9. சமுதாயம் எவ்வாறு வலிமையைப் பெறுகிறது
எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம்.
உயர்குடியினர் முதல் சாதாரண மக்கள்வரை கல்வியும் பண்பாடும் படிப்படியாக பரவத் தொடங்கிய நாளிலிருந்தே மேலை நாடுகளின் நவீன நாகரீகத்திற்கும், இந்தியா எகிப்து ரோம் நாடுகளின் முற்கால நாகரீகத்திற்கும் இடையே வேற்றுமை வளரத் தொடங்கியது. சாதாரண மக்களிடையே கல்வியும் அறிவும் பரவியதற்கு ஏற்ப நாடும் முன்னேறுவதை நான் கண்முன் காண்கிறேன்.
நமது தனித்தன்மை ஏன் முற்றிலுமாக நம் நாட்டைக் கைவிட்டது? கைத்திறன் மிக்க நம் தொழிலாளர்கள் ஐரோப்பியருடன் போட்டியிட இயலாமல் ஏன் நாள்தோறும் குறைந்து வருகிறார்கள்? பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்ற ஆங்கிலத் தொழிலாளியை ஜெர்மன் தொழிலாளி எந்த ஆற்றலால் அசைத்து வெற்றி கண்டான்?
கல்வி, கல்வி, கல்வி ஒன்றேகாரணம். ஐரோப்பாவில் பல நகரங்களின் வழியே யாத்திரை செய்தபோது அங்கு வாழ்கின்ற ஏழைகளுக்கு உள்ள வசதிகளையும் கல்வியையும் கண்டேன். அப்போதெல்லாம் நம் ஏழைகளை நினைத்துப் பார்த்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன? கல்வி என்ற விடையே நான்கண்டது. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது, தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது. நம்முள் இருக்கும் ஆன்மாவோ மெல்லமெல்ல செயலிழந்து கொண்டிருக்கிறது.
மேலை கீழை நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமை முழுவதும் இதில்தான் உள்ளது: மேனாட்டினர் சமுதாய உணர்வு உடையவர்கள், நம்மிடம் அது இல்லை . அதாவது, இங்கு மேலை நாட்டில் நாகரீகமும் கல்வியும் எல்லோருக்கும் உரியது, பாமரமக்களிடையே அவை ஊடுருவிச் சென்றுள்ளன. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உயர்ந்த ஜாதியினர் ஒரேமாதிரிதான் இருக்கின்றனர்; ஆனால் இந்த இரு நாடுகளின் தாழ்ந்த வகுப்பினருக்கிடையில் உள்ள பரஸ்பரத் தூரம் எல்லை காணமுடியாத ஒன்று. இந்தியாவை வெல்வது ஆங்கிலேயருக்கு அவ்வளவு எளிதாக இருந்தது ஏன்? அவர்களிடம் சமுதாய உணர்வு இருந்தது, நம்மிடம் இல்லை . நமது தலைவர்களுள் ஒருவர் இறந்துபோனால் மற்றொருவரைப் பெற நாம் நூற்றாண்டுகளாகக் காத்திருக்க வேண்டும்; அவர்களோ, சாகச்சாக அதே வேகத்தில் வேறு தலைவர்களை உருவாக்கக் கூடியவர்கள்.
பொதுமக்களுக்குக் கல்வியூட்டி அவர்களை உயர்த்துங்கள். இந்த ஒரு வழியில்தான் சமுதாய உணர்வு கொண்ட நாடு உருவாக முடியும். குறைபாடு முற்றிலும் இதில்தான் அடங்கியுள்ளது: உண்மையான குடிகளான குடிசைவாழ் மக்கள் தங்கள் ஆண்மையை, தங்கள் தனித்துவத்தை மறந்துவிட்டார்கள். இந்து, முஸ்லீம், அல்லது கிறிஸ்தவனின் காலடியில் மிதிபட்டு மிதிபட்டு, ‘பையில் பணம் இருப்பவனின் காலடியில் மிதிபடத்தான் நாங்கள் பிறந்துள்ளோம்’ என்றே அவர்கள் எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும்; கல்வி கொடுக்க வேண்டும்.
ஒவ்வொருவனும் தனது நன்மைக்குத் தானேதான் வழிசெய்ய வேண்டும். ரசாயனப் பொருட்களைச் சேர்த்து வைப்பதே நம் கடமை, படிகமாதல் இறைவனின் நியதிகளின்மூலம் நிகழும். மக்களிடம் கருத்துக்களை நாம் விதைப்போம்; மற்றவற்றை அவர்களே செய்துகொள்வார்கள்.
ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு நாட்டையும் சிறப்படையச் செய்ய மூன்று விஷயங்கள் தேவை.
- நல்லியல்பின் ஆற்றல்களில் திட நம்பிக்கை.
- பொறாமை, சந்தேகம் இவை இல்லாதிருத்தல்.
- நல்லவர்களாக இருந்து நன்மை செய்ய முயலகின்ற அனைவருக்கும் உதவுதல்.
‘வாழ்க்கை, வளர்ச்சி, மேன்மை இவற்றிற்கான ஒரே நிபந்தனை சிந்தனையிலும் செயலிலும் சுதந்திரம்தான்.’ இந்தச் சுதந்திரம் இல்லாத இடத்தில் மனிதன், இனம், நாடு என்று எதுவானாலும் அதோகதியாக வேண்டியதுதான்.
வாழ்வில் எனது முழு ஆசையும் இதுதான்: மிக மேலான கருத்துக்களை ஒவ்வொருவருடைய இருப் பிடத்திற்கும் கொண்டு சேர்ப்பதற்கான ஓர் அமைப்பை இயக்கிவிட வேண்டும்; பின்னர் ஆண்களும் பெண்களும் அவரவர் விதியை அவரவரே நிர்ணயிக்கட்டும். வாழ்வின் மிகமிக முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி நம் முன்னோர்களும், அதைப் போலவே மற்ற நாட்டினரும் என்னென்ன சிந்தித்துள்ளனர் என்பதை அவர்கள் அறியட்டும். முக்கியமாக, இப்போது பிறர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் காணட்டும், பிறகு ஒரு முடிவுக்கு வரட்டும். நாம் செய்ய வேண்டுவதெல்லாம் ரசாயனப் பொருட் களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான்; இயற்கை, தனது நியதிகளுக்கு ஏற்ப அவற்றைப் படிகமாக்கி விடும்.
நாடு குடிசைகளில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் அந்தோ! அவர்களுக்காக யாரும் எதையும் எப்போதும் செய்ததில்லை . நமது நவீனச் சீர்திருத்தவாதிகள் விதவைகளின் மறுமணத்தில் வெகு மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் நான் வரவேற்கிறேன். ஆனால் எத்தனை விதவைகளுக்குக் கணவன் கிடைத்தான் என்பது ஒரு நாட்டின் விதியை நிர்ணயிப்பதில்லை, பாமர மக்களின் நிலைமையைப் பொறுத்தது அது. உங்களால் அவர்களை உயர்த்த முடியுமா? தங்களிடம் இயல்பாக உள்ள ஆன்மீகப் பண்பை இழக்காமல், தாங்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு நீங்கள் மீண்டும் பெற்றுத் தர முடியுமா? சமத்துவம், சுதந்திரம், செயல்திறன், ஆற்றல் இவற்றில் மேலைநாட்டினருள் தலைசிறந்த மேனாட்டினராக இருந்து, அதேவேளையில் மதப் பண்பாட்டிலும் இயல்புணர்ச்சிகளிலும் முழுமையான இந்துவாகவும் இருக்க உங்களால் முடியுமா? இதைச் செய்தேயாக வேண்டும், செய்தே தீர்வோம். இதைச் செய்வதற்கென்றே நீங்கள் அனைவரும் பிறந் திருக்கிறீர்கள். உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். திடமான நம்பிக்கைகளே பெரும் செயல்களுக்கு வழி வகுக்கின்றன. தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும் தாழ்த்தப்பட்டோரிடமும் இரக்கம், மரணமே வந்தாலும் இரக்கம்- இதுவே நமது குறிக்கோள்.