4. வைசியர்களுடைய நிர்வாகத்தின் தனிச்சிறப்புகள் யாவை?
இந்த எதிர்விளைவின் பலனாக வைசிய சக்தி என்ற மகா சக்தி எழுகிறது. அதன் கோபக் கண்களுக்கு முன்னால் ‘இலங்கையின் ராவணன்கூடக் கிடுகிடு என்று நடுங்குகிறான்.’ இந்த வைசியர்களின் கையி லுள்ள தங்க ஜாடி தங்களுக்குக் கிடைக்குமா என்று அரசன் முதல் ஆண்டிவரை தலைவணங்கி இவர்களைப் பின்தொடர்கின்றனர்.
வைசியன் சொன்னான்: ‘பைத்தியக்காரர்களே, எங்கும் நிறைந்த கடவுள் என்று நீங்கள் சொல்கிறீர்களே, அது என் கையில் உள்ளதும் சர்வ வல்லமையுள்ளதுமான பணம். அதன் அருளால் நானும் வல்லவனாகி விட்டேன். ஏ பிராமணா, இதன் தயவால் நான் உன் தவம், ஜபம், கல்வி, அறிவு அனைத்தையும் இப்போதே வாங்கிவிட முடியும். ஏ மன்னா, இந்த என் பணத்தின் பேராற்றல் உன் ஆயுதங்கள் அனைத்தையும், உன் வீரதீரம் எல்லாவற்றையும் என் கட்டளைப்படிச் செய்ய வைக்கும். இதோ உயர்ந்த, பரந்த தொழிற்சாலைகளைப் பார்க்கிறாயே அவை என்னுடைய தேன்கூடுகள். எண்ணற்ற சூத்திரர்கள் என்னும் தேனீக்கள் அந்தக் கூடுகளில் இடைவிடாமல் எப்படித் தேனைச் சேகரிக்கிறார்கள், பார்த்தாயா? ஆனால் அந்தத் தேனைக் குடிப்பது யார் தெரியுமா? நான் தான். காலப்போக்கில் ஒரு துளித் தேனைக்கூட விடாமல் என் சொந்த லாபத்திற்காக, அனைத்தையும் வடித்தெடுப்பேன்.’
பிராமண, க்ஷத்திரிய சக்திகள் ஓங்கியிருந்தபோது கல்வியும், நாகரீகமும் ஓர் இடத்தில் குவிந்திருந்தது போல், வைசிய சக்தியின் ஆதிக்கத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிகிறது. கிளிங் என்ற அதன் மதுர ஒலி நான்கு ஜாதியினரின் மனத்திலும் ஒரு தடுக்க முடியாத கவர்ச்சியை ஏற்படுத்துகிறது, அந்தக் காசுதான் வைசியனின் சக்தி. இதனைப் பிராமணன் தந்திரத்தால் பிடுங்கிக் கொள்வான், க்ஷத்திரியன் படைபலத்தால் பறித்துவிடுவான் என்று வைசியன் பயந்துகொண்டே இருக்கிறான். ஆகவே தங்களைக் காப்பாற்றிக் கொள் வதற்காக வைசியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வைசியனின் கையிலுள்ள வட்டியாகிய சாட்டை எல்லோரது உள்ளத்தையும் நடுங்கச் செய்கிறது. பணபலத்தால் அரச பலத்தை ஒடுக்குவதில் அவன் எப்போதும் மும்முரமாக இருக்கிறான். தனக்குப் பணமும் பொருளும் வந்து சேர்வதில் அரச சக்தி குறுக்கிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறான். இருந்தும் அந்த அரச சக்தி சூத்திரர் களிடம் போவதில் அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லை .
‘எந்த நாட்டிற்குத்தான் வணிகன் போகவில்லை ?’ தான் அறியாமலே ஒரு நாட்டின் கல்வி, அறிவு, கலை, விஞ்ஞானம் இவற்றை இன்னொரு நாட்டிற்கு அவன் எடுத்துச் செல்கிறான். பிராமண, க்ஷத்திரியர்களுடைய ஆதிக்கத்தின்போது சமுதாயத்தின் இதயத்தில் நிரம்பி நின்ற கல்வி, நாகரீகம், கலை என்ற ரத்தம் வியாபாரத் தடங்களாகிய ரத்தக் குழாய்கள் மூலம் பரவுகிறது. இந்த வைசிய சக்தி எழுச்சி பெற்றிருக்காவிட்டால் உணவுப் பொருட்கள், போகப் பொருட்கள், நாகரீகம், ஆடம்பரம், கல்வி ஆகியவற்றை உலகத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு யார் எடுத்துச் சென்றிருப்பார்கள்?
மௌனமாக அமுக்கி, நசுக்கி, ரத்தத்தை உறிஞ்சும் சக்தி அதனிடம் உள்ளது. அந்த சக்தி பயங்கரமானது. அவன் வியாபாரி, ஆதலால் எல்லா இடங்களுக்கும் செல்வான்; இதன்மூலம் முந்திய இரண்டு நிலை களிலும் சேர்த்து வைக்கப்பட்ட கருத்துக்களைப் பரப்பு கிறான். இது இந்த ஆதிக்கத்தின் அனுகூலம். இவர்கள் க்ஷத்திரியர்களைவிட குறைந்த அளவே பிறரிலிருந்து பிரிந்து வாழ நினைப்பவர்கள்; ஆனால் இவர்களின் ஆதிக்கத்தின்போது பண்பாடு நலியத் தொடங்குகிறது.