10. பண்டைய இந்தியாவில் ஈகை குணமுள்ள அரசர்கள் இருந்தார்கள். “தர்ம குணம் கொண்ட அரசர்களின் அரசாங்கம்” அல்லது “சுய ஆட்சி”- எது சிறந்தது?
இந்து அரசர்கள் ஆண்டபோதும் சரி, பௌத்தர்கள் ஆண்டபோதும் சரி, வரிகள், நாட்டுப் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் பொதுமக்களின் கருத்து பெரி தாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. வாரணாவதத்தில் வைசியர் மற்றும் சூத்திரர்களின் வீடுகளுக்கு யுதிஷ்டிரர் சென்றது உண்மைதான்; ராமனுக்கு இளவரசர் பட்டம் சூட்ட வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டது உண்மைதான்; சீதையைக் காட்டிற்கு அனுப்ப மக்கள் ரகசியமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது உண்மை தான். ஆனால் சட்டப்படி ஆட்சியில் அவர்களுக்கு எந்தக் குரலும் கிடையாது. சரியான முறையின்றி தாறுமாறான வழிகளில் மக்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதைக் குடிமக்கள் இன்றும் உணரவில்லை. அதை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கான முயற்சியும் செய்யவில்லை, அப்படிச் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. சிறுசிறு சக்திகளை ஒன்றுசேர்த்து, ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்கும் திறமையும் அவர்களிடம் இல்லை .
சட்டங்கள் இல்லாததுதான் இதற்குக் காரணமா? இல்லை, அப்படியில்லை. அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்கென்று தனியான, தெளிவான சட்டங்கள் இருந்தன, முறைகள் இருந்தன. வரி வசூலிப்பது, சேனையைப் பராமரிப்பது, நீதி வழங்குவது, தண்டனைகளும் வெகுமதிகளும் கொடுப்பது இவை போன்ற பல்வேறு விஷயங்களைப்பற்றி நுணுக்கமான சட்டதிட்டங்கள் இருந்தன. ஆனால் இவை எல்லா வற்றிற்கும் அடிப்படையாக இருந்தது ரிஷிகளின் கட்டளை, தேவர்களின் சக்தி, தெய்வீகப் பேருணர்வு. இந்தச் சட்டங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை சிறிதும் இருக்கவில்லை என்றே சொல்லலாம். அதனால். எல்லோரும் ஒன்றுசேர்ந்து அனைவரின் நன்மைக்காக எப்படிச் செயல்புரிவது என்பதையோ, அரசன் மக்களிடமிருந்து வசூலித்த வரிப்பணத்தில் தங்களுக்கும் உரிமை உண்டு என்று நினைத்துப் பார்க்கும் அறிவு பெறவோ, அரசாங்கத்தின் வரவுசெலவு கணக்கை அறிய, தங்களுக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் ஆசையைத் தூண்டுவதற்கான கல்வி பெறுவதற்கோ அவர்களுக்கு வழியில்லாமல் போய்விட்டது. அவர்கள் எதற்காகத்தான் இதையெல்லாம் பெற வேண்டும்? அவர்களுடைய நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் ரிஷிகளின் தெய்வப் பேருணர்வு அல்லவா பொறுப்பு!
இனி, இந்தச் சட்டங்கள் எல்லாம் நூல்களில் இருந்தன. நூல்களில் எழுதப்பட்டுள்ளவற்றிற்கும், அவை நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. நூற்றுக்கணக்கான அக்னிவர்ணர்களுக்குப் பிறகுதான் ஒரு ராமர் பிறந்தார். சண்ட-அசோகர்கள் அதிகம், தர்ம-அசோகர்கள் மிகவும் குறைவு.’ மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஓளரங்கசீப் களைவிட மக்களை உயிராகக் காத்த அக்பர்களின் எண்ணிக்கை குறைவு.
யுதிஷ்டிரர், ராமர், தர்ம-அசோகர், அக்பர் இவர் களின் ஆட்சியில் மக்கள் மகிழ்ந்தது சரி. ஆனால் எப்போதும் நமக்கு இன்னொருவன் உணவு ஊட்டி வந்தால் மெள்ளமெள்ள நமது கை, உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும் சக்தியை இழந்து விடும். இன்னொருவரால் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படுபவனிடம் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கான சக்தி ஒருநாளும் முழுமையாக வெளிப் படாது. எப்போதும் குழந்தையாகவே கருதி வளர்க்கப் பட்டு வந்தால், வல்லமைமிக்க இளைஞன்கூட குழந்தையாகத்தான் மாறுவான். தேவர்களுக்கு நிகரான மன்னர்களால் எப்போதும் காக்கப்பட்டு வருகின்ற குடிமக்கள் குடியாட்சிபற்றி அறிந்துகொள்வ தில்லை . எல்லாவற்றிற்கும் அரசனையே எதிர் பார்த்து, படிப்படியாக பலமிழந்து, சக்தியற்றுப் போய் விடுகின்றனர். இப்படிப் பிறரால் வளர்க்கப்படுவதும் காக்கப்படுவதும் நீடிக்குமானால் அது அந்தச் சமுதாயத்தின் அழிவிற்குக் காரணமாகிறது.
மகான்களின் உலகியல் கலவாத உயர்ஞானத் திலிருந்து உதித்த சாஸ்திரங்களின்படி ஒரு நாட்டின் ஆட்சி நடக்கிறது என்றால், அது அரசன்-குடிகள், பணக்காரன்-ஏழை, படித்தவன்-படிக்காதவன் என்று எல்லோருக்கும் தொடர்ந்த நன்மை தரும் என்றுதான் பொதுவாக நாம் நினைப்போம். ஆனால் நடைமுறையில் அது எவ்வளவு தூரம் சாத்தியமாயிற்று அல்லது சாத்தியமாக முடியும் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். குடிமக்களுக்கு ஆட்சியில் அதிகாரம் உண்டு என்பதுதான் தற்கால மேலை நாடுகளின் மூலமந்திரமாக உள்ளது. இதைத்தான் அமெரிக்க அரசாங்கத்தின் பிரகடனம் இடிபோன்ற குரலில், ‘இந்த நாட்டு மக்களின் ஆட்சி, மக்களால் மக்களின் நன்மைக்காக நடக்க வேண்டும்’ என்று கூறிற்று. இந்தக் கருத்து இந்தியாவில் இருக்கவே இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. கிரேக்கப் பயணிகள் நம் நாட்டின் பல பாகங்களில் சிறுசிறு சுதந்திர பகுதிகளைப் பார்த்தார்கள்; பௌத்த இலக்கியத்திலும் இதைப்பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உள்ளன. இன்றும் இந்தியாவின் பல பாகங்களில் காணப்படுகின்ற கிராமப் பஞ்சாயத் துக்களில் குடியாட்சியின் விதை இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் விதை விதையாகவே இருந்துவிட்டது; தரையில் ஊன்றியும் அது முளை விட்டு வளரவில்லை , எனவே இந்தக் கருத்து கிராமப் பஞ்சாயத்து என்ற அளவிற்குமேல் சமுதாயத்தில் பரவாமலே நின்றுவிட்டது.
மத உலகில், பௌத்த மடங்களில் இந்தச் சுயாட்சி முறை சிறப்பாக வளர்ச்சியுற்றிருந்தது என்பதற்கு நமக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இன்றும் நாகா சந்நியாசிகளுக்கு இடையில் சுயாட்சிக் கொள்கைகளைக் கொண்ட பஞ்சாயத்து முறை ஆற்றலுடன் செயல்பட்டு வருகிறது. ஐவர் குழுவின் ஆட்சிக்கு அவர்கள் மிகுந்த மதிப்பு தருகின்றனர். ஒவ்வொரு நாகாவிற்கும் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. அவர்கள் எல்லோரும் எத்தனை அழகாக ஒன்றுசேர்ந்து திட்டமிட்டுச் செயல் படுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.