6. நாட்டின் தனிச்சிறப்புப் பண்பு என்றால் என்ன?
ஒவ்வொருவரும் சில தனித்தன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வளர்வதற்கான ஒரு தனிப்பட்ட முறை உள்ளது. அவனது வாழ்க்கைகூட- இந்துக்களாகிய நாம் சொல்கிறோமே அதுபோல், முடிவற்ற தனது முற் பிறவிகளால், வினைப்பயனால் நிர்ணயிக்கப் பட்ட-தனி வாழ்க்கையாகவே உள்ளது. கடந்தகால வினைகளின் மொத்தச் சுமையுடன் அவன் இந்த உலகிற்கு வருகிறான். முடிவற்ற அந்தக் கடந்தகாலம் நிகழ்காலத்தை நிர்ணயிக்கிறது. நிகழ்கால வாழ்க்கையை நாம் பயன்படுத்துகின்ற விதம் எதிர்காலத்தை உருவாக்குகிறது. இவ்வாறு இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனிப் பாதை உள்ளது; அவன் எந்தத் திசையில் போக வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பது நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடும் செயல்படுவதற்கு தனக்கென்று தனிப்பட்ட வழியைக் கொண்டிருக்கிறது. சில நாடுகள் அரசியல்மூலம் வேலை செய்யும்; சில, சமுதாயச் சீர்திருத்தத்தின்மூலம் வேலை செய்யும்; சில, வேறு வழிகளின்மூலம் வேலை செய்யும். நம்மைப் பொறுத்த வரை நாம் செயல்படுவதற்கான ஒரே வழி மதம். மதத்தைக்கூட அரசியலின் மூலம்தான் ஆங்கிலேயர்கள் புரிந்துகொள்வார்கள். அமெரிக்கர்களோ, ஒருவேளை சமுதாயச் சீர்திருத்தத்தின் மூலம்தான் மதத்தையே புரிந்துகொள்வார்கள். ஆனால் அரசியலைக்கூட மதத்தின் வாயிலாகக் கொடுத்தால்தான் இந்துவால் புரிந்துகொள்ள முடியும்; சமூக இயலும் மதத்தின் வழியேதான் வர வேண்டும். எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் வந்தாக வேண்டும். ஏனென்றால் அதுதான் ஆதார சுருதி, மற்றவையெல்லாம் நம் தேசிய சங்கீதத்தின் பல்வேறு ராகங்கள், அவ்வளவுதான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட போக்கு, ஒரு கருத்து உள்ளது. அதன் புற வெளிப்பாடு தான், அது தன்னைப் புறத்தில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் புற மனிதன். அதுபோலவே ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தேசியக் கருத்தைப் பெற்று விளங்குகிறது. அந்தக் கருத்து உலக நன்மைக்காகச் செயல்படுகிறது, உலகம் வாழ்வதற்கு அந்தக் கருத்து தேவை. இந்தக் கருத்தின் தேவை என்று முடிகிறதோ அன்றே அந்த நாடும் சரி, தனிமனிதனும் சரி அழிந்துவிடும். எத்தனையோ துன்பங்கள், இன்னல்கள், வறுமை, உள்ளும்புறமும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை என்று கணக்கற்ற துயரங்களிலும் நாம் அழிந்துவிடாமல் இன்னமும் வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் தேசியக் கருத்து ஒன்று உள்ளது, உலகிற்கு அது இன்னும் தேவைப்படுகிறது என்பதுதான் அதன் பொருள். ஐரோப்பியர்களிடமும் அவர்களுக்கே உரித் தான ஒரு தேசியக் கருத்து உள்ளது, அது இல்லாமல் உலகம் நடைபெற முடியாது. அதனால்தான் அவர்களும் வலிமையுடன் விளங்குகிறார்கள்.
சிறுவர்களாயிருந்தபோது அரக்கியின் கதையைக் கேட்டிருக்கிறோம். அந்த அரக்கியின் உயிர் ஒரு பறவையில் இருக்கும். இந்தப் பறவை கொல்லப் படாமல் அரக்கி சாக மாட்டாள். நாட்டின் நிலையும் இப்படித்தான். இன்னொன்று: எந்த உரிமைகள் நாட்டின் தேசிய வாழ்க்கைக்கு இன்றியமையாதவை அல்லவோ, அவை அனைத்தையும் இழக்க நேர்ந்தாலும் மக்கள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை . ஆனால் உயிர்நாடியான தேசிய லட்சியம் தொடப்பட்டால் சமுதாயம் உடனே வீறுகொண்டு எழுகிறது.
இப்போதுள்ள பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், மற்றும் இந்துக்களை ஒப்புநோக்குவோம். இவர்களின் வரலாறு உங்களுக்குச் சிறிது தெரியும். பிரெஞ்சு மக்களுக்கு அரசியல் சுதந்திரம் முதுகெலும்பு போன்றது. இவர்கள் எந்த அநீதிகளையும் சகித்துக் கொள்கிறார்கள். வரிச்சுமைகளை அவர்கள்மீது ஏற்றுங்கள், எதிர்ப்பு இல்லை; கட்டாயப்படுத்தி நாடு முழுவதையும் ராணுவத்தில் சேருங்கள், எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அவர்களுடைய அரசியல் சுதந்திரத்தில் கை வைத்தால் அந்தக் கணமே நாடு முழுவதும் பித்துப் பிடித்ததுபோல் திரண்டெழுந்து எதிர்த்து நிற்கும். ‘எங்கள் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது’- இதுதான் பிரெஞ்சு மக்களின் மூல மந்திரம். அறிவாளி, மூடன், பணக்காரன், ஏழை, உயர்குடிப் பிறந்தவன், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவன் யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஆட்சியிலும் அரசியலிலும் சம உரிமை உண்டு. இந்தச் சுதந்திரத்தில் தலையிடுபவன் தண்டிக்கப்படுவது உறுதி.
ஆங்கிலேயர்களுக்கு வாணிபம், கொடுக்கல்வாங்கல்தான் முக்கியம். எதுவானாலும் நியாயமான பங்கீடுதான் அவர்களின் முக்கியப் பண்பு. அரசன் மற்றும் பிரபுக்களின் அதிகாரங்களை ஆங்கிலேயன் பணிந்து ஏற்றுக்கொள்கிறான். ஆனால் சொந்தப் பையிலிருந்து ஒரு பைசா கொடுக்க வேண்டுமானாலும் அதற்குக் கணக்கு கேட்பான். அரசன் இருக்கிறான்நல்லது, மகிழ்கிறேன், ஆனால் உனக்குப் பணம் வேண்டுமானால் அது எதற்காக, அதன் கணக்குவழக்கு பற்றி நான் ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டியுள்ளது. முதலில் எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறேன், பிறகு பணம் தருகிறேன். ஒருமுறை அரசன் கட்டாயத்தின் பேரில் பணம் வசூலிக்க முயன்றான். விளைவு? பெரியதொரு புரட்சி தோன்றியது, அரசனே பலியானான்.
(இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ் மன்னன் மக்கள்மீது வரிச் சுமையை ஏற்றினான். இதன் காரணமாக 1642 ஆகஸ்ட் 22-ஆம் நாள் புரட்சி வெடித்தது, உள்நாட்டுப் போர் மூண்டது. இறுதியில் 1649 ஜனவரி 30-ஆம் நாள் தலை துண்டிக்கப்பட்டு மன்னனே பலியானான்.)
ஓர் இந்துவைக் கேளுங்கள் அரசியல், சமுதாய சுதந்திரம் எல்லாம் நல்லதுதான். ஆனால் சாரம் என்னவென்றால் ஆன்மீக சுதந்திரம், முக்தி என்பான் அவன். இதுவே தேசிய லட்சியம். வைதீகர், சமணர், பௌத்தர், அத்வைதி, விசிஷ்டாத்வைதி, துவைதி என்று அனைவரும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்து உடையவர்கள். இந்த இடத்தைத் தவிர வேறு எதைத் தொட்டாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்; இதைத் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அமைதியாக இருப்பார்கள்; அடியுங்கள், கறுப்பர் என்று அழையுங்கள், அவர்களது அனைத்தையும் தட்டிப்பறித்துக் கொள்ளுங்கள், பெரிய பிரச்சினை எதுவும் உண்டாகாது. ஆனால் மதம் என்ற ஒன்றைத் தொடக் கூடாது.
கிரேக்கப் படைகளின் அணிவகுப்பு முழக்கத்தைக் கேட்டு, இந்தப் பூமியே அதிர்ந்த ஒரு காலம் இருந்தது. அந்தப் பழம்பெரும் நாடு இன்று அழிந்துவிட்டது; தனது பெருமையை எடுத்துச் சொல்வதற்குக்கூட ஒருவரின்றி பூமியிலிருந்தே மறைந்துவிட்டது. மதிப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்தின்மீதும் ரோமானியர்களின் கழுகுக்கொடி (ரோமானியப் படையினர் புலி, குதிரை, கரடி போன்ற உருவங்கள் பொறித்த கொடி தாங்கிச் செல்வது வழக்கம். மாரியஸ் (கி.மு. 155-86) என்ற மன்னன் தன் காலத்தில் கழுகின் உருவம் கொண்ட கொடியை உடையவனாக இருந்தான்.) உயர்ந்தோங்கிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. எங்கும் அதன் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது; அந்த அதிகாரம் மனித குலத்தின்மீது சுமத்தவும் பட்டது. அதன் பெயரைக் கேட்டே இந்தப் பூமி நடுங்கியது. ஆனால் இன்று கேபிடோலின் குன்று (பண்டைய ரோமப் பேரரசு ஏழு குன்றுகளின் மீது அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் பண்டைய ரோமானியர்களின் தெய்வமான ஜுபிடரின் ஆலயம் அமைந்திருந்த குன்று கேபிடோலின் (Mons Capitolinus). இதன்மீதுதான் அவர்களின் தலைநகரம் அமைக்கப் பட்டிருந்தது.) உடைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது. சீசர்கள் ஆண்ட இடத்தில் சிலந்திகள் வலை பின்னுகின்றன. அதுபோலவே பல நாடுகள் பெரும் புகழுடன் எழுந்தன; செல்வச் செழிப்புடனும் மகிழ்ச்சிப் பேராரவாரத்துடனும் ஆதிக்க வெறியுடனும் கொடிய லட்சியங்களுடனும் வாழ்ந்தன; ஆனால் கண நேரத்திற்குத்தான், நீர்மேல் குமிழிபோல் எல்லாம் மறைந்துவிட்டன. அவற்றின் அடையாளச் சுவடுகள் மட்டுமே இன்று மனித குலத்தின் நினைவில் நிழலாடுகிறது. ஆனால் நாம் வாழ்கிறோம். மனு இன்று மீண்டும் வந்தால்கூட, தான் ஏதோ அன்னிய நாட்டிற்கு வந்துவிட்டதாக எண்ணி அவர் அஞ்சி நடுங்க வேண்டியிருக்காது.