9. மற்ற நாடுகளுக்கு என்ன ஆயிற்று?
சீனர், சுமேரியர், பாபிலோனியர், எகிப்தியர், சால்டியர், ஆரியர், இரானியர், யூதர், அரேபியர் ஆகிய இந்த எல்லா இனத்திலும் அவர்களுடைய வரலாற்றின் ஆரம்பத்தில் சமுதாயத்தலைமை பிராமணர்கள் அதாவது புரோகிதர்களின் கையில் இருந்தது. இரண்டாவது காலகட்டத்தில் ஆதிக்கம் க்ஷத்திரியர்களிடம், அதாவது ஒரு தனி மன்னனிடமோ ஓர் ஆட்சிக் குழுவிடமோ இருந்திருக்கிறது.
வியாபாரத்தினால் பணக்காரர்களான வணிகர் கூட்டத்தினரிடம் அதாவது வைசியர்களிடம் சமுதாயத் தலைமை மேலை நாடுகளிடையே இங்கிலாந்தில் முதல் தடவையாக வந்திருக்கிறது.
மிகப் பழைய நாட்களில் டிராய், கார்தேஜ், தற்காலத்தில் வெனிஸ் போன்ற வர்த்தகத்தில் முன் னேறிய சிறுசிறு நாடுகள் மிகவும் வல்லமையுடன் விளங்கவே செய்தன. ஆனால் உண்மையான வைசிய சக்தி அங்கே வளர்ச்சியுற்றிருந்தது என்று சொல்ல முடியாது. – உண்மையில், பழங்காலத்தில் அரச சந்ததியினர், சாதாரண மக்கள் மற்றும் தங்கள் வேலைக்காரர்களின் துணையுடன் வியாபாரத்தைத் தங்கள் ஏகபோக உரிமையாக வைத்திருந்தனர். வந்த லாபத்தை அவர்களே அனுபவிக்கவும் செய்தனர். இந்த சிலரைத் தவிர வேறு யாருக்கும் நாட்டின் ஆட்சி போன்ற விஷயங்களில் எந்த உரிமையும் கிடையாது.
எகிப்து போன்ற பண்டைய நாடுகளில் புரோகிதர்களின் ஆதிக்கம் சிறிது காலத்திற்குத்தான் ஓங்கியிருந்தது. அதற்குப் பிறகு அது க்ஷத்திரிய சக்திக்குக் கீழ்ப்படிந்து அதற்கு உதவியாக இருந்தது.
சீனாவில் கன்ஃப்யூரயஸ் என்ற மாமனிதரால் ஒன்றுதிரட்டப்பட்ட க்ஷத்திரிய சக்தி இருபத்தைந்து நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக புரோகித சக்தியைத் தன் விருப்பப்படி கட்டுப்படுத்தியும் செலுத்தியும் வந்திருக்கிறது. ஆனால் சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக திபெத்திய லாமாக்கள் ராஜ குருக்களாக இருந்தும், சக்கரவர்த்தியின் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதாகிவிட்டது.
மற்ற புராதன நாகரீக நாடுகளில் க்ஷத்திரிய சக்தி வெற்றிபெற்ற நீண்ட காலத்திற்குப் பிறகுதான் இந்தியாவில் க்ஷத்திரிய சக்தி தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. ஆகவே சீன, எகிப்திய, பாபிலோனிய பேரரசுகளுக்குப் பிறகுதான் இந்திய சாம்ராஜ்யம் உதயமாகியது.
யூதர்கள் விஷயத்தில் மட்டுமே க்ஷத்திரிய சக்தி புரோகித சக்தியை வெல்வதற்குத் தீவிரமாக முயன்றும் படுதோல்வி கண்டது. வைசியர்களும் அங்கே ஆதிக்கம் பெற முடியவில்லை . புரோகிதர்களின் பிடியிலிருந்து தப்பிக்க விரும்பிய சாதாரண மக்கள் ஒரு பக்கம்கிறிஸ்தவ மதம் போன்ற மத இயக்கங்களாலும், இன்னொரு பக்கம் ரோமப் பேரரசாலும் நசுக்கப்பட்டனர்.