3. சமுதாயத்தின் முக்கிய சக்திகள் எவை? சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு என்ன?
‘கல்விதான் எல்லா சக்திகளுக்கும் மேலான சக்தி. அந்தக் கல்வி என்னிடம் இருக்கிறது. ஆகவே சமுதாயம் என் சொற்படிதான் நடக்க வேண்டும்’ என்றான் பிராமணன். சில காலத்திற்கு இப்படி நடந்தது. பிறகு க்ஷத்திரியன் சொன்னான்: ‘என் ஆயுத பலமில்லாவிட்டால் உன் கல்விவலிமையுடன் நீ எங்கிருப்பாய்? நான்தான் எல்லோரிலும் மேலானவன்.’ உறையிலிருந்து பறந்து வந்தது பளிச்சிடும் வாள், சமுதாயம் தலைதாழ்த்தி அதை ஏற்றுக்கொண்டது. அறிவைப் போற்றியவன்தான் அனைவருக்கும் முதலாக அரசனைப் போற்ற ஆரம்பித்தான். பிறகு வைசியன் சொன்னான்: ‘பைத்தியக்காரர்களே, எங்கும் நிறைந்த கடவுள் என்று நீங்கள் சொல்கிறீர்களே, அது என் கையில் உள்ளதும் சர்வ வல்லமையுள்ளதுமான பணம். அதன் அருளால் நானும் வல்லவனாகி விட்டேன்.
விவசாயிகளும் நெசவாளிகளுமான பாரதத் தின் பாமர வர்க்கத்தினர், அன்னியர்களால் அடிமைப் படுத்தப்பட்டும் சொந்த நாட்டு மக்களால் அலட்சியப் படுத்தப்பட்டும் கிடக்கின்ற இந்த பாரத மண்ணின் மைந்தர்கள் காலங்காலமாக முணுமுணுக்காமல் உழைத்துவருகிறார்கள். ஆனால் அவர்களது உழைப்பின் பலன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை! இயற்கை நியதியின்படி உலகம் முழுவதும் மெல்லமெல்ல எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன! நாடுகள், நாகரீகங்கள், ஆதிக்கங்கள் இவற்றில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாரதத் திருநாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரே, நீங்கள் எத்தனையோ அவமதிப்புகளைத் தொடர்ந்து ஏற்றும், அமைதியாக உழைத்துவருவதன் காரணமாக அல்லவா பாபிலோனியா, பாரசீகம், அலெக்சாண்டிரியா, கிரீஸ், ரோம், வெனிஸ், ஜினோவா, பாக்தாத், சமர்க்கண்ட், ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், ஹாலந்து, இங்கிலாந்து ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக ஆதிக்கமும் வளமும் பெற்று உயர்ந்தன!