1. சுயநலத்திற்காகச் செயல்புரிவதன் மூலகாரணம் என்ன?
அறியாமை, சமத்துவமின்மை , ஆசை ஆகிய மூன்றும்தான் மனிதனின் துயரங்களுக்கு மூன்று காரணங்கள். இதில் ஒன்றையொன்று பிரிக்க முடியாது, சேர்ந்துதான் வரும். ஒரு மனிதன், மற்றொரு மனிதனைவிட ஏன், மற்றொரு மிருகத்தைவிடக்கூட தன்னை ஏன் உயர்ந்தவனாகக் கருத வேண்டும்? எல்லாம் ஒன்றே. த்வம் ஸ்த்ரீ த்வம் புமானஸி த்வம் குமார உத வா குமாரீ –நீயே ஆண், நீயே பெண், நீயே இளைஞன், நீயே இளம்பெண்.
‘இவை எல்லாம் துறவிகளுக்குச் சரி; நாங்கள் இல்லறத்தார்கள் ஆயிற்றே’ என்று சிலர் கூறுவார்கள். பல கடமைகளைச் செய்ய வேண்டியுள்ள ஒரு இல்லறத்தான் இந்தச் சமத்துவ நிலையை முழுமையாக அடைய முடியாது என்பது உண்மையே. ஆனால் இதுவும் அவனது லட்சியமாக இருக்க வேண்டும். ஏனெனில் சமத்துவ நிலையை அடைவதுதான் சமுதாயம், மனித இனம், மிருகங்கள், இயற்கை அனைத்தின் லட்சியமும். ஆனால் அந்தோ! சமத்துவ நிலையை அடைய சமமின்மைதான் வழி என்று நினைக்கின்றனர். கெட்டதைச் செய்வதன்மூலம் நல்லதை அடையலாம் என்பது அவர்களின் கருத்து போலும்!
இதுதான் மனித இயல்பின் சாபக்கேடு, மனித இனத்திற்கு விளைந்த சாபம், எல்ல துன்பங்களுக்கும் மூலகாரணம். இந்த சமத்துவமின்மைதான் உடல், மன, ஆன்மீக பந்தங்களுக்கெல்லாம் பிறப்பிடம். ‘இறை வன் எங்கும் சமமாக இருப்பதைக் காண்பவன் ஆன்மாவை ஆன்மாவால் துன்புறுத்துவதில்லை. ஆகையால் அவன் மிக உயர்ந்த லட்சியத்தை அடை கிறான்’. (கீதை, 13. 28). இந்த ஒரே வாக்கியம், சில சொற்களில், உலகினர் அனைவரும் உய்வதற்கான வழியைக் காட்டிவிடுகிறது.
சமுதாயத்தின் வாழ்வில்தான் தனிமனித வாழ்வு அடங்கியுள்ளது. சமுதாயத்தின் இன்பத்தில்தான் தனி மனித இன்பம் அடங்கியுள்ளது. சமுதாயம் இல்லா விட்டால் தனிமனிதன் இருப்பது முடியாதது; இது அழியாத உண்மை , இந்த அடித்தளத்தில்தான் உலகமே இயங்குகிறது. எல்லை அற்றதான சமுதாயத்துடன் ஒன்றி, அதன் இன்பத்தில் இன்பம் காண்பதும், அதன் துன்பத்தில் துன்புறுவதுமாக மெள்ளமெள்ள முன் னேறுவதுதான் தனிமனிதனின் ஒரே கடமை. கடமை மட்டும் அல்ல; இந்த நியதியை மீறினால் மரணம், பின்பற்றினால் மரணமிலாப் பெருவாழ்வு உண்டா கிறது. இயற்கையின் கண்களில் மண்ணைத் தூவ யாரால் முடியும்? நீண்டகாலம் தொடர்ந்து யாரும் ஏமாற்ற முடியாது. சமுதாயத்தின்மீது குப்பையும் மண்ணும் எவ்வளவுதான் மலையாகக் குவிந்திருந் தாலும், அந்தக் குப்பைக் குவியலுக்கு அடியில் அது அன்பு, தன்னலமற்ற வாழ்க்கை என்றுதான் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்தையும் தாங்கும் நிலம்போல் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றோ நாளையோ அது விழிக்கவே செய்யும். அந்த விழிப்பின் வேகத்தால், எத்தனையோ யுகயுகங்களாக அதன்மீது படிந்து கிடக்கின்ற சுயநலக் குப்பைகள் வெகுதூரத்தில் தூக்கியெறியப்பட்டுவிடும்.
தமோ குணம் மூடிய மிருக இயல்பு படைத்தவர்கள் நாம். ஆயிரம் முறை அடி வாங்கினாலும் இந்தப் பேருண்மையை நாம் நம்புவதில்லை. ஆயிரம் முறை ஏமாந்தாலும் மீண்டும் ஏமாறத் தயாராக இருக்கிறோம்; இயற்கையை ஏமாற்றிவிடலாம் என்று பைத்தியக்காரர்கள்போல் நினைக்கிறோம். நம்முடைய குறுகிய நோக்கின் காரணமாக, எப்படியாவது நம்மைக் கவனித்துக் கொள்வதே வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்று நினைக்கிறோம்.
கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்குக் கொடுக்கின்ற எல்லாமே பிறருக்குக் கொடுப்பதற்காகத்தான். நாம் இதை அடிக்கடி மறக்கிறோம். நமக்குக் கொடுக்கப்படும் பொருட்களின்மீது, ‘எனக்கு மட்டும் சொந்தம்’ என்ற முத்திரையை இடும்போது நம்முடைய அழிவுக்கு விதையை நாமே விதைக்கிறோம்.
ஆற்றலைச் சேமிப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அதனைக் கொடுப்பது; சொல்லப் போனால் கொடுப்பது இன்னும் அதிக அவசியம். இதயத்தில் ரத்தம் வந்துசேர்வது இன்றியமையாதது, ஆனால் அது உடல் முழுவதும் பரவாவிட்டால் சாவு நிச்சயம். எல்லா அறிவும் எல்லாகல்வியும் சமுதாயத்தின் நன்மைக்காக ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலோ ஜாதியிலோ குவிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட காலத் திற்கு மிகவும் அவசியமாகிறது. ஆனால் அது எல்லோ ருக்கும் பகிர்ந்தளிப்பதற்காக மட்டுமே குவித்து வைக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படுவது தடைப்படு மானால் அந்தச் சமுதாயம் விரைவில் அழிந்துவிடும்.
அரசர்கள் தங்கள் குடிமக்களின் பெற்றோர்கள், குடிமக்களோ அரசனின் குழந்தைகள். குடிமக்கள் எல்லா வகைகளிலும் அரசனைச் சார்ந்து வாழ வேண்டும். அரசனோ பாரபட்சமற்று, தன் சொந்தக் குழந்தைகளைப்போல் அவர்களைக் காக்க வேண்டும். தனிப்பட்ட குடும்பங்களுக்கு என்ன சட்டமோ அதே சட்டம்தான் முழுச் சமுதாயத்திற்கும். தனிப்பட்ட குடும்பங்களின் தொகுதிதானே சமுதாயம்? ‘மகன் பதினாறு வயதை அடைந்ததும், தகப்பன் அவனை நண்பனாகக் கருத வேண்டும்” என்றால் சமுதாயம் என்ற குழந்தை பதினாறு வயதை அடைவதே இல்லையா! ஒரு குறிப்பிட்ட காலத்தில் எல்லா சமுதாயமும் வாலிபப் பருவத்தை அடைகிறது என்றும், அப்போது பொதுமக்களுக்கும் ஆள்பவர்களுக்கும் இடையே பலத்த போராட்டம் நிகழ்கிறது என்பதையும் வரலாறு காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில் விளைகின்ற வெற்றிதோல்விகளைப் பொறுத்தே சமுதாயத்தின் வளமும் நாகரீகமும் அமைகிறது.