2. ஒரு சமுதாயத்தின் வரலாறு எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
மனித இனத்தின் முன்னேற்றம், நாகரீகம் என்பதெல்லாம் இயற்கையை அடக்கி ஆள்வதைத்தான் குறிக்கும்.
இயற்கையை ஆள வெவ்வேறு இனத்தினர் வெவ்வேறு வழிகளில் முயன்றனர்.
நெருப்பு ஒன்றே, ஆனால் அது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அதுபோல் ஒரே மகா சக்திதான் பிரெஞ்சு மக்களிடம் அரசியல் சுதந்திர மாகவும், ஆங்கிலேயர்களிடம் வாணிப அறிவாகவும் சமுதாய விரிவுப்படுத்தலாகவும், இந்துக்களிடம் முக்தி நாட்டமாகவும் வெளிப்படுகிறது.
இந்த நாட்டின் உயிர்நாடி மதம்; மொழி, இயல்பு எல்லாமே மதம் என்பது அப்போது தெரியவரும். உங்கள் அரசியல், சமூக நீதி, நகரசபை, பிளேக் நிவாரணப் பணி, ஏழைகளுக்கு அன்னதானம் என்று காலங்காலமாக இந்த நாட்டில் நடந்து வருபவை யெல்லாம் நடக்கும், எப்படி? மதத்தின் வாயிலாகச் செய்தால் நடக்கும், இல்லாவிட்டால் உங்கள் ஆர்ப்பாட்டமெல்லாம் வீண். ராம் ராம்!
தன் மக்கள் என்ற தீவிர அன்பும், அதன் காரண மாக மற்றவர்கள்மீது எழுகின்ற கடுமையான வெறுப்பும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. உதாரணமாக பாரசீகத்திற்கு எதிராக கிரீஸ், கார்தேஜுக்கு எதிராக ரோம், காஃபிருக்கு எதிராக அரேபியன், மூருக்கு எதிராக ஸ்பெயின், ஸ்பெயினுக்கு எதிராக பிரான்ஸ், பிரான்ஸுக்கு எதிராக இங்கிலாந்தும் ஜெர்மனியும், இங்கிலாந்திற்கு எதிராக அமெரிக்கா. இந்த வெறுப்பின் காரணமாக, ஒன்றுக்கு எதிராக ஒன்று இணைவதால் முன்னேற்றம் ஏற்படுகிறது.
சமுதாயம் உருவாக ஆரம்பித்தது; நாடுகளுக் கேற்ப அது வேறுபட்டது. கடற்கரையோரம் வசித்த வர்கள் அனேகமாக மீன் பிடித்து வாழ்க்கை நடத் தினர். சமவெளிகளில் இருந்தவர்கள் பயிர் செய் தனர். மலைவாசிகள் செம்மறி ஆடுகளை வளர்த் தனர். பாலைவனவாசிகள் வெள்ளாடுகளையும் ஒட்டகங் களையும் வளர்த்தனர். சிலர் காடுகளில் வசித்தனர், வேட் டையாடி வாழ்ந்தனர். சமவெளிகளில் வாழ்ந்தவர்கள் விவசாயம் செய்யக் கற்றனர்; வயிற்றிற்காக இவர்கள் அவ்வளவு போராட வேண்டியிருக்கவில்லை; எனவே சிந்தனையில் ஈடுபட்டனர், நாகரீகம் பெறத் தொடங்கினர்.
உணவு கிடைக்காதபோது வேட்டைக்காரர்களும் இடையர்களும் மீனவர்களும், திருடர்களாக கொள்ளைக்காரர்களாக மாறி, சமவெளிகளில் வாழ்ந்தவர்களைச் சூறையாடினர்.
ஆனாலும் சுவடுகள் மறைவதில்லை . முற்பிறவிகளில் ஆடு மேய்த்தல், மீன்பிடித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் நாகரீகமடைந்த இந்தப் பிறவிகளில் கொள்ளையராக, கடற்கொள்ளையராக மாறினர். வேட்டையாட காடுகள் இல்லை, ஆடுமாடுகளை மேய்க்க அக்கம்பக்கத்தில் குன்றுகளோ மலைகளோ இல்லை; வேட்டையாட, ஆடுமாடுகளை மேய்க்க, மீன் பிடிக்கப் போதிய வாய்ப்புகள் இல்லை; எனவே கொள்ளையடிக்கிறான், திருடுகிறான். வேறென்ன செய்வான்?
உலக வரலாற்றைப் படித்துப் பார். ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட காலத்தில் ஒரு மகாபுருஷர் நடுநாயகமாக இருப்பதைக் காண்பாய். அவரது கருத்துக்களால் கவரப்பெற்று நூற்றுக்கணக்கான மக்கள் உலகிற்கு நன்மை செய்வார்கள்.
கிறிஸ்தவ மதமோ, விஞ்ஞானமோ சமூகத்தை மாற்றுவதில்லை; தேவைதான் அடிப்படையில் வேலை செய்கிறது. வாழ்வதா அல்லது பட்டினிகிடப்பதா என்ற தேவைதான் சமுதாயத்தை மாற்றுகிறது.