11. உண்மையான கலாச்சாரம் என்றால் என்ன?
நீங்கள் தத்துவவாதிகள், ஒரு பை நிறையப் பொன், ஒருவனுக்கும் மற்றொருவனுக்கும் இடை யில் வேறுபாட்டை உண்டாக்குமென்று நீங்கள் நினைக்க வில்லை. எந்திரங்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன மதிப்பு? அவற்றின் பலன் ஒன்றே ஒன்றுதான்: அவை அறிவைப் பரப்புகின்றன. நீங்கள் வறுமைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை; மாறாக, அதை மேலும் கடுமையாக்கியிருக்கிறீர்கள். எந்திரங்கள் வறுமைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது; அவை மேன்மேலும் மனிதனைப் பாடுபட வைக்கின்றன. போட்டி கடுமையா கிறது. இயற்கையின் மதிப்பை அளவிட முடியுமா? ஒருவன்கம்பி வழியாக மின்சக்தியை அனுப்பிவிட்டான், அவனுக்கு உடனே சிலை அமைக்கிறீர்கள், ஏன்? அதைவிடப் பல கோடிமுறை மின்சாரத்தை இயற்கை அனுப்புகிறதே! எல்லாமே இயற்கையில் இருக்கின்றன, நீங்கள் அதை வெளியே கொண்டு வருகிறீர்கள், அது என்ன பிரமாதம்! அவை ஏற்கனவே அங்கே உள்ளன! மின்சாரத்தின் ஒரே நன்மை அது நமது முன்னேற்றத்திற்கான சாதனம் ஆகிறது என்பதுதான். இந்தப் பிரபஞ்சம் ஆன்மாவின் பயிற்சிக் கூடம். இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு நாம் தெய்வங்கள் ஆகிறோம். ஒரு விஷயம் எவ்வளவு தூரம் இறைவனின் வெளிப்பாடாக அமைகிறது என்பதை வைத்தே ஒவ்வொன்றின் மதிப்பும் கணக்கிடப்பட வேண்டும். நாகரீகம் என்பது, மனிதனுள்ளிருக்கும் அந்தத் தெய்வீகத்தை வெளிப்படச் செய்வதே.