2. பிராம்மணர்கள் எப்படி நிர்வாகத்தைக் கடை கைப்பற்றுகின்றனர்? எப்படி அதனை இழக்கின்றனர்?
சீனர், சுமேரியர், பாபிலோனியர், எகிப்தியர், சால்டியர், ஆரியர், இரானியர், யூதர், அரேபியர் ஆகிய இந்த எல்லா இனத்திலும் அவர்களுடைய வரலாற்றின் ஆரம்பத்தில் சமுதாயத்தலைமை பிராமணர்கள் அதாவது புரோகிதர்களின் கையில் இருந்தது. இரண்டாவது காலகட்டத்தில் ஆதிக்கம் க்ஷத்திரியர்களிடம், அதாவது ஒரு தனி மன்னனிடமோ ஓர் ஆட்சிக் குழுவிடமோ இருந்திருக்கிறது.
வியாபாரத்தினால் பணக்காரர்களான வணிகர் கூட்டத்தினரிடம் அதாவது வைசியர்களிடம் சமுதாயத் தலைமை மேலை நாடுகளிடையே இங்கிலாந்தில் முதல் தடவையாக வந்திருக்கிறது.
மிகப் பழைய நாட்களில் டிராய், கார்தேஜ், தற்காலத் தில் வெனிஸ் போன்ற வர்த்தகத்தில் முன்னேறிய சிறுசிறு நாடுகள் மிகவும் வல்லமையுடன் விளங்கவே செய்தன. ஆனால் உண்மையான வைசிய சக்தி அங்கே வளர்ச்சியுற்றிருந்தது என்று சொல்ல முடியாது.
உண்மையில், பழங்காலத்தில் அரச சந்ததியினர், சாதாரண மக்கள் மற்றும் தங்கள் வேலைக்காரர்களின் துணையுடன் வியாபாரத்தைத் தங்கள் ஏகபோக உரிமையாக வைத்திருந்தனர். வந்த லாபத்தை அவர்களே அனுபவிக்கவும் செய்தனர். இந்த சிலரைத் தவிர வேறு யாருக்கும் நாட்டின் ஆட்சி போன்ற விஷயங்களில் எந்த உரிமையும் கிடையாது.
எகிப்து போன்ற பண்டைய நாடுகளில் புரோகிதர் களின் ஆதிக்கம் சிறிது காலத்திற்குத்தான் ஓங்கியிருந்தது. அதற்குப் பிறகு அது க்ஷத்திரிய சக்திக்குக் கீழ்ப்படிந்து அதற்கு உதவியாக இருந்தது.
சீனாவில் கன்ஃப்யூரயஸ் என்ற மாமனிதரால் ஒன்றுதிரட்டப்பட்ட க்ஷத்திரிய சக்தி இருபத்தைந்து நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக புரோகித சக்தியைத் தன் விருப்பப்படி கட்டுப்படுத்தியும் செலுத்தியும் வந்திருக்கிறது. ஆனால் சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக திபெத்திய லாமாக்கள் ராஜ குருக்களாக இருந்தும், சக்கரவர்த்தியின் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதாகிவிட்டது.
மற்ற புராதன நாகரீக நாடுகளில் க்ஷத்திரிய சக்தி வெற்றிபெற்ற நீண்ட காலத்திற்குப் பிறகுதான் இந்தியாவில் க்ஷத்திரிய சக்தி தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. ஆகவே சீன, எகிப்திய, பாபிலோனிய பேரரசுகளுக்குப் பிறகுதான் இந்திய சாம்ராஜ்யம் உதய மாகியது.
யூதர்கள் விஷயத்தில் மட்டுமே க்ஷத்திரிய சக்தி புரோகித சக்தியை வெல்வதற்குத் தீவிரமாக முயன்றும் படுதோல்வி கண்டது. வைசியர்களும் அங்கே ஆதிக்கம் பெற முடியவில்லை . புரோகிதர்களின் பிடியிலிருந்து தப்பிக்க விரும்பிய சாதாரண மக்கள் ஒரு பக்கம் கிறிஸ்தவ மதம் போன்ற மத இயக்கங்களா லும், இன்னொரு பக்கம் ரோமப் பேரரசாலும் நசுக்கப் பட்டனர்.
எவ்வளவோ தொடர்ந்து போராடியும் பழங்காலத்தில் புரோகித சக்தி க்ஷத்திரிய சக்தியால் எவ்வாறு ஒடுக்கப்பட்டதோ, அவ்வாறே இந்தக் காலத்தில் புதிதாகத் தோன்றியுள்ள வைசிய சக்தியின் பலத்த அடியினால் எத்தனையோ கிரீடங்கள் தரையை முத்தமிட்டன, எத்தனையோ செங்கோல்கள் துண்டுதுண்டாக உடைந்தன. சில நாகரீக நாடுகளில் இன்னும் சில சிம்மாசனங்கள் ஏதோ சிறிது நிலைத் திருக்கின்றனவே, அது அவை எண்ணெய், உப்பு, சர்க்கரை மற்றும் மதுபான வியாபாரிகளின் பண பலத்தைச் சார்ந்திருப்பதால்தான்; அந்த அரசர்களின் பெருமை எல்லாம் உண்மையில் வைசியர்களின் பெருமை என்பதால்தான்.
இந்தப் புதிய வைசிய மகாசக்தி ஆணையிட்டதும், மின்சாரம் செய்திகளை ஒரு துருவத்திலிருந்து இன் னொரு துருவத்திற்கு ஒரு நொடியில் எடுத்துச் செல் கிறது. இந்தச் சக்தியின் பாதை மலையளவு உயர்ந்த அலைகள் கொண்ட கடலாகும். அது உத்தர விட்டதும் சரக்குகள் உலகின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அனாயாசமாக எடுத்துச் செல்லப் படுகின்றன. அதன் உத்தரவைக் கேட்டுப் பேரரசர்களும் நடுங்குகிறார்கள். அந்த வைசிய சக்தி என்னும் வெள்ளை நுரை பொங்கும் பேரலையின் உச்சியில் இங்கிலாந்தின் பெருமை மிக்க சிம்மாசனம் விளங்குகிறது.
புரோகித சக்தியின் ஆதாரம் அறிவுபலம்; படைபலம் அல்ல. அதனால் புரோகிதசக்தியின் ஆதிக்கத் தில் கல்வி வளர்ச்சி காணும். புலன்களுக்கு அப்பாற் பட்ட ஆன்மீக உலகுடன் தொடர்பு கொள்ளவும் அங்கிருந்து உதவி பெறவும் ஒவ்வோர் இதயமும் ஏங்கு கிறது. சாதாரண மக்கள் அங்கே நுழைய முடியாது. புலன்களைக் கட்டுப்படுத்திய, சத்வ குணம் மேம்பட்ட சிலரே இயற்கை என்னும் சுவரைக் கடந்து அந்த உலகைக் காண்கின்றனர், அதன் செயல்முறைகளை அறிகின்றனர், அங்கிருந்து செய்திகள் கொண்டுவந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். இவர்களே புரோகிதர்கள், மனித சமுதாயத்தின் முக்கிய குருமார்கள், தலைவர்கள், வழிநடத்துபவர்கள்.
புரோகிதர் தேவர்களை அறிந்தவர், எனவே தேவர் களைப்போல் வணங்கப்படுகிறார். அவர் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதிக்க வேண்டியதில்லை. எல்லா உணவிலும் சிறந்த பகுதி தேவர்களுக்கு நிவேதிக்கப்பட வேண்டும், தேவர்களோ இந்தப் புரோகிதர்களின் வாய்மூலமாகவே அவற்றை உண்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ சமுதாயம் புரோகிதர்களுக்கு நிறைய ஓய்வுநேரம் கொடுக்கிறது. அதனால் அவர்கள் சிந்தனை ஜீவிகள் ஆகின்றனர். ஆகவே புரோகித ஆதிக்க காலத்தில் அறிவுத் துறை களில்தான் முதலில் வளர்ச்சி ஏற்படுகிறது. சிங்கமாகிய அரசனுக்கும், பயந்து சாகும் ஆட்டு மந்தை போன்ற மக்களுக்கும் இடையில் புரோகிதர் நிற்கிறார். சிங்கத் தின் அனைத்தையும் அழிக்கும் போக்கைத் தம் கையி லுள்ள ஆன்மீகம் என்னும்சாட்டையினால்கட்டுப்படுத்து கிறார். பணம் மற்றும் படைபலத்தால் பித்துப் பிடித்த மன்னர்களின் சர்வாதிகாரப் போக்கு என்ற பெருந்தீ எதையும் எரித்துச் சாம்பலாக்கக் கூடியது. பணபலமோ படைபலமோ இல்லாமல் தவசக்தி ஒன்றையே ஒரே பலமாகக் கொண்டுள்ள புரோகிதர்களின் வார்த்தையாகிய தண்ணீர் தான் அந்தத் தீயை அணைக்கவல்லது.
புரோகிதர்களின் ஆதிக்க காலத்தில்தான் முதன் முதலாக நாகரீகம் தோன்றியது; முதன்முதலாகத் தெய்வீகத் தன்மை மிருகத் தன்மையை வெற்றி கொண்டது; முதன்முதலாக ஜடத்தின்மீது உணர்வு தன் அதிகாரத்தை நிலைநாட்டியது; இயற்கையின் கொத்தடிமையாகவும், தசைப் பிண்டமாகவும் உள்ள இந்த மனித உடலில் மறைந்து கிடக்கின்ற தெய்வீக சக்தி முதன்முதலாக வெளிப்பட்டது. புரோகிதர்களே ஆன்மாவையும் ஜடத்தையும் முதன்முதலாகப் பிரித்தவர்கள்; இந்த உலகை மேல் உலகுடன் தொடர்பு கொள்வதற்குத் துணை செய்தவர்கள்; தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கான நடுவாளர் களாக இருந்தவர்கள்; அரசனையும் குடிமக்களையும் ஒன்றுசேர்க்கின்ற பாலமாக இருந்தவர்கள். அவர் களுடைய தவபலத்தால்தான், அவர்களுடைய அறிவு ஈடுபாட்டினால்தான், அவர்களுடைய தியாக மந்திரத் தால்தான், அவர்களுடைய சக்தி அனைத்தையும் ஈந்ததால் தான் எத்தனையோ நல்ல காரியங்கள் முளைவிட்டன. அதனால்தான் எல்லா நாடுகளிலும் அவரை முதலில் வணங்குகிறார்கள், அதனால்தான் அவர்களின் நினைவு நமக்குப் புனிதமானதாக இருக்கிறது.
ஆனால் தீமைகளும் உள்ளன; வாழ்வின் விதை யைப்போல் மரணத்தின் விதையும் விதைக்கப்படு கிறது. இருள் ஒளியுடன் கூடவேதான் செல்கிறது. தக்க வேளையில் தடுத்து நிறுத்தா விட்டால் சமுதாயத் தையே அழித்துவிடுகின்ற தீமை அதில் உள்ளது. ஜடப் பொருள் வழியாக இயங்குகின்ற சக்தியின் வெளிப் பாடு எல்லோருக்கும் அனுபவமானது. வாள் போன்ற ஆயுதங்களின் வீச்சிலும், தீ போன்றவற்றின் எரிக்கும் தன்மையிலும் இயற்கையின் தீவிர ஆற்றலை எல்லோரும் பார்க்கிறார்கள்; எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள். யாரும் இவற்றைப்பற்றிச் சந்தேகப்படு வதில்லை, அவை உண்மைதானா என்கிற குழப்பமும் இருக்க முடியாது. ஆனால் சக்தியின் இருப்பிடமும் இயங்குகின்ற இடமும் மனமாகுமானால், அந்த சக்தி சில சொற்களுக்குள் அடங்கியிருக்குமானால், அந்த சொற்களை உச்சரிக்கும் விதத்தில் இருக்குமானால், அந்தச் சொற்களை ஜபிப்பதில் இருக்குமானால், அல்லது இதுபோன்று மனத்தினால் செய்யக்கூடிய காரியங்களில் இருக்குமானால் அங்கே ஒளியில் இருள் கலக்க ஆரம்பிக்கிறது; நம்பிக்கையில் வளர்ச்சியும் தளர்ச்சியும் ஆரம்பிக்கிறது; நேரில் கண்டால்கூட உண்மைதானா என்ற சந்தேகம் சிலவேளைகளில் எழுகிறது.
துயரம், அச்சம், கோபம், குரோதம், பழிவாங்கும் இயல்பு போன்ற மனித உணர்ச்சிகள் தங்கள் நோக்கங் களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எல்லோருக்கும் தெரிந்த சாதாரண வழிகளான ஆயுத சக்தி போன்ற வற்றைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, ஸ்தம்பனம், உச்சாடனம், வசீகரணம், மாரணம்’ முதலிய மன சம்பந்தமான கிரியைகளைச் சிலர் பிரயோகிக் கிறார்கள். இவர்கள் தூலத்திற்கும் சூட்சுமத்திற்கும்
இடைப்பட்ட பனிப்புகை போன்ற உலகில், புதிரான உலகில் வாழ்பவர்கள்; இவர்களின் மனம் புகைபோன்ற ஒன்றினால் தன்னைத்தானே மூடிக்கொண்டதுபோல் ஆகிறது. இத்தகைய மனத்தின் முன் ஒரு செயலும் நேராகத் தோன்றாது, தோன்றினாலும் அதை அந்த மனம் கோணலாகவே ஏற்கும். இதனால் கபடம் தோன்றுகிறது; இதயம் மிகவும் சுருங்கிவிடுகிறது; தாராள மனப்பான்மை இல்லாமல் போய்விடுகிறது; அனைத்திற்கும் மேலாக, பிறர் சிறப்பாக இருப்பதைக் காணச் சகிக்காத பொறாமை உண்டாகிறது.
புரோகிதர் தமக்குள் இப்படிச் சொல்லிக்கொள்வது இயல்புதான்: ‘தேவர்கள் என் வசம் உள்ளார்கள், நோய்களை என்னால் குணப்படுத்த முடியும், பேய் பிசாசுகளை வசப்படுத்தி வைத்துள்ளேன். எதை அடைவதற்காக நான் உலக சுகம், வசதி, செல்வம் அனைத்தையும் விட்டுக் கொடுத்தேனோ, அதை நான் ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்?’ அந்தச் சக்தியோ முழுவதும் மானசீக சக்தி. அதை ரகசியமாக வைத்துக் கொள்வதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த நிகழ்ச்சிச்சுழற்சியில் மனித இயற்கை எந்த நிலையை அடைய வேண்டுமோ அந்த நிலையையே அடையும். திரும்பத்திரும்ப ஒளித்து வைப்பதால் அது சுயநலத்திற்கும், கபடத்திற்கும், இவற்றால் விளைகின்ற தீமைகளுக்கும் இடம் கொடுக்கிறது.
ஒளித்து வைக்க வேண்டும் என்கிற ஆசை காலப்போக்கில் நம்மையே திருப்பித் தாக்குகிறது. பயிற்சியின்றியும், பகிர்ந்து அளிக்கப்படாமலும் இருக்கும்போது எல்லா அறிவும் கிட்டத்தட்ட அழிந்து விடுகிறது. எது எஞ்சுகிறதோ அது ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து கிடைத்ததாகக் கருதப் பட நேர்கிறது; அதனால் புதிய அறிவைப் பெறாமல் இருப்பது மட்டுமல்ல, இருக்கின்ற அறிவையே பக்குவப்படுத்தி வைத்துக்கொள்வதுகூட வீண் முயற்சி என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே கல்வித் திறமைகள் அற்று, முயற்சி இழந்து, முன்னோர்களின் பெயர்களை வைத்துப் பெருமைப்படுகின்ற இந்தப் புரோகிதர்கள் முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்ட . அதே சலுகையும், அதே மரியாதையும் தங்களுக்கும் கிடைப்பதற்காக, என்னென்ன வழிகள் உண்டோ , அத்தனையையும் பின்பற்றுகிறார்கள்; அதன் காரண மாக மற்ற ஜாதிகளுடன் கடுமையான மோதல் ஏற்படுகிறது.
இயற்கையின் நியதிப்படி, நலிந்துவிட்ட ஓர் இடத்தில் புதிய வாழ்வு தோன்றும்போதெல்லாம், அது பழைய வாழ்வின் இடத்தைப் பிடித்துக்கொள்ளப் பார்க்கிறது. இந்தப் போராட்டத்தினுடைய வெற்றி தோல்விகளின் விளைவைப்பற்றி முன்னரே சொல்லியாகிவிட்டது.
புரோகிதர்கள் ஓங்கியிருந்த காலத்தில் உண்மை நாட்டத்திற்காகப் பயன்பட்ட தவம், புலனடக்கம், கட்டுப்பாடு எல்லாம், அவர்களின் வீழ்ச்சிக்கு முந்தின காலத்தில் சுகபோகங்களுக்கான பொருட்களைச் சேர்ப் பதற்கும், அதிகாரங்களை அதிகரிப்பதற்குமே பயன்படத் தொடங்கியது. எல்லா மரியாதையையும், எல்லா போற்றுதலையும் எந்தச் சக்தி அவர்களுக்குத் தேடிக் கொடுத்ததோ அந்தச் சக்தியே இப்போது அவர்களைச் சொர்க்கத்திலிருந்து நரகத்திற்குத் தள்ளியது. லட்சியத்தை இழந்து, வழி தவறிய புரோகிதர்கள் சிலந்திப் பூச்சியைப்போல் தங்கள் வலையில் தாங்களே சிக்கிக் கொண்டனர். பிறர் காலில் மாட்டுவதற்காக, தலைமுறை தலைமுறையாக மிகவும் பாடுபட்டுச் செய்த சங்கிலி இப்போது அவர்களின் காலையே நூற்றுக்கணக்கான வழிகளில் சுற்றிக்கொண்டு அவர்களை நகரவிடாமல் செய்து கொண்டிருக்கிறது; புறத் தூய்மைக்காக என்று எல்லா பக்கங்களிலும் கட்டிவைத்த எந்த ஆசார பரம்பரையாகிய வலையில் சமுதாயம் கட்டுண்டு கிடந்ததோ, அந்த வலையிலேயே தலைமுதல் கால்வரை அகப்பட்டுக்கொண்டு, செய்வதறியாது புரோகித சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறது. இனி வழியில்லை, வலையைக் கிழித்தாலோ புரோகிதர்களின் புரோகிதத்துவம் இல்லாமல் போய்விடும். தான் முன்னுக்கு வர வேண்டும் என்று இயற்கையாகவே ஒவ்வொருவரிலும் இருக்கின்ற ஆசை, இந்த வலையில் சிக்குண்டு கிடக்கும்வரை நிறைவேறாது என்று காண்கின்ற சிலர் வலையைக் கிழித்து வெளியே வந்து, பணம் சம்பாதிப்பதற்காக மற்ற ஜாதிகளின் தொழில் களை மேற்கொள்கிறார்கள்; உடனே சமுதாயம் அவர்களுடைய புரோகித சலுகைகளைப் பிடுங்கி விடுகிறது. சிகை வைத்துக் கொள்ளாமல் தலைமயிரை வாரிக்கொள்பவர்கள், ஐரோப்பிய நடைஉடையும் பழக்கவழக்கங்களும் என்று பாதி ஐரோப்பியர்களாக வாழ்பவர்கள் –இத்தகைய பிராமணர்களின் பிராமணத் துவத்தில் சமுதாயத்திற்கு நம்பிக்கை இல்லை.
பிராமண ஜாதியினரின் சலுகைகளைப் பறிக்க விரும்புகிறார்கள் என்று யாராவது தனிநபரையோ அல்லது கூட்டத்தினரையோ குற்றம் சாட்டுபவர்கள், இயற்கையின் மீற முடியாத நியதியின்படி, பிராமண ஜாதி தன் கையாலேயே தனக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்வதுதான் நல்லது. சலுகைகள் பெறுகின்ற ஜாதிகள் ஒவ்வொன்றும் இவ்வாறு தங்கள் சிதைகளைத் தாங்களே தயாரித்துக் கொள்வது முக்கியக் கடமையாகும்.