12. சூத்திரர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் ஏன் சூத்திரர்கள் ஆட்சிக்கு வர முடியவில்லை ?
இந்தியாவில் ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதை எண்ணியபோது என் இதயம் எவ்வளவு வேதனைப்பட்டது தெரியுமா? அவர்களுக்கு வாய்ப்பில்லை, தப்ப வகையில்லை, முன்னேற வழியில்லை. அங்கே ஏழைக்கோ, தாழ்ந்த வனுக்கோ, பாவிக்கோ நண்பர்கள் இல்லை, உதவு பவர்கள் இல்லை. என்னதான் முயன்றாலும் அவர்கள் முன்னேற முடியாது. நாளுக்குநாள் அவர்கள் அதோ கதியில் ஆழ்ந்து வருகின்றனர். கொடிய சமுதாயம் தங்கள்மீது பொழிகின்ற அடிகளை அவர்கள் உணர் கிறார்கள்; ஆனாலும் அந்த அடிகள் எங்கிருந்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. தாங்களும் மனிதர்களே என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அதன் விளைவு அடிமைத்தனம்.
எத்தனையோ காலமாக அனுபவித்த கொடுமை காரணமாக சூத்திரர்கள் நாயைப்போல் பாதங்களை நக்குவார்கள்; அல்லது கொடிய மிருகங்களைப்போல் இரக்கமின்றி நடந்துகொள்வார்கள். அத்துடன் காலங்காலமாக அவர்களுடைய ஆசைகள் நிறைவேறாமலே கிடக்கின்றன. எனவே அவர்களிடம் உறுதியோ விடாமுயற்சியோ இல்லை.
மேலை நாடுகளில் கல்வி அதிகமாகப் பரவியும், சூத்திர ஜாதியினர் முன்னுக்கு வருவதற்குப் பெரும் தடை ஒன்று உள்ளது. அது குணத்தைக் கொண்டு ஜாதியை நிர்ணயம் செய்வது. பண்டைக் காலத்தில் இந்தியாவில் இத்தகைய ஜாதிமுறையினால்தான் சூத்திரர்கள் இறுக்கமாகக் கட்டப்பட்டுக் கிடந்தனர். கல்வி பெறுவதற்கோ, பணம் சம்பாதிப்பதற்கோ, அவர்களுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந் தது. இது போதாதென்று, சூத்திர வகுப்பில் மேதைகள் யாராவது தோன்றினால், சமுதாயத்தின் உயர் ஜாதி யினர் உடனே அவனைக் கௌரவித்து, தங்களுடன் சேர்த்துவிடுவார்கள். அவனுடைய அறிவுத் திறமை களும், அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியும் மற்ற ஜாதியின் நன்மைக்காகப் பயன்படும். அவனுடைய ஜாதிமக்களுக்கு அவனது கல்வி, அறிவு, பணம் எது வுமே கிடைக்காது. அதுமட்டுமல்ல, உயர் ஜாதியினர் தங்கள் ஜாதியிலுள்ள உதவாக்கரைகளையெல்லாம் சூத்திரர்களின் இடையில் தள்ளிவிடவும் செய்தார்கள்.
விலைமகளின் மகனான வசிஷ்டர், நாரதர், வேலைக்காரப் பெண்ணின் மகனான சத்தியகாம ஜாபாலர், மீனவப்பெண்ணின்மகனான வியாசர், தகப்பன் பெயர் தெரியாதவர்களான கிருபர், துரோணர், கர்ணன் போன்ற பலர் அவர்களுடைய அறிவிற்காகவோ வீரத்திற் காகவோ பிராமணர்களாகவோ க்ஷத்திரியர்களாகவோ உயர்த்தப்பட்டனர். இதனால் விலைமகளிர் குலமோ, வேலைக்காரிகளின் ஜாதியோ, மீனவர் குலமோ, தேரோட்டி குலமோ என்ன நன்மை அடைந்தது என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. மேலும் பிராமண, க்ஷத்திரிய, வைசிய ஜாதியில் இழிந்தவர்கள் சூத்திர ஜாதியிலேயே எப்போதும் சேர்க்கப்பட்டனர்.
இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் சூத்திரர்கள் சற்று விழித்துக் கொண்டதுபோல் தெரிகிறது. ஆனால் அவர்களுக்குக் கல்வி கிடையாது; சூத்திரர்களின் தனிக் குணமான தங்கள் ஜாதியினரையே வெறுப்பது மட்டும் உண்டு. எண்ணிக்கையில் அதிகமாக இருந்து என்ன பயன்? பத்துபேர் ஒன்றுசேர்ந்து லட்சக்கணக்கானோரின் வலிமையைப் பெறுகிறார்களே, அந்த ஒற்றுமை இன்றும் சூத்திரர்களிடமிருந்து வெகுதொலைவில்தான் இருக் கிறது. அதனால் இயற்கை நியதியின்படி சூத்திரர்கள் எப்போதும் பிறருக்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள்.
நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பினருக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது; அவர்கள் இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வது. நமது நாட்டின் மக்களும் மன்னர்களும் செய்ய வேண்டிய பெரும்பணி இதுவே. இதுவரையில் இந்தத் துறையில் ஒன்றுமே செய்யப்படவில்லை. புரோகித ஆதிக்கமும், அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர் களைக் கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன. இறுதியில் இந்தியாவின் ஏழைகள் தாங்கள் மனிதப்பிறவிகள் என்பதையே மறந்துவிட்டனர்.