7. வகுப்புப் பிரிவற்ற சமுதாயம் என்றால் என்ன?
பரிபூரணச் சமத்துவம் என்பதுதான் நீதிநெறியின் லட்சியம் என்றால் அத்தகைய ஒரு நிலை சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. எவ்வளவுதான் முயன்றாலும், எல்லோரும் ஒரேமாதிரி இருப்பது முடியாத ஒன்று. மனிதர்கள் வேறுபாடுகளுடனேயே பிறப்பார்கள். சிலருக்கு மற்றவர்களைவிட அதிக ஆற்றல் இருக்கும்; சிலருக்கு இயல்பாகவே சில திறமைகள் இருக்கும், சிலருக்கு இருக்காது. சிலருக்குப் பூரணமான உடம்பு இருக்கும், சிலருக்கு இருக்காது. இதை நாம் ஒருபோதும் தடுக்க இயலாது.
ஆனால் தனிச் சலுகை என்பதை நாம் ஒழித்துவிட முடியும். உண்மையில் உலகின் முன்னுள்ள பணி இதுவே. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, ஒவ்வோர் இனத் திலும் உள்ள சமுதாய வாழ்க்கையில் இந்த போராட்டம் இருந்தே வருகிறது. ஒரு பிரிவினர் இயல்பாகவே மற்றொரு பிரிவினரைவிட அறிவுமிக்கவராக இருக் கிறார்கள் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதிக அறிவு இருப்பதற்காக அவர்கள், அது இல்லாதவர்களின் சாதாரண சுகங்களைக்கூடப் பிடுங்க முயல்வது சரிதானா என்பதுதான் பிரச்சினை. இந்தச் சலுகையை ஒழிப்பதற்காகத்தான் போராட்டம் நடைபெறுகிறது.
சிலர் மற்றவர்களைவிட உடல் வலிமை பெற்றவராக இருப்பார்கள்; இயல்பாகவே இவர்களால் பலவீனர்களை அடக்கியாளவும் வெல்லவும் முடியும் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் இந்த வலிமை காரணமாக உலகத்தில் கிடைக்கும் இன்பங்களை எல்லாம் அவர்கள் தாங்களே அனுபவிக்க முயல்வது நியாயத்திற்கு விரோதமானது. இதை எதிர்த்துதான் போராட்டம் நடைபெறுகிறது. இயற்கையாகவே உள்ள திறமை காரணமாகச் சிலர் மிகுந்த செல்வம் சேர்த்துக்கொள்வது இயற்கை. ஆனால் பணம் ஏராளம் தேடுவதற்காக, இப்படிப் பணம் திரட்ட இயலாத மற்றவர்களைத் தங்கள் ஆற்றலால் நசுக்குவதோ, அவர்களின் தோள்மீது ஏறிச் சவாரி செய்வதோ நீதியல்ல, இதை எதிர்த்துதான் போராட்டம் நடைபெறுகிறது. மற்றவனிடமிருந்து பிடுங்கி, தான் இன்பம் அனுபவிப்பதே சலுகை என்பது; அதை ஒழிப்பதுதான் காலங்காலமாக நீதிநெறியின் லட்சியமாக இருந்துவருகிறது. இந்த லட்சியம்தான் வேறுபாடுகளை அழிக்காமல் சமத்துவத்தை நோக்கி, ஒருமையை நோக்கிச் செல்வதாக உள்ளது.
இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம், ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும்தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளைவிடப் பலவீனர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது, கல்வி கற்பித்தல் என்பது சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு பிராமணனுக்குத் தேவை யில்லை . பிராமணனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவை யானால் சண்டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர்கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும்.
சமுதாயத்தின் இயல்பே குழுக்களாகப் பிரிவது தான். எனவே ஜாதிகள் இருக்கும். ஆனால் சில பிரிவினருக்கான தனிச் சலுகைகள் போய்விடும்!
ஜாதி என்பது இயல்பான ஒன்று. சமுதாய வாழ் வில் நான் ஒரு தொழில் செய்யலாம்; நீங்கள் வேறொன்று செய்யலாம். நீங்கள் அரசாளலாம், நான் செருப்பு தைக்கலாம். ஆனால் அதன் காரணமாக நீங்கள் உயர்ந்தவர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் உங்களால் செருப்பு தைக்க முடியுமா? இல்லை, என்னால்தான் நாட்டை ஆள முடியுமா? நான் செருப்பு தைப்பதில் வல்லவனாய் இருக்கலாம்; நீங்கள் வேதம் படிப்பதில் நிபுணனாக இருக்கலாம். ஆனால் அதன் காரணமாக நீங்கள் என் மீது ஏன் ஏறி மிதிக்க வேண்டும்? ஒருவன் கொலை செய்தால்கூட அவனைப் புகழ வேண்டுமாம், மற்றொருவன் ஓர் ஆப்பிளைத் திருடினாலும் அவனைத் தூக்கிலிட வேண்டுமாம். இவை ஒழிய வேண்டும். ஜாதிகள் நல்லது. வாழ்க்கையை இயல்பாகக் கையாள்வதற்கான வழி அது ஒன்றுதான். மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்துதான் வாழ முடியும், அதை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் எங்கு சென்றாலும் ஜாதிகள் இருக்கவே செய்யும். ஆனால் அதன்காரணமாகயாருக்கும்தனிச்சலுகை இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தத் தனிச் சலுகைகளின் தலையிலடித்து அவற்றை ஒழிக்க வேண்டும். ஒரு மீனவனுக்கு வேதாந்தம் கற்பித்தோமானால் அவன், ‘உன்னைப் போலவே நானும் நல்லவன், நான் மீன் பிடிப்பவன், நீதத்துவவாதி. ஆனால் உன்னில் போலவே என்னிலும் கடவுள் இருக்கிறார்’ என்று கூறுவான். யாருக்கும் தனிச்சலுகையில்லை, எல்லோருக்கும் சம வாய்ப்புக்கள்; இதுவே நமக்கு வேண்டும். தெய்வீகம் ஒவ்வொருவரின் உள்ளே இருக்கிறது என்பதை அவர்களுக்குக் கற்பியுங்கள். பின்னர் அவர்களே தங்கள் முக்திக்கு வழி தேடிக்கொள்வார்கள்.
சுதந்திரமே வளர்ச்சிக்கான முதல் நிபந்தனை.