18. தைரியமாக இருப்பது எப்படி?
தென் கடல் தீவுகளில் பெரும் புயலில் அடியுண்ட சில கப்பல்களைப் பற்றிய ஒரு கதையை நான் படிக்க நேர்ந் தது. அதைப் பற்றிய படமும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் (Illustrated London News) வந்தது. ஒரே ஓர் ஆங்கிலேயக் கப்பலைத் தவிர மற்றவை அனைத்தும் உடைந்து போயின். ஆங்கிலேயக் கப்பல் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. தாங்கள் மூழ்கிப் போவதைப்பற்றிச் சிறிதும் எண்ணாமல், கப்பல்தளத்தில் நின்று, புயலை எதிர்த்துச் செல்லும் கப்பல்களை உற்சாகப்படுத்துபவர்கள் அந்தப் படத்தில் காணப்பட்டனர். அவர்களைப் போல் தைரியத்துடனும் கருணையுடனும் இருங்கள்.
இருள் உன்னைச் சூழ்கின்ற போதெல் லாம் உன் உண்மை இயல்பை வலி யுறுத்து, பாதகமானவை எல்லாம் மறைந்தே தீர வேண்டும். ஏனெனில் இவை எல்லாம் வெறும் கனவுகள். துன்பங்கள் மலையளவாகத் தோன்றலாம், எல்லாமே பயங்கரமானவையாக, இருள் சூழ்ந்தவையாகத் தோன்றலாம், ஆனால் எல்லாம் வெறும் மாயை. பயப்படாதே, மாயை மறைந்து விடும். நசுக்கு, அது ஓடிவிடும். காலால் மிதி, இறந்துவிடும். பயத்திற்கு இடம் கொடுக்காதே. எத்தனை முறை தோல்வி அடைந்தாய் என்பதை எண்ணிக் கொண்டிருக்காதே. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். காலத்திற்கு எல்லையில்லை. முன்னேறு. திரும்பத்திரும்ப உன் உண்மை இயல்பை வலியுறுத்து, ஒளி வந்தே தீரும்.
இது வரை பிறந்த அனைவரையும் வேண்டிக்கொள், உன் உதவிக்கு யார் வருவார்கள்? யாரும் தப்ப முடியாத மரணத்தை வெல்வது எப்படி? உனக்கு நீயே உதவிக்கொள். நண்பா, உனக்கு வேறு யாரும் உதவ முடியாது. ஏனெனில் உனக்கு மிகச் சிறந்த நண்பன் நீ, உனக்கு மிகக் கொடிய பகைவனும் நீயே. எனவே உன் ஆன்மாவைப் பற்றிக்கொள். எழுந்து நில். பயப்படாதே.
தைரியமாக முன் செல்லுங்கள். ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ வெற்றியை எதிர்பார்க்காதீர்கள். மிக உயர்ந்த லட்சியத்தையே எப்போதும் பற்றியி ருங்கள். உறுதியாக இருங்கள். பொறாமை, சுயநலம் இவற்றைத் தவிர்த்து விடுங்கள். கீழ்ப்படிந்து நடந்து கொள் ளுங்கள். சத்தியத்திற்கும், மனித குலத் திற்கும், உங்கள் நாட்டிற்கும் எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்; உலகத்தையே அசைத்து விடுவீர்கள். மனிதன், அவனது ஆளுமை, அவனது வாழ்க்கை – இதுதான் ஆற்றலின் ரகசியம்; வேறு எதுவும் அல்ல. இதை நினைவில் வையுங்கள். இந்தக் கடிதத்தை வைத்திருங்கள், உங்களுக்குக் கவலையோ பொறாமையோ ஏற்படும் போது இறுதி வரிகளைப் படியுங்கள். பொறாமை என்பது அடிமைகளின் சாபக் கேடு. நமது நாட்டின் சாபக்கேடு. அதை எப்போதும் தவிர்த்து விடுங்கள். எல்லா ஆசிகளும் வெற்றிகளும் உங்களை அடையட்டும்.