7. பழங்காலத்தில் ஏன் க்ஷத்திரிய அரசர்கள் பிராம்மணர்களை வழிகாட்டிகளாகக் கொண்டனர்?
இந்தப் புரோகிதர் அரசனை ஒருசமயம் சாவும் அழிவும் நிறைந்த காரியங்களில் ஈடுபடும்படி ஏவுவார்; ஒருசமயம் பக்கத்தில் நின்று சிறந்த நண்பனைப்போல் அன்பான அறிவுரைகள் கூறுவார்; ஒருசமயம் தந்திரமான அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுத்துவார். இப்படி அவர் அரசனின் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருப்பதைக் காணலாம். இவை எல்லாவற்றையும்விட பயப்பட வேண்டிய விஷயம், அரசனின் புகழ், அவனது குடும்பத்தின் புகழ், அவனது மூதாதையர் புகழ் எல்லாம் புரோகிதர்களின் கையில் உள்ள எழுதுகோலின் தயவை நாடி நிற்பதாகும். அரசன் மிகுந்த வல்லமை பொருந்தியவனாக இருக்கலாம், சிறந்த புகழ்வாய்ந்தவனாக இருக்கலாம், குடிமக்களுக்கு அன்னையும் தந்தையும் போன்று விளங்கலாம்; ஆனால் மகா சமுத்திரத்தில் வீழ்ந்த பனித்துளிபோல் அவனது புகழ்ச் சூரியன் கால சமுத்திரத்தில் என்றென்றைக்குமாக அஸ்தமித்துவிடும். வருடக்கணக்காக நடக்கின்ற வேள்விகளைச் செய்தவர்கள், அசுவமேத யாகம் செய்தவர், மாரிகாலத்து மழைபோல் புரோகிதர்கள்மீது பண மழை சொரிந்தவர்கள் இந்த மன்னர்களின் பெயர்களே புரோகிதர்களின் தயவினால் வரலாற்றின் ஏடுகளை அலங்கரிக்கும். தேவர்களின் அன்புக்குப் பாத்திரமான ‘பிரியதர்சி தர்ம அசோகர்’ பிராமணர்களின் உலகில் வெறும் பெயர் மட்டுமே, ஆனால் பரீட்சித்தின் மகனான ஜனமேஜயனோ’ குழந்தை, முதியவர், பெண்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்தவனாக விளங்குகிறான்.
வைதீக காலத்திலும் அதையடுத்த காலங்களிலும் பிராமண சக்தியால் மிதித்து நசுக்கப்பட்டதால் க்ஷத்திரிய சக்தி தலைதூக்க முடியாமல் இருந்தது. புத்தமதப் புரட்சிக்குப் பிறகு பிராமண சக்தியின் வீழ்ச்சியுடன்கூடவே இந்தியாவில் க்ஷத்திரிய சக்தி உச்ச நிலையை அடைந்ததை நாம் காண்டோம். பௌத்தப் பேரரசின் வீழ்ச்சிக்கும் முகமதியப் பேரரசு நிலை பெற்றதற்கும் இடையிலுள்ள காலத்தில் ராஜபுத்திரர் மூலமாக க்ஷத்திரிய சக்தி தலையெடுக்க முயன்று வீணானதையும் நாம் பார்த்தோம். புத்துயிர் பெற்ற புரோகித சக்தியின் முயற்சிதான் இதற்கும் காரண மாகியது.