5. இந்தியாவின் சமுதாய நிலை
பல நூற்றாண்டுகள் கழிகின்றன. அதன்பிறகு, வடக்கே இமயமலையின் பனியாலும், பரந்த வெளிகள், முடிவற்ற காடுகள் அதன் நடுவே அலை மோதிக் கொண்டு ஓடும் பெரிய நதிகள் கொண்டதாகிய தெற்கே வெப்பத்தாலும் சூழப்பட்ட ஒரு மனிதர் கூட்டத்தைக் காண்கிறோம். திராவிடர்கள், தார்த் தாரிகள், பழங்குடி மக்கள் இவர்களின் ரத்தமும் மொழிகளும், பழக்கவழக்கங்களும், மதங்களும் அந்தக் கூட்டத்தில் ஒன்றுகலந்தன. கடைசியில் ஒரு பெரிய மனித சமுதாயம் உருவாகியது. ஆரியரைப் போன்ற ஓர் இனம் அது. ஆனால் பல்வேறு இனங்களுடைய கலப்பின் காரணமாக ஆரிய இனத்தைவிட வலிமை யானதாக, பரந்ததாக, கட்டமைப்புக் கொண்டதாக இருந்தது. அந்த மைய இனமான ஆரிய இனம் ஆரியன் என்னும் பெயரைப் பெருமையோடு தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் நாகரீகத்தின் நன்மைகளைப் பிறருக்கு அளிக்கத் தயாராக இருந் தாலும், தங்களை ஆரிய இனத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பாததையும் காண்கிறோம்.
இந்தியத் தட்பவெப்பநிலை இந்த இனத்தின் அறிவுவளத்திற்கு உயர்ந்த திருப்பத்தைக் கொடுத்தது. இயற்கை வளம் அதிகமாக இருந்தது, அதிலிருந்து பலனைப் பெறுவது எளிதாக இருந்தது; எனவே அவர்கள் சிந்தனையுலகில் கவனத்தைச் செலுத்தினர்; வாழ்க்கையின் உயர் பிரச்சினைகளை ஆராய்ந்து வெற்றிகாணத் தொடங்கினர். ஆகவே இந்தியச் சமுதாயத்தில் மிக உயர்ந்த ஜாதியாக விளங்கியது வாள் பிடித்தவன் அல்ல, சிந்திக்கத் தெரிந்தவர்களான புரோகிதர்கள் என்பதில் ஆச்சரியமில்லை .
அனாதி காலத்திலிருந்தே நிலம் தேசிய உடைமை ஆக்கப்பட்டிருந்தது நீங்கள் சொல்வதுபோல், அரசாங் கத்திற்குச் சொந்தமாக இருந்தது. நிலத்தில் யாருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது. ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் குறிப்பிட்ட நிலத்தை வைத்திருப்பதால், இந்தியாவில் உள்நாட்டு வருமானம் நிலத்திலிருந்து வருகிறது. இந்த நிலத்தை ஐந்தோ, பத்தோ, இருபதோ, நூறோ குடும்பங்கள் கொண்ட ஒரு சமூகம் பொதுவாக வைத்திருக்கிறது. அந்தநிலம் அவர்களின்கீழ் இருக்கிறது. அவர்கள் அரசாங்கத்திற்கு வரி கொடுத்துவிட்டுத் தங்கள் செலவில் வைத்தியர், கிராம ஆசிரியர் முதலியவர்களை நியமிக்கிறார்கள்.
நினைவுக்கெட்டாத நாள் முதல் வளத்திலும் வர்த்தகம், சிற்பம் போன்றவற்றிலும் இந்தியாவிற்கு நிகராக நிற்க வேறெந்த நாடுகளாலும் முடியவில்லை . ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புகூட உலகிற்குத் தேவையான பருத்தித் துணி, பருத்தி, சணல், நீலம், அரக்கு, அரிசி, வைரம், முத்து ஆகியவற்றை இந்தியாவே ஏற்றுமதி செய்தது. அது மட்டுமல்ல, உயர்தரப் பட்டு, கம்பளி மற்றும் ஜரிகைத் துணிகள் இங்கே செய்யப்பட்டதுபோல் வேறு எந்த நாடும் உற்பத்தி செய்ய முடியாது. மேலும் கிராம்பு, ஏலக்காய், மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்தி போன்ற பொருட்களின் நாடும் இந்தியாதான். இந்தக் காரணங்களால், மிகப் புராதன காலத்திலிருந்தே, எந்த நாடும் நாகரீகம் பெற்றவுடனே, இந்தப் பொருட்களைப் பெற இந்தியாவையே நாடின.
இந்த வாணிபம் இரண்டு முக்கிய வழிகளில் நடை பெற்றது. ஒன்று ஆப்கானிஸ்தானம், பாரசீகம் மார்க்க மாகத் தரை வாணிபம்; மற்றொன்று, செங்கடல் மார்க்கமாகக் கடல் வாணிபம். மாவீரன் அலெக்சாண்டர் பாரசீகத்தை வென்றபிறகு, சிந்து நதியின் முகத்துவாரத்திலிருந்து புறப்பட்டு கடல் கடந்து செங்கடல் வழியாகச் செல்கின்ற ஒரு கடல் மார்க்கத்தைக் கண்டுபிடிக்க நியார்க்கஸ் என்ற தளபதியை அனுப்பினான். பாபிலோன், பாரசீகம், கிரீஸ், ரோம் போன்ற நாடுகள் தங்கள் செல்வச் செழிப்பிற்கு இந்தியாவுடனான வர்த்தகத்தையே பெரிதும் நம்பியிருந்தன என்பது பலருக்குத் தெரியாது.
ஆண்பெண் வேறுபாடின்றி, ஜாதி வித்தியாச மின்றி கிருஷ்ணர் ஆன்மீகத்தின் வாசலை அனை வருக்கும் திறந்துவைத்தார். ஆனால் சமூகப் பிரச்சி னைக்குத் தீர்வு காணாமல் அப்படியே விட்டுவிட்டார். பின்னாளில் பௌத்தர்கள், வைணவர்கள் முதலானோர் சமுதாய சமத்துவத்திற்காக எவ்வளவோ போராடிய போதிலும் அது இன்றுவரை தீர்க்கப்படாமல் நம்வரை வந்துள்ளது.
ஆன்ம நிலையில் எல்லோரும் சமம் என்று தற்கால இந்தியா ஒப்புக்கொள்கிறது. ஆனால் சமூக நிலையில் வேறுபாடுகளை இன்னும் அப்படியே வைத்துள்ளது.
கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதைக் காண் கிறோம். பிறகு ஆறாம் நூற்றாண்டில் சாக்கிய முனிவ ரான புத்தரின் தலைமையில் பழைய முறைகள் ஒரே யடியாகக் குலைக்கப்பட்டன. தனிச்சலுகைகள் பெற்றி ருந்த புரோகிதர்களை ஒழிக்க வேண்டும் என்னும் தங்கள் ஆத்திரத்தில் பௌத்தர்கள் வேதங்களின் எல்லா சடங்குகளையும் ஒழித்துக்கட்டியதுடன், வேதங்களில் கூறப்பட்ட தேவர்களைத் தங்கள் முனிவர்களின் வேலைக்காரர்களுடைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
மிகவும் வளைந்து கொடுக்கின்ற தன்மை காரண மாக புத்த மதம் ஏறக்குறைய தன் தனித்தன்மையை இழந்துவிட்டது; மக்களின் தரத்திலேயே இருக்க வேண்டும் என்று நினைத்ததால், சில நூற்றாண்டு களுக்குள், தாய் மதத்தின் அறிவுச் சக்திகளுக்கு அதனால் ஈடு கொடுக்க முடியவில்லை .
இதற்குப் பிறகு ஒரே இருள் திரைதான்; அவ்வப்போது நிழல்கள் அசைந்தாடுகின்றன, போரின்
ஆரவாரங்களும் படுகொலைபற்றிய செய்திகளும் கேட்கின்றன. இதைத் தொடர்ந்து ஒரு புதிய காட்சி தோன்றுகிறது.
இந்த நவீன பாரதத்தின் முன் இருந்த பணி மிகப் பெரியது. அவர்களுடைய முன்னோர்கள் ஒருபோதும் காணாத பெரிய பிரச்சினைகளை இவர்கள் கவனிக்க வேண்டியிருந்தது. ரத்தத்தாலும், மொழியாலும், சமூகம் மற்றும் மத லட்சியங்களாலும் ஒன்றுபட்டிருந்த ஒரு சிறிய இனம், சுற்றிலும் யாரும் ஏற முடியாத சுவர்களைக் கட்டிக்கொண்டு தன் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றிய ஒரு சிறிய இனம், இணைப்பதன்மூலமும் விஸ்தரிப்பதன்மூலமும் பௌத்தர்களின் ஆதிக்க காலத்தில் பெருகி பிரம்மாண்டமாக வளர்ந்தது. அதே இனம் இனத்தாலும், நிறத்தாலும், மொழியாலும், ஆன்மீக உணர்ச்சியாலும், சமுதாய நோக்கங்களாலும் பிரிந்து ஒன்றோடொன்று போரிடுகின்ற பல சிறு பிரிவுகளாகப் பிரிந்தது. இவற்றை ஒன்றுசேர்த்து ஒரு பெரிய சமுதாயமாகச் செய்ய வேண்டிய பணி இவர்களுக்கு இருந்தது.
இந்த எதிரலையை எழுப்பியவர்கள் வடக்கே குமாரிலரும், தெற்கே சங்கரரும் ராமானுஜரும் ஆவர். அந்த எதிரலையே இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுவதான நெறிகள், கோட்பாடுகள் மற்றும் சடங்குகளின் தொகுதி ஆகியது.
சென்ற ஆயிரம் வருடங்களாகவோ, அதற்கு மேலாகவோ இந்த மதம் பலவற்றைத் தன்னுள் கிரகித்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தது. அவ்வப்போது அதில் சீர்திருத்தங்களும் வெடித் தெழுந்தன. இந்த எதிர்ப்பு இயக்கம் முதலில் வேதச் சடங்குகளை உயிர்ப்பிக்க விரும்பியது. அது முடியவில்லை . எனவே உபநிடதங்கள் அதாவது வேதங்களின் தத்துவப் பகுதியை தன் அடிப்படையாக வைத்துக் கொண்டது. வியாசரின் மீமாம்ச தத்துவத்திற்கும், கிருஷ்ணரின் உபதேசமான கீதைக்கும் முதலிடம் கொடுத்தது. இதற்குப் பிறகு எழுந்த எல்லா இயக்கங்களும் இதையே செய்தன. உயர்ந்த அறிவுத் தன்மை காரணமாக சங்கரரின் இயக்கம் முன்னேறியது. ஆனால் கடுமையான ஜாதி நியமங்களைப் பின் பற்றியதாலும், மனிதனின் சாதாரண உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காததாலும், சம்ஸ்கிருதத்தின் மூலம் தான் எதையும் சொல்வது என்று வைத்துக் கொண் டிருந்ததாலும், அது சாதாண மக்களுக்குப் பயன் படவில்லை . மாறாக ராமானுஜர் செயல்முறைத் தத்துவத்தை அளித்தார், உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தார், ஆன்மீக அனுபூதிகள் இல்லாமல் பிறப்பின் காரணமாக மட்டுமே கொடுக்கப்படுகின்ற உரிமை களை அடியோடு மறுத்தார், மக்களின் மொழியிலேயே பேசினார். இதன் காரணமாகச் சாதாரண மக்களை வேத மதத்திற்குத் திரும்பக் கொண்டுவருவதில் முற்றிலும் வெற்றிகண்டார்.
படையெடுப்பாளர்களின் மதத்தில் சாதாரண மக்கள் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வதே முக மதிய ஆதிக்கத்தின்போது வட இந்தியாவில் நிலவிய இயக்கங்களின் நோக்கமாக இருந்தது. அதன் காரண மாகச் சமூக மற்றும் மத சமத்துவம் ஏற்பட்டது.
ராமானந்தர், கபீர், தாது, சைதன்யர், நானக் ஆகியோர் நிறுவிய இயக்கங்களைச் சேர்ந்த துறவிகள் தங்கள் தத்துவங்களில் எவ்வளவுதான் மாறுபட்டிருந் தாலும் மனித சமத்துவத்தை நம்பினர், அதைப் பிரச்சாரமும் செய்தனர்.
இதற்குப் பிறகு ஒரு குழப்பமான காலம். நண்பர், பகைவர்; முகலாயப் பேரரசு, அதை அழித்த வர்கள், அதுவரை அமைதியாக இருந்த பிரெஞ்சு ஆங்கிலேய வியாபாரிகள் எல்லோரும் ஒருவருக் கொருவர் அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர். அரை நூற்றாண்டிற்கு மேலாக எங்கு பார்த்தாலும் போரும் சூறையும் அழிவும்தான். புகையும் புழுதியும் நீங்கிய போது ஆங்கிலேயர்கள் மற்றவர்களை வெற்றிகொண்டு விட்டிருந்தனர்.
இங்கிலாந்து இந்தியாவை வென்றது என்பதன் பொருள், நாம் அடிக்கடி கேட்டுவருகிறோமே, அது போல், ஏசுவின் கீழோ பைபிளின் கீழோ இந்தியா வந்துவிட்டது என்பதல்ல; முகலாயரும் பட்டாணியரும் இந்தியாவை வென்றார்களே அவ்வாறும் அல்ல. மாறாக ஏசு, பைபிள், மாபெரும் மாளிகைகள், நால் வகைப் படைகளின்’ பூமியை அதிர வைக்கின்ற காலடிச் சத்தம், யுத்த பேரிகைகளின் த்வனி, அரச சிம்மாசனம்- இவை அனைத்திற்கும் பின்னால்தான் இங்கிலாந்து காட்சியளித்தது. அந்த இங்கிலாந்தின் போர்க் கொடி தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள்; அதன் படை வியாபாரக் கப்பல்கள்; அதன் போர்க் களங்கள் உலகின் வியாபாரச் சந்தைகள்; திருமகள்தான் அவர்களுடைய – சக்கரவர்த்தினி. அதனால்தான் இங்கிலாந்து இந்தியாவை வென்றது இதுவரை காணாத புதுமை என்று நான் சொன்னேன்.