1.சமுதாயத்தின் வகுப்புகள் என்றால் என்ன? அவை எப்படி நிர்வாகத்தை ஆள்கின்றன?
மனித சமுதாயம் வரிசையாக பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்கள் என்ற நான்கு ஜாதியினரால் ஆளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையும் அதற்கான பெருமைகளையும் குறைகளையும் கொண்டதாக உள்ளது.
பிராமணர்கள் ஆளும்போது, பிறந்த குலத்தைக் காரணமாகக் கொண்டு, பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒதுக்கப்படுகிறார்கள். புரோகிதர்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் எல்லாவித பாதுகாப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த அறிவும் கிடைக்க வழி இல்லை ; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அந்த அறிவைப் போதிப்பதற்கான உரிமையும் இல்லை. பல்வேறு விஞ்ஞானங்களின் அஸ்திவாரம் இடப்பட்டதுதான் இந்தக் காலத்தின் பெருமை. புரோகிதர்கள் மனத்தைப் பண்படுத்துகின்றனர். மனத்தின்மூலமே அவர்கள் ஆள்கின்றனர்.
க்ஷத்திரிய ஆட்சி கொடுங்கோன்மையானது; கொடூரமானது. ஆனால் யாரையும் அவர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை . அவர்களின் அதிகாரம் ஓங்கியிருக்கின்ற காலத்தில்தான் கலைகளும் சமுதாயப் பண்பாடும் உச்சநிலை அடைகின்றன.
வைசிய ஆதிக்கம் அடுத்து வருகிறது. மௌனமாக அமுக்கி, நசுக்கி, ரத்தத்தை உறிஞ்சும் சக்தி அதனிடம் உள்ளது. அந்த சக்தி பயங்கரமானது. அவன் வியாபாரி, ஆதலால் எல்லா இடங்களுக்கும் செல்வான்; இதன்மூலம் முந்திய இரண்டு நிலைகளிலும் சேர்த்து வைக்கப்பட்ட கருத்துக்களைப் பரப்புகிறான். இது இந்த ஆதிக்கத்தின் அனுகூலம். இவர்கள் க்ஷத்திரியர்களைவிட குறைந்த அளவே பிறரிலிருந்து பிரிந்து வாழ நினைப்பவர்கள்; ஆனால் இவர்களின் ஆதிக்கத்தின்போது பண்பாடு நலியத் தொடங்குகிறது.
இறுதியாக சூத்திரர்கள் அதாவது உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி. பெளதீக வசதிகள் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதுதான் இந்த ஆட்சியின் அனு கூலம். அதன் பிரதிகூலங்கள் பண்பாடு தாழ்வுறுவதாக (ஒருவேளை) இருக்கலாம். இதில் சாதாரணக் கல்வி பேரளவில் பரவும். ஆனால் அசாதாரணமான மேதைகள் குறைந்துகொண்டே போவார்கள்.