2. பிராம்மண ஆட்சியில் சுயநலம் எவ்வாறு நடனமாடியது?
‘கல்விதான் எல்லா சக்திகளுக்கும் மேலான சக்தி. அந்தக் கல்வி என்னிடம் இருக்கிறது. ஆகவே சமுதாயம் என் சொற்படிதான் நடக்க வேண்டும்’ என்றான் பிராமணன். சில காலத்திற்கு இப்படி நடந்தது.
பிராமணர்கள் ஆளும்போது, பிறந்த குலத்தைக் காரணமாகக் கொண்டு, பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒதுக்கப்படுகிறார்கள். புரோகிதர்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் எல்லாவித பாதுகாப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த அறிவும் கிடைக்க வழி இல்லை ; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அந்த அறிவைப் போதிப்பதற்கான உரிமையும் இல்லை.
இந்தப் புரோகிதர் அரசனை ஒருசமயம் சாவும் அழிவும் நிறைந்த காரியங்களில் ஈடுபடும்படி ஏவுவார்; ஒருசமயம் பக்கத்தில் நின்று சிறந்த நண்பனைப்போல் அன்பான அறிவுரைகள் கூறுவார்; ஒருசமயம் தந்திரமான அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுத்துவார். இப்படி அவர் அரசனின் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருப்பதைக் காணலாம். இவை எல்லாவற்றையும்விட பயப்பட வேண்டிய விஷயம், அரசனின் புகழ், அவனது குடும்பத்தின் புகழ், அவனது மூதாதையர் புகழ் எல்லாம் புரோகிதர்களின் கையில் உள்ள எழுதுகோலின் தயவை நாடி நிற்பதாகும்.
புரோகிதர்கள் ஓங்கியிருந்த காலத்தில் உண்மை நாட்டத்திற்காகப் பயன்பட்ட தவம், புலனடக்கம், கட்டுப்பாடு எல்லாம், அவர்களின் வீழ்ச்சிக்கு முந்தின காலத்தில் சுகபோகங்களுக்கான பொருட்களைச் சேர்ப்பதற்கும், அதிகாரங்களை அதிகரிப்பதற்குமே பயன்படத் தொடங்கியது.
ஆகவே கல்வித் திறமைகள் அற்று, முயற்சி இழந்து, முன்னோர்களின் பெயர்களை வைத்துப் பெருமைப்படுகின்ற இந்தப் புரோகிதர்கள் முன்னோர் களுக்குக் கொடுக்கப்பட்ட அதே சலுகையும், அதே மரியாதையும் தங்களுக்கும் கிடைப்பதற்காக, என் னென்ன வழிகள் உண்டோ , அத்தனையையும் பின் பற்றுகிறார்கள்; அதன் காரணமாக மற்ற ஜாதிகளுடன் கடுமையான மோதல் ஏற்படுகிறது.