7. சமுதாய வாழ்க்கையின் அடிப்படை
சமுதாய வாழ்வை உருவாக்க இந்த உலகத்தில் இரண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஒன்று, மதத்தை அடிப்படையாகக் கொண்டது, மற்றொன்று, சமுதாயத் தேவையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு முயற்சி, ஆன்மீகத்தின் மீது எழுப்பப்பட்டது; மற்றொன்று லௌகீகத்தின்மீது. ஒன்று அனைத்தையும் கடந்ததை ஆதாரமாகக் கொண்டது, மற்றொன்று காணும் இந்த உலகத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒன்று, போகப் பொருட்களால் ஆன இந்தச் சின்னஞ்சிறிய உலகத்திற்கு அப்பால் துணிச்சலாகப் பார்ப்பதும் அங்கேயும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையைத் துவக்குவதும் ஆகும்; மற்றொன்று, உலகப் பொருளிலேயே திருப்தி அடைந்துவிடுவதும் அங்கேயே நிலைத்து வாழ நினைப்பதும் ஆகும். ஆச்சரியப்படும் வகையில் சிலவேளைகளில் ஆன்மீகமும், சிலவேளைகளில் லௌகீகமும் உச்சத்திற்கு வருகின்றன. இரண்டும் அலையலையாக ஒன்றையொன்று தொடர்வதுபோல் உள்ளது. ஒரே நாட்டில் இத்தகைய பல்வேறு அலைகள் நிலவும். ஒரு சமயம் லௌகீக அலை அடித்துப் பரவும்; அப்போது அதிக இன்பமும் அதிக உணவும் தருகின்ற செல்வம், அத்தகைய கல்வி போன்ற இந்த வாழ்க்கையைச் சேர்ந்த அனைத்தும் பெருமை பெறும். பின்னர் கீழான நிலைக்குச் சென்று இழிநிலையை அடைந்துவிடும். செல்வத்தின் வளர்ச்சியோடு மனித இனத்துடனேயே தோன்றிய எல்லா வகையான பொறாமைகளும் வெறுப்புகளும் உச்சநிலையை அடையும். அந்தக் காலகட்டத்தில் போட்டிகளும் இரக்கமற்ற கொடுமைகளும் நிலவியே தீரும். பிரபலமான ஆனால் அவ்வளவு சிறந்ததல்லாத ஓர் ஆங்கில பழமொழி கூறுவதுபோல், ‘ஒவ்வொரு வரும் தனக்காகவே வாழ்கிறார்கள், பின்னால் வருபவனைச் சாத்தான் பிடித்துவிட்டுப் போகட்டும்’ என்பது அந்த நாளின் நோக்கமாக அமையும். வாழ்க்கைமுறையின் திட்டமே தோற்றுவிட்டது என்றே மக்கள் நினைப்பார்கள். அப்போது ஆன்மீகம் வந்து, மூழ்குகின்ற அந்த உலகிற்கு உதவிக்கரம் நீட்டி அதனைக் காப்பாற்றவில்லை எனில் உலகமே அழிந்து போய்விடும்.
அதன்பிறகு உலகம் புதிய நம்பிக்கையைப் பெறும்; புதிய வாழ்க்கை முறைக்கான புதிய அடித்தளத்தைக் காணும். பிறகு மற்றோர் ஆன்மீக அலை வரும்; காலப்போக்கில் அதுவும் அழியத் தொடங்கும். பொதுவாகச் சொல்வதானால், சில விசேஷ ஆற்றல் களுக்குத் தனிப்பட்ட உரிமை கொண்டவர்களான ஒரு பிரிவினரை ஆன்மீகம் உருவாக்குகிறது. இதன் உடனடி விளைவு என்னவென்றால் லௌகீகத்தை நோக்கி மீண்டும் செல்லுதல். இது அந்தப் பிரிவினர் இன்னும் பல்வேறு தனிப்பட்ட உரிமைகளைப் பெற வழிவகுக்கும். காலப்போக்கில் அந்த இனத்தின் எல்லா ஆன்மீக ஆற்றல்கள் மட்டுமல்லாமல், பௌதீக அதிகாரங்களும் சலுகைகளும் அந்தச் சிலரின் ஆளுகைக்கு உட்பட்டுவிடும். இந்தச் சிலர் பாமர மக்களின் தோள்மீது ஏறிக்கொண்டு அவர்களை அடக்கியாள விரும்புவார்கள். இப்போது சமூகம் தனக்குத் தானே உதவிக்கொண்டாக வேண்டும். இந்த நிலையில் லௌகீகம் வந்து உதவிக்கரம் நீட்டும்.
அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று, வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி, வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல.
நமது சமுதாயச் சட்டங்களை அமைத்தவராகிய மனு, ‘இழிந்த குலத்தில் பிறந்தவரிடமிருந்தாயினும் சிறிது நல்லறிவு பெற்றுக் கொள்ளுங்கள். மிகத் தாழ்ந்த பிறவியாளருக்கும் சேவை செய்து சொர்க்கம் செல்லும் பாதையை அறிந்துகொள்ளுங்கள்’ என்று கூறுகிறார். எனவே மனுவின் உண்மையான பிள்ளைகளான நாம், அவரது கட்டளைக்குப் பணிந்து, இந்த வாழ்வு மற்றும் மறு வாழ்வு பற்றிய பாடங்களை நமக்கு போதிக்கக் கூடிய யாரிடமிருந்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலகத்திற்கு மகத்தானதொரு பாடத்தை நாம் போதிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
பௌதீக நிலை, தார்மீக நிலை, ஆன்மீக நிலை ஆகிய எல்லா நிலைகளிலும் ஓயாமல் விரிந்து கொண்டே போகின்ற ஒரு பொதுமைப்படுத்துகின்ற போக்கு எங்கும் காணப்படுகிறது. மாறாத ஒருமை நிலைக்கு அழைத்துச் செல்ல வல்லது இது. எனவே இக்கால இயக்கங்கள் எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ, ஒருமையைப்பற்றி இதுவரை மனித சமுதாயம் கொண்டிருந்துள்ள தத்துவங்களுள் மிகவும் சிறப்பான அத்வைத வேதாந்தத்தின் பிரதிநிதிகளாகவே உள்ளன என்று கொள்ளலாம்.
சமூகம், அரசியல், ஆன்மீகம் ஆகிய எதிலும் சரி, நன்மைக்கு ஆதாரமாக இருப்பது ஒன்றே; நானும் என் சகோதரனும் ஒன்றே என்று அறிவதுதான் அது. இது எல்லா நாடுகளுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவான உண்மை .