்பது நல்ல யோசனையாக இருக்குமென எனக்குத் தோன்றவில்லை. மேலை நாடுகளின் நிலைமை அலாதியானது. நம்மிடையே கூடக் கல்வி பரவப்பரவ, நாம் தியாகம் செய்யக் கற்றுக்கொள்ளும் போது. தனிப்பட்ட மனிதனின் லாப நஷ்டங்களுக்கும் நாட்டங்களுக்கும் அப்பாற்பட்டு எழவேண்டும் என்று கற்றுக் கொள்ளும் போது, மக்கள் சமுதாயத்துக்காகவும், பரந்த நாட்டு நன்மைக்காகவும் வாழத் தெரிந்து கொள்ளும் போது, ஜனநாயக அடிப்படையில் வேலை செய்வது சாத்தியமாகலாம். இதனை மனத்திற் கொண்டு தற்சமயம் நமது இயக்கத்துக்கு ஒரு சர்வாதிகாரியை அமைக்க வேண்டும்; அவரது சொல்லுக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்; பிறகு தக்க காலம் வரும் பொழுது இயக்கமானது மற்ற அங்கத்தினர்களின் கருத்துக்களின்படியும் சம்மதத்தின் பேரிலும் வழி நடத்தப்படும் *

* ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபிக்கப்பட்ட அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களை நோக்கி ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


ஹிந்துக்களின் சங்கம்

ஹிந்துக்களுக்குப் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளும் குணத்தையும், பரஸ்பரம் நல்ல குணங்களைப் பாராட்டுகிற குணத்தையும் கற்பிக்கக் கூடிய ஓர் இயக்கம் அத்யாவசியத் தேவையாகும். நான் இந்த நாட்டில் செய்த வேலையைக் குறித்துத் தமது பாராட்டு தலைத் தெரிவிப்பதற்காகக் கல்கத்தா பொதுக் கூட்டத்தில் ஐந்தாயிரம் பேர்களும் மற்ற இடங்களில் நூற்றுக் கணக்கானவர்களும் குழுமியிருந்தார்கள். மிக நல்லதுதான். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் ஓர் அணா கொடுக்கச் சொல்லிக் கேட்டால் கொடுத்திருப்பார்களா? குழந்தைத் தனமாகப் பிறரை எதிர்பார்த்து வாழுவது நமது முழு தேசீய குணப்பண்பாக ஆகிவிட்டது. உணவை அவர்களது வாய்க்கருகே கொண்டு வந்தால் மகிழ்வுடன் சாப்பிட எல்லோரும் ஆயத்தந்தான்; அதிலும் சிலர் சோற்றை வாய்க்குள்ளே ஊட்ட வேண்டும் என்று விரும்புவார்கள்…உனக்கு நீயே உதவிக் கொள்ளாது போனால் உனக்கு உயிர் வாழத் தகுதி கிடையாது…

பாரதத்தில் மூன்று பேர்கள் ஒற்றுமையாக, ஒரு மனத்துடன் ஐந்து நிமிடம் வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அதிகாரப் பதவிக்காகப் போராடுகிறார்கள்; நாளடைவில் இயக்கம் முழுவதுமே இழிநிலைக்குத் தாழ்கிறது. கடவுளே! கடவுளே! பொறாமைப் படாமலிருக்க நாம் எப்பொழுதுதான் கற்றுக் கொள்ளுவோமோ?

இந்நிலையிலிருக்கிற தேசத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு போதும் சாவாத அன்புடன் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைக்கப்பட்டு, வேலை செய்கிற ஒரு குழுவை உண்டாக்குவது என்பது ஆச்சரியகரமான செயல் இல்லையா? இந்தக் குழு வளர்ந்தே செல்லும். வியக்கத்தக்க தாராள மனப்பான்மையுடன், இறவாத சக்தித் துடிப்பும், முன்னேற்ற விழைவும் கொண்ட இந்தக் குழு வளர்ச்சியடைந்து நாடு முழுவதும் பரவ வேண்டும். நாடு முழுவதும் மின் அலை அதிர்ச்சியை அது உண்டாக்க வேண்டும். பயங்கரமான அஞ்ஞானம், பரஸ்பரப் பகையுணர்ச்சி, ஜாதியுணர்ச்சி, பழைய காலத்து மடத்தனம், பொறாமை இவையெல்லாம் அடிமைத் தனத்தில் ஆழ்ந்துள்ள இந்நாட்டின் பரம்பரைச் சொத்தாக உள்ளன. இவையெல்லாம் இருந்தாலும் கூட இந்தக் குழுவினர் சமூகத்தின் மயிர்க்கால்கள் தோறும் நுழைந்துவிட வேண்டும்.

வேலை முறையில் மூன்று நிலைகள் :

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். முதலில் அதனை இகழ்ச்சியாக நினைப்பார்கள்; இரண்டாவதாக எதிர்ப்பு வரும்; மூன்றாவதாக அதனை ஒப்புக் கொள்வார்கள். தான் வாழ்கிற காலத்துக்குப் பின்னால் வரப்போவதைச் சிந்தித்துப் பார்க்கிற மனிதனைச் சமுதாயம் நிச்சயமாகத் தப்பாகவே புரிந்து கொள்ளும். ஆகவே எதிர்ப்பும் கொடுமைகளும் வரட்டும், வரவேற்கிறேன். நான் மட்டும் தூய்மையுடனும் உறுதி குலையாமலும் இருக்க வேண்டும்; இறைவனிடத்தில் அபாரமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தக் கஷ்டங்களெல்லாம் நிச்சயமாக மறைந்து போகும்….

பாராட்டு வேட்டையும் உண்மைப் பணியும் இணைந்து போவது அரிது:

‘மகத்தான பணி ஒன்றைச் சமுதாயத்தில் செய்யவும் வேண்டும்; சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது’ என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்திலும் வெற்றி காணவில்லை. மனச்சாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பி விடும். சிலசமயம் அந்த மனிதன் செத்து வெகுகாலமான பிறகே அந்நிலை ஏற்படும். நமது உள்ளம் ஆத்மா, உடல் இவை அனைத்துடனும் நாம் பணியில் குதித்து மூழ்கி விடவேண்டும். ஒரே கருத்துக்காக, ஒரே ஒரு கருத்துக்காக மட்டுந்தான், மற்ற அனைத்தையும் தியாகஞ் செய்ய ஆயத்தமாகிற வரையில் நாம் வெற்றியின் ஒளியை ஒருக்காலும் காணமாட்டோம்; நிச்சயம் காணவே மாட்டோம்.

மனித குலத்துக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் தமது சொந்த சுக, துக்கம், பெயர், புகழ், பலவித ஆசை நாட்டங்கள்-இவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி கடலில் வீசியெறிந்து விட வேண்டும். அதற்குப் பிறகு பகவானிடம் வரவேண்டும். எல்லா மகா புருஷர்களும் அப்படித்தான் சொன்னார்கள். செய்ததும் அவ்வாறே.


மறுபேச்சின்றிக் கீழ்ப்படிதல் :

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது. மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு-இவை எல்லாவற்றையும் முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் – இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள்; கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யுபோது, தலைவனின் கட்டளைகளை மறுபேச்சின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற வேண்டும். மடத்தின் சாக்கடையைச் சுத்தம் செய்வதில், எஞ்சியுள்ள எனது வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்று எனது குரு பாயி’ சகோதரர்கள் கூறினால் அந்தக் கட்டளையை எவ்வித எதிர்ப்பு, முணுமுணுப்புமின்றி கீழ்ப்படிந்து கட்டாயமாக நிறைவேற்றுவேன் என்று தெரிந்து கொள்ளுங்கள். பொது நன்மையைக் கருதி வருகிற கட்டளையை, எவ்விதமான சிறு முணுமுணுப்புமின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற யாருக்குத் தெரிகிறதோ அவன் மட்டுமே உயர்ந்த தளபதியாக ஆகமுடியும்.

கீழ்ப்படிதலாகிற நல்ல குணத்தைப் பழக்கிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் உங்களது சொந்த நம்பிக்கையைக் கைவிட்டுவிடக் கூடாது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காவிட்டால் எந்த வேலையையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர, ஒரு மையப் புள்ளியில் திரட்டி ஒற்றுமைப்படுத்த முடியாது. தினிப்பட்ட சக்திகளை இப்படித் திரட்டி ஒரு மையத்தில் இணைக்காமல், எந்தப் பெரிய காரியத்தையும் நிறைவேற்ற முடியாது.

சகாக்களைப் பாராட்டி, குறைகளை இதமாக எடுத்துச் சொல்லுங்கள் :

எந்த ஒருவருடைய வழித்துறைகளையும் குலைக்காதீர்கள். குறை கூறுவதை அடியோடு விட்டுவிடுங்கள். வேலை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்து வருவதாக உங்களுக்குத் தெரிகிற வரையில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் தவறிழைப்பதாகத் தோன்றும் போது, சாவதானமாக அவர்களது பிழைகளை அவர்களுக்கு உணர்த்திக் காட்டுங்கள். எல்லாக் குழப்பங்களுக்கும் விஷமங்களுக்கும் மூலகாரணம் ஒருவரையொருவர் குற்றங்குறை கூறுவதுதான். பல இயக்கங்கள் நிலை குலைந்து வீழ்ச்சியுறுவதில் இதுவேதான் முக்கிய காரணமாக இருக்கிறது.


பரஸ்பர அன்பு :

நீங்கள் ஏற்றெடுத்திருக்கிற காரியத்தில் வெற்றி பெறுவது உங்களது பரஸ்பர அன்பைத்தான் முற்றிலும் சார்ந்துள்ளது. கடும் பகையுணர்ச்சியும், பொறாமையும், மமதையும் இருக்கிற வரையில் நல்ல காலமே வராது…..

உங்களது சகோதரர்களது அபிப்ராயத்துக்கு விட்டுக் கொடுக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் சமாதானமாக, சமரசமாகப் போக முயலுங்கள். இதுதான் முழு ரகசியம்.

வியாபார ரீதியான நேர்மையும் கண்டிப்பும் இருக்க வேண்டும்:

பாரதத்தில் நடக்கிற எல்லாக் கூட்டு முயற்சிகளும் ஒரு பாபத்தின் பளுவினால் மூழ்கி மாய்ந்து போகின்றன. நாம் பொதுப்பணிகளில் இன்னும் கடுமையான, வியாபார ரீதியான கொள்கைகளை வகுத்து வளர்க்கவில்லை. காரியம் என்றால் காரியம்தான். அதில் கண்டிப்பும் நாணயமும் வேண்டும். அதில் நட்பு எதுவும் குறுக்கிடக்கூடாது. தனது பொறுப்பிலுள்ள எல்லாவற்றையும் பற்றி மிக மிகத் தெளிவான கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரு போதும், என்னவானாலும், வேறெந்த வேலைக்காகவும் பயன்படுத்த கூடாது. அடுத்த கணம் பட்டினி கிடக்க வேண்டியிருந்தாலும் சரி, பரவாயில்லை. இதுதான் வியாபார நேர்மை, நாணயம்.

சாசுவதமான இயக்கத்தின் ரகசியம் :

யார் வாழ்ந்தாலும், யார் இறந்தாலும் கவலையில்லை. தானாகவே வேலை செய்துகொண்டு போகக்கூடிய ஓர் இயந்திரத்தை உண்டாக்கி வைக்க வேண்டும். பாரதீயர்களாகிய நம்மிடம் ஒரு பெரும் குறை உள்ளது. சாசுவதமான ஒரு இயக்கத்தை நம்மால் உண்டாக்க முடியாது. அதற்குக் காரணம் என்னவெனில் அதிகாரப்பொறுப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. நாம் மறைந்துபோன பிறகு என்ன ஏற்படும் என்பது பற்றி நாம் எப்பொழுதுமே சிந்திப்பதில்லை.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s