11. இந்தியாவில் வைசியர்களின் ஆட்சி இயற்கையாக ஏற்பட்டதா அல்லது கட்டாயத்தினால் ஏற்பட்டதா?
மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் செல்வச் செழிப்பையும் நில வளத்தையும் கண்ட பல நாடுகள் அதை வெற்றிகொள்ள விரும்பின. உண்மையிலேயே அதைப் பல நாடுகள் மீண்டும்மீண்டும் வெல்லவும் செய்தன. அப்படியானால் இங்கிலாந்து இந்தியாவைப் பிடித்ததை ஏன் புதுமையானது என்று சொல்ல வேண்டும்?
ஆன்மீக பலம், மந்திர பலம், சாஸ்திர பலம் இவற்றால் வலிமை பெற்றவர்களும், சாபம் கொடுப்பதையே தங்கள் ஆயுதங்களாகக் கொண்டவர்களும், உலகப் பற்றற்றவர்களுமான முனிவர்கள் கோபம் கொண்டால் பேரரசுகளும் பயந்து நடுங்குவது மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியர்கள் அறிந்த ஒன்று. படைகளையும் போர்க் கருவிகளையும் பலமாகக் கொண்ட மகா வீரர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முன்னால் மக்கள் சிங்கத்தைக் கண்ட ஆட்டுமந்தைகள்போல் பணிந்து, அந்த வீரர்களின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டதையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிறு வைசியர் (வணிகர்) கூட்டம்; அவர்கள் செல்வந்தர்களாக இருந்தும் அரசன் என்றல்ல, அவனது குடும்பத்தினரின் முன்னால்கூட கூப்பிய கைகளும் நடுங்குகின்ற உடம்புமாக நிற்பவர்கள். அவர்கள் வியாபாரத்தின் பொருட்டு அவர்கள் நதிகளையும் கடல்களையும் கடந்து வருகிறார்கள்; வெகுகாலமாக நிலைத்திருக்கின்ற இந்து, முகமதிய அரசர்களைத் தங்கள் புத்திக் கூர்மை, பணம் இவற்றின் துணையை மட்டும் கொண்டு படிப்படியாகக் கைப்பொம்மைகள் ஆக்குகிறார்கள்; அது மட்டுமல்ல, தங்கள் பண பலத்தால் இந்திய அரசர்களையே தாங்கள் இட்ட பணிகளைச் செய்ய வைக்கிறார்கள்; தாங்கள் பணம் குவிப்பதற்காக, அவர்களின் பலத்தையும் அறிவையும் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்இது இந்தியர்களுக்கு முற்றிலும் புதிய காட்சி. ‘அப்பால் போ, சாணக் குவியலே! ஒரு பிரபுவை எதிர்க்கும் துணிச்சலா உனக்கு’ என்று ஒரு சாதாரண மனிதனைச் சாடுகின்ற பிரபுவை எந்த நாட்டு மகாகவிஞரின் இணையற்ற எழுத்து எடுத்துக் காட்டியுள்ளதோ, அந்த நாட்டுப் பிரபுவம்சத்தில் பிறந்ததைப் பெருமையாகக் கருதியவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்பட்ட ஒரு வணிகர் கூட்டத்தின் எடுபிடி வேலையாட்களாகி இந்தியாவிற்கு வருவதுதான் வாழ்க்கையின் மிக உயர்ந்த லட்சியம் என்று கருதத் தலைப்படுவது இந்தியா இதற்கு முன்பு கேட்டிராத செய்தி.
ஆகவே இங்கிலாந்து இந்தியாவை வென்றது என்பதன் பொருள், நாம் அடிக்கடி கேட்டுவருகிறோமே, அதுபோல், ஏசுவின் கீழோ பைபிளின் கீழோ இந்தியா வந்துவிட்டது என்பதல்ல; முகலாயரும் பட்டாணியரும் இந்தியாவை வென்றார்களே அவ்வாறும் அல்ல. மாறாக ஏசு, பைபிள், மாபெரும் மாளிகைகள், நால்வகைப் படைகளின் பூமியை அதிர வைக்கின்ற காலடிச் சத்தம், யுத்த பேரிகைகளின் த்வனி, அரச சிம்மாசனம்இவை அனைத்திற்கும் பின்னால்தான் இங்கிலாந்து காட்சியளித்தது. அந்த இங்கிலாந்தின் போர்க் கொடி தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள்; அதன் படை வியாபாரக் கப்பல்கள்; அதன் போர்க்களங்கள் உலகின் வியாபாரச் சந்தைகள்; திருமகள்தான் அவர்களுடைய சக்கரவர்த்தினி. அதனால்தான் இங்கிலாந்து இந்தியாவை வென்றது இதுவரை காணாத புதுமை என்று நான் சொன்னேன். புதிய மகா சக்தியுடன் மோதுவதால் இந்தியாவில் என்ன புதுப் புரட்சி ஏற்படும்? அதன் காரணமாக எதிர்கால இந்தியாவில் என்ன மாறுதல் ஏற்படும் என்பதை இந்தியாவின் பழைய வரலாற்றைக் கொண்டு ஊகிக்க முடியாது.