19. வீரம் எனும் சக்தி
வீரம் எனும் சக்தி முதலில் மனிதனாகு. அப்போது பிற எல்லாம் தாமாகவே உன்னைத் தேடி வருவதைக் காண்பாய். தெரு நாயைப் போல் உறுமிக்கொண்டு சண்டை யிடுவதை விட்டு விடு. நல்ல நோக்கம், நேரிய வழி, தர்ம வீரம், நல்ல வலிமை ஆகியவற்றைப் பெறு. மனிதனாகப் பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல். ‘துளசி! நீ இந்த உலகத்தில் பிறந்தபோது உலகம் சிரித்தது, நீ அழுதாய். நீ உலகைவிட்டுச் செல்லும் போது நீ சிரிக்க உலகம் உனக்காக அழத்தக்க நல்ல காரியங்களைச் செய்.’ இதைச் சாதிக்க முடிந்தால் நீ மனிதன். இல்லையேல் நீ பிறந்தும் பயனில்லை.
இந்த உலகம் எதைச் சொல்கிறதோ சொல்லட்டும், நான் என் கடமையைச் செய்கிறேன்–இதுதான் ஒரு வீரனின் செயல்முறையாக இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல், இவன் என்ன சொல் கிறான், அவன் என்ன எழுதுகிறான் என்பதிலேயே இரவும்பகலும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தால் இந்த உலகத் தில் பெரும் காரியங்கள் எதையும் சாதிக்க முடியாது. ”சான்றோர்கள் உன்னைப் பாராட்டட்டும் அல்லது பழிக்கட்டும். செல்வத்தின் தேவதையான லட்சுமி வரட்டும் அல்லது அவளுக்கு எங்கு விருப்பமோ அங்கே போகட்டும். மரணம் இன்றோ அல்லது நூறு ஆண்டுகள் கழித்தோ வரட்டும். என்ன நேர்ந்தாலும் மேலோர்கள் நேரான பாதையிலிருந்து ஒரு போதும் தவற மாட்டார்கள்” என்னும் சம்ஸ்கிருத சுலோகம் உனக்கு நினைவிருக் கிறது அல்லவா! மக்கள் உன்னைப் பாராட்டட்டும் அல்லது பழிக்கட்டும். திருமகளின் அருள் உன்மீது வரட்டும் அல்லது வராமல் போகட்டும், உன் உடம்பு இன்றைக்கு அழியட்டும் அல்லது இன்னும் ஒரு யுகம் கழித்து அழியட்டும். நியாய வழியிலிருந்து ஒருபோதும் விலகாதே. ஒருவன் அமைதி என்னும் சொர்க்கத்தை அடைவதற்கு முன்பு எவ்வளவோ புயல்களையும் அலைகளை யும் கடந்தாக வேண்டியிருக்கிறது! ஒருவன் எவ்வளவு மகத்தானவனாக ஆகிறானோ, அந்த அளவிற்கு அவன் கடுமையான சோதனைகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. நடைமுறையில் நன்றாகப் பரிசோதித்த பின்னரே உலகம் அவர்களின் மகோன்னதத்தை ஏற்றுக் கொள்கிறது. யார் பயந்த மனமும் கோழைத்தனமும் உடையவனாக இருக் கிறானோ, அவன் சீறியெழும் அலை களுக்கு அஞ்சி தன் சிறு கப்பலைக் கரைக்கு அருகிலேயே மூழ்கடித்து விடு கிறான். வீரர்கள் இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பார்களா, என்ன! வருவது வரட்டும், நான் என் லட்சியத்தை அடைந்தே தீர்வேன்- இதுதான் வீரம். இத்தகைய வீரம் உன்னிடம் இல்லா விட்டால் நூறு தெய்வங்கள் வந்தாலும் உன் ஜடத் தன்மையை நீக்க முடியாது.’
மனவலிமை இழந்தவர்களால் எந்த வேலையையும் செய்ய முடியாது. பிறவிகள்தோறும் அவர்கள் அழுது அரற்றிக்கொண்டே வந்துவந்து போகிறார் கள். “வீரபோக்யா வஸுந்தரா-இந்த உலகம் வீரர்களால்தான் அனுபவிக்கப் படுகிறது” என்பது அழியாத உண்மை . வீரனாக இரு. ”அபீ: அபீ:- பயமில்லை , பயமில்லை ” என்று எப்போதும் முழங்கு; “பயம் கொள்ளாதே” என்பதை எல்லோ ரிடமும் சொல். பயமே மரணம், பயமே பாவம், பயமே நரகம், பயமே அதர்மம், பயமே தவறான வாழ்க்கை . உலகத்திலுள்ள எதிர்மறையான சிந்தனைகள் எல்லாமே பயம் என்னும் இந்தச் சாத்தானிலிருந்தே தோன்றின. இந்தப் பயம்தான், சூரியன், காற்று, மரணம், அனைத்தையும் தத்தம் இடத்திலேயே கட்டுப்படுத்திச் செயல் படும்படி வைத்திருக்கிறது. எதையும் அது தன் பிடியிலிருந்து
தப்பிச் செல்லவிடுவதில்லை. ‘இந்த உடம்பை எடுத்து, வாழ்க்கையின் இன்பம் துன்பம், செல்வம் வறுமை என்னும் அலைகளால் எத்தனை முறைதான் நீ பந்தாடப்படுவாய்! ஆனால் இதெல்லாம் கணநேரமே இருப் பது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள். அவற்றைப்பற்றிச் சிறிதும் கவலைப் படாதே.