நிர்வாகமும் சமுதாய வகுப்புகளும் 3

3. க்ஷத்திரியர்களின் நிர்வாகம் எவ்வாறு இருந்தது?

மறுபக்கத்தைப் பார்ப்போம். அரசன் சிங்கத்தைப் போன்றவன். அவனிடம் சிங்கத்தின் நல்ல இயல்புகளும் தீய இயல்புகளும் அமைந்துள்ளன. சிங்கம் தனது பசிக்காக, புற்பூண்டுகளை உண்டு வாழ்கின்ற மிருகங்களின் நெஞ்சைத் தன் நகங்களால் கிழித்தெறிய ஒருபோதும் தயங்குவதில்லை. ஆனால் பசியால் வாடுகின்ற கிழச் சிங்கமானாலும் தன்னிடம் சரண்புகுகின்ற நரியைக்கூட கொல்வதில்லை என்று கவிஞர் கூறுகிறார். குடிமக்களும், அரசனின் இன்ப நுகர்ச்சிகளுக்கிடையே குறுக்கிடுவார்களானால் அவர் களுக்கு அழிவுதான். ஆனால் அவர்கள் பணிவுடன் அரசனின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டால் ஆபத்தில்லை .

அது மட்டுமல்ல; பழங்காலம் இருக்கட்டும், தற்காலத்தில்கூட கூட்டுமுயற்சி, ஒருமித்த நோக்கத் துடன் செயல்படுதல், பலரின் நன்மைக்காக ஒருவர் தன்னலத்தைத் தியாகம் செய்வது என்பவையெல்லாம் எந்த நாட்டிலும் சரியாக இல்லை. அதனால்தான் அரசன் என்ற ஒரு மையத்தை சமுதாயம் உருவாக்கு கிறது. எல்லா சக்திகளும் அங்கே ஒன்றுகூடி, பிறகு சமுதாயம் முழுவதிலும் பரவுகிறது.

பிராமண ஆதிக்கத்தின்போது, அறிவைத் தேடுவது எப்படி முக்கியமாக விழிப்புற்றதோ, பின்னர் தொடர்ந்து அது கவனமாகக் காப்பாற்றப்பட்டதோ, அதுபோல் க்ஷத்திரிய ஆதிக்கத்தின்போது போக நாட்டமும், அதற்குத் துணை செய்கின்ற பல்வேறு அறிவுத்துறைகளும் மேலோங்கி வளர்ந்தன.

மகிமை மிக்கவனான அரசன் ஓலைக் குடிசைக் குள் வாழ முடியுமா? சாதாரண மக்கள் பெறுகின்ற சுகபோகங்களால் அவன் திருப்தி பெறத்தான் முடியுமா?

அரசனின் கௌரவத்தை உலகில் யாருடனும் ஒப்பிட முடியாது. அவன் தேவனாகக்கூட கருதப்படு கிறான். அவனது சுகபோகப் பொருட்களைச் சாதாரண மனிதன் பார்ப்பது கூடப் பாவம், அனுபவிக்க நினைப் பது பற்றிப் பேச்சே கிடையாது. அரசனின் உடல் மற்றவர்களின் உடல்களைப் போன்றது அல்ல, தீட்டு போன்ற எந்தத் தோஷங்களும் அதை மாசுபடுத்தாது. அந்த உடலுக்குச் சாவு கிடையாது என்று சில நாடுகளில் நினைக்கிறார்கள். கதிரவன்கூடக் காண முடியாத அரசிகள் சாமானியரின் கண்களில் படுவது சாத்தியமே அல்ல. அதனால்தான் கூரைக் குடிசைகள் இருந்த இடத்தில் மாடமாளிகைகள் எழுந்தன, கிராமியப் பாடல்களும் ஆடல்களும் மறைந்து இனிய, அழகிய சங்கீதம் ஒலிக்கத் தொடங்கியது. இயற்கைக் காடுகள், வனங்கள், கரடுமுரடான உடை போன்றவை படிப்படியாக மறைந்து இனிய சோலைகள், தோட்டங்கள், மனம்கவரும் ஓவியங்கள், ஒளிவீசும் ரத்தினங்கள், சிறந்த ஆடைகள் எல்லாம் ஏற்படத் தொடங்கின. லட்சக்கணக்கான அறிஞர்கள் உழைப்பு தேவைப்படுகின்ற உழவுத் தொழிலைக் கைவிட்டு, உழைப்பு குறைவாகவும் புத்திசாதுரியம் தேவைப்படுவதுமான நூற்றுக்கணக்கான கலைகளை நாடினர். கிராமங்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன, நகரங்கள் எழலாயின.

புரோகிதர் எல்லா அறிவுக்கும் மையமாகத் திகழ முயற்சிப்பதுபோல் அரசனும் பௌதீக சக்தி அனைத் தையும் தன்னிடம் குவிப்பதற்கு முயற்சிக்கிறான்.

அரசர்கள் தங்கள் குடிமக்களின் பெற்றோர்கள், குடிமக்களோ அரசனின் குழந்தைகள். குடிமக்கள் எல்லா வகைகளிலும் அரசனைச் சார்ந்து வாழ வேண்டும். அரசனோ பாரபட்சமற்று, தன் சொந்தக் குழந்தைகளைப்போல் அவர்களைக் காக்க வேண்டும். தனிப்பட்ட குடும்பங்களுக்கு என்ன சட்டமோ அதே சட்டம்தான் முழுச் சமுதாயத்திற்கும். தனிப்பட்ட குடும்பங்களின் தொகுதிதானே சமுதாயம்? ‘மகன் பதினாறு வயதை அடைந்ததும், தகப்பன் அவனை நண்பனாகக் கருத வேண்டும்” என்றால் சமுதாயம் என்ற குழந்தை பதினாறு வயதை அடைவதே இல்லையா! ஒரு குறிப்பிட்ட காலத்தில் எல்லா சமுதாயமும் வாலிபப் பருவத்தை அடைகிறது என்றும், அப்போது பொதுமக்களுக்கும் ஆள்பவர் களுக்கும் இடையே பலத்த போராட்டம் நிகழ்கிறது என்பதையும் வரலாறு காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில் விளைகின்ற வெற்றிதோல்விகளைப் பொறுத்தே சமுதாயத்தின் வளமும் நாகரீகமும் அமைகிறது.

கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்குக் கொடுக்கின்ற எல்லாமே பிறருக்குக் கொடுப்பதற்காகத்தான். நாம் இதை அடிக்கடி மறக்கிறோம். நமக்குக் கொடுக்கப்படும் பொருட்களின்மீது, ‘எனக்கு மட்டும் சொந்தம்’ என்ற முத்திரையை இடும்போது நம்முடைய அழிவுக்கு விதையை நாமே விதைக்கிறோம்.

குடிமக்களின் ஆற்றல் முழுவதையும் தன்னிடம் குவித்து வைத்திருப்பவனான அரசன், தன்னிடம் குவிக்கப்பட்டுள்ள இந்தச் சக்தி ‘ஸஹஸ்ர குணமுத்ஸ்ர ஷ்டம்'”-ஆயிரம் மடங்காகத் திருப்பித் தருவதற்காக மட்டுமே என்பதை விரைவில் மறக்கிறான். வேன மன்னனைப்போல்’ தானே எல்லா கடவுளும், மற்றவர்கள் கேவலமான மனிதர்கள் மட்டுமே என்று நினைக்கிறான். நல்லதானாலும் கெட்டதானாலும் அவனது விருப்பத்திற்கு எதிராக நடப்பது பெரும் பாவம். ஆகவே காப்பாற்ற வேண்டிய அரசன் மக்களைத் துன்புறுத்துகிறான், அவர்களின் உயிரை உறிஞ்சுகிறான். சமுதாயம் பலவீனமாக இருந்தால் அரசனின் எல்லா கொடுமைகளையும் அது சகித்துக்கொள்கிறது. அதன் காரணமாக அரசனும் மக்களும் படிப்படியாக வலிமை கெட்டு பரிதாபமான நிலையை அடைகிறார்கள்; பிறகு தங்களைவிட வலுவான இன்னொரு நாட்டிற்குப் பலியாகிறார்கள். எங்கு சமுதாயம் வலிமையாக இருக்கிறதோ, அங்கு உடனே எதிர்விளைவு உண்டாகிறது. அதன் விளைவாக வெண்கொற்றக்குடை, செங்கோல், சாமரம் எல்லாம் தூக்கி எறியப்படுகின்றன; அரியாசனமும் மற்ற அரச ஆடம்பரங்களும் கண்காட்சிச் சாலையில் வைக்கப் படும் பொருட்களாகி விடுகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s